ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் அளவும் பங்கேற்பும் இரண்டுமடங்காகிக்கொண்டே செல்கிறது.கூடவே செலவும். இம்முறை மிகப்பெரிதாகிவிட்டது. ஆகவே கூடவே வரும் கவலைகளும் பெருகுகின்றன. மிகுந்த உழைப்பும் கைப்பொருள் செலவுமாக நண்பர்கள் ஒருங்கிணைக்கும் விழா இது. ஆகவே இதை முழுமையான பொறுப்புணர்ச்சியுடன் பயன்படுத்திக்கொள்ளவேண்டியது எழுத்தாளர், வாசகர்களின் கடமை.
முந்தையநாள் எழுத்தாளர் சந்திப்புகளில் பங்குகொண்டபின் தங்கி மறுநால் விருதுவிழாவில் பங்கெடுக்க விழையும் அயலூர் நண்பர்களுக்கு, அவர்கள் முன்னரே பதிவுசெய்திருந்தால், தங்குமிடம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இவ்விழாவின் முதன்மைச்செலவென்பது அதுதான். அவர்கள் அதை உகந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இவ்விழாவுக்கென வராத, இலக்கிய ஆர்வம் அற்ற, எவரையும் கூட்டிவரவேண்டாம். இந்த தங்குமிடம் இலக்கியவாசகர்களுக்கு மட்டுமே. வருபவர்கள் கருத்தரங்கிலும் , விழாவிலும் கலந்துகொள்ள வேண்டும். அதை கருத்தில்கொள்ள நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
முன்பு வேறு அமைப்பினரின் நிகழ்ச்சிகளில் இத்தகைய வசதிகள் செய்யப்படும்போது அதை வெறுமே சுற்றுலாவுக்கும் குடிக்கேளிக்கைக்கும் பயன்படுத்திக்கொண்டவர்கள் அந்த அமைப்புக்களை காலப்போக்கில் அழித்தனர். எவ்வகையிலும் அவர்களை இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நாங்கள் அழைப்பதில்லை. அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரையும் தவிர்த்தே இதை நிகழ்த்துகிறோம். இம்முறையும் அவ்வாறு அடையாளம் காணப்படுபவர்களை வெளியேற்றவே எண்ணம் கொண்டிருக்கிறோம். அவர்கள் இலக்கியமெனும் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல, வெறும் ஒட்டுண்ணிகள் என்பதே என் எண்ணம். அவர்களை அகற்றுவதன் வழியாகவே இத்தனை ஆர்வமுள்ள புதியவர்களை உள்ளே கொண்டுவர முடிந்திருக்கிறது.
எந்த ஒரு அறிவார்ந்த சந்திப்பும் பேராசான் சொன்னபடி ’உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதலாகவே’ இருக்க முடியும். அது கற்றலில், நட்பில் எழும் இன்பம். ஆகவே கடுமையான மோதல்கள், தனிப்பட்ட முரண்பாடுகள், பூசல்கள் ஆகியவை நிகழலாகாதென்று கூற விரும்புகிறேன். எந்தக் கருத்துக்கும் இலக்கியமெனும் விரிந்த பரப்பில் ஏதோ ஓர் இடம் உண்டு என்னும் புரிதல் இருக்குமெனில் அந்த சமநிலை கைகூடும்.நட்புடன் இருக்கையில் மட்டுமே கற்கிறோம். பூசல்களில் உண்மையில் மறுப்பு மட்டுமே வலுவடைகிறது. நம்மை இறுகவைத்து எதையும் அறியமுடியாதவர்களாக ஆக்குகிறது. நிறைய பூசலிட்டுக் கற்றுக்கொண்ட உண்மை இது ;)))
அனைத்துக்கும் மேலாக விஷ்ணுபுரம் விழா மட்டுமே இன்று மிக இளம்வாசகர்கள் ஆர்வமும் தயக்கமுமாக வந்து கலந்துகொள்ளும் நிகழ்வாக உள்ளது. அவர்களுக்கு முன்னால் இங்கே ஏற்கனவே எழுதிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தங்களை முன்வைக்கிறார்கள். அதனூடாக ஓர் அறிவியக்கத்தை முன்னெடுக்கிறார்கள். அந்த தன்னுணர்வு அவர்களுக்கு இருந்தாகவேண்டும்.
ஒரு சிற்றூரிலிருந்து பேருந்தில் பயணம் செய்து வந்து சேரும் இளம்வாசகனுக்கு தேவதேவன் முதல் லட்சுமி மணிவண்ணன் வரையிலான கவிஞர்களை, தேவிபாரதி முதல் கே.என்.செந்தில்,போகன் சங்கர்வரையிலான எழுத்தாளர்களை, ராஜ் கௌதமன் முதல் ஸ்டாலின் ராஜாங்கம் வரையிலாான கோட்பாட்டாளர்களைச் சந்திக்கும்போது உருவாகும் தொடக்கங்கள் எளியவை அல்ல. நம் சூழலில் இன்று இதற்கு வேறு வாய்ப்புக்களே இல்லை.
அதை அவர்களுக்குக் கொடுக்கும் பொறுப்பு இலக்கியவாதிகளுக்கு உண்டு.நாம் நம்பும் இலக்கியம் என்னும் இந்த இயக்கம் முன்னே செல்ல அதுவே வழி. இத்தத் தருணம் அதற்காகவே ஒருங்கிணைக்கப்படுகிறது. அவர்கள் கூடுமானவரை முகமறியா இளம் வாசகர்களிடம் உரையாட முயற்சி எடுத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் முன் தமிழ்ச்சூழலின் மிகச்சிறந்த இலக்கிய உரையாடல் நிகழவேண்டும்
இதை ஒவ்வொரு நண்பரும் என் தனிப்பட்ட கோரிக்கையாகவும் முன்வைக்கிறேன்.
ஜெயமோகன்
விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்
விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி
விஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை
விஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்
விஷ்ணுபுரம் விருந்தினர் -6, சுனீல் கிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -7, கலைச்செல்வி
விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்
விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -9, நரன்