பொங்கல்,பண்பாடு -கடிதங்கள்

அன்புள்ள ஜே எம்

இந்த வேகமான காலத்தில் பொங்கல் கொண்டாடுவது குறைந்து விட்டது. ஆனால் மறைந்து விடவில்லை.
இன்னும் எங்கள் வீட்டிலும் மற்றும் திருநெல்வேலி சைவ பிள்ளைமார் வீடுகளில் பொங்கல் மிகவும் பிரசித்தம் ஐயா.

மார்கழி மாதம் பூராவும் வீட்டை வெள்ளை அடித்து, எங்களை வேலை வாங்குவார்கள். தை மாதம் முதல் தேதி பொங்கல், மறுநாள் மாட்டு பொங்கல், அப்புறம் சிறு வீட்டு பொங்கல் என்று மூன்று பொங்கல்கள் உண்டு. மண் கட்டி அடுப்பு வைத்து மூன்று பானைகள், இரண்டில் பச்சரிசி பொங்கல், மூன்றாவதில் பாயசம்.
சிறு கிழங்கு பொறியல், அவியல், வெண்டைக்காய் பச்சடி, துவரன், சாம்பார், அப்பளம் என்று அற்புதமான சாப்பாடு.
பல்லால் கடித்து தோலுரித்து, கடித்து சாப்பிட்டு, சாறை உறிஞ்சி, சக்கையை துப்பி விட்டு, நாக்கெல்லாம் புண்ணாகி போக கரும்பு.

மிஞ்சிய சாம்பார், பொறியல், அவியல், பச்சடி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து நெடு நேரம் சுண்ட வைத்து செய்யும் சுண்ட கறி.

“சுண்ட கறியின் சுவை அறியார், அறியார்
பண்டை தமிழின் சிறப்பு”.

அப்புறம் இரண்டு நாட்களுக்கு, தண்ணீர் ஊற்றிய பச்சரிசி பொங்கலில் கட்டி தயிர் விட்டு பிசைந்து கூட சுண்ட கறி வைத்து சாப்பிடும் இன்பம்.
சைவ பிள்ளை குடும்பங்களில் மட்டும் இந்த கலாசார வைபவம் மறையாது.

இங்கு( அமெரிக்காவில்) சிறு கிழங்கு தவிர மற்ற எல்லாம் சாப்பிடுவோம். எங்கள் நாக்கு அவ்வளவு சீக்கிரம் சுவை மறக்காது.

சிவா சக்திவேல்

அன்புள்ள சிவா

நலம்தானே? நெடுநாள் கழித்து கடிதம்.

அலர்மேல் மங்கை எப்படி இருக்கிறார்? தகவலே இல்லை.

பொங்கல் உருமாறி வருவதைத்தான் சொன்னேன். பொங்கல் அடிப்படையில் ஒரு விவசாய பண்டிகை. ஆகவே கிராமம் சார்ந்தது. குறிப்பாகச் சொல்லப்போனால் நெல்விவசாயம் சார்ந்தது. நெல் விவசாயம் மெல்ல மெல்ல தோல்வியடைந்து கிராமங்கள் அன்னியமாகிவரும் சூழலில் பொங்கல் டிவிப்பொங்கலாக ஆகிவருகிறது

ஜெ

அன்புள்ள ஜெ. மோ ,

வணக்கம்.

பொதுவாக தமிழர்களிடம் குழு மனப்பான்மை குறைவாக இருப்பதன் காரணம் என்ன ? பொதுவாக வெள்ளையர்கள் மற்றும் சீனர்கள் குழுவாக விளையாடுவதில் சிறந்து விளங்குகின்றனர் . இதற்கு நம் கல்வி , பயிற்சி முறைகள் அல்லது வளர்ப்பு முறை காரணமா ?

இத்துடன் நான் ரசித்த ஒரு உயிர்ப்பு வரைவியல் படத்தை இணைத்துள்ளேன். கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://www.youtube.com/watch?v=aBEd_TAwUdY&feature=related

நன்றி .

அன்புடன்,

நா.சாத்தப்பன்

அன்புள்ள சாத்தப்பன்

நான் அப்படி நினைக்கவில்லை. இத்தனை பிரம்மாண்டமான மக்கள் தொகை கொண்ட தேசம் ஒருங்கிணைந்து நாற்பது நூற்றாண்டுகளாக நீடித்தது அதன் சேர்ந்து செயல்படும் இயல்பினால்தான்

மிகச்சிறந்த கூட்டுச்செயல்பாடுகள் ஐம்பதாண்டுக்காலம் முன்னால்கூட இங்கே நிகழ்ந்திருக்கின்றன. நம் ஏரிப்பாதுகாப்பு-மராமத்து முயற்சிகளைக் கண்டால் தெரியும். பஞ்சம் தாங்கும் அமைப்புகள் ,நீர் வினியோக அமைப்புகள், கோயில் விழா போன்ற சமூகக் கொண்டாட்டங்களுக்கான கூட்டமைப்புகள், என எவ்வளவோ குழுச்செயல்பாடுகள் பலநூற்றாண்டுக்காலம் நடந்து வந்தன.

அவை நிலப்பிரபுத்துவ காலகட்டத்தைச் சேர்ந்தவை . அன்றைய குழுக்கள் சாதிகளாலும் கிராம எல்லைகளாலும் உருவாக்கப்பட்டவை. நாம் இன்று முதலாளித்துவ காலகட்டத்துக்கு வந்துவிட்டோம். இன்று தேவைப்படும் நவீன திறன்சார் குழுக்களாகவும் பொதுநலக்குழுக்களாகவும் நம்மை மறு அமைப்பு செய்துகொள்ள நமக்கு உடனடியாக இயல்வதில்லை. நேற்றின் இயல்புகளான சாதி, நிலம் சார்ந்த பிரிவினைகள் மனநிலைகளாக நீடிக்கின்றன.

ஐரோப்பா முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு நம்மைவிட இருநூறு வருடம் முன்னரே வந்துவிட்டது. ஆரம்பத்தில் நம்மைவிடப் பெரும் சிக்கல்களை அவர்கள் சந்தித்தார்கள். ஆனால் விரைவிலேயே நவீன உற்பத்திமுறையின் கட்டாயம் காரணமாக அவர்கள் உற்பத்திக்குழுக்களாக ஆகப் பயின்றார்கள். சமூகக்குழுக்களகா ஆகவும் செய்தார்கள்

நம்முடைய இன்றைய தொழிலமைப்புகளில் சமீபகாலமாக மிக வெற்றிகரமான குழுச்செயல்பாடுகள் நடைபெறுகின்றன. உலகிலேயே சிறந்த செயல்பாடுகள் என்றுகூடச் சிலர் சொல்கிறார்கள்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலமா. நைஜீரியாவில் இப்போது ஹர்மாதான் எனப்படும் தூசுதூவல்காலம். சஹாரா பாலைவனத்தின்மடியில் இருப்பதால் சஹாராவின் புழுதிஎல்லாம் டிசம்பர் ஜனவரியில் இங்கு வரும். காற்று புழுக்கமாக இருக்கும். இரவில் குளிர். காலைநேர பனிமூட்டம்.

முதல் கட்டத் தேர்தல்கள் தொடங்கபோகின்றன. ஒரே கட்சியில் இருந்து மூன்று வேட்பாளர்கள் அதிபர் பதவிக்குபோட்டியிடுகின்றனர். இங்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறுவதாக வெளியில் தெரிந்தாலும் உள்ளே மிலிடரி ஆட்களின் கைதான் ஓங்கி இருக்கிறது.

முன்னால் மிலிடரி ப்ரெசிடென்ட் முர்தாலா முகம்மதுவின் ஆதரவாளர் – ஒபசன்ஜோமுர்தாலா, படுகொலைக்குப்பின் பதவிக்கு வந்தார். பின்னர் அவரே ஜனநாயகத்தை அறிவித்து முதல்ஜனநாயக அரசின் அதிபரானார். அவருக்குபின் யாராடுவா என்ற அவரது ஆளை பதவியில் உட்காரவைத்தார்.யாராடுவா அவருடைய பதவிகாலம் முடியும் முன்னரே சென்ற வருடம் மே மாதம் இறந்துவிட்டார்.அவருடைய மரணம் பற்றிய செய்தி ஒரு தனி நாடகம். அவருடைய துணை அதிபராக இருந்த goodluckஜோனதன் அதிபராக ஆனார். இப்போது ஜோனதன் உட்பட மூன்றுபேர் அதிபர் பதவிக்கு ஒரே கட்சியில் இருந்து போட்டியிடுகிறார்கள்.

இங்கு தேர்தல் எல்லாம் ஒரு கண் துடைப்புதான். பணபலமும் பின்னணியும் உள்ளவர்கள்தான் அடுத்த அதிபர். இந்தியாவில் ஜனநாயகத்திற்கு ஓரளவாவது கண்ணும், குரலும் இருக்கிறது. இங்கு ஜனநாயகம் என்ற பெயர்மட்டும்தான் இருக்கிறது.

அன்புடன்

குருமூர்த்தி பழனிவேல்

அன்புள்ள குரு

ஆப்ரிக்க நாடுகளில் நிகழும் தேர்தல்களை எப்போதும்கூர்ந்து கவனிப்பதுண்டு. சமீபத்தில் டுனீஷியாவில் நடப்பதைஅவதானிக்கிறேன்

மக்கள் தங்கள் பழங்குடி-நிலப்பிரபுத்துவ மனநிலைகளை உதறி வெளிவராதவரை ஜனநாயகம் உருவாகாது. அவர்கள் மேலும் மேலும் போர்த்தலைவர்களையே தேர்ந்தெடுப்பார்கள். மக்கள் ஜனநாயக மனநிலைக்கு வந்துவிட்டால் எந்த அரசும் சர்வாதிகாரத்தன்மையுடன் நெடுநாள் நீடிக்க முடியாது

இந்தியாவுக்கு காந்தி எதைக்கொடுத்தார், காந்தியிடமிருந்து பெற்று மண்டேலா தென்னாப்ரிக்காவுக்கு எதைக்கொடுத்தார் என்று நைஜீரியா, காங்கோ முதல் டுனீஷ்யா வரையிலான நாடுகளைப்பார்த்தாலே தெரியும்

காந்திமீது இந்தியாவில் நடக்கும் ஈடிணையற்ற திட்டமிட்ட அவதூறுத்தாக்குதல் இன்னொரு ஆப்ரிக்க நாடாக நம்மை ஆக்கும் நோக்கம் கொண்டது

ஜெ

முந்தைய கட்டுரைகண்ணன் பாடல்கள் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைநான்காவது கொலை!!!- 3