ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-6
7. கலங்கலில் எழும் தெளிவு
ராஜ்கௌதமனின் ஆய்வுகள் சார்ந்து கல்வித்துறையாளர்களிடமிருந்து ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுண்டு. அவர் முடிவுகளை முன்னரே உருவாக்கிக்கொண்டு அதற்கேற்ப தரவுகளை விரிவாகத் தேடி தொகுத்து தன் ஆய்வுகளை உருவாக்குகிறார் என்று. பொதுவான ஒரு பார்வையில் இது பிழையான ஓர் ஆய்வுமுறையாகும். இப்படிச் செய்வது கருத்தியல் சார்ந்த ஒரு குறைபாடு என்று தோன்றும்.
ஆனால் பொதுவாக எந்த ஆய்வுமே முற்கோள் இல்லாது செய்யப்படுவதில்லை சொல்லப்போனால் ஆய்வின் திசை, முறைமை ஆகிய இரண்டையுமே முற்கோள் தான் தீர்மானிக்கிறது. முற்கோளை ஒர் ஆய்வாளர் தன்னுடைய வாழ்க்கைநோக்கு தனது தனிஇயல்பு தனது பொதுவான அடிப்படை வாசிப்பு ஆகியவற்றிலிருந்து தான் அடைகிறார். அது தெளிவற்ற ஒரு கருத்தாக, ஒருவகையான பொதுப்புரிதலாக இருக்கும் அதை மேலும் துல்லியப்படுத்திக்கொண்டு அதற்கான ஆதாரங்களை கண்டடைவது அதன் தர்க்க பூர்வ ஒருமைகளை உருவாக்கவுமே அதன்பின்னரே ஆய்வுகளை உருவாக்குகிறார்கள்.
முற்றிலும் முற்கோள் இல்லாமல் ‘வெற்று’ உள்ளத்துடன் ஆய்வுகளில் நுழைவதென்பது எவருக்கும் இயல்வதல்ல. முழுமுற்றான முன்முடிவுக்கும் முற்கோளுக்குமிடையே மிகப்பெரிய வேறுபாடுண்டு. முழுமுற்றான முற்கோள் என்பது பெரும்பாலும் அரசியல் சார்ந்து உருவாகும் ஏதேனும் கோட்பாட்டின் பின்னணியிலிருந்து பிரச்சார நோக்குடன் செய்யப்படும் ஆய்வுகளுக்கு உரியது. மார்க்சிய வரலாற்றாய்வும் பண்பாட்டாய்வும் இவ்வாறு கட்சி சார்ந்த வழிகாட்டு நெறிகளையும் கட்சி வகுத்தளிக்கும் முடிவுகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட வரலாறு நமக்குண்டு.
உதாரணமாக இந்திய வரலாறென்பது முழுமையாகவே சுரண்டல் – அதற்கான எதிர்ப்பு என்னும் இரண்டு நிலைகளின் முரணியக்கமாக நின்று செயல்படுகிறது என்பதும், இந்தியப்பண்பாட்டின் அனைத்துக்கூறுகளிலும் இந்த வர்க்க மோதல் உள்ளுறைந்திருக்கும் என்பதும் மார்க்சியச்சார்புடைய ஆய்வாளர்களின் கோணம். இன்றைய அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் நிலவுடைமைச்சக்திகள், இன்று மத அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் வைதிகச் சக்திகள் ஆகியோர்தான் என்றுமே இங்கே சுரண்டல்காரர்கள் என்றும், இன்று அவர்களால் ஒடுக்கப்பட்டு வாழும் அடித்தள மக்கள் என்றுமே சுரண்டப்படுபவர்கள் என்றும் ஒர் உறுதியான முன்வரைவை மார்க்சியநோக்கு ஆய்வாளருக்கு அளித்துவிடுகிறது. இந்திய வரலாற்றை அவர் ஆயும்போது இந்த சட்டகத்திலிருந்து அவரால் வெளியே செல்லவே இயலாது.
இது இந்தியா முழுக்க பொதுவான ஒரு உண்மையாக இருக்கும்போதுகூட அந்த ஆய்வாளர் ஆய்வு செய்யும் ஒரு குறிப்பிட்ட சூழலில் நேர்தலைகீழாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அங்கு பிற இடங்களில் சுரண்டல் சமூகமாக இருக்கும் ஒன்று சுரண்டப்படும் சமூகமாக இருக்கலாம். மார்க்ஸிய ஆய்வு அதை பார்ப்பதில்லை. அங்கு சுரண்டப்படும் அந்த வர்க்கத்தையே மீண்டும் சுரண்டும் வர்க்கமாக கட்டமைத்துக்கொள்ள என்னென்ன தரவுகள் தர்க்கங்கள் உண்டோ அவையனைத்தையும் அவை கண்டுபிடிக்கும். இதுதான் இந்தவகையான ஆய்வின் முதன்மையான குறைபாடு என்று சொல்லவேண்டும்.
இந்த வகையான குறைபாடுகள் இந்தியப் பண்பாட்டு வரலாற்றை எழுதிய அனைத்து தரப்பிலும் உண்டு. வரலாற்றெழுத்தின் தவிர்க்கமுடியாத ஒரு பகுதி என்று இதை சொல்லவேண்டும். உதாரணமாக ஆரம்பகட்ட பிரிட்டிஷார் எழுதிய இந்திய வரலாற்றில் அவர்களின் இன மேட்டிமை நோக்கு இருந்துகொண்டிருக்கிறது. ராஜ்கௌதமனே அதை ஆரம்பகட்ட முதலாளித்துவமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். பிரிட்டிஷாரைப் பொறுத்தவரை இந்திய நிலத்தில் பூர்வகுடிகளாக இங்கிருந்தவர்கள் குறைவான பண்பாடு கொண்டவர்கள், அவர்கள் மேலான பண்பாடுகொண்டவர்களால் தோற்கடிக்கப்பட்டனர். அவ்வாறு வென்றவர்களின் வழியாகவே அரசியல் ,பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆரியப்பண்பாட்டிலிருந்து தொடங்கி பிரிட்டிஷ் வரலாறு வரைக்கும் அவர்கள் அந்த வரலாற்றை கொண்டு வந்து நிறுத்துவார்கள். இதற்கான முன் சட்டகம் என்பது ஆஸ்திரேலியாவிலோ தென்னமரிக்காவிலோ ஐரோப்பியர்களின் ஊடுருவலை முற்காட்டாகக்கொண்டது. இந்த இனவாத நோக்கு ஐரோப்பியர்கள் எழுதிய அனைத்து இந்திய வரலாறுகளிலும் ஏதோ ஒருவகையில் ஊடுருவியிருக்கும்
அதேபோல இந்தியத் தேசிய வரலாற்றை எழுதியவர்கள் ஒர் ஒருங்கிணைவுள்ள இந்திய தேசியத்தை உருவாக்கும்பொருட்டு இங்குள்ள நூற்றுக்கணக்கான முரண்பாடுகளை மழுங்கடித்தனர் ,அல்லது பார்க்க மறுத்தனர் அனைத்து படையெடுப்பாளர்களும் அந்நியர்களாகவும் ஊடுருவுபர்களாகவும் கட்டமைக்கப்ப்டுவது நிகழ்ந்தது .ஹுணர்கள் இந்தியாமீது படையெடுத்து வந்தவர்கள், ஆனால் இந்திய பண்பாட்டு ஒருங்கமைப்பில் அவர்களுக்கு மிகப்பெரிய இடமிருக்கிறது. இதையே ஆப்கானியர்களுக்கும் பாரசீகர்களுக்கும் மங்கோலியர்களுக்கும்கூட ஓர் எல்லைவரைச் சொல்ல முடியும். ஆனால் இந்தியத் தேசிய வரலாற்றில் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் மட்டுமே, பங்காளிப்பாளர்கள் அல்ல.
இதே நோக்கிலேயே துணை தேசிய வரலாற்றாசிரியர்களும் எழுதினார்கள். அவர்கள் பார்வையில் தூய தேசிய அடையாளம் ஒன்று உண்டு, பிற அனைத்தும் ஆக்ரமிப்ப்பும் விளைவான திரிபும்தான். உதாரணமாக, தமிழ்த் தேசிய வரலாற்றை எழுதியவர்கள் தமிழின் பண்பாட்டு மீட்புக்கு அடையாளமாக இருக்கும் ஆலயங்களை உருவாக்கிய, தமிழகத்தின் இன்றைய பொருளியல் அடித்தளத்தை அமைத்த நாயக்கர்களை பற்றி என்ன நிலைபாடு எடுத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். நாயக்கர் ஆட்சி ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகாலம் தமிழகத்தில் நிலவியது தமிழகத்தில் இன்றுள்ள நீர்நிலைகளில் ஏராளமானவை அவர்களால் உருவாக்கப்பட்டவை. ஆலயங்கள் அவர்களால் கட்டப்பட்டவை. படையெடுப்புகளால் உருவான பேரழிவுகளிலிருந்து தமிழகத்தை மீட்டது நாயக்கர்களின் ஒருங்கிணைந்த ஆட்சிமுறை. அவர்களின் பாளையக்காரர் முறையும் அதிலிருந்து கிளைத்த ஜமீந்தார் முறையும் அதற்கு முந்தைய கிராமிய பொருளியல் அமைப்பை ஓரளவுக்கு மீட்டு பொருளியல் வளர்ச்சியை உருவாக்கியன. இன்றும் பல்வேறு வகையில் நாயக்கர்களுக்கு தமிழகம் கடன்பட்டிருக்கிறது .ஆனால் தமிழ் தேசிய வரலாற்றில் அவர்கள் எதிரிகளாகவோ அல்லது இல்லாதவர்களாகவோ தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ராஜ் கௌதமனின் பார்வை நான்காவதாக உருவாகிவந்த தலித்திய நோக்கு கொண்டது. அதற்கான முற்கோள்கள் அவரிடமுள்ளன. இந்தியப் பண்பாட்டை ஆய்வு செய்த தலித் ஆய்வாளர்கள் அனைவரிடமும் இதை போன்ற சில முன்முடிவுகளும் அதற்கான திரிபுகளும் உள்ளன. இந்திய வரலாற்றை ஒட்டுமொத்தமாகவே தங்களுக்கு எதிரான மாபெரும்சதியாக பார்க்கும் பார்வை என்று இதை ஓரளவு சொல்லலாம். பொதுவாகவே பண்பாட்டு ஆய்வுகளில் உள்ள மிகப்பெரிய குறைபாடு இது .மார்க்சியர்களால் உலகெங்கும் இது தொடங்கப்பட்டது .மிக நுட்பமும் தர்க்க ஒழுங்கும் கொண்டிருந்தவை ஆயினும் டி.டிகோசாம்பியின் ஆய்வுகளும் இத்தகையவையே.
ஒரு வரலாறு நிகழ்ந்து முடிந்தபின், அந்த நிகழ்வின் ஒழுங்கை எடுத்துக்கொண்டு அந்த ஒழுங்கு முன்னரே கட்டமைக்கப்பட்டு அவ்வரலாறு நிகழ்த்தப்பட்டது என்று கற்பனை செயவது. இது வரலாற்றை தலைகீழாக பார்க்கும் ஒரு முறை. நூற்றுக்கணக்கான தற்செயல்கள், முரணியக்கங்கள் வழியாக வரலாறு நிகழ்ந்துமுடிகிறது, அதை ஒரு மாபெரும் கருத்தியல் சதியாக உருவகிப்பதும், வரலாற்றின் ஒரே நோக்கம் பொருளியல் சுரண்டலை நிகழ்த்துவது மட்டுமே என்று கற்பனை செய்துகொள்வதும் இங்கே நிகழ்கிறது.
இந்த பிழையை பெரும்பாலான மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள் செய்திருக்கிறார்கள். அவர்களை அடியொற்றியே தலித் ஆய்வாளர்களும் அதை செய்கிறார்கள். இது முன்முடிவு என்று சொல்லலாம். முற்கோள் எனும்போது இந்திய வர்லாறு என்று கட்டமைக்கப்பட்டுள்ள காலனி ஆதிக்க வரலாறு, தேசிய வரலாறு, துணைத்தேசிய வரலாறு ஆகியவற்றில் அளிக்கப்படும் வரலாற்றுச் சித்திரம் மெய்தானா என்ற ஐயம், அது மெய்யல்ல என்றால் என்ன வகையான வரலாறு இங்கு நிகழ்ந்திருக்கக்கூடும் என்னும் வினா, ஒரு மாற்று வரலாற்றை அடித்தள மக்களை உள்ளடக்கிக்கொண்டு உருவாக்குவதற்கான முயற்சி ஆகிய மூன்றையும் சுட்டிக்காட்டலாம்.
இந்திய வரலாறு முதல் மூன்று முறைகளில் எழுதப்படும்போது அடித்தளத்து மக்கள் பலசமயம் பேசப்படுவதில்லை அல்லது மேலிருந்து நோக்கும் பரிவுடன் சற்றே சேர்த்துக்கொள்ளப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கு வாழ்ந்திருந்த மக்களுக்கு இந்தப் பண்பாட்டு கட்டமைப்பில் என்ன இடம், அவர்கள் இங்கே எப்படி உருவானார்கள், எப்படி நிலை நிற்கிறார்கள், எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்ற சித்திரத்தை உள்ளடக்கி ஒருவரலாற்றை எழுப்புவதற்கான முயற்சி இது என்று சொல்லலாம்.அந்தக்கோணத்தில் பார்த்தால் ராஜ் கௌதமனின் ஆய்வுகள் முன் முடிவுக்ளின் அடிப்படையில் எழுதப்படுபவை அல்ல, அவை தலித் வரலாற்று பண்பாட்டு நோக்கெனும் முற்கோளுடன் எழுதப்படுவன மட்டுமே.
பண்பாட்டுவரலாற்றை எழுதுகையில் இயல்பாகவே இங்கு நிகழும் சில எதிரீடுகள் உள்ளன. ஒன்று தமிழகத்து தலித்துகளின் பொருளியல் மற்றும் சமூகவரலாற்றில் முதன்மையான எதிர்மறை பாத்திரம் வகிப்பவர்கள் தெலுங்கு நாய்ச்ரக்கர்கள். தேவேந்திர வெள்ளாளர் போன்ற தலித் மக்களுக்கு உரிமைப்பட்டதாக இருந்த நீர்ப்பாசனமற்ற புஞ்சை நிலம். பழைய வேளாண் முறையில் இந்தப்புஞ்சை நிலம் பெரும்பாலும் பயனற்றது குறைவான விவசாயமும் மேய்ச்சலும் தான் இங்கு நிகழ்ந்தது. பழைய மஹால்வாரி வேளாண்மை முறையில் ஒரு கிராமத்தின் பொருளியல் அமைப்பில் இந்த புஞ்சை நிலத்தில் பயன்படுத்துபவர்கள் என்ற வகையில் தேவேந்திர குல வெள்ளாளர்களுக்கு முக்கியமான இடமும் இருந்தது. நாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த பெருங்குடியேற்றங்கள் இந்த விளை நிலங்களிலேயே அமைந்தன .ஏனெனில் வளமான நஞ்சை நிலங்கள் ஏற்கனவே வேளாளர் மற்றும் உயர் சாதியினரால் உரிமை கொள்ளப்பட்டிருந்தன. நாயக்கர்கள் புஞ்சைநிலத்தில் கிணற்றுநீர்பாசனம் வழியாகப் பயிரிடவும் முன்னரே ராயலசீமாவில் பழக்கம் கொண்டிருந்தனர். அத்துடன் உருவாகி வந்த நாயக்கராட்சி இந்த புஞ்சை நிலங்களில் மிகபெரிய ஏரிகளை அமைத்து தெலுங்கர் குடியேற்றத்துக்கான ஊர்களையும் உருவாக்கியது.
இவ்வாறாக நேரடியாக தெலுங்கர்கள் X தலித்துகள் என்னும் மோதல் தமிழ் சூழலில் உருவாகியது. ஆகவே தலித் வர்லாறுகளில் தெலுங்கர்கள் தலித்துகளின் இயல்பான நேரடி எதிரிகளென்றே காணப்படுவார்கள். அவர்கள் தமிழகாத்தை அழித்தவர்கள் என்றும் தமிழ்பண்பாட்டின் எதிர்கள் என்றும் சித்தரிக்கப்படுவார்கள். முதிர்ச்சியான ஒரு வரலாற்று ஆசிரியர் சமூகப் பொருளியல் வரலாற்றில் நாயக்கர்கள் உருவாக்கிய அழிவு தலித்துகளுக்கு எதிரானதென்றும், ஆக்கம் நீர்ப்பாசனம் மற்றும் பொருளியல் கட்டமைப்பு உருவாக்குதல் ஆகியவற்றில் அவர்கள் நடத்திய சாதனை என்றும் அதை குறிப்பிடுவார்கள். இந்தச் சமநிலையையே நாம் பண்பாட்டு வரலாற்றாய்வாளரிடம் நாடுகிறோம்.
அதே போல மேலும் விரிந்த தமிழ்பண்பாட்டு ஆய்வில் சோழர்காலம் தலித்துகளுக்கு மிக எதிரானது. தமிழகத்தில் இன்று நிலவும் உறுதியான நிலப்பிரபுத்துவ அமைப்பு உருவாகிவந்த காலகட்டம் என்று அதைச்சொல்லலாம். கல்வெட்டு ஆவணங்களின்படி பல்லவர் காலத்தின் தொடக்கத்தில் இன்றிருக்கும் தலித்துகளின் நிலைமை வேறுமாதிரியாக இருந்தது .அன்று பறையர்களில் ஒருசாராராவது நிலவுடைமையுடனும் வழிபாட்டுத்தலங்கள் மேல் ஆதிக்கத்துடன் இருந்திருக்கிறார்கள். சமூக நிலை அவர்களுக்கு மேம்பட்டதாக இருந்திருக்கிறது. சோழர்காலத்தின் இறுதிக்குள் அவர்கள் முழுமையகவே கீழே தள்ளப்பட்டு நிலங்களற்ற உதிரிகளாகவும் சமூக அடித்தட்டை சார்ந்தவர்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
சோழர்காலத்தில் படிப்படியாக உருவாகி வந்த மிக விரிவான நிலமானிய முறை தலித்துகளை அடித்தளத்தில் உறுதியாக பிணைத்தது அதற்கான தொன்மங்களையும் நம்பிக்கைகளையும் உருவாக்கியது ஆகவே தலித் வரலாற்றாசிரியர்களின் பார்வையில் ராஜராஜ சோழனும் குலோத்துங்க சோழனும் எதிரிகளாகவே கட்டமைக்கப்படுவார்கள். அவர்கள் தமிழ் பண்பாட்டிற்குள் பார்ப்பனீயத்தை கொண்டுவந்தவர்கள் தமிழ் பண்பாட்டின் உள்ளுறையாக இருந்த பல்வேறு நாட்டார் கூறுகளை அழித்தவர்கள். சைவம் எனும் பெருமத்த்தை நிறுத்தி அதன் நுகத்தில் அடித்தள மக்களை கட்டியிட்டவர்கள்
ஆனால் விரிந்த பார்வையில் சோழர்கள் தமிழகத்தில் நஞ்சை நில விவசாயத்தை உருவாக்கியவர்கள். இன்றும் தமிழர்களுக்கு சோறு போடும் மாபெரும் பாசனத்திட்டங்கள் அவர்களால் உருவாக்கப்பட்டவை. வணிக வழிகள் அவர்கள் காலத்தில் தான் உருவாகிவந்தன. இன்றைய தமிழகம் இதன் அளவில் தோன்றுவதே சோழர் காலத்தில்தான். இந்த முரணியக்கப்பார்வை ராஜ் கௌதமனில் செயல்படுகிறதா, அவர் வெறுமே தலித் பார்வையில் முன் முடிவுகளோடுதான் வரலாற்றை அணுகுகிறாரா? இந்த வினாவுடன் அவருடைய முதன்மை நூல்களை பார்ப்பவர்கள் அவர் முன் முடிவுகளுடன் அல்ல முற்கோளுடன் தான் இந்திய தமிழ் வரலாற்று மீதான தன் இடையீட்டை நிகழ்த்துகிறார் என்பதை உணரலாம்.
இன்னும் சொல்லப்போனால் ராஜ் கௌதமன் விரிவான ஒரு ஒட்டுமொத்த தலித் மாற்று வரலாற்றை எழுத முற்படவில்லை. தலித் மாற்று வரலாறு ஒன்று எழுதப்படுவதற்கான சாத்தியங்க்ளைத் தேடி இந்திய, தமிழ் வரலாற்று இடைவெளிகளுக்குள் நுழைந்து வலுவான சில வினாக்களை எழுப்புகிறார். அவருடைய முதன்மை பண்பாட்டுவரலாற்று நூல்கள் மூன்றும் தமிழ் வரலாற்றின் மீது ஒரு முரணியக்கத்தை பரிணாமத்தை எழுதிப்பார்க்கின்றன. அதில் தலித் நோக்கில் வெளிப்படையாகவே தெரியும் சில வினாக்களை முன் வைக்கின்றன.
அதாவது பழைய தமிழ் வாழ்க்கையில் இழிசினர் என்றும் தொழும்பர்கள் என்றும் கூறப்படுபவர்கள் யார், அவர்கள் அந்த சமூக இடத்தை நோக்கித்தள்ளப்பட்டவர்கள் ,அந்த குடிகள் இன்றும் எங்கேனும் நீடிக்கின்றனவா ஆரம்ப கட்ட நிலப்பிரபுத்துவம் பழங்குடி வாழ்க்கையிலிருந்து கிளைத்து வரும்போது எவ்வாறு ஆதிக்கம் கட்டமைக்கப்பட்டது, அதில் போர்ச்சாதிகள் நிலவுடைமை சாதிகளும் பெற்ற முன்னுரிமை பழங்குடி தன்மையில் காடுசார்ந்த வாழ்க்கை கொண்டிருந்த மக்களுக்கு எவ்வாறு இல்லாமல் போயிற்று, இந்த வினாக்கள் வழியாக முதலாளித்துவம் உருவாக்கப்பட்ட காலம் வரைக்கும் அடித்தள மக்கள் எவ்வாறு தமிழ் பண்பாட்டில் இடம் பெற்றனர் என்பதை ராஜ் கௌதமன் ஆராய்கிறார்.
இந்தக்கோணம் உருவாக்கும் வினாக்கள் அதைச்சார்ந்த விடைகளைக்கொண்டு இனிமேல் தான் ஒரு முழுமையான தலித் வரலாற்று சித்திரத்தை உருவாக்க வேண்டும் .அது ராஜ்கௌதமன் படைப்புகளின் மீது அவருடைய கருத்துக்களுடன் முரண்படுபவர்கள் வலுவான மாற்றுக்கருத்துக்களை முன்வைப்பதன்மூலமும் அவரது பார்வையை முன்னெடுத்துச்செல்பவர்கள் மேலும் விடைகளைக் கண்டடைவதன் வழியாகவும்தான் நிகழமுடியும்.ஆனால் தீயூழாக தமிழில் அவ்வாறு பெரிதாக எதுவும் நிகழவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
தலித் நோக்கில் அல்லது விளிம்புநிலை நோக்கில் தமிழ்ப் பண்பாட்டை ஊடுருவும்போது எழும் சில அடிப்படை வினாக்கள் உள்ளன. விமர்சனப் பார்வையில் தமிழ்ப் பண்பாடு என்று சொல்லப்பட்டிருப்பதை கட்டுடைத்து அதில் இருக்கும் ஆதிக்க அம்சங்களையும் சுரண்டல் கருதுகோளையும் வெளிப்படுத்துவது எளிது. நீண்டகாலப் பரிணாமம் ஒன்றின் விளைவுதான் இந்தபண்பாடு என்று புரிந்துகொள்வதும் அந்தப்பரிணாமம் என்பது வெவ்வேறு வகையான மக்கள் தங்கள் வாழ்விற்காக போராடி, ஒருவரை ஒருவர் வென்று, சுரண்டி, உதவி, உள்ளிழுத்துக்கொண்டு, ஒன்றாகி, பிரிந்து கட்டமைத்தது என்ற மிக விரிவான சித்திரம் ஒன்றை உருவாக்குவது அத்தனை எளிதல்ல.
இது பிறிதொரு முறையில் உருவாகியிருக்க முடியும், என்றோ வேறொரு வகையான வாய்ப்பு அதற்கு இருந்ததா என்ற ஆய்வாளரின் உளச்சித்திரம் ஒன்று வெளிப்பட வேண்டியிருக்கிறது. ஒற்றைப்படையாக இது இன்னின்னாரால் இது இவ்விவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்று சொல்வதற்கு எவராலும் இயலும் ஆனால் முழுச்சித்திரத்தை அளிப்பது மிகவும் கடினம் .உதாரணமாக இந்திய தமிழ் பரப்பில் உமணர்கள் என்றொரு சாதியினர் இருந்திருக்கிறார்கள். உப்புக்காய்ச்சுவது மட்டுமல்ல உப்பு வணிகத்தையும் அவர்கள் செய்திருக்கிறார்கள். ஆகவே மிக வலுவான பொருளாதார அடிப்படை அவர்களுக்கு இருந்திக்கலாம். அவர்கள் ஊரெங்கும் உப்பு கொண்டு விற்றதைப்பற்றிய சித்திரங்கள் சங்க இலக்கியங்களில் இருக்கின்றன உமணர் வண்டிகளைப்பற்றிய குறிப்புகள் அவை எடைமிக்கவை நெடுந்தொலைவு செல்பவை என்பதைக்காட்டுகின்றன. இந்த உமணர்களுக்கும் மருத நில மக்களுக்குமான பூசல்களை பற்றி பல இடங்களில் சங்க நூல்கள் குறிப்பிடுகின்ற்ன மருத நில மக்களின் வயல்களிலிருந்து கூளம் உமணர்களின் உப்பு வயல்களுக்கு செல்வதைப்பற்றியும் அவர்களுக்கிடையே பூசல்கள் கலவரங்கள் நிகழ்வதைபபற்றியும் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். இந்த சாதியினர் இப்போது என்னவாக இருக்கிறார்கள். இன்று உப்பு காய்ச்சும் மக்கள் மிகக்குறைவான எண்ணிக்கை கொண்ட பரவர்கள் என்ற சாதியினராக இருக்கிறார்கள். உப்புக்காய்ச்சுவதுடன் கடலில் சிப்பிகள் பொறுக்குவது சுண்ணாம்பு உருவாக்குவது போன்ற வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். மற்றபடி உப்புக்காய்ச்சுவதற்கும் விற்பனை செய்வதற்கும் என்று ஒரு தனி ஜாதி தமிழகத்தில் இன்றில்லை பெரிய எண்ணிக்கையில் இருந்த உமணர்கள் என்ன ஆனார்கள்? மிக எளிதாக அவர்கள் அழிக்கப்பட்டார்கள் என்று ஒரு கதையை உருவாக்கலாம். ஒட்டுமொத்தமாக மரபை எதிர்நிலையில் நிறுத்துவதற்காக முயலும் ஒருவரின் வழி இது ஆனால் பொருளியல் இயக்கம் நிகழ்வதின் ஒரு நம்பகமான சித்திரத்தை அளிக்க விரும்பும் ஆய்வாளர் ஒருபோதும் அதைச்செய்வதில்லை
ஆனால் உமணர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்ததாக சங்க இலக்கியம் காட்டவில்லை. அவர்கள் வணிகச் சாதியினராக இருந்திருக்கிறார்கள். வணிகர்கள் அவ்வளவு எளிதாக ஒரு பண்பாட்டிலிருந்து அகன்றுவிட மாட்டார்கள். எந்த ஒரு இனக்குழுவும் முற்றழிக்கப்படுவதில்லை. அது மாற்றி அடையாளப்படுத்தப்படும் அல்லது இன்னொரு இனக்குழுவுடன் இணையும் .உமணர்கள் இன்றிருக்கும் வேறு சில சாதியினராக மாறியிருக்கலாம். அவர்கள் இன்றிருக்கும் வணிகர்களாகவே இருக்கவே வாய்ப்பு. ஒரு வேளை இன்றிருக்கும் நாடார்கள் உமணர்களிலிருந்து உருவானவர்களாக இருக்கலாம். அவர்கள் கரை வணிகம் செய்யும் மக்களாகவே நெடுங்காலம் இருந்திருக்கிறார்கள்.
இந்த வரலாற்றுச் சித்திரத்தை ஆவணன்களினூடாக நம்பகமாக உருவாக்கிக்கொள்வதுதான் வாலாற்றாய்வாளர்களின் சவாலே ஒழிய எதிர்நிலை எடுத்து தொடர்ச்சியான விமர்சனங்களை மட்டும் முன்வைப்பதல்ல. அது கண்மூடித்தனமான அம்புகளை தொடுப்பதைப்போல. அதில் ஒன்றிரண்டு இலக்கெய்தும் ,பிற வீணாக உதிரும் .வீணாக உதிரும் அம்புகளைக்கொண்டே அந்த ஆய்வாளனை பிறர் மதிப்பிடவும் கூடும். முன்னோடிகளில் பலர் அத்தகைய பொத்தாம் பொதுவான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். அயோத்திதாசரின் விமரசங்களில் கணிசமானவை அத்தகையவை. இந்திய வரலாறு குறித்த பி.ஆர் அம்பேத்கார் அவர்களின் கருத்துக்களிலும் ஒரு பகுதி மிக மேலோட்டமானதும் ஒட்டுமொத்தத்தை கணக்கிலெடுக்காததும் பரிணாம சித்திரம் அற்றதுமாகும்.ஆனால் அது தொடக்க காலகட்டம், தரவுகளும் முறைமைகளும் உருவாகாத சூழல், ஆகவே அது ஒருவகையில் இயல்பானதே
இன்று சமூகப் பரிணாம வர்லாற்றை ஆய்வதற்கான முறைமைகளும் தரவுகளும் மிகப்பெரிய அளவில் உருவாகியிருக்கின்றன, வெவ்வேறு அறிவுத்துறைகள் ஒன்றோடொன்று இணைந்து ஒரு முழுச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்வதற்கான கல்வித்துறை வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன.இன்று மேலோட்டமான வரிகள் ஆய்வுத்தகுதி கொண்டவையாக கருதப்பட மாட்டாது. துரதிஷ்டவசமாக தமிழ் அறிவுத்துறை பெரியாரியப் பின்னணி கொண்டவர்கள் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. எந்த வகையான வளர்ச்சி பரிணாமச் சித்திரமும் இல்லாமல் சில எதிரிகளைக்கட்டமைத்து அனைத்து வகையாக அமைப்புகளும் அந்த எதிரிகளால் உருவாக்கப்பட்டவை என்று கற்பிதம்செய்பவை அவை. அவர்களின் பார்வையில் தமிழ்ப்பண்பாடு என்பதே பிராமணகளின் சதியால் உருவாக்கப்பட்டது. அதன் அனைத்து கூறுகளுமே எளிய மக்களுக்கெதிரானவை. ஆகவே பிராமணர்கள் அழித்து ஒழிக்கப்படவேண்டியவர்கள். எளிய மக்களின் பண்பாடு அப்படி மிகச்சிலரால் ஏமாற்றி அழிக்கப்படும் அளவுக்கு அந்த மிகச்சிலர் ஆற்றல் கொண்டவர்களா? ஒரு பண்பாட்டின் ஈராயிரம் ஆண்டுக்கால பரிணாமத்தை ஒரு சிறு சமூகக் குழுவினரின் சதிவேலை என்று சுருக்கிவிட முடியுமா? இக்கேள்விகளை அவர்களிடம் கேட்க முடியாது.
மார்க்சியர்கள் இந்திய அளவில் வரலாற்று பரிணாமச் சித்திரம் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியவர்கள். ஒப்பு நோக்க இந்திய வரலாற்றை பற்றிய பொருத்தமான சித்திரம் அதுதான். ஆனால் தமிழ்ச் சூழலில் அந்த வரலாற்றுச் சித்திரத்தை எடுத்து முன்கொண்டு செல்லும் ஆய்வாளர்கள் எவருமில்லை. இங்கு எளிதில் ஏற்கப்படுவதென்பது சாதிக்குழுக்களின்சதி என்னும் கோட்பாடுதான். என்பதனால் இங்குள்ள மார்க்சிய ஆய்வாளர்களும், பெரியாரிய ஆய்வாளர்களின் குரல்களில் பேசுவதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
இச்சூழலில் தான் ராஜ்கௌதமன் போன்ற ஒரு தலித் ஆய்வாளரின் ஆய்வு தொடங்க வேண்டியிருக்கிறது. அவருக்கு முன்னிருக்கும் வாய்ப்பு அவர் கோசாம்பி மரபில் இருந்த ஆய்வு முறைமையைக் கடைபிடித்து ஒரு பெரிய பரிணாமச் சித்திரத்தை உருவாக்கிக்கொள்கிறாரா அல்லது அவரைச்சூழ்ந்திருக்கும் சூழலுடன் இணைந்துகொண்டு எளிமையான சதிக்கோட்பாடுகளை முழங்கப்போகிறாரா என்பதுதான். ராஜ் கௌதமனின் பங்களிப்பென்பது இந்தியாவின் மதிப்பு மிகுந்த சமூகப்பரிணாம வரலாற்றின் ஒரு பகுதியாக நின்று அவர் ஆராய்கிறார் என்பதும், ஆய்வாளருக்குரிய முறைமையுடன் முழுமையான சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முயற்சி செய்கிறார் என்பதும்தான். ஆகவே ஒற்றை வரிக்காழ்ப்புகளையோ சதிக்கோட்பாடுகளையோ நோக்கி அவர் செல்வதில்லை.இக்காரணத்தால்தான் அவருடைய ஆய்வுகள் நம்முடைய பொதுவாசகர்களிடையேயும் வாசிப்புப் பழக்கம் மிகக்குறைவாக இருக்கும் நமது கல்வித்துறையிடமும் புகழ் பெறாமல் போய்விட்டன என்று சொல்லலாம்.