தமிழ் பண்பாட்டுத்தளத்தில் திரைப்பட இயக்குநர், ஆவணப்பட இயக்குநர், கவிஞர் என்னும் தளங்களில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் லீனா மணிமேகலை. ஒரு களச்செயல்பாட்டாளருக்குரிய அஞ்சாமையும், நகைச்சுவையுணர்வும் கொண்ட ஆளுமை.
லீனா மணிமேகலையின் கவிதைகள் இருதளங்களைச் சேர்ந்தவை. தன்மேல் சூழலும் மரபும் சுமத்திய பெண்மை என்னும் அடையாளங்களை கிழித்து தான் எவர் என்று நோக்கும் படைப்புகள். முதன்மையாக தன் காமத்தை, அதன் உயிர்வல்லமையை அவை கண்டுகொள்கின்றன. கூடவே தன் வரலாறின்மையையும் அதன் விளைவான வெறுமையையும்.
இன்னொரு தளத்தில் அக்கவிதைகள் அந்த அடையாளங்களைத் தன்னை நோக்கிச் சுமத்தும் சூழலுக்கு எதிரான எதிர்வினைகள். பெரும்பாலும் சீண்டும் தன்மைகொண்டவை. புறச்சூழலை கிழித்துக் கடந்துசெல்ல முயல்பவை.
ஒரு மாலைப்பொழுது
அன்பு என்னோடு கஞ்சா அடித்தது
பரிவாக
மிகப் பரிவாக
நெஞ்சு நிறைய
புகையை நிரப்ப சொன்னது
கரிக்கிறதா எனக் கேட்டது
ஆமாம் என்றேன்
இல்லை என்று
பொய் செல்வதில் உனக்கென்ன
பிரச்சினை என்றது
எரியும் மணத்தில் யார் மணக்கிறார்கள்
அடுத்த கேள்வி
அவனா
மௌனம்
இவனா
மௌனம்
அவளா
மௌனம்
நான்
என்றேன்
அமர்ந்த கனலை ஊதி ஊதி பெருக்கிய
கணத்தில் கண் சிமிட்டி
விசுவாசத்தை கைவிடு என்றது
என் கையை வெட்டிவிட்டது போல இருந்தது.
காயும் நிலவின் குளிர்மையில் நடுங்கி கொண்டிருந்த
விரல்களில் இன்னும் நெருப்பு பொறிந்ததைப்
பார்த்து கண்ணீர் வந்தது
தொடுதலில் தாக்குறுகிறேன், சத்தத்தை மின்னலா என்கிறேன், அசந்தர்ப்பத்தத்தை துயரம் என உழல்கிறேன், புன்முறுவலில் பெருமகிழ்ச்சியடைகிறேன், நண்பனை காதலிக்கிறேன், காதலனை கடவுளாக்குகிறேன், தோல்வியில் சாவைத் தழுவுகிறேன்
இதென்ன
துகளா, புகையா, நெருப்பா, ஆகாயமா, கண்ணீரா
தான் கஞ்சா என்றது அன்பு.
பசி
இறுதியில்
காவல் அதிகாரி
என் கவிதையைப் பிடித்துக் கொண்டு சென்றார்
விசாரணையின் போது அவர் கண்களைக் கட்டிக் கொண்டிருந்தார்
ஆடையில்லாத என் கவிதையைக் காண
அவருக்கு அச்சமாக இருந்ததாம்.
குற்றங்கள் விளைவிப்பதே
தன் தலையாயப் பணி என்பதை
என் கவிதை ஒத்துக் கொண்டதால்
அபராதம் அல்லது சிறைத்தண்டனை, பிணை இல்லையென்று
ஆணையிட்ட நீதிபதி
தன் கண்களோடு காதுகளையும் பொத்திக் கொண்டிருந்தார்
என் கவிதை பேசிய சொற்களின் புதிய அர்த்தங்கள்
அவரை திடுக்கிடச் செய்தனவாம்
அபராதம் கட்ட பணம் இல்லாததால்
சிறையிலடைக்கப்பட்ட என் கவிதை
கம்பிகளை மீட்டிக்கொண்டு
சதா பாடல்களை இசைத்தபடியிருந்தது
நாளடைவில் மற்ற கைதிகளும்
ஆடைகளை களைந்தனர்
அவர்கள் பேசத் தொடங்கிய புதிய மொழியால்
அதிகாரிகள் மனம் பிறழ்ந்தனர்
சிறைச்சாலைக்குப் பிடித்த பைத்தியம்
மெல்ல நகரமெங்கும் பரவியது
நிர்வாணம் பெற்ற அந்த நகரத்தில்
அதன்பிறகு
அரசும் இல்லை
குடும்பமும் இல்லை
கலாசாரமும் இல்லை
நாணயங்களும்இல்லை விற்பனையும் இல்லை
குற்றமும் இல்லை
தண்டனையும் இல்லை
வேடிக்கை
நீ உன் சொற்களை
என்னை வல்லுறவு செய்ய ஏவினாய்
மலம் மூத்திரம்
கழுவப்படாத கழிப்பறை
அழுகல் அலறல்
செத்த எலி
வீச்சம் நிணம்
ஊசிய மீன்
வலி உதிரம்
கறை இருள்
பிடுங்கி எறியப்பட்ட உன் விதைப்பைகள்
என்னிடமும் சொற்கள் இருந்தன
அவர்களிடமும் சொற்கள் இருந்தன
அவரவர் விதைப்பைகளின் பாதுகாப்பை
சரி பார்த்துக் கொண்டு வாளா விருந்தன
பாவனைகள்
மதுக்கோப்பைக்கும் உதடுகளுக்கும்
இடையே விழுந்த கண்ணீர்த் துளியில்
அன்பை யாசித்து நிற்கும்
என் பிரதிமையை கண்டதாக
அவன் சத்தியம் செய்தான்.
அது என் கண்ணீரை மேலும் பெருக்கியது
நான் எதுவும் சொல்லாமலேயே
எல்லாம் விளங்குகிறது
என்ற அவனை அப்போதைக்கு பிடித்திருந்தது
அவன் கொண்டு வந்த கோப்பையால்
மதுவும் தனக்கொரு துணையை தேடிக்கொண்டது
வாழ்க்கையின் போக்கில் போய்விடுவது நல்லது என்றான்
தலை நிமிர்ந்துப் பார்த்தால் தெரியும் காட்சிகளை
மட்டுமே நம்புவது சிறந்தது என்றும் சொன்னான்
என் தலையை ஆதுரமாக தடவிக்கொடுத்ததற்காகவே
அவன் சொன்னவற்றை ஆமோதித்தேன்
உள்ளங்கை ரேகைகளின் சிக்கல்களை விடுவிப்பவன் போல
கைவிரல்கள் வருடியதும்
தொடுதலுக்கு பசித்த உடல்
தாய்ப்பறவையை தொலைத்த குஞ்சு போல கேவியது
கோப்பைகள் நிறைந்தன
அன்னியத்திற்கும் பரிச்சயத்திற்கும்
இடையே எத்தனை வண்ண விளக்குகள்
இரவின் சாலைகளில் அன்பு அம்மணமாக ஒடுகிறது
தட்டப்படுவது உங்கள் வீட்டுக்கதவாகவும் இருக்கலாம்
ஒரு நாள்
ஒரு நாள்
என் தோலைக் கழற்றி வீசினேன்
கூந்தலை உரித்து எறிந்தேன்
துவாரங்களில் ரத்தம் ஒழுகும்
மொழுக்கைப் பெண்ணென காதல் கொள்ள அழைத்தேன்
காதலர்கள் வந்தார்கள்
கரிய விழிகள் கொணட அவர்கள்
நெய்தலின் நுட்பம் கூடிய சிலந்திகள்
குருதியை நூலாக்கித் திரித்து
செந்நிறத்தின் ஊடுபாவிய வலையை
எட்டுக் கால்களில் விரித்தார்கள்
அந்தியில் வந்த சூரியன் சிவப்பில் விழுந்தான்
அப்பொழுதும் சொன்னேன்
நான் பூரணமாய் காதலிக்கப்பட்டவள்
மறுபடி நானே
உலகின் அழகிய முதல் பெண்
சிச்சிலிஒரு நூறு காதல் கவிதைகள்
லீனா மணிமேகலை இணையதளம்
=======================================================================
விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்
விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி