நீலப்பட்டுத் துணியால் மூடிக் கட்டப்பட்டிருந்த காந்தாரியின் விழிகளை தன் இமையா ஒற்றைவிழியால் நிலைகொண்டு நோக்கியபடி ஏகாக்ஷர் சொன்னார். “அரசி, இப்போது பின்னிரவு. மலையடிவாரத்தில் தன் குடில்முற்றத்தில் நிலத்தில் விரிக்கப்பட்ட ஈச்சையிலை முடைந்த படுக்கையில் திருதராஷ்டிரர் புரண்டு புரண்டு படுத்தபடி முனகிக்கொண்டிருக்கிறார். அவர் அருகே காலடியில் நான் அமர்ந்திருக்கிறேன். அவருடைய துன்பத்தின் ஒலி மட்டும் அந்த இருளில் நிறைந்திருக்கிறது.”
திருதராஷ்டிரரின் விம்மல் இருமலாகியது. நெஞ்சைப் பற்றியபடி மூச்செறிந்து பின் செறிகுரலில் சொன்னார். அவர் உடலில் பாய்ந்த அம்புகள் ஒன்றொழியாமல் என்னுடலிலும் பாய்ந்ததென்ன, சஞ்சயா? முதிரா இளமையில் அவருடன் மற்போருக்கு எழுந்தவன் நான். அந்த நாளை இன்றென அருகே உணர்கிறேன். அன்று என்னைத் தூக்கி நிலத்தில் அறைந்தார். கொல் கொல் என முழங்கியது களம். நான் தோற்றுவிட்டேன் என உணர்ந்தேன். “கொல்லுங்கள்… கொல்லுங்கள்!” என்று கூவி நிலத்தை கையால் அறைந்தேன். என் முகத்தை மண்ணில் உருட்டிக்கொண்டேன். “கொல் பீஷ்மா, அதுதான் மற்போரின் விதி. அந்த விதி இல்லையேல் பலமுள்ளவர்கள் மாறிமாறிப் போரிட்டு காயமடைவார்கள். நாட்டில் பலமற்றவர்களே எஞ்சுவார்கள். ஆகவே போர் தொடங்கினால் ஒருவரின் இறப்பில்தான் முடிந்தாகவேண்டும்” என்றார் போர்நடுவராகிய பலாஹாஸ்வர். அன்று நான் இறந்தேன்.
ஆனால் எந்தை என் உடல்மேல் இருந்த தன் காலை எடுத்துவிட்டு குனிந்து “முழு ஆயுளுடன் இரு, மகனே” என்றபின் வெளியேறினார். கீழே கிடந்த நான் கையை ஊன்றி எழுந்தேன். இரு கைகளாலும் மண்ணை ஓங்கி ஓங்கி அறைந்தபடி ஓலமிடத் தொடங்கினேன். வாழ்க்கையை மாற்றியமைக்கும் எந்த முதன்மை அறிதலும் பேருவகையாகவோ பெருந்துயராகவோ நம்மை அடைகிறது. பெருந்துயரென அடைவதே மேலும் சிறந்த மெய்யறிதல். கூரிய அம்பு என நம்மை தைத்து உள்நுழைகிறது அது. சஞ்சயா, என் எடையும் வெறியும் ஒரு பொருட்டே அல்ல என்றும் தசைகளை ஆள்வது உள்ளே நிலைகொண்ட தெய்வமே என்றும் அதுவே போரை நிகழ்த்துகிறது என்றும் அன்று அறிந்தேன். நான் என்னை அறிந்த முதற்தருணம் அது. அன்று மீண்டும் பிறந்தேன்.
அன்று இரு கைகளையும் விரித்தபடி சென்று அவர் காலடியில் விழுந்து அழுதேன். “ஞானமற்ற குருடன், பிதாமகரே… எளியவன்… எனக்கு அறிவை புகட்டுங்கள். என்னை உங்கள் மாணவனாக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பாதங்களே என் தெய்வங்கள்” என்றேன். அவர் என் தோளைத் தழுவி தன்னுடன் இறுக்கிக் கொண்டார். “மூடா, எளியவன் என்று என் முன் வந்து எப்படிச் சொல்வாய் நீ?” என்றார். “நீ அஸ்தினபுரியின் பேரரசன். உன் பாதங்களில் பாரதவர்ஷம் வந்து பணியும். என் வில்மேல் ஆணை” என்று சொன்ன அவர் குரல் என்றும் என்னுடன் இருந்தது. மூதாதையர் உடனிருப்பதுபோல. யயாதியும் ஹஸ்தியும் குருவும் சந்தனுவும் விசித்திரவீரியனும் அருகமைவதுபோல. “நான் என்றும் உன்னுடன் இருப்பேன். என் வாழ்வின் இறுதிக்கணம் வரை” என்றார் எந்தை.
அன்று உணர்ந்த அவர் உடல்மணத்தை ஒருநாளும் என் மூக்கு மறந்ததில்லை. கங்கையின் நீர்ப்பாசியின் இன்மணம் அது. சஞ்சயா, அன்றுமுதல் இன்றுவரை ஆலமரநிழலில் நின்றிருக்கும் தண்மையிலேயே இவ்வாழ்க்கையை கழித்தேன். இதோ இன்று, விரும்புவதற்கும் அடிபணிவதற்கும் தந்தையில்லாதானேன். அதைவிட ஊடிச்சினந்து விலகுவதற்கும் என் பிழைகளை எடுத்துச் சுமத்தி வசைபாடுவதற்கும்கூட இப்புவியில் எவருமிலாதவனானேன்.
நெஞ்சில் அறைந்து வானை நோக்கி கூவுபவர் என “தெய்வங்களே, மூதாதையரே, இன்று இத்தருணத்தில் முற்றிலும் விழியிலாதானேன். இருளன்றி வேறேதும் சூழ்ந்து இல்லை எனக்கு” என்றார் திருதராஷ்டிரர். நான் அவர் கொள்ளும் துயரை வெறித்து நோக்கியபடி அமர்ந்திருந்தேன். விழிகள் நிறைந்து வழிய இரு கைகளையும் படுக்கையில் அடித்தபடி திருதராஷ்டிரர் கேவலோசையும் கமறலோசையுமாக அழுதார். பின்னர் மெல்ல தேம்பி உளம் சோர்ந்து துயிலில் ஆழ்ந்தார். அவருடைய திறந்த வாயில் மூச்சு தடைபட்டு சிறிய கொப்புளங்கள்போல் ஓசையிட்டு வெளிவந்தது.
நான் எழுந்து என் மஞ்சம் நோக்கி செல்வதற்காக உடலை அசைத்த கணம் அவர் “தந்தையே! தந்தையே!” என்று பெருங்குரலில் அலறியபடி எழுந்தமர்ந்தார். தன் இரு கைகளாலும் விரிந்த கரிய நெஞ்சில் வெடிப்போசை எழ ஓங்கி ஓங்கி அறைந்தபடி குரலெழுப்பி கதறி அழுதார். சூழ்ந்திருந்த இருளில் அவ்வோசை முட்டி எதிரொலித்தது. தொலைவில் நிழலெனச் சூழ்ந்திருந்த மரங்களும் மலைப்பாறை மடிப்புகளும் அவ்வொலி கேட்டு அதிர்வதுபோல் தோன்றியது. அவர் எழுந்து நின்றார். இரு கைகளையும் வானோக்கி நீட்டி “இனி ஒன்றுமில்லை! இனி எதுவும் எஞ்சுவதில்லை!” என்றபடி காலடி வைத்து நடந்தார். அவருடைய திசை உணர்வு அழிந்திருப்பதை உணர்ந்த நான் அவர் கையைப்பற்றி நிறுத்தினேன்.
என் தோளைப்பற்றி உலுக்கியபடி “சொல்க! சொல்க!” என்று அவர் சொன்னார். “அதெல்லாம் உனது உளமயக்குதானே? உன் நெஞ்சு கொண்ட வீண்கற்பனைதானே? இப்போது ஒரு செய்திப்புறா வந்தமைந்த ஓசையை கேட்டேன். அதில் ஒன்றும் நிகழவில்லை என்றுதானே உள்ளது? ஆம், சில தருணங்களில் அவ்வாறு ஆவதுண்டு. எதிரிகள் நம்மை குழப்பும் ஓலைகளை அனுப்புவதுண்டு.” பற்கள் தெரிய நகைத்து “பிதாமகரை எவர் வெல்ல இயலும்? இப்புவியில் அவர் தோற்கடிக்கப்படுவாரெனில் ஐம்பெரும் பருக்களையும் ஒருவன் அடக்கி எழுகிறான் என்றுதானே பொருள்? மூவிழியனும் பாலாழியில் படுத்தவனும் அன்றி வேறெவரால் அது இயலும்? இல்லை, எனக்கு உறுதியாகத் தெரிகிறது. அது பிழைச் செய்தியே” என்றார்.
அவருடைய கொந்தளிப்பு எழுந்து அடங்குவதற்காக நான் காத்து நின்றிருந்தேன். “அங்கிருந்து செய்தி ஏதும் வந்ததா?” என்று அவர் ஒருகணம் முன்பு பேசியதை மறந்தவராக மீண்டும் கேட்டார். திருதராஷ்டிரரின் உள்ளம் தனித்தனி துண்டுகளாக சிதறிவிட்டிருப்பதுபோல் உணர்ந்தேன். ஒவ்வொரு துண்டிலும் ஒவ்வொரு காலம் திகழ்ந்தது. ஒவ்வொரு காலமும் பிறிதொன்றை அறியாத தனியுலகை கொண்டிருந்தது. “என்ன ஆயிற்று? போரில் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது?” என்று அவர் என்னை நோக்கி உரக்க கூவினார். “என் மைந்தர்கள் அங்கு என்ன செய்கிறார்கள்? போர் எதை நோக்கி செல்கிறது?” என்றார்.
“அரசே, பத்தாம்நாள் போர் முடிந்துவிட்டது” என்று நான் சொன்னேன். “பிதாமகர் பீஷ்மர் எங்கே? அவரை சூழ்ந்துகொண்டார்களல்லவா?” என்றார். “அவர் களத்தில் வீழ்ந்திருக்கிறார். அம்புப்படுக்கையில் அவரை படுக்க வைத்திருக்கிறார்கள்” என்று நான் சொன்னேன். “ஆம்” என்றபின் மீண்டும் “எங்கிருக்கிறார் பிதாமகர்? அவரை அர்ஜுனன் எதிர்கொள்கிறான் அல்லவா?” என்றார். “அஞ்சிவிட்டிருப்பான். அவரை மானுடர் எவரும் எதிர்கொள்ள முடியாது… அஞ்சி ஓடியிருப்பான் சிறுவன்… ஆம்!” என்றார். நான் சலிப்புற்றாலும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்ததையே சொல்லிக்கொண்டிருந்தேன்.
திருதராஷ்டிரர் எங்கெங்கோ சென்று மீண்டு வந்தார். “என் மைந்தர்கள் அங்கே கானாடிக்கொண்டிருக்கிறார்கள். நூற்றுவர் மைந்தர்! ஆம், நூற்றுவர்! உன்னால் எண்ணிப்பார்க்க இயல்வதா அது?” என்று மலர்ந்த முகத்துடன் அவர் கேட்டார். “இப்புவியில் பெருந்தந்தையான தீர்க்கதமஸ்கூட நூறு மைந்தரை பெற்றதில்லை. என்னைவிட மிகுதியாக மைந்தரைப் பெற்ற தந்தையரென எவருமில்லை” என்றார். பின்னர் இரு கைகளையும் விரித்து தலைதூக்கி வானை பார்த்தார். கரிய முகத்தில் பற்கள் தெரிந்தன. விழிக்குமிழ்கள் உருள “அறிக, விழியிழந்தோனால் மட்டுமே அத்தனை மைந்தரை பெற முடியும்! தீர்க்கதமஸ் தன் வாணாள் இறுதியில் உணர்ந்ததை நான் இப்போது உணர்கிறேன். குருட்டுக் காமம். பெருங்களிற்றின் வெண்குருதி… அதுவே அத்தனை மைந்தரை எழுப்ப முடியும்!” என்றார்.
தலையை உருட்டியபடி “என்னிடம் பிரம்மன் வந்து உனக்கு விழியளிக்கிறேன், ஆனால் நூறு மைந்தருக்கு தந்தையாகும் நல்லூழை அளித்துவிடு என்றால் இன்னும் ஏழு பிறவிகள் எனக்கு விழியின்மையை அளியுங்கள், நிகராக இன்னும் நூறு மைந்தரை எனக்கு அளியுங்கள் என்றே கேட்பேன். மைந்தரை தழுவித் தழுவிச் சலிக்காத தோள்களோடு இந்த அரண்மனையில் அமர்ந்திருக்கிறேன். என்னைப் பார்த்து தெய்வங்கள் பொறாமை கொள்கின்றன” என்றார். அவர் புன்னகை பெரிதாகிக்கொண்டே இருந்தது. கண்குமிழிகளை அலைபாய விட்டபடி “என் மைந்தர் ஒருவரும் ஒன்றுக்கொன்று குறைவற்றவர்கள். நிறைந்த பெருந்தோள்கள், நிகரற்ற ஆற்றல். அன்பெனும் சரடால் பிணைந்த சுற்றம் அவர்கள்” என்றார்.
“சஞ்சயா, மைந்தரைப் பெற்றிருந்தால் நீ இதை அறிவாய். தன் மைந்தர் கல்வி, புகழ், செல்வம், அரசு என எத்தனை மேன்மையடைந்தாலும் கைக்கு தொட்டு நெஞ்சோடு சேரும் பேருடல் கொண்டிருப்பதையே தந்தையர் மேலும் மகிழ்வென உணர்வார்கள். ஏனெனில் பிற அனைத்தையும் உணர்வது உள்ளம். தொட்டுத் தொட்டு அறிவது உடல். உள்ளம் மயக்குகொள்வது. தெய்வங்களின் மாயக்களம். உடல் மாற்றிலாதது. பிறிதொன்று அறியாத பெற்றி கொண்டது. மைந்தரென்பது உடலின் நீட்சியல்லவா? அவர்களுக்கு நான் அளித்தது அந்த உடலை அல்லவா?”
வெடித்து நகைத்து “முன்பொரு சூதன் வந்து என்னிடம் சொன்னான். அவர்கள் என்னுடைய ஆடிப்பாவைகள் என. ஆம், அவர்கள் நானேதான். மூதாதையின் சொல் ஒன்று உள்ளதல்லவா, மகன் என்னும் நீ நானே என. அதை உணராத தந்தை எவன்? நான் ஒவ்வொரு நாளும் என்னை நானே தழுவிக்கொண்டிருந்தேன். மைந்தர் மைந்தர் மைந்தரென்று பெருகி நானே என்னைச் சூழ்ந்திருந்தேன். இப்புவியில் என்றேனும் பிரம்மன் மானுடனாக பிறக்க விழைந்தால் விழியின்மை கொண்டு என்னைப்போல் ஒரு பெருந்தந்தையாகவே பிறப்பான். மைந்தரால் நிறைவுறுவான். ஆம், ஐயமே இல்லை” என்றார்.
நான் “உண்மைதான், அரசே. நான்முகனை முதற்பிரஜாபதி என்பதல்லவா வழக்கம்?” என்றேன். எதிர்பாராத அறை ஒன்று விழுந்ததுபோல் திரும்பி “என்ன நிகழ்ந்தது? எங்கே என் மைந்தர்? போர்க்களச் செய்திகள் வந்துகொண்டிருந்தனவே?” என்றார். “அரசே, பத்தாம்நாள் போர் முடிந்து நாம் குடிலுக்கு திரும்பிவிட்டோம். இப்போது நள்ளிரவாகிறது” என்றேன். “பீஷ்ம பிதாமகர் என்ன ஆனார்?” என்று திருதராஷ்டிரர் உரத்த குரலில் கேட்டார். “அரசே, அவர் களத்தில் வீழ்ந்துவிட்டார்” என்றேன். “யார்?” என்றார் திகைப்புடன். “பிதாமகர் பீஷ்மர்” என்றேன். “எவர் சொன்னது? எந்த அறிவிலியின் சொல் அது? கீழ்மகனே, பிதாமகர் எப்படி களம்பட முடியும்? அவரை வெல்லும் மானுடன் எவன்?” என அவர் கூவினார்.
நான் மீண்டும் பொறுமையை வரவழைத்து “அரசே, நமது கைகளில் எதுவும் இல்லை. நாம் முற்றறியக்கூடுவதும் ஏதுமில்லை. பிதாமகரை வீழ்த்தும் பெருவலி ஒன்றுள்ளது. அதை ஊழ் என்கின்றனர் தொல்முனிவர்” என்றேன். அவர் இரு கைகளும் தளர்ந்து உடலில் உரசி விழ தரையில் அமர்ந்து “ஆம்!” என்றார். “ஆம், அவர் ஊழால் வீழ்த்தப்பட்டார். மானுடரால் வீழ்த்தப்படாதவற்றை வீழ்த்தும் பொருட்டு தெய்வங்களால் உருவாக்கப்பட்டது ஊழ்.” இரு கைகளையும் மார்போடு சேர்த்து வணங்கியபடி விசும்பினார். “தெய்வங்களே, பெருங்கோபுரங்களை நீங்கள் எழுப்புவது காலால் தட்டிக்கலைத்து விளையாடுவதற்காகத்தானா?”
நான் ஆழ்ந்த உளநடுக்கொன்றை அடைந்து மூச்சு நின்று மீண்டும் எழப்பெற்றேன். அங்கிருந்து எழுந்து உடனே விலகிவிடவேண்டுமென்று தோன்றியது. எவரிடம் என்றோ எத்திசை நோக்கியோ என்றிலாத அந்த கைகூப்பல் என் உள்ளத்தில் சொல்குலையச் செய்தது. அப்போது எவரும் உடனிருக்கலாகாது. அது மானுடரும் அவர்களுடன் விளையாடும் தெய்வங்களும் மட்டும் தனித்திருக்கும் தருணம். இயற்கையென உருக்கொண்டு சூழ்ந்திருக்கும் பருவெளிகூட தன் பொருந்தாமையை உணர்ந்து அகன்றுவிட வேண்டும். எந்த விழியும் செவியும் அதை வெளிநின்று அறியக்கூடாது.
ஆனால் அவர் எப்போதும் அப்படித்தான் இருக்கிறார். முழுமுற்றான தனிமையில். அவர் எவரையும் பார்க்கவில்லை என்பதனால் எவராலும் பார்க்கப்படாதவராக இருக்கிறார். எவரையும் பார்க்காத ஒருவரின் முன் அத்தனை ஆண்டுகள் இருந்தமையாலேயே இன்மையென ஆகும் பயிற்சியை நான் அடைந்திருந்தேன். அங்கிலாதவன், அவரை முற்றறியாதவன். அவர் கைகளைப் பற்றித் தாழ்த்தி மடியில் அழுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. எவரை வணங்குகிறீர்? சூழ்ந்திருப்பது வெறும் இருள், பிறிதொன்றும் அல்ல என்று சொல்லவேண்டுமென்று தோன்றியது. எந்த வினாக்களுக்கும் விடையளிக்காத வெறுமை. இரக்கமில்லாத விழியின்மை கொண்டது.
திருதராஷ்டிரர் நடுங்கிக்கொண்டிருந்தார். அவர் தன்னுள் நிறைந்து நிறைந்து விம்முவதாகப் பட்டது. நான் என்னுள் திரண்ட பெருமூச்சை அடக்கி மேலும் அடக்கி பின்னர் நீளொலியுடன் விடுத்தேன். அதைக் கேட்டு தொடப்பட்ட மரக்கிளை உலுக்கிக்கொண்டு நீர்த்துளிகளை உதிர்ப்பதுபோல அவர் அழத்தொடங்கினார். உதடுகள் விம்மலில் வெடித்தன. தோள்கள் குலுங்கி அதிர்ந்தன. விழிநீர் வழிந்து மார்பில் சொட்டியது. ஒரு சொல்லும் இலாத தூய அழுகை. ஒலிகூட இல்லாதது. அவ்வழுகையை அறிபவர் மிக அண்மையில் இருக்கிறார் எனும் உணர்வில் எழும் அழுகை அது.
நான் அவருடைய அழுகையை நோக்கிக்கொண்டிருந்தேன். நெஞ்சில் கூப்பிய கைகளை விரித்து முகத்தை இரு கைகளாலும் அழுந்தத் துடைத்தபின் திருதராஷ்டிரர் வலக்கையை ஊன்றி எடை மிக்க உடலைச் சரித்து ஈச்சைப் பாயில் படுத்தார். எழுந்து சென்றுவிடவேண்டுமென்று எண்ணினேன். அதற்குள் திருதராஷ்டிரர் “சஞ்சயா பார், அதோ நம் முன் குருக்ஷேத்ரம் நிகழ்கிறது. நோக்கு. அங்கே என்ன நிகழ்கிறது என்று சொல்” என்றார். “அரசே, இது இரவு. இங்கு ஆடிகளுமில்லை” என்றேன். “உன்னால் பார்க்க இயலும். பார்த்துச் சொல்” என்றார். நான் “ஆனால்…” என்று மீண்டும் சொல்ல அவர் உரக்க “பார்த்துச் சொல்! பார்த்துச் சொல்!” என்று கூவினார்.
“அங்கே அவர் தன்னந்தனிமையில்தான் படுத்திருக்கிறாரா? மருத்துவர்கள் உடனிருக்கிறார்களா? அந்த அம்புகளில் ஏதாவது அவரது உயிரை தொட்டிருக்கிறதா?” நான் சில கணங்களுக்குப் பின் “பார்க்கிறேன், அரசே” என்றேன். “ஒளியைப்போலவே இருளைக்கொண்டும் பார்க்க முடியும். அதை நான் அறிவேன். ஆனால் என் அகவிழி அடைந்து கிடக்கிறது. நீ அகன்றிருக்கிறாய், துயரற்றிருக்கிறாய். ஆகவே உன்னால் பார்க்க முடியும். துயரற்றவர்கள் மட்டுமே இக்களத்தை முழுமையாக பார்க்க முடியும். இக்களத்தில் ஒருவரையேனும் உள்ளத்தாலேனும் கொன்ற எவரும் பின்னர் இதை பார்க்க இயலாது” என்றார் திருதராஷ்டிரர்.
நான் பெருமூச்சுடன் “ஆம். முயல்கிறேன், அரசே!” என்றபின் என் இரு கைகளையும் ஒன்றின் மேல் ஒன்றென வைத்து மடியில் அமைத்து மூச்சை சீராக இழுத்துவிட்டு மூக்கு நுனியில் விழிமணிகளை நிறுத்தி ஊழ்கத்திலாழ்ந்தேன். அவர் மூச்சு துயிலிலென ஒலிக்கத்தொடங்கியது. என் தோள்கள் சற்று தொய்ந்து அகம் அமைதி கொண்டது. பின்னர் தாழ்ந்த குரலில் “குருகுலத்து அரசே, கேள்” என்றேன். திருதராஷ்டிரர் நெஞ்சில் கை வைத்து படுத்தபடியே சற்று தலைவணங்கினார். “நான் ஒற்றைவிழியனாகிய ஏகாக்ஷன். உன்பொருட்டு எழுந்தவன். என் சொற்களைக் கேள்” என்றேன். திருதராஷ்டிரர் கைகூப்பினார்.
“அங்கு குருக்ஷேத்ரப் போர்க்களத்தின் வடமேற்கு எல்லையில் அமைந்த படுகளத்தை தீயாலான வேலியொன்று பாதுகாக்கிறது. அதற்குள் செம்பட்டு விரித்ததுபோல் பந்தங்களின் ஒளி நிறைந்திருக்கிறது. காற்றில் பந்தங்களின் சுடர்கள் அசைகையில் அங்கு விழுந்து கிடக்கும் சிவந்த பட்டுத் திரைச்சீலையொன்று அதில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களுடன் அசைவதுபோல் தெரிகிறது. அதன் வேலிக்குள் ஏழு மருத்துவ உதவியாளர்கள் இருக்கிறார்கள். மூவர் துயில் கொண்டிருக்க இருவர் விழித்திருக்கிறார்கள். விழித்திருப்போர் இருவரும் தங்கள் விரல்களை கட்டைவிரலால் தொட்டு ஊழ்க நுண்சொல்லொன்றை மீள மீள உள்ளத்தில் ஓடவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இருவர்களின் உதடுகளும் மெல்ல அசைந்துகொண்டிருக்கின்றன. இமைகள் தாழ்ந்து விழிகள் அரைமூடி இருக்கின்றன.”
“அவர்களின் ஆசிரியர் அப்பால் மரவுரி விரித்து அதன் மேல் படுத்து துயில்கொண்டிருக்கிறார். அவருடைய காலடியில் சற்று முன்பு வரை அவர் படித்துக்கொண்டிருந்த ஏடுகள் அடங்கிய ஆமாடப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. நடுவே அம்புப்படுக்கை மேல் பீஷ்மர் படுத்திருக்கிறார். அந்தப் படுக்கை அவரை நீர்ப்படலம் பூச்சிகளை என ஏந்தியிருக்கிறது. தன் வாழ்நாளில் எப்போதும் அத்தகைய எடையின்மையை அவர் உணர்ந்ததில்லை. அவர் உடலில் இருந்து குருதி ஒழுக்கு முழுக்க தடுக்கப்பட்டுவிட்டது. சீரான இடைவெளியில் அவருக்கு பழச்சாறும் தேனும் அளிக்கப்படுகிறது. ஆகவே நீண்ட நற்துயிலுக்குப் பின் உளம் தெளிந்து விழிப்பு கொண்டிருக்கிறார்.”
“திருதராஷ்டிர மாமன்னனே, இப்போது அங்கே படுத்திருப்பவர் குருகுலத்தின் பிதாமகரல்ல. உங்கள் எவருக்கும் தந்தையல்ல. நோன்புகளை தலைசூடி நகர்வெளிகளில் அயலவனாகவும் காடுகளில் மேலும் அயலவனாகவும் அலைந்த தனியனும் அல்ல. எட்டு மைந்தரில் கடையோனாகிய காங்கேயன் அல்ல. எட்டு வசுக்களில் ஒருவனுமல்ல. முற்றிலும் பிறிதொருவன். தசைகளால் ஏந்தப்படாதவன். சொற்களால் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாதவன். புலன்களால் அறியும்போதும் புலன்களுக்கு அப்பாலிருப்பவன். அம்புகளால் தொடப்படாதவன். துயரும் வலியும் அற்றவன். தானென உணர்கையில் துளியென்றும் கடலென்றும் ஒரே தருணம் இருப்பவன். அரசே, அவன் அழிவற்றவன்.”
“அந்த எல்லைக்கு வெளியே பிறிதொரு உயிர் வேலியாக கூர்வேல் ஏந்திய வில்லவர்கள் நின்றிருக்கிறார்கள். அவர்கள் சொல்லின்றி ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளும் பொருட்டு நுண்ணிய ஒளிக்கற்களை கையில் வைத்திருக்கிறார்கள். குறடுகள் மீது மரவுரி சுற்றியிருப்பதனால் ஓசையின்றி நிழல்கள்போல் நடமாடுகிறார்கள். படுகளத்திற்கு நெடுந்தொலைவில் கௌரவப் படையினர் மெல்ல மெல்ல உளக்கொந்தளிப்பு அடங்கி துயிலுக்கு தங்களை அளித்துவிட்டிருக்கிறார்கள். அவர்களின் மூச்சொலிகள் எழுந்து இணைந்து காற்றின் ஓசையென ஒலிக்கின்றன. அவ்வப்போது எழும் மென்காற்றில் கொடிகளும் பந்தச் சுடர்களும் அசைந்துகொண்டிருக்கின்றன.”
“யானைகள் கருங்கல் கந்துகளில் உடலெடை சாய்த்து ஒற்றைக்கால் தூக்கி ஓய்வெடுத்து துயில் கொண்டிருக்கின்றன. குளம்புக்கால் ஒன்றைத் தூக்கி, பிடரி சிலிர்த்து குலைய, தலை மிகத் தாழ்த்தி புரவிகள் துயில்கின்றன. அவ்வப்போது விழித்துக்கொண்டு குளம்பொலிகளுடன் கால் மாற்றிக்கொண்டு நீள்மூச்செறிகின்றன. எதிரில் பாண்டவப் படையும் துயின்றுவிட்டிருக்கிறது. அவர்கள் முதலில் துயர்கொண்டனர். பின்னர் ஆறுதலும் அதன் நீட்சியென களிப்பும் அடைந்தனர். களிப்பின் உச்சியில் இழப்புணர்வை எய்தினர். அது துயரென்று மாறிற்று. தொடங்கிய இடத்திற்கே வந்ததும் அனைத்தையும் உதறிவிட்டு அன்னை மடியில் முகம் புதைக்கும் குழவியர்போல் துயிலை சென்றடைந்தனர். அன்றன்று இறந்து பிறக்காவிடில் இங்கு மனிதர் வாழ்வதெப்படி?”
“அரசே, கேள். அந்த வேல் வளையத்திற்கு மிக அப்பால் தெற்குக் காட்டின் எல்லையில் சிகண்டி ஸாமி மரத்தின் அடியில் கைகட்டி சாய்ந்து நின்றபடி அவரை பார்த்துக்கொண்டிருக்கிறான். முற்றிலும் இலையிலாது முள் மட்டுமேயான மரம் அது. காற்று செல்கையில் ஆயிரம் நாகக்குழவிகள்போல அது சீறிக்கொண்டிருந்தது. அவன் அங்கு நிற்பதை அவன் உடலில் சென்று முட்டிக்கொள்வது வரை பிறர் அறிய இயலாது. மூச்சும் உளதோ என்று தோன்றும் முற்றமைவு. அவன் விழிகள் மட்டும் இரு நீர்த்துளிகள்போல் மின்னிக்கொண்டிருக்கின்றன.”
“அங்கிருந்து வடக்காகச் சென்றால் பாண்டவர்களின் பாடிவீட்டின் நிரைகள் தென்படுகின்றன. அதில் வடகாட்டின் எல்லையில் அமைந்தது அர்ஜுனனின் யானைத்தோல் குடில். அவன் காவலர்களும் அணுக்கர்களும் துயில்கொண்டிருக்கிறார்கள். வெளியே வந்து அங்கு நிற்கும் மகிழ மரத்தடியில் சாய்ந்து ஒரு காலை தூக்கி அடிமரத்தில் மடித்து வைத்து கைகளை மார்பில் கட்டியபடி அவன் பீஷ்மரின் படுகளத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான். அங்கிருந்து பார்க்கையில் விண்ணில் தோன்றிய ஒரு தழல்போல் அது தெரிகிறது. சற்று அப்பாலிருக்கும் பந்தங்களின் ஒளியில் அவனுடைய தாடி அனலென சுடர்ந்துகொண்டிருக்கிறது. இளங்காற்றில் அவன் குழல் கற்றைகள் அசைகின்றன. பந்தங்கள் தழலாடுகையில் அவன் இமைகளின் நிழல் நெற்றிமேல் நீண்டு சென்று மீண்டமைகிறது.”
“அரசே, இப்பால் கௌரவப் படைகளின் நடுவே தன் பாடிவீட்டின் முகப்பில் சிறிய மேடை ஒன்றை இழுத்திட்டு அதில் கால் மடித்தமர்ந்து தொலைவில் தெரியும் பாடிவீட்டை பார்த்துக்கொண்டிருக்கிறான் கௌரவர்களின் அரசன். அவனுடைய இளையோனாகிய துச்சாதனன் சற்று அப்பால் நிலத்தில் அமர்ந்து முழங்கால்களின் மேல் கைகள் கோத்து தன் தமையனையே விழியசைக்காது நோக்கிக்கொண்டிருக்கிறான். தன்னளிப்பு கொண்ட நாய்களுக்கே உரிய விலகா நல்நோக்கு அது. அவன் உள்ளத்தில் ஒரு சொல்லும் இல்லை.”
“அவர்களுக்குப் பின்னால் காந்தாரர்களின் படைநிலையில் தன் பாடிவீட்டின் முகப்பில் நின்று சகுனியும் பீஷ்ம பிதாமகரை பார்க்கிறான். அவனுக்கு அருகே ஏவலன் கொண்டு வைத்த இன்நீர் தொடப்படாமலிருக்கிறது. புண்பட்ட காலை நன்கு நீட்டி அதன் மேல் ஒரு மெல்லிய துணியை போட்டிருக்கிறான். எதையோ சொல்வது போலவோ வாய்க்குள்ளிட்டு எதையோ மெல்வது போலவோ உதடுகள் அசைந்துகொண்டிருக்கின்றன. விழிகள் நிலைகொளாது உருண்டாலும் நோக்கு அங்கிருந்து நோக்கவியலாத பீஷ்ம பிதாமகரிலேயே பதிந்திருக்கிறது.”
“அரசே, கேள். அங்கு அந்தப் படைகளில் மேலும் பல்லாயிரவர் துயிலாது பீஷ்ம பிதாமகரை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் துயின்றவர்களோ அவருக்கு மிக அண்மையில் இருக்கிறார்கள். சிலர் அவர் மடியில் மகவுகளாக ஏறி விளையாடுகிறார்கள். அவர் தோளில் அமர்ந்து தலை முடியைப்பற்றி உலுக்கியும் கால்களால் அவர் மார்பை அடித்தும், கை நீட்டி அங்கு செல்க அதை கொணர்க என்று கூச்சலிட்டும் களியாடுகிறார்கள். அவருடைய மேலாடையை எடுத்து தன்னுடலில் சுற்றிக்கொண்டும் அவருடலில் தங்களுடலை பதித்துக்கொண்டும் விளையாடுகிறார்கள். அவர் கைகளையும் கால்களையும் பற்றிக்கொண்டு உடலில் தொற்றி ஏற முயல்கிறார்கள். பல்லாயிரம் சிதல்களால் மொய்க்கப்படும் தொன்மையான மரம்போல் அவர் அங்கு படுத்திருக்கிறார்.”
“விழி கொண்டவனே, அறிக! அங்கு மிக அப்பால் யாதவர்களின் சிறிய படை நடுவே அமைந்த எளிய ஈச்சைஓலைக் குடிசைக்குள் மரவுரி விரித்து மல்லாந்து படுத்து அவர் துயில் கொண்டிருக்கிறார். ஆழ்துயில். ஆயினும் எத்துயிலிலும் விழித்திருக்கும் பீலி அவர் தலையில் அனைத்தையும் நோக்கிக்கொண்டிருக்கிறது.”