திருவனந்தபுரத்தில்…
ஜெ
இதை சுரேஷ் கண்ணன் இணையத்தில் எழுதியிருந்தார்
படம் துவங்கிய சில நிமிடங்களுக்குப் பிறகு பொறுமையின்றி கொத்துக் கொத்தாக சில பார்வையாளர்கள் வெளியேறுவதைப் பார்க்கிறேன். அது அவர்களின் உரிமை. மறுக்கவில்லை. ஆனால் அது மற்ற பார்வையாளர்ளுக்கு இடையூறாக இருப்பதையும் அவர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் உணர வேண்டும்.
திரைவிழாவின் ஒவ்வொரு வருடமும் இதைப் பற்றி பலமுறை பேசியாகி விட்டது.
ஒரு திரைப்படம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான அவகாசத்தை அதற்கு அனுமதியுங்கள். உலக அரங்குகளில் விருதுகளை வென்ற ஒரு சிறந்த இயக்குநர் தேவையன்றி ஒரு காட்சியை, பின்னணியை சொல்லிக் கொண்டிருக்க மாட்டார். உங்களின் பொறுமையைச் சோதிப்பது அவரின் நோக்கமல்ல. அவரை நம்புங்கள். அந்தப் படைப்பிடம் சற்று நேரம் உங்களை ஒப்படையுங்கள். வெகுசன திரைப்படங்களைக் கண்ட அதே மனநிலையோடு இதையும் தயவுசெய்து அணுகாதீர்கள்.
சில முன்தயாரிப்புகளுடன் வருவது இவ்வகையான ஏமாற்றத்தையும் சலிப்பையும் தவிர்க்க ஏதுவாக இருக்கும். நீங்கள் காணவிருக்கும் திரைப்படம், அதன் கதையம்சம், இயக்குநரின் முன் வரலாறு, சாதனைகள், தொடர்புள்ள தேசம், அதன் கலாசாரம் போன்றவற்றை சிறிது வாசித்து ஹோம்ஒர்க் செய்து விட்டு வருவது நன்று.
கதைச்சுருக்கங்களை வாசித்து விட்டு ஏமாறாதீர்கள். மதிப்பெண்களை, ஸ்டார்களை நம்பாதீர்கள். மின்னுவதெல்லாம் பொன்னல்ல. சில கதைகளின் சுருக்கங்கள் திறமையான எழுத்தால் சுவாரஸ்யமாக தெரியும். ஆனால் திரைப்படத்தினுள் பல்லிளிக்கும். அதிலும் இம்மாதிரியான கதைச்சுருக்கங்களை மட்டும் வாசித்து விட்டு சில நாளிதழ்கள் தரும் அறிமுகப்பதிவுகள் நகைச்சுவையாக இருக்கின்றன. சுவாரசியமற்றதாக தெரியும் கதைச்சுருக்கங்கள் அதன் அபாரமான இயக்கத்தால் பெரிதும் கவரும்.
‘பிலிம் பெஸ்டிவல்’ போர்வையில் வரும் சில போலியான திரைப்படங்களும் உண்டுதான். அவற்றை இனங்காண முயலுங்கள்.
இவற்றையும் மீறி ஒரு திரைப்படம் ஏமாற்றினால் அது நம் தலையெழுத்து அவ்வளவே. அல்லது அதை நமக்கு முறையாக அணுகத் தெரியவில்லை என்கிற கோணமும் உள்ளது.
இதைத்தான் நான் உங்களிடம் திருவனந்தபுரம் திரைவிழாவில் சொன்னேன். திருச்சியிலிருந்து ஏன் திருவனந்தபுரம் வருகிறீர்கள் என்று கேட்டீர்கள் அல்லவா , இதற்குத்தான். சென்னையில் அரங்கில் இருந்து வரும் எதிர்வினைகளும் கொடுமையானவை
ஒரு சினிமாவுக்குள் நுழைய இருபதுநிமிடங்களாவது ஆகும். அதுவரை அதில் கண்களை விரித்து லயித்திருக்கவேண்டும். அது இதைச்சொல்கிறதா அதைச்சொல்கிறதா என்றெல்லாம் மூளையால் யோசிக்கக்கூடாது. அதற்கு கண்களைக் கொடுத்துவிடவேண்டும். அதிகபட்சம் முப்பபது நிமிடங்களுக்குள் சினிமா நம்மை உள்ளே இழுத்துவிடும். அதற்குள் ஒரு வாழ்க்கையை வாழவேண்டும். வெளியே வந்தபின்னரே அது என்ன சொல்கிறது, அதன் மையம் என்ன என்றெல்லாம் யோசிக்கவேண்டும். அதை திருவனந்தபுரத்தில் சொன்னீர்கள். ஆனால் நான் சொன்ன The Wild Pear Tree படத்துக்கு உங்களால் போகமுடியவில்லை.
வணிகசினிமாவில் ஐந்து நிமிடங்களில் கதை தொடங்கிவிடும். அது ஒரு ஃபார்முலா. அது கலைப்படங்களில் இல்லை [ நடுவே கலைப்படம் வணிகப்படம் என்று பேதமில்லை என சில கேனைகள் சொல்வதையும் கேட்கிறேன். வணிகப்படம் ரசிகனின் ரசனைக்கேற்ப கட்டமைக்கப்பட்ட வடிவில் எடுக்கப்படுவது. கலைப்படம் அதன் ஆசிரியனுக்கு சொல்லவிருப்பதை காட்டுவது என்ற அளவிலேனும் இந்த கேனைகளுக்குப் புரியவைக்க என்றாவது முடியலாம்] கலைப்படம் அது என்ன சொல்லவருகிறதோ அதற்கேற்ற கூறுமுறையை கொண்டிருக்கும். திகைப்பூட்டுவதுபோல தொடங்குவதுமுண்டு. மெல்லமெல்ல உள்ளே செல்வதும் உண்டு. அதற்கு ஒரு பொறுமையை அளிக்கவேண்டும். வணிகப்படம் பார்த்துப்பழகிய மனநிலையில் கலைப்படங்கள் பார்க்க சென்று அமரக்கூடாது.
இதை இன்னமும்கூட தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்திருக்கவில்லை. அதற்குக் காரணம் இங்கே சினிமா விமர்சனம் எழுதும்பெரும்பான்மையினர்தான். அவர்கள் சாதாரண சினிமா ஃபார்முலாவுக்குள் இருக்கும் படங்களை எல்லாம் கலைப்படைப்புகள் என மாய்ந்து மாய்ந்து எழுதி அவற்றைக்கொண்டு உலக சினிமாவை மதிப்பிடும் மனநிலையை உருவாக்கிவிடுகிறார்கள். அந்த மனநிலையுடன் வந்தால் உலகின் பெரும்பாலான நல்ல கலைப்படங்களை ரசிக்கமுடியாது.
தமிழில் எடுக்கப்பட்ட பரியேறும்பெருமாள் கூட வணிகசினிமாவின் ஃபார்முலா கட்டமைப்பு கொண்ட படம்தான். ஆனால் நேர்மையானது. 96 அப்பட்டமான வணிகசினிமா. ரசிக்கத்தக்க செண்டிமெண்ட் கொண்ட வணிகசினிமா, அவ்வளவுதான். ஓர் எழுத்தாளர் அதைப்பற்றி புத்தகமே எடுத்திருக்கிறாராம். இவரைப்போன்றவர்கள் Roma போன்ற கிளாஸிக் படத்தை பார்க்க வந்து அமர்ந்தால் என்ன நடக்கும்? அதுதான் உலகசினிமா விழாவில்.நடக்கிறது.
இங்கே சினிமாரசனை சொல்லிக்கொடுக்கப்படவே இல்லை. சினிமாரசனை என்றபேரில் வன்முறையையும் செக்ஸையும் ரசிக்கச் சொல்லிக்கொடுக்கிறார்கள் அசடுகள். அதற்கு காசு கட்டி சென்று உட்கார்ந்து படிக்கிறார்கள் அதைவிடப்பெரிய அசடுகள். சினிமாவில் சில்லறை அரசியலை தவிர எதையுமே கண்டுபிடிக்காத ஒரு கூட்டம்.மொத்தத்தில் மொக்கைகளின் கூட்டம். தப்பித்து திருவனந்தபுரம் ஓடிவராமல் என்ன செய்ய?
ஆர்.பாரதி
திருவனந்தபுரம் சினிமாவிழா -கடிதங்கள்