வெள்ளி எழுந்துவிட்ட முதற்காலைப் பொழுதில் அஸ்தினபுரியின் தெற்குக் கோட்டைவாயிலுக்கு வெளியே காவலர் தலைவனாகிய நிகும்பன் மூன்று வீரர்களுடன் காத்து நின்றிருந்தான். கோட்டை மேல் எரிந்த மீன்நெய் விளக்குகளின் மங்கிய செவ்வெளிச்சம் கீழே விழுந்து புதர்களின் இலைகளை மெருகு கொள்ளச் செய்திருந்தது. ஆனால் எதையும் பிரித்தறிய முடியாதபடி அனைத்து பொருட்களையும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒற்றைப் பரப்பென ஆக்கியது அந்த வெளிச்சம்.
காவல்வீரர்கள் கால் மாற்றி நின்றனர். ஒருவன் மெல்ல இருமினான். அப்பால் கோட்டைக்குள் மையப்பாதையில் ஒற்றைப் புரவி இழுக்கும் கூண்டு வண்டி ஒன்று ஒருங்கி நின்றிருந்தது. அகன்ற உடல்கொண்ட அந்த வண்டிக்குதிரை தலையை சிலுப்பி மணியோசை எழுப்பியபடியும், குளம்பால் தரையைத் தட்டி பெருமூச்சுவிட்டபடியும் காத்து நின்றது. அவர்கள் அங்கு நிற்கத் தொடங்கி மூன்று நாழிகைக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. பின்னிரவுக்கு மேல் எப்போது வேண்டுமென்றாலும் ஏகாக்ஷர் வரக்கூடும் என்று சொல்லப்பட்டிருந்தது.
அவனை ஆணையிட்டு அனுப்பிய கனகரிடம் “அவரை எப்படி அறிவது?” என்று நிகும்பன் கேட்டான். கனகர் “அவரே தன்னை அறிமுகம் செய்துகொள்வார்” என்றார். நிகும்பன் சற்று தயங்கி உதடுகளை அசைப்பதற்கு முன்னரே “அவருக்கு அடையாளங்கள் எதுவும் தேவையில்லை. அவரைப் பார்த்தாலே தெரியும், அவரைப்போல் பிறிதொருவர் இப்புவியில் இல்லை என்கிறார்கள்” என்றார் கனகர். நிகும்பன் தலைவணங்கினான்.
அங்கு வரும்வரை அவன் உள்ளம் கிளர்ச்சி கொண்டு உடலில் நடுக்கு இருந்தது. தன்னைப்போல் பிறிதொருவர் புவியில் இல்லாத மனிதர் எப்படி இருப்பார்? அப்படி ஒருவர் இருக்க வாய்ப்புண்டா என்ன? இறையுரு என்று வழங்கப்படும் இளைய யாதவருக்கேகூட அவரைப்போன்றே தோற்றமளிக்கும் பௌண்டரீக வாசுதேவர் இருந்திருக்கிறார். படைவீரர்களுக்கு அங்கு எவர் வருவார் என்று தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு அது வழக்கமான காவல்பணிகளில் ஒன்று. அங்கு வந்து நின்றபின்னர் ஏதோ உளவுப்பணி என்று புரிந்துகொண்டார்கள். இருளுக்குள் அசைவும் ஓசையும் இன்றி இருப்பதற்கான பயிற்சி அவர்களுக்கு இருந்தது.
மிகத் தொலைவில் நரியின் குரலொன்று கேட்டது. தெற்குக் காடுகளுக்குள் நரிகள் மிகுதி என்று நிகும்பன் அறிந்திருந்தாலும் அக்குரல் அவனை மெய்ப்பு கொள்ளச்செய்தது. மீண்டும் நரிக்குரல்கள் எழுந்தன. குரல்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து பெரிய நரிக்கூட்டம் ஒன்று அணுகி வருவதுபோல தோன்றியது. அந்தப் புலரிப்பொழுதில் நரிக்கூட்டம் கோட்டையை நோக்கி வருவதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் கேட்டுப் பழகிய கதைகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. தன் உடல் குளிர்வதுபோல நடுக்கு கொள்வதை, கையின் மயிர்கள் மயிர்க்கோள் கொண்டு எழுந்து நிற்பதை உணர்ந்தான்.
தன்னை ஆற்றிக்கொள்ள வேண்டும் என்று தனக்குத்தானே ஆணையிட்டுக்கொண்டான். வருபவர் ஒரு தனிமனிதர், முதியவர், முனிவர் என்றார்கள். அவர் எத்தனை ஆற்றல் கொண்டவராக இருப்பாரென்றாலும் தனித்து வரும் மானுடர் மட்டுமே. மானுடரின் ஆற்றல்களுக்கு எல்லை உண்டு. வீரன் ஒருவனுக்கு அவன் வாள் அளிக்கும் பாதுகாப்பு போதும். அதற்கு அப்பால் உள்ள விசைகளுடன் அவன் எந்நிலையிலும் போரிட இயலாது. அவற்றுக்கு முன் தன்னை முற்றளிப்பதே அவன் செய்யக்கூடுவது. பணிவது அல்லது இறப்பது. இரண்டுமே அளித்தல்தான். அவன் மீண்டும் நீள்மூச்சுவிட்டான்.
புதருக்குள் மெல்லிய அசைவொன்று தெரிந்தது. அவர்கள் நால்வருமே அவ்வசைவை ஒரே கணத்தில் பார்த்தார்கள். மிகத் தொலைவில் மிக மெல்லிய அசைவு. அதிலிருந்தே அது மானுட அசைவென்று எப்படி விழியும் செவியும் உணர்ந்ததென்று அவன் வியந்தான். புலன்களை கருவியாகக் கொண்டு அறியும் ஆழ்புலனுக்கு எண்ணும் எல்லைக்கு அப்பால் செல்லும் திறனுள்ளது போலும். அவன் அது உளமயக்கா என்று எண்ணி மேலும் கூர்ந்து பார்த்தான். மானுட அசைவேதான். ஆனால் அப்போதும் அது புதர்களுக்கிடையே எழுந்த சலசலப்பாகவே இருந்தது. உருவென எதுவும் தெளியவில்லை. அவன் “வருகிறார்” என்றான். “ஆம்” என்றான் காவல்வீரன்.
அவர்களின் குரல் அவர்களின் அச்சத்தை குறைத்தது. அவர்கள் இருளுக்குள் விழிகூர்ந்து நின்றனர். வெளிச்சமென எதுவும் உடன்கொண்டு செல்லக்கூடாதென்று அவனுக்கு ஆணை இருந்தது. அது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை. கனகர் அதை சொன்னபோது மாற்று உசாவவும் அவனால் இயலவில்லை. அவன் கை தன் இடையிலிருந்த குறுவாளை தொட்டுக்கொண்டிருந்தது. “வேல்கள் ஒருங்கியிருக்கட்டும்” என்று அவன் சொன்னான். “ஆம்” என்று காவல்வீரர்கள் உரைத்தனர். ஆனால் அது வெறுமனே குரல்களை கேட்டுக்கொள்வதற்காகத்தான்.
இருளுக்குள் மெல்லிய மானுட நிழற்கோட்டுருவம் தோன்றியது. ஆனால் அது அங்கே ஒரு நிழலசைவாக நின்றுகொண்டிருப்பதுபோல இருந்தது. அல்லது மானுட உரு ஒன்று அலைகளில் நீர்ப்பாவை என நெளிவதுபோல். அல்லது அது மானுட உருவே அல்ல. துணியில் உருவாக்கிய வடிவொன்று அங்கே கட்டிப்போடப்பட்டு காற்றில் நெளிகிறது. ஆனால் அது பெரிதாகி அணுகி வந்துகொண்டிருந்தது. அவன் மேலும் எண்ணுவதற்குள் அருகிலிருந்த வீரன் “உடற்குறை கொண்ட மனிதர்” என்றான். “ஆம்” என நிகும்பன் பெருமூச்செறிந்தான்.
மானுட அசைவை உருவாக்குவது கால்கள் தான் என்று அவனுக்கு அப்போதுதான் புரிந்தது. கால்களில் இசைவிலோ வளைவிலோ சிறு பிழையிருந்தால்கூட கைகளும் கோணலாகிவிடுகின்றன. உடலசைவே முற்றாக மாறிவிடுகிறது. மானுடனின் உடலில் அவனை மண்ணில் நிலைநிறுத்தும் நடுத்தூண் ஒன்று உள்ளது, விழிக்குத் தெரியாதது. அவ்வுடலில் அது சரிந்திருக்கிறது. உடற்பிழை நிழலசைவில் பல மடங்காக பெருகித் தெரிகிறது. தொலைவில் நோக்குகையில் அது மானுட அசைவு அல்ல என்றே தோன்ற வைத்துவிடுகிறது.
மேலும் அணுகியபோது அவர் உடலை அவன் தெளிவாகவே பார்த்தான். இரு கால்களும் நாணிழுத்து கட்டப்பட்ட வில்கள்போல வெளிப்பக்கமாக நன்கு வளைந்திருந்தன. ஆகவே முதுகு நன்றாக தாழ்ந்து இரு கால்களில் எழுந்து வரும் தவளைபோல் தோன்றினார். காற்றில் நீந்துபவர்போல கைகளைத் துழாவி தலையை முன்னால் நீட்டி நடந்துவந்தார். ஆனால் உடற்குறை கொண்டவர்கள் நடப்பதற்கு கொள்ளும் இடரை அவர் அடைந்ததாகத் தெரியவில்லை. மிக இயல்பாக நீரில் தவளை என நீந்தி அருகணைந்தார். சற்று அப்பால் நின்றபின் “நான் ஏகாக்ஷன். உங்கள் அரசின் அழைப்பிற்கேற்ப வந்தவன். கூர்ம முனிவரின் வழி வந்த ஹடயோகி” என்றார்.
அவர் குரல் இளமைந்தர்களுக்குரியது என்பதே அவனை மெய்ப்புகொள்ளச் செய்தது. மிக இனியது. அவனிடம் மட்டுமே இனிய நற்சொல் ஒன்றை உரைப்பதுபோல் ஒலித்தது. அவன் தலைவணங்கி தொண்டையைத் தீட்டி “வணங்குகிறேன், முனிவரே. தங்களுக்காகவே இங்கு காத்து நின்றிருக்கிறோம்” என்று சொன்னான். “நன்று” என்றபடி அவர் மேலும் அணுகி வந்தார். அவர்களுக்குப் பின்னாலிருந்து வந்த நெய்விளக்குகளின் வெளிச்சத்தில் அவருடைய தோற்றம் தெளிந்தது. கால்களின் வளைவு அவர் உடலின் அனைத்து தசைகளையும் விந்தையான முறையில் இழுத்து முறுக்கி கட்டியிருந்தது. நாணேற்றப்பட்ட பல்வேறு வில்களை சேர்த்து வைத்தது போலிருக்கிறது அவர் உடல் என்று அவன் எண்ணினான். அருகில் வந்தபோது நெடுந்தொலைவு நடந்ததற்கான மூச்சிளைப்பு சற்றும் அவரில் இல்லையென்பதை கண்டான்.
“நான் அஸ்வகடகத்திலிருந்து வருகிறேன்” என்றார் ஏகாக்ஷர். “அது நெடுந்தொலைவாயிற்றே?” என்றான் நிகும்பன். “ஆம், அங்குதான் எவரையும் காணாமல் கங்கையை கடக்க முடிகிறது” என்றார் ஏகாக்ஷர். நிகும்பன் “அது கைவிடப்பட்ட துறை. இப்பொழுதில் அங்கு படகுகள் இருக்காது” என்றான். “நான் படகுகளில் ஏறுவதில்லை” என்றார் ஏகாக்ஷர். “நீந்தியா வந்தீர்கள்?” என்று அவன் கேட்டான். அவர் மறுமொழி சொல்லாமல் “செல்வோமா?” என்றார்.
அப்போதுதான் அவர் தலை சற்றே திரும்ப அவன் அவருடைய முகத்தை பார்த்தான். ஒருகணம் எந்த எண்ணமும் இல்லாமலேயே அவன் அஞ்சி கைகள் நடுங்கலானான். அதன்பின்னரே அந்த விந்தை அவன் எண்ணத்தை சென்றடைந்தது. அவர் முகத்தில் ஒற்றைவிழிதான் இருந்தது. நெற்றிக்கு ஏறத்தாழ நடுவே அந்த விழி இமை திறந்து அவனை பார்த்தது. அவன் அது ஏதேனும் ஒப்பனையா என்று அகம் பதறினான். ஆனால் அந்த விழி உயிரின் நுண்ணசைவும் ஒளியும் கொண்டிருந்தது.
அப்படி ஒரு முகம் புவியில் இயல்வதே அல்ல. இரு விழிகளில் ஒன்று வெறும் குழியாக இருப்பதையோ, இமையால் மூடப்பட்டிருப்பதையோ, சுருங்கி சிறு தடமாக இருப்பதையோ அவன் பார்த்திருக்கிறான். இன்னொரு விழியின் தடமே இன்றி முகத்தின் நடுவே ஒற்றை விழி இருக்கக்கூடும் என அவன் எண்ணியதே இல்லை. அவனை உணர்ந்த அவர் புன்னகையுடன் “எனது விழி அவ்வாறுதான். என்னை ஏகாக்ஷன் என்று அழைப்பார்கள். எனது மைந்தர்களும் இவ்வியல்பு கொண்டவர்களே” என்றார். நிகும்பன் “வணங்குகிறேன், முனிவரே. தங்களுக்காக அமைச்சர் காத்திருக்கிறார். வருக!” என்று சொன்னான்.
அவரை அழைத்து வண்டி அருகே கொண்டுசென்றான். அவர் கோட்டைக்குள் நுழைந்தபோது “தங்கள் காலடிகளால் இந்நகர் நிறைவடைக!” என முகமன் உரைத்தான். வண்டியின் அருகே சென்று அதன் திரையை விலக்கி “தங்களுக்காக” என்று அவன் சொன்னதும் அவர் அதன் படிகளில் காலூன்றி ஏறி அமர்ந்து திரையை மூடிக்கொண்டார். வண்டியோட்டியிடம் செல்க என்று கையசைத்துவிட்டு நிகும்பன் தன் புரவியில் ஏறிகொண்டான்.
அரண்மனை முகப்பில் கனகர் அவர்களுக்காக காத்து நின்றிருந்தார். வண்டி புஷ்பகோஷ்டத்தின் பெரிய முற்றத்தில் கல்பாவிய தரையில் சகடங்கள் கடகடத்து ஒலிக்க நின்று திரும்பியதும் படிகளில் நின்றிருந்த கனகர் காற்றில் பறந்த சால்வையை அள்ளி தோளில் சுற்றிக்கொண்டு உடல்குலுங்க அவர்களை நோக்கி வந்தார். நிகும்பன் முன்னால் சென்று தலைவணங்கி “வந்திருக்கிறார், அமைச்சரே” என்றான். முகத்திலிருந்தே அவனது உணர்வுகளை அவர் புரிந்துகொண்டு தானும் முகமாற்றம் அடைந்தார். “உள்ளிருக்கிறாரா?” என்று மெல்லிய குரலில் கேட்டார். “ஆம்” என்றான். சொற்கள் வெறுமனே ஒலியென பொருள்கொள்ளும் தருணம் அது என உணர்ந்தான்.
கனகர் அந்த வண்டியின் அருகே சென்று தலைவணங்கி “ஏகாக்ஷரே, நான் அஸ்தினபுரியின் கௌரவ அரசரின் தலைமை அமைச்சன் கனகன். தங்களை இவ்வரண்மனைக்கு வரவேற்கிறேன். தங்கள் வரவு நலம் கூட்டுக!” என்றார். திரையை விலக்கி வண்டியிலிருந்து வளைந்த கால்களை வெளியே எடுத்துவைத்து இறங்கிய ஏகாக்ஷர் கைகளை இருபுறத்திலிருந்தும் வீசி எடுத்துக் கொண்டுவந்து சேர்த்து குவித்து “நலம் பெருகுக!” என்றார். “தாங்கள் அரண்மனையில் சற்றே இளைப்பாறலாம்” என்றார் கனகர். “நான் இளைப்பாறுவதில்லை, என் விழி மூடுவதில்லை” என்று ஏகாக்ஷர் சொன்னார். “ஆம், கேட்டிருக்கிறேன்” என்றார் கனகர்.
“எனக்கு இன்நீர் மட்டும் கொடுங்கள். இப்போதே அரசியை சந்திக்கிறேன்” என்றார் ஏகாக்ஷர். “வருக!” என்று கனகர் அவரை அழைத்துச் சென்றார். பின்னர் திரும்பி நிகும்பனிடம் “நீயும் வா” என்றார். “நானா?” என்றான் நிகும்பன். “இங்கு ஏவலர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்” என்று கனகர் சொன்னார். பெரும்பாலானோர்களை கோட்டைக்காவலுக்கே அனுப்பிவிட்டதும் அரண்மனையில் உண்மையில் காவல் என்றே எதுவும் இல்லை என்றும் நிகும்பன் அறிந்திருந்தான். குருக்ஷேத்ரத்திலிருந்து மேலும் படைகளைத் திரட்டி அனுப்பும்படி ஆணை வந்திருந்தது. படைபயின்ற அனைவருமே சென்றுகொண்டிருந்தார்கள்.
நிகும்பன் பிற காவலர்களை அங்கே நிற்கும்படி கையசைவால் சொல்லிவிட்டு கனகரின் பின்னால் சென்றான். நீண்ட இடைநாழியில் சென்றபோது நண்டு அசைவதுபோல ஏகாக்ஷர் நடந்தார். அவருடைய உடலசைவின் ஒருமையை சற்று கழித்துதான் அவன் புரிந்துகொண்டான். பெரும்பாலும் உடற்குறை உள்ளவர்கள் அவ்வுடற்குறையை நிரப்பும்பொருட்டு பிற உறுப்புகளை பயன்படுத்துவார்கள். அதில் உடல்ஒருமை கூடாமையால் அவர்களின் ஆற்றல் பெரும்பகுதி அலைவுகளில் வீணாகும். ஏகாக்ஷர் தன் உடலை அதன் அமைப்புக்கேற்ப நன்கு பழக்கியிருந்தார். முதற்பார்வையில் அவர் அசைவுகள் தேவையற்ற அலைவுகளாகத் தோன்றினாலும் அழகிய நடனம்போல் ஒத்திசைவு கொண்டிருந்தன. எடையிலாது நீரில் மிதக்கும் தவளை பின்னங்கால்களின் மிகச் சிறிய உந்தலிலேயே நெடுந்தொலைவுக்கு பறப்பதுபோல் செல்லக்கூடியது. நீரிலென காற்றிலும் அதனால் மிதந்து முன்செல்ல இயலும்.
பேரரசியின் மாளிகை முகப்பை அடைந்ததும் கனகர் “அரசி நேற்று மாலை முதலே தங்களுக்காக காத்திருக்கிறார், முனிவரே” என்றார். ஏகாக்ஷர் ஒன்றும் சொல்லவில்லை. கனகர் இங்கு நில் என்று நிகும்பனிடம் கைகாட்டிவிட்டு விரைந்த காலடிகளுடன் அகத்தளத்தின் படிகளிலேறி உள்ளே சென்றார். ஏகாக்ஷர் அவ்வரண்மனையின் பெரிய மரத்தூண்களையும் அவை இணைந்து உருவாக்கிய குவைமாடத்தையும் நோக்கியபடி நின்றார். அவன் அவருடைய ஒற்றை விழியை பார்த்துக்கொண்டிருந்தான். மானுட விழிகளைவிட இருமடங்கு பெரியது அது. எருமைவிழி. விலங்கு விழிகளுக்குரிய வெறிப்பு கொண்டது. கரிய வைரம்போல் உள்ளொளி நிறைந்தது. அவன் அவ்விழி தன்னை பார்க்கலாகாதென்று எண்ணினான். ஒருகணம் அது சுழன்று அவனைத் தொட்டு மீண்டபோது மெய்ப்பு கொண்டான்.
கனகர் உள்ளிருந்து வந்து தலைவணங்கினார். “அரசி அவையமர்ந்துவிட்டார். தங்களை பார்க்க விழைகிறார்” என்றார். “நன்று” என்றபடி ஏகாக்ஷர் படிகளில் ஏறி அகத்தளத்தின் முதன்மைக் கூடத்திற்குள் நுழைந்தார். தானும் தொடர்வதா என்று நிகும்பன் தயங்க விழிகளால் தொடரும்படி காட்டிவிட்டு கனகர் முன்னால் சென்றார். தன் பணி என்ன என்பதை நிகும்பன் புரிந்துகொண்டான். ஏகாக்ஷரின் அருகே நிற்பது. தேவையென்றால் வாளை உருவி அவர் கழுத்தை வெட்டும் வாய்ப்புடன்.
அகத்தளத்தில் சேடியரன்றி காவலென்று எதுவுமிருக்கவில்லை. பெருங்கூடத்தை ஒட்டிய சிற்றறைக்குள் கனகர் அவரை அழைத்துச்சென்றார். அங்கே தாழ்வான பெரிய பீடத்தில் பட்டு விரிக்கப்பட்ட மெத்தை மேல் காந்தாரி அமர்ந்திருந்தாள். பெரிய வெண்ணிற உடலில் இளஞ்செந்நிற ஆடை அணிந்திருந்தாள். விழிமூடி நீலப்பட்டாடை கட்டப்பட்ட அவள் முகமும் உடலும் குருதி இன்றி வெளிறி இருந்தன. நிகும்பன் அதற்கு முன் சில விழாக்களில் மட்டுமே பேரரசியை பார்த்திருந்தான். அப்போது மின்னும் அருமணிகளும் பொற்பூண்களுமாக அவள் ஆலயக்கருவறையிலிருந்து எழுந்த தாய்த்தெய்வம் போலிருந்தாள். இப்போது குட்டிகளை ஈன்றுசலித்த ஏதோ அறியாக் குகைவிலங்குபோல் தோன்றினாள்.
மூச்சு இளைக்க, அணிகள் ஒலிக்க காந்தாரி மெல்லிய குரலில் “அமர்க, முனிவரே! தாங்கள் இவ்வரண்மனைக்கு வந்தது நல்லூழ் என அமைக! என் குலமும் கொடிவழியினரும் நலம் பெறுக! என் தலை தங்கள் காலடிகளில் அமைக!” என்றாள். இடக்கையை தூக்கி அவளை வாழ்த்தியபின் கனகர் காட்டிய பட்டு விரிக்கப்பட்ட சிறிய பீடத்தில் உடலை வளைத்து ஏகாக்ஷர் அமர்ந்தார். ஒன்பது உடன்பிறந்தவர்களும் ஒவ்வொருவராக வந்து அவளுக்குப் பின்னால் நின்றனர். பானுமதியும் அசலையும் வந்து அறையின் சாளரத்தோரமாக நின்றார்கள். பானுமதி விழிகாட்ட அசலை பக்கத்து அறையின் கதவை திறந்தாள். அதற்கப்பால் இருந்த இருண்ட அறையில் கௌரவர்களின் அரசியர்கள் செறிந்திருக்கிறார்கள் என்று நிகும்பனுக்கு புரிந்தது.
இன்னீர் குடுவையுடன் சேடி வந்து பணிந்தாள். ஏகாக்ஷர் அதை வாங்கி ஓசையில்லாமல் அருந்தினார். மலரில் தேனுண்ணும் சிட்டுபோல என நிகும்பன் எண்ணினான். நோக்க நோக்க அவர் உடலின் அத்தனை அசைவும் விழிக்கு இனிதாவதன் விந்தையை அவன் உணர்ந்தான். காந்தாரி வணங்கி “தாங்கள் அறிந்திருப்பீர்கள், முனிவரே. அங்கு பெரும்போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எங்கள் மைந்தர்கள் களம்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இறப்புச்செய்திகளுடன் பொழுது விடிகிறது. நேற்று பகல் போரில் என் குடியின் தலைமகன் பீஷ்ம பிதாமகர் வீழ்ந்திருக்கிறார். எங்கள் படைகள் அங்கே திகைத்து சோர்ந்து நின்றிருக்கின்றன. இனி என்ன ஆகும் என்று எவராலும் சொல்ல இயலவில்லை” என்றாள்.
இன்நீர் குடுவையை திரும்ப அளித்து, ஏவல்பெண்டு நீட்டிய பட்டுத்துணியால் வாயையும் தாடியையும் துடைத்துவிட்டு ஏகாக்ஷர் மெல்லிய கனைப்பொலி எழுப்பினார். தளர்ந்த குரலில் “நான் அந்தப் போரை பார்க்க விழைகிறேன், முனிவரே” என்று காந்தாரி சொன்னாள். ஏகாக்ஷர் புன்னகைத்து “நான் இதை எதிர்பார்த்தேன்” என்றார். “பேரழிவு அங்கு நிகழ்கிறது. அதைப்பற்றி எதுவும் எண்ணாமல், ஒரு சொல்லும் செவிகொள்ளாமல், இங்கு அறைகளில் மூடி இருந்துவிடவேண்டுமென்றுதான் நேற்று வரை எண்ணிக்கொண்டிருந்தேன். பிதாமகர் நேற்று களத்தில் விழுந்த செய்தி வந்ததும் என் எண்ணம் மாறிவிட்டது. இனி இவ்வாறு எதையுமறியாமல் இங்கிருப்பதில் எப்பொருளுமில்லை. எத்தனை வாயில்களை மூடினாலும் எப்படி உள்ளத்தை சுருட்டி அடக்கிக்கொண்டாலும் இந்தப் போர் என்னை வந்து சேர்ந்துகொண்டுதான் இருக்கும்.”
“போரிலிருந்து விலகியிருக்கையில் அது பேய்களைப்போல் பேருருக்கொள்கிறது. ஒன்று நூறு ஆயிரம் கோடி என பெருகி என்னைச் சூழ்ந்து துயரளிக்கிறது. போரை எதிர்கொள்ள ஒரே வழி போரில் ஈடுபடுவதே. அப்போரை நேரிலென காண விழைகிறேன். நானும் என் மைந்தருடன் அக்களத்தில் நின்று உடனாட எண்ணுகிறேன்” என்றாள் காந்தாரி. “அக்களத்தில் நின்றிருத்தலே இங்கே இருந்து அடையும் பெருந்துயரை வெல்வதற்கான ஒரே வழி. இங்கிருந்தால் நான் அடைவது வினாக்களின் துயர். அங்கு நின்றிருந்தால் அடைவது விடைகளின் துயர். இது பேய்களால் அளிக்கப்படுவது, அது தெய்வங்களின் கொடை.”
ஏகாக்ஷர் புன்னகைத்து “ஆம்” என்றார். காந்தாரி “அதற்கேதேனும் வழியுண்டா என்று அமைச்சரிடம் கேட்டேன். அவர் நிமித்திகரிடம் உசாவியபோது தங்கள் பெயரை சொன்னார். ஆகவேதான் தங்களை அழைத்து வரும்படி செய்தி அனுப்பினேன். அஸ்தினபுரிக்கு இத்தனை அருகே தாங்கள் இருப்பது இப்போதுதான் தெரிந்தது” என்றாள். “நான் இங்கிருந்தது தற்செயலே” என்றார் ஏகாக்ஷர். “எங்கிருக்கிறேன் என்பதை எவரேனும் சொல்லியே நான் அறிகிறேன்.” காந்தாரி “எனக்கு போரை காட்ட தங்களால் இயலுமா?” என்றாள்.
இனிய மென்குரலில் “ஆம், போரை நான் உங்களுக்கு காட்டமுடியும்” என்றார் ஏகாக்ஷர். பானுமதி “அதற்கு முன் நான் ஒன்று கேட்க விழைகிறேன், முனிவரே. இந்தப் போரை இவ்வண்ணம் நேரிலென காண்பது எங்களுக்கு மெய்யாகவே நலம் பயக்குமா?” என்றாள். ஏகாக்ஷர் அவளை நோக்கி “சிறுதுயர்கள் அழிப்பவை. பெருந்துயர்கள் விடுதலை செய்பவை. இருவகை விடுதலை. இறப்பு அல்லது மெய்மை. இவ்விரண்டும் நன்றே” என்றார். காந்தாரி கைநீட்டி “ஆம், அதுவே நான் எண்ணியது. நான் உங்கள் சொற்களினூடாக அப்போரை பார்க்கிறேன். அது என்னை விடுதலை செய்யட்டும்” என்றாள்.
“அரசி, அங்கே இருக்கும் கௌரவ அரசிகளில் எவர் இந்த பத்து நாட்களில் ஒருமுறையேனும் ஒரு துண்டேனும் இனிப்பு உண்டார்களோ அவர்கள் உடனே விலகிச்செல்ல வேண்டும்” என்றார் ஏகாக்ஷர். பானுமதி அசலையை பார்க்க அவள் உள்ளே சென்றாள். அங்கிருந்து பெரும்பாலான கௌரவ அரசிகள் கிளம்பிச்செல்லும் அணியோசைகளும் ஆடையொலிகளும் கேட்டன. அசலை வெளியே வந்து பானுமதியிடம் உதடசையாமல் அவர்கள் சென்றுவிட்டார்கள் என்றாள். பானுமதி தலையசைத்தாள். “சொல்க, முனிவரே” என்றாள் காந்தாரி.
ஏகாக்ஷர் “அரசி, என்னால் இப்பருப்பொருள்வெளியில் பிறர் பார்ப்பதை மட்டுமே பார்க்கமுடியும். ஆனால் என் ஊழ்கத்தால் பிறருடைய உள்ளங்களுக்குள் புகுந்து அவர்கள் பார்ப்பதை நானும் பார்க்க முடியும். இந்தப் போரை முழுதாக பார்க்கும் ஒருவரின் உள்ளத்திற்குள் புகுந்து அவர் பார்ப்பதை உங்களுக்கு சொல்கிறேன். அது உங்கள் இளையவர் சகுனியோ மைந்தனோ அல்லது பிறரோ ஆக இருக்கலாம். எவரென தெரிவு செய்யவேண்டியவர் நீங்கள்தான்” என்றார்.
பானுமதி ஏதோ சொல்வதற்குள் காந்தாரி கை நீட்டி “சஞ்சயனின் விழிகள்! அவ்விழிகளை தாங்கள் கொள்க!” என்றாள். “அவருடைய ஆடையோ அவர் புழங்கும் பொருளோ ஒன்று எனக்கு வேண்டும்” என்றார் ஏகாக்ஷர். கனகர் “ஒருகணம்” என்று சொல்லிவிட்டு வெளியே பாய்ந்தார். அங்கு அவர் சேடிப்பெண்ணுக்கு ஆணையிடும் ஓசை கேட்டது.
ஏகாக்ஷர் “இதை திருஷ்டிகல்பம் எனும் கலை என்பர். இக்கலை முற்காலத்தில் முனிவர்களால் உயிர் அகலும் நிலையிலிருக்கும் பேரறிஞன் ஒருவனின் கல்வி அவன் உடலுடன் முற்றழியாமல் பிறரால் பெற்றுக்கொள்ளும்பொருட்டு உருவாக்கப்பட்டது. அந்த உள்ளத்தின் அடுக்குகளில் இருக்கும் அனைத்து அறிதல்களையும் இளைய மாணவன் ஒருவன் பெற்றுக்கொண்டு அதை தொடர்ந்து எடுத்துச்செல்வான். இக்கலையைப் பயில ஒன்றுநோக்கும் விழி தேவை. அதன் பொருட்டு விழிகளிலொன்றை குருடாக்கிக் கொள்ள வேண்டுமென்று நெறியிருந்தது” என்றார்.
“தொன்றுதொட்டே இக்கலை பயிலப்பட்டுள்ளது. வேதங்கள் இம்மண்ணில் அழியாதிருந்தது இவ்வாறுதான். என் குடியில் நூறு தலைமுறைகளாக மூதாதையர் இக்கலையை பயின்றிருந்தனர். அவர்களின் நெடுநாள் இறைவேண்டலின் விளைவாக என் முதுதந்தை ஒற்றை விழியுடன் பிறந்தார். பன்னிரு தலைமுறைகளாக எங்கள் குடியில் மூத்த மைந்தர் ஒற்றைவிழியுடனேயே பிறக்கிறார்கள். ஏகாக்ஷ குலம் என்று நாங்கள் அழைக்கப்படுகிறோம்.”
“இக்கலையை உலகியலின் பொருட்டு நாங்கள் பயன்படுத்தலாகாது. ஆனால் இதன் விளைவாக இப்புவியில் முன்னர் நிகழாத ஒன்று நிகழ்கிறது. பெரும்போர் ஒன்று பெண்டிரால் முற்றறியப்படுகிறது. அரசி, இன்றுவரை வேறெந்தப் பெண்ணும் இப்படி ஒரு பெரும்போரை அணுகியிருந்து முழுதறியவில்லை என்று உணர்க! இன்றுவரை ஷத்ரியப் பெண்களில் மெய்யறிதலில் பெருங்குறைபாடென இருந்தது இதுவே. அவர்களின் வாழ்க்கையின் அனைத்துமே போரால் முடிவாகின்றன. போரை அவர்கள் அறிவதே இல்லை.”
“இன்று அறியும் இந்த மெய்மை உங்கள் குலத்தில் என்றும் திகழ்க!” என்றார் ஏகாக்ஷர். “உங்கள் குடியிலிருந்து பெண்கொள்வோரிடம் இம்மெய்யறிதல் கடந்து செல்லட்டும். ஷத்ரியப் பெண்கள் அனைவரிடமும் இது நிலைத்து வளர்க! பாரதவர்ஷத்தில் என்றும் இனி அன்னையர் குரலும் போர்முடிவுகளில் ஒலிக்கட்டும். இனி இப்படியொரு பெரும்போர் இம்மண்ணில் நிகழாதொழிக! அரசி, அதன்பொருட்டே என் தவப்பயனை இழந்தும் இதற்கு துணிகிறேன்.”
கனகர் உள்ளே வந்து சிறிய மரப்பேழை ஒன்றை அருகே வைத்தார். ஏகாக்ஷர் அதைத் திறந்து அதிலிருந்து பருத்திச் சால்வை ஒன்றை வெளியே எடுத்தார். அதை தன் கைகளில் மடித்து வைத்துக்கொண்டு ஒற்றைவிழி திறந்திருக்க நோக்கிக்கொண்டிருந்தார். “நான் சஞ்சயனை பார்க்கிறேன். அவன் தன் அரசர் திருதராஷ்டிரருடன் அமர்ந்திருக்கிறான்” என்றார். மெல்ல முனகியபடி முன்னும்பின்னும் அசைந்தார்.
“அவர்கள் மலைச்சரிவில் அமர்ந்திருக்கிறார்கள். பந்தங்களின் ஒளியில் நிழல்கள் நீண்டு விழுந்துள்ளன. நான் அவன் நிழல் என அருகே தோன்றுகிறேன். நிழலென அவன் என்னை எண்ணுகிறான். ஆனால் பந்தங்கள் இருக்கும் திசையிலேயே நிழல் எப்படி விழமுடியுமென அவனுடைய கலங்கிய உள்ளம் உணரவில்லை. நான் மெல்ல குறுகி அவனை அடைகிறேன். அவன் உடலுடன் பொருந்திக்கொள்கிறேன்” என்று ஏகாக்ஷர் சொல்லத்தொடங்கினார்.