‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-1

 தோற்றுவாய்

ele

வேசரநாட்டில் கருநீல நீரோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத்து மூதன்னையான நித்யை அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தன் குலத்து மகள் விஷஹாரியின் வயிற்றில் பிறந்த சிறுமகள் மானசாதேவியை மடியில் வைத்துக்கொண்டு கதைசொல்ல அமர்ந்தாள். இளமகள் நித்யையின் கைகளைப்பற்றி தன் வயிற்றின்மேல் வைத்துக்கொண்டு “உம்” என்றாள். நித்யை ‘ம்ம்ம்’ ‘ம்ம்ம்’ என முனகிக்கொண்டு முன்னும்பின்னும் ஆடிக்கொண்டிருந்தாள். அந்த முனகலோசை அலையடித்துச் சுழன்றது. அதனூடாக முதுமகள் வேறெங்கோ சென்றுகொண்டிருந்தாள்.

நித்யை அந்த முரலலோசையை தூண்டிலாக்கி சொற்களை ஆழத்திலிருந்து கோத்தெடுத்தாள். அதை சரடாக்கி அச்சொற்களை தொடுத்தாள். அவர்களுக்குப் பின்னால் மீன்நெய் விளக்கின் சுடர் அசைந்தது. நித்யை தன் குழலை சுருட்டி கொண்டையாக்கி அதன்மேல் ஏழு தாழம்பூக்களால் ஆன நாகபடத்தை சூடியிருந்தாள். நாகநிழல் முன்னால் முற்றத்தில் உருபெருகி விழுந்துகிடந்தது. மானசாதேவி அந்நிழலில் எழுந்த கரிய பெருநாகத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் சற்றே முன்னகர்ந்தபோது மாநாகத்தின் உடலில் இருந்து அவள் எழுவதாகத் தோன்றியது. அவள் தன் இரு கைகளையும் தலைமேல் வைத்து சற்றே முகம்திருப்பினாள். மூன்று நாகபடங்களாக அவள் தலையின் நிழல் எழுந்தது. அவள் களிப்புடன் கால்களை ஆட்டிக்கொண்டு எழுந்தமைந்தாள்.

தன் இளமகளின் புன்மயிர்த்தலையை எலும்பெழுந்த முதிய கையால் வருடியபடி மூதன்னை சொன்னாள். “இந்தக் கதையை உன் அன்னை விஷஹாரிக்கு நூற்றெட்டு முறை சொன்னேன். முதல்முறையாக உனக்குச் சொல்கிறேன். கதைகள் நமக்கு வழித்துணையாகவேண்டும். நாம் வளர்கையில் கதைகள் வளரவேண்டும். நம் பாதைகள் நீள்கையில் கதைகளும் நீளவேண்டும். நம்மை உதிர்த்துவிட்டு கதைகள் மேலும் முன்செல்லவேண்டும். இப்புவி கதைகள் திகழும்பொருட்டு அன்னைநாகங்களால் படைக்கப்பட்டது. ஏனென்றால் தேனில் தேனீக்கள் என தெய்வங்கள் கதைகளில் பிறந்து கதைகளில் திளைத்து கதைகளில் பெருகுகிறார்கள். கதைகளுக்கு நாவும் செவியும் உள்ளமும் என ஆகும்பொருட்டே மானுடரை அவர்கள் ஈன்றனர். இந்தக் கதை உன் அன்னையென்றாகுக! உன் தோழியும் தலைவனும் ஆகுக! நீ சென்றடையும் இறுதியில் கைவிரித்து கண்பெருக்கி தெய்வமென்று எழுந்து உன்னை ஆட்கொள்க! ஆம், அவ்வாறே ஆகுக!”

நித்யை சொன்னாள். “மகளே கேள், இந்த கிருஷ்ணை நதி ஒரு நாகம். கன்னங்கரியது. ஓசையின்றி நெளிந்தோடுவது. வெயிலில் மின்னுவது, இருளில் தன்னொளிகொண்டு துலங்குவது. இது சீறிப் படமெடுக்கும்போது அதை அருவி என்கிறார்கள். வேட்கைகொண்டு பிறிதொரு நதியுடன் பிணையும்போது பிரயாகை என்கிறார்கள். தன் மைந்தர் பிரிந்து கைவழிகளாக விடைகொண்டு அகல்கையில் மெலிகிறாள். சோர்ந்து நடைதளர்ந்து சென்றடைகிறாள்.” மானசாதேவி இருளுக்கு அப்பால் கேட்டுக்கொண்டிருந்த நதியின் ஒழுக்கோசையின் வழியாக நதிப்பெருக்கை அருகெனக் கண்டு “ம்” என்றாள்.

“அங்கே அத்தனை நதிகளும் சென்றடையும் பெருவெளி ஒன்றுள்ளது. அதை பல்லாயிரம் படங்களும் பல்லாயிரம்கோடி நாவுகளும் கொண்ட அரவரசன் என்று அறிக! கன்னங்கரியோன். அலைச்செதில் ஒளிர, விரிந்த முடிவிலாச் சுருள்மேனியன். அணையாப் பெருஞ்சீற்றம் கொண்டவன். ஆயிரம் தலைகளால் தரைவிளிம்பை ஓங்கி ஓங்கி அறைந்து கூவிக்கொண்டிருப்பவன். அவன் நாக்கு வெண்ணிற அனல். மண்ணிலுள்ள அரவாறுகள் அனைத்தும் அவன் துணைவியரே. ஏழு கருஞ்சுருள்களாக அவன் இப்புவியை சுற்றியிருக்கிறான். விண்ணில் கார்வடிவென எழுவது அவன் பெரும்படமென்று அறிக! அவன் கனிந்து பொழியும் அமுதை உண்டு இங்கு எழுகின்றன புல்லும் செடியும் மரங்களும். அவனால் பேணப்படுகின்றன உயிர்க்குலங்கள். அவனை வாழ்த்துக!”

நித்யை சொன்னாள். “இது கதைகள் தோன்றிய காலத்தில் நிகழ்ந்தது. அன்று மண்ணுக்குமேல் எந்நாவாலும் பேசப்படாத சொற்கள் ஓசையில்லாமல் நிறைந்திருந்தன. பொருட்களில் அமையாத சொற்கள் மாற்றமில்லாமல் காலத்தை கடந்துசென்றுகொண்டிருந்தன. அரவரசனின் ஓயாத பேரோசை வந்து மலைமுடிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் மரக்கூட்டங்களிலும் மோதிச்சிதறி ஒலித்துளிகளாக ஆகியது. அச்சொற்களின்மீது ஒலித்துளிகள் வந்து அறைந்தன. என்னை தூக்கிக்கொள் என்னை எடுத்துக்கொள் என அன்னையின் ஆடைபற்றி அடம்பிடிக்கும் குழவிகள் போலிருந்தன அந்த ஒலிகள். பூச்சிகளோ பறவைகளோ விலங்குகளோ நாகங்களோ அன்று உருவாகியிருக்கவில்லை. இனியவளே, அன்னைநாகத் தெய்வங்கள் எதையும் அப்போது முடிவெடுத்திருக்கவில்லை.”

அரவரசனில் சுருண்டெழுந்த ஒவ்வொரு அலைபடமும் அவன் கொண்ட திரளா விழைவே. கரையணைந்து சுழன்றறைந்து ஓலமிட்டு உருவழிந்து மீண்டு பிறிதொன்றென உருக்கொண்டு மீண்டும் எழுந்து வந்தது அது. கணம் ஆயிரமென திரண்டு சொடுக்கி உயர்ந்த அந்த படங்களில் ஒன்று வானை வருடும்படி எழுந்து ஒளியுடன் வளைந்து கரைநோக்கி வந்தது. அது பிரம்மகணம். பிரம்மன் தான் படைத்த புவியை நினைவுகொள்ளும் தருணம். படைத்தோன் மகிழ்ந்து “மைந்தா, என்ன வேண்டும் உனக்கு?” என்று கேட்டான். “எந்தையே, என் விழைவு உருக்கொள்க! தன்னை நிகழ்த்தி நிறைவடைக!” என்றான் அரவரசன். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று பிறப்புமுதலோன் சொன்னான்.

பறப்பதற்கான நீரின் விழைவே அலை. அவ்விழைவு மூன்று பறவைகளாக மாறியது. தெறித்து முன்னெழுந்த வெண்நுரை சிறகுவிரித்து செம்பருந்தாகியது. தொடர்ந்தெழுந்த கருமை காகமென்றாகியது. வளைவின் ஒளிர்ந்த நெளிவு கரிய நாகமென்றாகியது. மூன்று உயிர்களும் வானில் பறந்தன. ஒவ்வொன்றும் இன்மையைத் தொடும் வெளியே வானம். எடையின்மை, திசையின்மை, முடிவின்மை, நிலையின்மை, பொருளின்மை. வானில் அவை மூன்றும் பறந்து பறந்து திளைத்தன. நான் நான் என்று ஒருகணமும் அது அது என மறுகணமும் இங்கே இங்கே என ஒருகணமும் இல்லை இல்லை என மறுகணமும் திகழ காலமறியாது அங்கிருந்தன.

செம்பருந்து விண்ணிலேயே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அது தன்னை விண்ணாளும் கதிரவனின் மைந்தன் என்றும், செந்தழலை சிறகாகக் கொண்டவன் என்றும் எண்ணிக்கொண்டது. கதிரொளியால் அது செந்நிறம் பெற்றது. ஒளிரும் முகில்களுடனும், மலையுச்சியின் வெண்பனியுடனும், மரங்களின் தளிர்களுடனும் தன்னை உறவென கருதிக்கொண்டது. காகம் மரங்களின் இலைகளுடன் கலந்தது. காட்டின் இருளுக்குள் ஊடுருவியது. மண்ணில் இறங்கி நடந்தது. பாறைகளையும் அடிமரங்களையும் கரிய மண்ணையும் தன் உறவென்று எண்ணிக்கொண்டது. நாகம் மண்ணுக்குள்ளும் சென்றது. வேர்களையும் அறிந்தது. நீரலைகளுடன் இணைந்து நெளிந்தது. ஆழத்து இருளுக்குள் நிறைந்திருந்த ஓசையின்மையை உணர்ந்தது.

செம்பருந்திலிருந்தும் காகங்களிலிருந்தும் நாகங்களிலிருந்தும் உயிர்க்குலங்கள் பெருகின. அவற்றின் ஒவ்வொரு கனவிலிருந்தும் ஒவ்வொரு உயிர் உடல்கொண்டு எழுந்தது. செம்பருந்தின் சினம்கொண்ட கனவிலிருந்து தழல்பிடரியுடன் சிம்மமும், தழல்வரிகளாடும் உடல்கொண்ட புலியும் பிறந்தன. அவற்றின் பசிகொண்ட கனவிலிருந்து தழலெனத் தாவும் மான்களும் ஆடுகளும் பிறந்தன. மேலும் மேலுமென விரைவை விழைந்த மான்களின் கனவிலிருந்து எழுந்தன புரவிகள்.

இமையாவிழி கொண்டவளே, காகத்தின் பெருவிழைவே யானை. யானையின் பொருந்தா விழைவே கட்டெறும்பு. யானையென்றான காகம் மரங்களை கடைபுழக்கி தூக்கி வீசி பிளிறியது. கட்டெறும்பான வேழம் மணலுடன் மணலாகி விழியிலிருந்து மறைந்தது. அனைத்து சிறுவழிகளினூடும் தடையிலாது ஊர்ந்தது. பன்றிகளும் எருமைகளும் குரங்குகளும் காகத்தின் உருவிரிவே என்று அறிக! பேருருக்கொண்ட காகமே யானை என்பதை தொலைவில் கேட்கும் யானைப்பிளிறல் காகத்தின் குரலென ஒலிப்பதைக் கொண்டு உணர்க!

நீரிலாடிய நாகங்களின் விழிகளும் நெளிவால்களும் உடல்வளைவுகளுமே மீன்களாயின. பெருகிப்பரந்த மீன்திரள் நீர்ப்பரப்பின் விளிம்புவரை வந்து இமையாவிழிகளால் கரையை நோக்கியது. எழுந்து நிலத்தில் நடக்க விழைந்து அவை நண்டுகளாயின. மரமேறுவதாக எண்ணி பல்லிகளாயின. மண்ணுக்குள் ஆழ்ந்திறங்கி புழுக்கூட்டங்களாயின. தன் நாவால் கூடுகட்டி அதற்குள் சுருண்டு சிறகுகளை தவம்செய்து பூச்சிகளாயின. இசைமீட்டி காற்றை நிறைத்தன. ஒளியை சிறகுகளால் அள்ளிக்கொண்டன. கதிரொளித் துளி சூடி இரவுகளில் மின்மினிகளாயின. பறக்க விழைந்து நீர்ப்பரப்பில் துள்ளித்துள்ளி எழுந்த மீன்களின் விழைவு சிறகு கொண்டு பறவைகளாயிற்று. சிட்டுக்களாகி தேன் தேர்ந்தன. குருவிகளாகி நெல்மணி உண்டன. அவற்றுள் உறைந்த நாகத்தின் விழைவால் நெளிகழுத்து பெற்று நாரைகளாயின.

அனைத்துமான பின்னர் தன்னுள் நிறைந்து தன்னுடலை உள்ளிழுத்துக்கொண்டு ஆமைகளாயின. நீரின் அடியில் ஆயிரமாண்டுகள் அமைந்த கற்களின் சொல்லடங்கிய அமைதியை அடைந்தன. அசைவற்றவற்றின்மேல் படர்ந்தேறும் பாசிபடிந்த வண்ணத்தை கொண்டன. ஆமை வளைக்குள் நூறுமுறை சுருள்கொண்ட நாகம். அதன் பொறுமைக்குமேல் அமைந்துள்ளன ஏழுலகங்களும்.

இப்புவி உயிர்க்குலங்களால் இடைவெளியின்றி நிறைந்தது. காற்றில் செறிந்திருந்த சொற்பொருட்கள் அவற்றின் நாவிலெழுந்த ஒலித்துளி ஒன்றை கண்டடைந்து அவற்றில் தாவி ஏறிக்கொண்டன. செம்பருந்து சிறகுகளை ஒடுக்கி தலைதூக்கி தன் கூரலகைத் திறந்து “ஏக!” என்று கூவியது. காகம் “கா?” என வினவுச்சொல்லை அடைந்தது. நாகங்கள் “ஸ்ரீ!” என்ற மங்கலச் சொல்லை முதல் ஒலியெனக் கொண்டன. சொல்பெருகி மொழிகளாயிற்று. மொழிகள் நதிகள்போல் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் வளர்ந்தபின் பலவாகப் பிரிந்தும் பெருகின. மரக்கூட்டங்களின் மேல் பறவைகள்போல சொற்பொருட்கள் மொழிகளின் மேல் எழுந்தும் அமர்ந்தும் களியாடின.

அந்த ஆடல் சலித்தபோது பொருட்கள் சொற்களுடன் ஒளிந்தாடத் தொடங்கின. ஒவ்வொரு சொல்லும் பொருட்திரிபு கொண்டது. ஒன்று என ஒரு மொழியில் ஒலித்த சொல் பல என்று பிறிதொன்றில் எழுந்தது. இன்று என்று ஒருவர் கூறியதை அன்று என்று இன்னொருவர் புரிந்துகொண்டார். செம்பருந்தின் குலங்களும் காகங்களின் குலங்களும் நாகங்களின் குலங்களும் தீராப் பெரும்போர் ஒன்றில் இறங்கின. நாகங்கள் நஞ்சுகொண்டன. காகங்கள் பெரும்பசி கொண்டன. செம்பருந்துகள் கூர்விழியும் உகிரும் கொண்டன. இக்கணம் வரை ஓயாது நிகழ்கிறது அப்பெரும்போர்.

குழவியின் உடல் தொய்ந்து நித்யையின் கைகளில் மெல்லிய ஆடைபோல தழைந்துகிடந்தது. மூதன்னை குனிந்து புன்னகையுடன் மானசாதேவியின் அழகிய சிறுமுகத்தை நோக்கிக்கொண்டிருந்தாள்.

eleபாரதவர்ஷத்திற்கு வடக்கே உசிநாரர்களின் சிறுநகரமான சிருங்கபுரிக்கு அருகேயிருந்த கிருஷ்ணசிலை என்னும் மலைச்சிற்றூரில் அரக்கர்குலத்து ஊஷரகுடியின் மூதன்னையாகிய யமி தன் மைந்தன் தூமனுக்குப் பிறந்த மைந்தனாகிய பகனின் தலைமயிரை வருடியபடி முதுமையால் பழுத்த விழிகளால் இருளை நோக்கிக்கொண்டிருந்தாள். “மூதன்னையே, நீ பார்ப்பது எதை?” என்று பகன் கேட்டான். “ஒரு யானையை. பேருடல்கொண்டது. விழிநிறைக்கும் கருமையென்றானது. இடியோசை எனப் பிளிறுவது. விண்மீன்கள் என சிறுவிழிகள் மின்னுவது” என யமி சொன்னாள்.

“அந்த யானையின் கதையை சொல்” என நரம்புகள் புடைத்த அவள் கைகளை பற்றிக்கொண்டு மைந்தன் கேட்டான். “ஆற்றல்மிக்க மூதாதையின் பெயர்கொண்டவனே, என்றுமழியா பெருங்குலத்தின் முளைகதிரே, என் குருதியின் விதையே, ஊஷரர்களின் அரசே, இனியவனே!” என யமி முதிய குரலில் பாடினாள். உடலை மெல்ல அசைத்தபடி “இருள் இனியது. பேரழகு கொண்டது. தன்னுள் அனைத்தையும் ஏந்தும் விரிவுகொண்டது. இருளால் உருவாக்கப்பட்டவர்கள் நாம். இருளே ஒளியின் பீடம். அழகனே, இருள் என்றுமிருக்கும்” என்றாள். அந்தப் பாடல் அவனுக்கும் முன்னரே தெரிந்திருந்தமையால் அவனும் உடன் சேர்ந்து பாடினான். “இருளுருவானவர்களே, வாழ்க! பறக்கும் இருளான காகங்களே, பிளிறும் இருளான யானைகளே, உலகுநிறைக்கும் இருளான கட்டெறும்புகளே, நீங்கள் வாழ்க!”

யமி சொன்னாள். கேள், மைந்தா. உலகைப் படைத்த பிரம்மனின் மைந்தனான மரீசிக்கு மைந்தனாக காசியபர் என்னும் சூதர் பிறந்தார். அவரே மானுடருக்கும் விலங்குகளுக்கும் பிரஜாபதி என்று அறிக! காசியபர் அதிதி, திதி, தனு, காளிகை, தாம்ரை, குரோதவஸை, மனு, அனலை ஆகிய மனைவியரை அடைந்தார். அவர்களில் திதியில் பிறந்த தைத்யர்களே அசுரர்கள். தனுவில் பிறந்த தானவர்களே அரக்கர்கள். நம் குடிகள் மண்ணின் உப்பென எழுந்தவர்கள். காசியபருக்கு குரோதவஸையில் பிறந்தனர் மிருகி, மிருகமந்தை, ஹரி, ஃபத்ரமதை, மாதங்கி, சார்த்தூலி, ஸ்வேதை, சுரபி, சுரஸை, கத்ரு என்னும் பத்து மூதன்னையர்.

மாதங்கி கரிய பேருடல் கொண்டிருந்தாள். எடைமிக்க காலடிகளுடன் அவள் காடுகளில் நடந்து தன் தந்தை பூசனையும் வேள்வியும் இயற்றுவதற்குரிய மலர்களையும் கனிகளையும் தேனையும் விறகையும் சேர்த்துக்கொண்டுவந்தாள். ஒருநாள் அவள் தன் இரு கைகளிலும் நெய்க்கலமும் தேன்கலமுமாக தந்தையை அணுகினாள். அவற்றை நிலத்தில் வைக்காமல் வேள்விக்களத்திற்கு கொண்டுசெல்ல வேண்டுமென்பது நெறி. மறைச்சொல்லில் ஒன்றி வேள்வி செய்துகொண்டிருந்த தந்தை திரும்பி நோக்காமல் “நெய்க்கரண்டியை எடு” என்று கைநீட்டினார். அக்கணத்தில் எழுந்த அகவிசையால் மாதங்கியின் மூக்கு நீண்டு ஒரு கையாகியது. அவள் கரண்டியை எடுத்து தந்தையிடம் அளித்தாள்.

நெய்யூற்றி சொல்லோதியபடி திரும்பி நோக்கிய காசியபர் இரு கைகளாலும் நெய்யும் தேனும் ஏந்திநின்ற மாதங்கியை நோக்கி “நீ அவற்றை நிலத்தில் வைத்தாயா? மண்ணில் வைக்கப்பட்ட வேள்விப்பொருட்கள் புவிமகளுக்கு முன்னரே அளிக்கப்பட்டவை, ஒரு துளி ததும்பினாலும் உண்ணப்பட்ட மிச்சில் போன்றவை” என்று சினந்தார். மாதங்கி அவற்றை அவரிடம் அளித்துவிட்டு கைகளைக் கூப்பியபடி “நான் அவற்றை தரையில் வைக்கவில்லை, தந்தையே” என்றாள். “ஒருதுளியும் சிந்தாமல் எப்படி கரண்டியை எடுத்தாய்?” என்றார் காசியபர். மாதங்கி அதை எப்படி எடுத்தேன் என மீண்டும் செய்துகாட்டினாள்.

உளம்மகிழ்ந்த தந்தை “இப்புவியிலேயே ஆற்றல்மிக்க உயிர்களின் அன்னையென ஆகுக! உன் குருதிவழியிலெழும் உயிர் அனைத்து மங்கலங்களும் கொண்டதாக ஆகும். எங்கும் எந்நிலையிலும் விலக்கு கொள்ளாதது. தெய்வங்களும் அரசர்களும் வீரர்களும் ஊர்வது. ஒவ்வொரு உயிரிலிருந்தும் ஆற்றல்மிக்கவையும் அழகியவையும் இணைந்து அவ்வுயிர் தோன்றுக!” என வாழ்த்தினார். மாதங்கியிலிருந்து யானை பிறந்தது. நாகம் அதன் துதிக்கை. பருந்தின் சிறகு அதன் செவி. பொன்வண்டு அதன் விழி. நூறு சிம்மங்களின் ஓசை அதன் பிளிறல். விலங்குகளில் தெய்வ உருக்கொண்டது யானை.

நீண்ட துதிக்கையும் துருத்தியென ஒலிக்கும் மூச்சும் கொண்டது உயர்ந்த வேழம். பொறுமையே அதன் இயல்பு. அரக்கர்குலத்து தெய்வங்களின் நகைப்புபோல நிரையாக அமைந்த பதினெட்டு அல்லது இருபது நகங்கள் கொண்டதும், குளிர்காலத்தில் மலையூற்றென மதம்பெருகுவதும், வலதுகொம்பு சற்றே நீண்டு உயர்ந்திருப்பதும், வெயிற்காலத்து இடியோசை என முழக்கமிடுவதும், அகன்று கிழிந்து ஆடும் செவிகள் கொண்டதும், வேங்கைமலர் நிரப்புபோல் முகத்திலும் துதிக்கையிலும் செம்புள்ளிகள் கொண்டதுமான கரி தெய்வத்தின் விழிதொடு வடிவம்.

“யானையை வணங்குக, மைந்தா! யானைவடிவமென நம்மைச் சூழ்ந்துள்ள மூதாதையரின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்க!” என்று யமி சொன்னாள். பகன் எழுந்து தன்முன் நிறைந்திருந்த இருளை மும்முறை உடல்வளைத்து நிலம் நெற்றிதொட வணங்கினான்.

eleகௌதமவனம் என்று அழைக்கப்பட்ட காட்டில் அந்திவேள்விக்குப் பின் அனலவிந்த எரிகுளத்தைச் சூழ்ந்து அமர்ந்திருந்த ஏழு இளமாணவர்களின் நடுவே அமர்ந்து கௌதம ஏகபர்ணர் கதை சொன்னார். வேள்விச்சாலையில் மூன்றுசுடர் கொண்ட ஒற்றை விளக்கு மட்டுமே எரிந்தது. வெளியே நாணல்களின் வழியாக காற்று ஓசையிட்டபடி சென்றுகொண்டிருந்தது. மிக அப்பால் முதற் கூகை சிறகடித்து சங்கொலிபோல் குரலெழுப்பியது. மாணவர்கள் கௌதமரின் சொற்களை விழிகளால் கேட்பவர்கள் போலிருந்தனர்.

“தளராத செவிகொண்டவர்களே, பிரம்மனின் மைந்தர் காசியபருக்கு தட்சனின் மகள்களான அதிதி, திதி, தனு, காளிகை, தாம்ரை, குரோதவஸை, மனு, அனலை என்னும் எட்டு அன்னையர் துணைவியராயினர். அவர்களில் சுகி கருவுற்று நதையை ஈன்றாள். நதையின் மகளெனப் பிறந்தவள் வினதை. வினதையின் மைந்தன் எனப் பிறந்தவன் கருடன். செம்பருந்துகளில் குலமுதல்வன். தழலே சிறகாகக் கொண்டவன். ஒளியென விரைவுள்ளவன். சொல்லாளும் அந்தணருக்கும் புவியாளும் ஷத்ரியர்களுக்கும் காவல்தெய்வமென விண்திகழ்பவன். அவனை வாழ்த்துக!” என்றார் கௌதமர். மாணவர்கள் கைகூப்பி “ஆம்! ஆம்! ஆம்!” என வாழ்த்தினர்.

கௌதமர் சொன்னார். அழிவற்றவராகிய காசியபர் தன்னை மீண்டும் மீண்டும் பிறப்பித்துக்கொண்டு தன் குருதியிலேயே தன்னைப் பெருக்கி உலகை நிறைத்தார். அவர் அன்னை நாகங்களான கத்ருவையும் வினதையையும் மணந்தார். இருவரும் கணவரை மகிழ்வித்தனர். “உங்களுக்கு நான் அளிக்கவேண்டியதென்ன என்று சொல்லுங்கள்!” என்றார் “ஆயிரம் மைந்தர், உலகை நிறைப்பவர், அழிவற்றவர்” என்று கத்ரு கேட்டாள். “உலகை நிறைத்து அழியாதிருப்பது சினமும் வஞ்சமும் விழைவுமே. அவையே உன் மைந்தர் ஆயிரவர் ஆகுக” என்றார் காசியபர்.

இளையவளாகிய வினதையிடம் “உன் கோரிக்கை என்ன?” என்றார். வினதை வணங்கி “எனக்கும் மைந்தரே வேண்டும். வெல்லற்கரியவர், எழுமிடம் துலங்குவோர்” என்றாள். “வெல்லற்கரியது அனல். எழுமிடம் துலங்குவதும் அதுவே” என்றார் காசியபர். ஆனால் “அனல் இரண்டே. விண்தழலும் மண்தழலும். அவை உனக்கு மைந்தர் என்றாகுக!” வினதை மகிழ்ந்து வணங்கினாள். “ஆனால் கருதுக, அனல் எழும் கணத்தை அனலே முடிவுசெய்கிறது! மண்பொருள் விண்பொருள் அனைத்திலும் உறையும் அனலை எழுப்ப வல்லது தவம் மட்டுமே” என்றார் காசியபர்.

அவ்வண்ணம் இரு அன்னையரும் கருவுற்றனர். கத்ரு ஆயிரம் முட்டைகளை ஈன்றாள். இருளெழுந்ததுபோல் ஆயிரம் கருநாகங்கள் அவற்றிலிருந்து வெளிவந்து மண்ணை நிறைத்தன. ஒன்று பிறிதொன்றுடன் புணர்ந்து பெருகி அழிவின்மை கொண்டன. அனைத்துக்கும் அடியில் நிறைந்தன. அனைத்துக்குள்ளும் நிறைந்து ஆட்டுவித்தன. அனைத்துக்கும் நிழலென்றாகி உடனுறைந்தன. அனைத்து கூர்களிலும் நஞ்சென்று எழுந்து அச்சுறுத்தின.

வினதை இரு முட்டைகளை இட்டாள். வெண்நிறமான ஒன்று. செந்நிறமான பிறிதொன்று. ஆயிரமாண்டுகாலம் இரு முட்டைகளையும் அவள் அடைகாத்தாள். அதற்குள் கத்ருவின் மைந்தர் ஆயிரம் மடங்கெனப் பெருகி உலகாள்வதைக் கண்டாள். பொறுமையிழந்து வெண்முட்டையை கொத்தி உடைத்தாள். உள்ளிருந்து சிறகுகள் முழுமையடையாத பறவைக்குழவி ஒன்று வெளிவந்தது. தீட்டிய வாள்போல் சுடரும் அலகும் வைரமணிக் கண்களும் கொண்டிருந்தது. துயருடன் அன்னையை நோக்கி “அன்னையரின் முதன்மை இயல்பு பொறுமையே. நீ பொறுமை இழந்தாய். வளராச் சிறகுகள் கொண்டவனாக என்னை ஈன்றாய். எனவே நீ ஆயிரமாண்டுகாலம் அடிமையென்றாகி துயர்கொள்வாய். அங்கே பொறுமையை கற்றுக்கொள்வாய்” என்றது. விண்நெருப்பாகிய அப்பறவை எழுந்து பறந்து சென்று கதிரவனை அடைந்து அவன் தேர்ப்பாகனாகியது. ஒளிர்பவனாகிய அவனை அருணன் என நாம் வணங்குகிறோம். அவன் வாழ்க!

துயர்கொண்ட வினதை மேலும் ஆயிரமாண்டுகள் அடைகாத்தாள். காய் கனிவதுபோல் முட்டை உயிர்நிறைந்து ஓடு விரிசலிட்டது. விறகிலிருந்து செந்தழல் எழுவதுபோல் அதிலிருந்து செந்நிறமான பெருஞ்சிறகுகள் கொண்ட கருடன் வெளிவந்தான். வேதியரின் எரிகுளத்தில் எழும் அனலோனுக்கு நிகரான தூய்மையும் ஆற்றலும் கொண்டவன். மண்ணிலிருந்து வேதச்சொற்களை அவியுடன் விண்ணுக்குக் கொண்டுசெல்லும் அருள்கொண்டவன். அழிவற்றவனாகிய செம்பருந்தை வணங்குக! அவன் சொல் இங்கே திகழ்க!

கௌதமர் சொல்லி நிறைந்து கைகூப்பியதும் சூழ்ந்திருந்த மாணவர்கள் கைகூப்பி “ஆம்! ஆம்! ஆம்!” என வணங்கினர்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா 2018 புகைப்பட தொகுப்பு
அடுத்த கட்டுரைபிரதமன் -கடிதங்கள்-6