திருவனந்தபுரம் உலகப்பட விழாவில் வைத்து நவீனின் இந்தக்குறிப்புக்களை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கலைப்படத்திற்குண்டான களமும் கருவும் என்று பட்டது. மணமுறிவு பெற்ற கதைத்தலைவன். அவனுக்கு கழுத்துவலி. அது உள்ளத்தின் வலியாகவும் இருக்கலாம். அவன் எழுத்தாளனும்கூட. ஒரு அன்னியநாட்டில் அறியா நிலத்தில் சிகிழ்ச்சைக்காக வருகிறான். அங்கே விடுதியில் தங்கியிருக்கிறான். பலரை சந்திக்கிறான். பயணம் செய்கிறான். உடலும் உள்ளமும் மெல்ல மீள்கின்றன. அது ஒருவகை தன்மீட்பாகவும் அமைகிறது.
திருவனந்தபுரம் ஆயுர்வேத சிகிழ்ச்சைக்குச் செல்வதற்கு முன் நவீன் என்னைப்பார்க்க வந்திருந்தார். புதிய இடம் அளிக்கும் உற்சாகம் தெரிந்தது. என் வீட்டுக்கு அவர் வருவது அதுதான் முதல்தடவை. சிகிழ்ச்சையில் புத்தகம் வாசிக்கலாமா என்று தெரியாததனால் நூல் எதுவும் கொடுக்கவில்லை. [அசைவ உணவு சாப்பிடக்கூடாதென்று தெரியும். அப்படியென்றால் நவீன இலக்கியமும் விலக்குதானே?]
மனசலாயோ என்னும் சொல்லை நவீன் கற்றுக்கொண்டிருக்கிறார். அவர் மலையாளத்தில் கற்றுக்கொண்ட ஒரே சொல்லாக இருக்கலாம். ‘புரிகிறதா?’ என்று பொருள். எந்த மொழிச்சூழலுக்குச் சென்றாலும் இந்தச்சொல்லின் வேறுவடிவங்களையே கற்றுக்கொள்வார்போலும். உலகை நோக்கி அவருக்கு கேட்கவிருப்பதே இச்சொல்தான். எந்த எழுத்தாளனுக்கும் அப்படித்தான்.
‘மனதில்-ஆகியதா?’ என்ற தமிழ்ச் சொல்தான் அது. மனஸில் – ஆயோ என மலையாளம். மலையாளமொழியின் தனித்தன்மை இச்சொல்லில் உள்ளது. தலை சம்ஸ்கிருதம், வால் தமிழ். அல்லது தலைகீழாக.