திருவனந்தபுரம் திரைவிழா

iffk23_logoaddvt-2

திருவனந்தபுரம் திரைவிழா எப்போதும் எனக்கு மிக அணுக்கமானது. கோவா திரைவிழாவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். தொடக்க காலத்தில் அங்கிருந்த தீவிரம் மெல்ல மறைந்து மும்பை திரைப்பிரபலங்களை நோக்கி அது திரும்பத் தொடங்கியபோது நிறுத்திக்கொண்டேன். திருவனந்தபுரம் திரைவிழாதான் இந்தியத் திரைவிழாக்களில் பார்வையாளர்களின் தீவிரம் நிறைந்தது. அதை வெவ்வேறு திரையாளுமைகள் பதிவுசெய்திருக்கிறார்கள்

திருவனந்தபுரம் திரைவிழா கேரள அரசின் தீவிரமான பங்கேற்புடன் நிகழ்வது வழக்கம். திரையரங்குகள், வணிக அமைப்புக்களின் உதவியும் குறைவில்லாதிருக்கும். இம்முறை வெள்ளநிவாரணத்திற்கான பெருஞ்செலவு காரணமாக திரைவிழா நடத்தப்படவேண்டாம் என்று கேரள அரசு முடிவெடுத்தது. ஆனால் உலகமெங்கணுமிருந்து வந்த திரை ஆர்வலர்களின் வற்புறுத்தலால் அரசின் நிதியுதவி இல்லாமல் தனியார் நிதியுதவியுடன் இம்முறை விழா நிகழ்கிறது

சென்ற ஐந்தாண்டுகளில் பெரும்பாலும் திரைவிழாவை தவிர்த்துவந்தேன், வெண்முரசுக்கான மனநிலையை சிதைக்கிறது என்பதனால். ஆனாலும்இருமுறை கலந்து கொண்டேன். வே.அலெக்ஸ் திரைவிழாவை விரும்பி பார்ப்பவர். திளைப்பவர் என்று சொல்லவேண்டும். அவருடன் ஒருமுறை. ஒழிமுறி திரைவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அழைப்பாளனாக இன்னொருமுறை. இம்முறை அது குறைந்த அளவில் நிகழவதனால் கலந்துகொள்ளவேண்டும் என தோன்றியது

இன்று [7-12-2018] முதல் இறுதிநாள் தவிர ஆறுநாட்கள் நானும் அருண்மொழியும் திரைவிழாவில் கலந்துகொள்கிறோம். தொடர்ச்சியாகப் படங்கள்பார்க்கும் போதையில் ஆறுநாட்கள்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி
அடுத்த கட்டுரைஅனிதா அக்னிஹோத்ரி -கடிதங்கள்