தன்னுரைத்தல்

 

பொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். என் குரல் சற்று கம்மியது. உரத்த குரலில் ஓங்கிய பாவனைகளுடன் உரையாடவும் எனக்குப் பழக்கம் இல்லை. அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல.

எல்லா மேடைகளிலும் ஒரு சிறு மன்னிப்புக் குறிப்புடன்தான் நான் பேச ஆரம்பிப்பேன். சில சமயம் என்னுடைய பேச்சு நன்றாக இருந்தது என்று கூறுவார்கள். சில சமயம் சொதப்பிவிட்டது என்று எனக்கே தெரியும். ஒன்றும் செய்வதற்கில்லை. நன்றாக அமையாது போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் இருந்துதான் நான் முதலிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

 

ஏன் என் பேச்சு சரியாக அமையாது என்றால் என்னால் மேடையில் சிந்திக்க முடியாது என்பதால்தான். நல்ல பேச்சாளர்களிடம் பேசியிருக்கிறேன், அவர்களுக்கு மேடையில் நிற்கும் போதுதான் சிந்தனைகள் அடுக்கடுக்காக எழுந்து வரும். புதிய புதிய கற்பனைகள் உருவாகும். மேடையில்தான் அவர்கள் படைப்பாளிகள். நான் மேடையில் நிற்கும்போது எனக்குள் பதற்றம் குறைவவதே இல்லை.

  

ஆகவே நான் என் உரையை முழுக்கவே முன்னதாகவே எழுதிக் கொள்வேன். தெளிவாக வார்த்தை வார்த்தையாக. பிறகு அதை பலமுறை வாசிப்பேன்; ஆம், மனப்பாடம் செய்வேன். பிறகு அந்த உரையைச் சிறு குறிப்பாக ஆக்கி என் கையில் வைத்துக் கொள்வேன். பலசமயம் மேடையில் அமர்ந்திருக்கும் போது அந்த உரையை நினைவுகூர்ந்து சுருக்கக் குறிப்புகளாக எழுதுவேன். அதன்பின்பு எழுந்து அப்படியே நினைவிலிருந்து பேசிவிடுவேன். ஆனால் அது ஒப்பிப்பது போல் இருக்காது. உணர்ச்சிகரமான பேச்சாகவே இருக்கும். இதுவரை எந்த மேடையிலும் நான் என் பேச்சை வாசித்தது இல்லை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரையை எவருமே கவனிப்பதில்லை என்பதே என்னுடைய அனுபவம். 

 

இவ்வாறு முழுமையாகவே தயாரித்துப் பேசுவதனால் என்னுடைய உரைகள் சுருக்கமானவையாகவும் கச்சிதமான வடிவம் கொண்டவையாகவும் இருக்கும். அதாவது அவை நேர்த்தியான குறுங்கட்டுரைகள். சிலசமயம் ஆய்வுக்கட்டுரைகள். நல்ல பேச்சாளர்களின் பேச்சுகளைக் கவனித்தால் அவை ஒரு மையக்கருவைச் சுற்றி சுழன்று வரும் வடிவத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். அவற்றில் ஒருவித படிப்படியான வளர்ச்சிப் போக்கு இருக்கும். ஒரு மையக்கரு மேடையிலேயே வளர்ச்சியும் மலர்ச்சியும் அடைந்து புதுப்புது வடிவங்களை எடுத்தபடியே இருக்கும். அந்த அம்சம் கேள்வியாளர்களுக்கு ஒருவித போதையை அளிக்கிறது. ஒரு சிறிய கரு எப்படி ஒரு முழுமையான கருத்துத்தரப்பாக விரிவடைகிறது என்பதற்கான நிகழும் உதாரணமாக அமைகிறது நல்ல மேடைப்பேச்சு.

 

 

ஆனால் நல்ல மேடைப்பேச்சைப் பதிவு செய்து வாசித்தால் அது சலிப்பை அளிக்கும். ஒரு புள்ளியிலேயே ஆசிரியர் தேங்கி நின்று கொண்டிருப்பதாகத் தோன்றும். ஆகவே தான் சிறந்த பேச்சாளர்கள் மோசமான கட்டுரையாளர்களாகத் தெரிகிறார்கள். மிகச் சிறந்த உதாரணம் சி.என். அண்ணாத்துரை அவர்கள் தான். விதிவிலக்கும் உண்டு. எமர்சன், டி.எஸ். எலியட், ராகுல் சாங்கிருத்யாயன் போன்றவர்களின் முக்கியமான பல கட்டுரைகள் மேடைப்பேச்சுகள் தான். அவை அப்படியே பதிவு செய்யப்படும் போது அவை முதன்மையான கட்டுரைகளும் ஆகின்றன.

 

 

நான் பெரும்பாலும் மேடைகளைத் தவிர்த்து விடுபவன். ஆயினும் எழுத்தாளன் எப்படியும் வருடத்தில் ஐந்து மேடைகள் வரை ஏறியாக வேண்டியிருக்கிறது. சென்ற நாலைந்து வருடங்களாக வருடத்தில் இரண்டு மேடைகள் மட்டும் போதும் என்ற உறுதிப்பாட்டுடன் இருக்கிறேன். ஒன்று தமிழ்நாட்டில், ஒன்று கேரளத்தில். இவ்வாறு உரையாற்ற நேர்கையில் அதற்கெனத் தயாரித்த உரையானது என்னிடத்தில் கைப்பிரதியாக இருக்கிறது. அவற்றைச் சிலசமயம் இணையத்தில் பிரசுரித்தேன். சிலசமயம் பாதுகாத்து வைத்தேன். பலசமயம் கைதவறி தொலைத்தும் விடுவேன். என்னிடம் எஞ்சிய உரையின் தொகுப்பு இது. காற்றோடு போகாமல் இவ்வளவேனும் எஞ்சியது திருப்தி அளிக்கிறது.

 

இவ்வுரைகளில் இருவகை உண்டு. ஒரு கட்டுரைக்கான ஆய்வுத்தன்மையுடன் எழுதப்பட்டவை. வேதாந்தமும் இலக்கியப் போக்குகளும்உதாரணம். மேடையில் ஓர் உணர்வை வெளிப்படுத்த அனுபவம் சார்ந்து, எளிய கதைகளுடன் முன்வைக்கப்பட்ட உரைகள் இரண்டாம் வகை. உதாரணம், ‘ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்’. ஆய்வுக்கட்டுரை, குறுங்கட்டுரை என்ற இருவகை கட்டுரைகளை (ஆர்டிகிள், எஸ்ஸே) வாசித்த திருப்தியை அவை வாசகர்களுக்கு அளிக்கக் கூடும்.

 

என் மதிப்பிற்குரிய நண்பரும் ஒருவகையில் எனக்கு ஆசிரியருமான சேலம் ஆர்.கே (இரா.குப்புசாமி) அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன். அவரைப் போன்ற பெரும் பேச்சாளருக்குப் பேசமுயல்பவரின் படையல் என்று இதைக் கூறலாம்.

 [உயிர்மை வெளியீடாக வரவிருக்கும் ‘தன்னுரை’ [மேடை உரைகள்] என்ற நூலின் முன்னுரை]

முந்தைய கட்டுரைஇந்தப்புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்
அடுத்த கட்டுரைவன்மேற்கு நிலம் – கடிதங்கள்