நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி

anita-mugshot-300x300

அனிதா அக்னிஹோத்ரி

விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதை.

தமிழில் – சிறில் அலெக்ஸ்

ஆக, உனக்கு தூக்கம் வரல? அதனால என்ன? இராத்திரி ஒண்ணேகால் மணிதானே ஆகுது! கூடவே.. இந்த நகரத்துல இரவுண்ணு ஒண்ணு கிடையாது. இது மும்பை. எல்லா நேரமுமே பகல்தான் இங்க – விகிதம்தான் வேற‌ வேற.

சத்தம் அதிகம். ஓ. ஆனா கல்கத்தாவுல கடகடன்னு ஓடுற டிராம், ஹார்ன் அடிக்கிற பஸ், காதச் செவிடாக்குற சந்தை இதெல்லாம் உன்ன தொந்தரவு செய்யுறதில்ல. ஹஜ்ரா ரோடு அல்லது ஷியாம்பஜார் ஏ.ஜே.சி போஸ் ரோடு அல்லது சென்ட்ரல் அவென்யூல தூங்க முயற்சி செஞ்சுபாரு அப்ப தெரியும்.

உண்மதான்…. உனக்கு அந்த இடங்களெல்லாம் பழக்கமாயிடுச்சு. மும்பை புது இடந்தான். பழக்கமில்லாத அடுக்குவீடு, புது படுக்கை. அதுக்கெல்லாம் மேல இந்த இரைச்சலெல்லாம்.. அதுவும் நடுராத்திரிக்கும் மேல. நீ எப்படி தூங்கப்போற?  பத்து நாள் லீவு. பகலெல்லாம் ஊர்சுத்துறது. ராத்திரில உன் நண்பனோட‌ அடுக்குவீட்டுக்கு வர்ற. கவலப்படாத கல்கத்தா போனப்புறம் நிம்மதியா தூங்கலாம். இப்போதைக்கு ஒவ்வொரு சத்தத்தையும் தனித்தனியா கேக்கப்பாரு.

அங்க..சன்னலுக்கு வெளிய அந்த சாரல்கூரையில, இந்த ஹல்லாகுல்லாவுக்கு நடுவிலேயும்..நடுங்கவைக்குதில்ல? ஓ..ஆமா. அதுதான் நம்ம நொண்டிக் காக்கா சாப்பாடு தேடுற சத்தம். பகல்ல பேராச பிடிச்ச மத்த காக்காக்களோட சண்ட போட முடியாது. அதுங்க இதோட சண்ட போட்டு நல்ல சாப்பாட்டையெல்லாம் தின்னு தீத்திடும். ஆனா எப்பவும் கொஞ்சம் மிச்சம் மீதி இருக்கத்தானே செய்யும். அதையெல்லாத்தையும் அதுக பகல் வெளிச்சத்துலகூட பாக்க முடியாது. இந்த நொண்டி காக்கா மோந்து மோந்து பாத்து அதையெல்லாம் எடுத்து இங்க கொண்டு வந்து சாப்பிடும். கேக்குதா.. அது கால இழுக்குற சத்தம்? இங்க அத விரட்டியடிக்காத வீடே இல்ல.

உஃப்! இந்த அழுகைச்சத்தம். எப்பப்பாதாலும் சண்டையும் குரைக்கிறதும், ஊளையிடுறதும் -நாராசம்-, ஒரு நாய்க் கூட்டம் ஆஷாநகர் சேரிக்கு முன்னால நிண்ணு சண்ட போட்டுக்குதுங்க.

ஆஷா நகர் சேரியா? இந்த கட்டிடத்துக்குக் கீழதான் இருக்குது தெரியாதா? இல்ல. இந்த உயரத்துலேந்து அத நீ பாக்க முடியாது. தெருவிலேந்தும் பாக்க முடியாது. ‘அது எப்படி’ன்னா கேக்குற? ஏன்னா இந்த நகரத்த மும்பை மகாநகர்பாலிகா -அதாவது முனிசிபாலிட்டி- நடத்துது , கல்கத்தா முனிசிபாலிட்டி நடத்தல. பளபளக்குற‌ ஸ்டீல் வேலிக்குள்ள நிக்குற இந்த எட்டு பதினாலு மாடிக் கட்டிடத்துக்கெலாம் நேரே கீழ இந்த சேரி மறைஞ்சு கிடக்குது.

அத பாக்க முடியாது – ஆனா பொம்ப‌ளைங்களும் சின்னப்பொண்ணுங்களும் அதோட‌ வயித்துலேந்து தெனமும் சார சாரையா வந்து இந்த அடுக்குமாடிக் கோபுரங்கள்ல வேல செய்யுறாங்க. ‘தூய்மையான, பசுமையான, அழகான’ மும்பைக்கான வெளம்பரமெல்லாம் அந்த வெளி வேலியில தொங்கிட்டிருக்கு. இங்க கார்ல கடந்து போறவங்க, விஐபிகள் எல்லாம் இத மட்டுந்தான் பாப்பாங்க, சேரியையோ அங்க குடியிருக்கிறவங்களையோ பாக்கிறதில்ல. அதுதான் மும்பை மகாநகர் பாலிகாவோட மகிமை.

கொஞ்ச மாசத்துக்கு முன்னால லீலாகூட அங்கதான் இருந்தா. லீலாண்ணா யாரா? உண்மையிலேயா கேக்குற? – மும்பைக்கு திரைக்கதை எழுத வந்துட்டு அதோட முக்கிய கதாபாத்திரத்தோட பேருகூட உனக்குத் தெரியாதா? யாராயிருக்கும்ணு நீ நினைக்கிறே? – சுடிதார் கமீஸ் போட்டுட்டு சாயங்காலம் உனக்கு சூடா ரொட்டி போட்டு தந்தாளே அவதான். பூசணி மலாய்க் கூட்ட ரசிச்சு சாப்பிட்டியே. அவ அருமையான சமையல்காரி. உருளைக்கிழங்கு ரைத்தாகூட பொரிச்ச மீனும் தந்தாளே. ஆனா பாரு உனக்கு அவ பேரு கூடத் தெரியல. இருக்கட்டும்.

உனக்கு அந்த நாய்களப்பத்தி சொல்றேன். மும்பைல விலங்குப் பிரியர்களும் சேவை அமைப்புகளுமெல்லாம் பலமானவங்க‌. அதனால இங்க நாய்களக் கொல்லுறதுக்குத் தடையிருக்கு – இரகசியமாக்கூட கொல்ல முடியாது. மகாநகரபாலிகாவுக்கு இதுங்கள வளரவிடுறதத்தவிற வேறு வழியே இருந்திருக்காது .. ஆனா என்.ஜி.ஓ உதவியோட அதுங்கள கூட்டமா பிடிச்சுட்டுபோய் கருத்தடை செஞ்சு திரும்ப பிடிச்ச இடத்துலேயே விட்டிருவாங்க. இதெல்லாமே காயடிச்சுபோட்ட‌ நாய்ங்க. அதுங்களோட ஆசைகயெல்லாம் அழிஞ்சுபோயி, உள்ள நடக்கிற மாற்றத்தையில்லாம் புரிஞ்சுக்கவும் முடியாம இப்டி எரிச்சலான நாய்ங்களா சண்டபோட்டுகிட்டுகிடக்குற குழப்பமான ஜென்மங்க. பொட்ட நாய்ங்களப் பாத்தாலும் உடம்புல எதுவும் ஆகாததால அதுங்களோட அறிவு இன்னும் மழுங்கிடுச்சு. வேற வேறமாதிரி குரைக்குங்க. பசி, கல்லடி மிதிபடுறது இத மாதிரி சீரியசான உணர்ச்சியெல்லாத்துக்கும் கூட சொரண்டி எடுத்துகிட்ட‌ ஆண்மையும் சேர்ந்து ஒண்ணாகிடும்.

நிலா கீழ எறங்கி நட்சத்திரமெல்லாம் தெரியுற வரைக்கும் இப்படி ஊளையிட்டுகிட்டே இருக்கும். அப்புறம் குளிர்ந்துபோயிருக்கிற நடைபாதையில போய் மூக்க காலுக்கடியில வச்சு சுருண்டு படுத்து தூங்கிடும். தெனமும் இப்டித்தான். ஒண்ணும் பண்ணுறதுக்கில்ல. ஒண்ணுமே. எல்லாம் வல்ல பால் தாக்கரேயே முனிசிபாலிட்டிய ஆட்சி செஞ்ச சிவசேனாகிட்ட தன்னோட சிவாஜி பார்க் வீட்ல தூங்க முடிய‌லைண்ணு புகார் செஞ்சார். பலனில்ல. ஒண்ணுரெண்டு நாளு அதுங்கள தொரத்திவிட்டாங்க. அதெல்லாம் திரும்பவும் வந்துடிசுச்சுங்க‌.

கொஞ்ச நேரம் அந்த நாய்களோட ஊளைகளையெல்லாம் விட்டுட்டு இன்னும் கூர்ந்து கேளு அடுத்த‌ கட்ட சத்தங்கள கேக்க ஆரம்பிப்ப. சிவப்பு பஸ்ஸுங்களோட சக்கரச் சத்தம், டேக்ஸிகளோட கடமுடா, பந்தய பைக்குகளோட வேகம், சுமைவண்டியில‌ போற குடிகாரங்களோட கூச்சல். இதுதான் இந்த நகரத்தோட இராச்சத்தம். உன்னோட க‌ல்கத்தாவிலேயும் இதெல்லாம் உண்டு. ஆனா இந்த பந்தய பைக் சத்தம் மட்டும் பாழடஞ்ச கல்கத்தா ரோட்டுல‌ இருக்காது.

இதையெல்லாம் தாண்டி மூணாவது கட்டமா ஒரு சத்தம்வரும். கல்கத்தாவுல அது இல்ல. படுக்கையிலேந்து ஒரு முள்ளைப்போல உன்னைப் பிடுங்கி எடுத்துக்க. நேஏஏஏ..ரா அந்த சத்தம் வரக்கூடிய திசைக்கு வா. கேக்குதா? பதுங்குற புலியோட‌ உறுமலப்போல ஆனா தாள லயத்தோட, உணர்ச்சியெல்லாம் சேர்த்து சுருட்டி, அன்பும் வெறுப்புமா- ஆமா, நீ சொல்றது சரிதான், இதுதான் அரபிக் கடல். கடல் மட்டம் உயர்றப்போ அது பாடுற பாட்டு உன்னோட ஏழாவது தளத்து சன்னலுக்குப் பலதடவ வந்து தட்டுச்சு. ஆனா உனக்குத்தான் பிடிபடவேயில்ல. பரவாயில்ல. உனக்கு இந்த சத்தங்கள‌யெல்லாம் கட்டம் கட்டமா பிரிச்சுக்கிறது தெரியல. இப்ப உனக்குத் தெரிஞ்சிடிச்சு.

உனக்குத் தூக்கம் வராததால நீ இன்னும் கூர்ந்து கேக்கலாம். உன்னோட நண்பனும் அவன் மனைவியும் மாதேரன்ல ஒரு நாள் தங்குவாங்க. நீ அவங்க கூட போக விரும்பல. பாவம் வாரம் முழுக்க கஷ்டப்படுறாங்க. ஒருநாள் அவங்களுக்காக எடுத்துக்கட்டும். நீ ஏன் தாராளப் பிரபுவா இந்த பழக்கமில்லாத இடத்துல தங்க ஒத்துக்கிட்ட? அந்த சத்தம் எதைப்போல இருக்கு? ஆமா. நீ சொல்றது சரிதான். கடல் உன்ன கூப்பிடுது. அது அப்டித்தான். கடல் கூப்பிடத்தான் செய்யும். எல்லாரையும் அதுக்கு பக்கத்துல வந்து உக்காரச் சொல்லும். மக்கள் கேட்டாத்தான. இந்த நகரமே தொழில், பணம்னு மயங்கி கெடக்குது. கடலுக்கு கிட்ட கிடக்கிற கல்லுகள்ள நின்னு கேமரா ஃபோன்ல படங்கள சொடுக்கித்தள்ளுவாங்க ஆனா அதோட சங்கீதத்த கேக்கமாட்டாங்க. விசித்திரமான மனுசங்க.

ஒஹ் ஓ!. நான் நினச்சது போலவே ஆயிடுச்சு. நீ டீ சர்ட்டையும் ஜீன்ஸையும் உடனே போட்டுக்குவண்ணு எனக்குத் தெரியும், ஷூவையும் போட்டாச்சு. சாவி பாக்கெட்டுல இருக்காண்ணு தேடுற. நடு ராத்திரியில நீ வெளிய கிளம்புவண்ணு எனக்கு நல்லா தெரியும். உன்னோட நண்பர்கள் வீட்ல இல்ல வேற. நானும் இப்படி பலதடவ செஞ்சிருக்கேன்.

தூங்கிகிட்டிருக்க லிஃப்ட எழுப்பி தரைக்கு வந்து சேந்தாச்சு. வெளிவாசலத் தாண்டினா முச்சந்தி. அதத் தாண்டினா தோட்டத்துக்குப் போற பெரிய வாசல். கடலுக்குப் பக்கத்துல ஒரு பசுமையான‌ தோட்டம். பத்து வருசத்துக்கு முன்னே ஒரே குப்பை கூளம். பணக்காரங்க இங்க காலையிலேயும் சாயங்காலமும் வாக்கிங் வர்றாங்க. அதனாலத்தான் செயற்கையா தரை போட்டிருக்காங்க. பசுமையான புல்வெளி, ஓடுறதுக்குத் தனித் தடம், பெருஞ் செலவு. தேக்கு மரங்களுக்கு நடுவுல நிக்கிற கணக்கில்லாத குல்முகர் மரங்களிலேர்ந்து ஆயிரக்கணக்கான குருவிங்க கீச்சிடுதுங்க.

நீ போய்கிட்டிருக்கும்போதே நீர் பெருக்கமா அடிவானம் வரைக்கும் நீண்டு கிடக்குறத பாக்கலாம். ஆனா நீதான் பகல்ல இங்க வர்றதில்லையே. சினிமா ஸ்டூடியோவிலேந்து வந்து சேரும்போது சுட்ட ரொட்டியாட்டம் இருப்ப. அதுக்கப்புறம் யாருக்குத்தான் வாக்கிங் போகத் தோணும். நீ கொண்டு வந்த திரைக்கதைல‌ ரெண்ட பதிவு செஞ்சுட்ட. இப்ப ஒவ்வொரு ஸ்டுடியோவா போய் அத விக்கப் பாக்குற. அது வேலைக்காகும்னு நினைக்குறே? நீ முழுங்குன ரொட்டிய செஞ்சு தந்த பொண்ணோட பேரே உனக்குத் தெரியல ஆனா ஒரு ஸ்கிரிப்ட எழுத முடியும்ணு நீ நெனைக்குறே. சரி.

“துமாரா நாம் கியா ஹை, பாசந்தி? இப்டித்தான் இருக்கும்ணு நீ நினைக்கிறயா? –

ஜே.கே ரவ்லிங், கேத்தன் மேத்தா, கிரண் ராவ்… சரிதான்… அப்படியே நினைச்சுகிட்டிரு.. பாக்கலாம்.

தோட்டத்து வாசல் பூட்டியிருக்கு. சரிதானே? ஒன்பது மணியிலேந்து காலை அஞ்சுவரைக்கும் யாரும் நுழைய அனுமதி கிடையாது. இல்லைண்ணா கண்ட கண்ட சமூக விரோதிகளும், மாஃபியா டான்களும் கடலோட அழக ரசிக்க வந்திருவானுங்க. ஆனா உண்மையிலேயே உள்ள வர முடியாதா? ஒரு சின்ன இடவெளி இருக்கு. நீ குண்டாவுமில்ல இந்த இடவெளி உனக்குப் போதும். வாச்மேன் வாசலுக்கு பக்கத்துல கைய தோளுக்குப் பின்னால வச்சு தலைய தாங்கி பிடிச்சுகிட்டே தூங்கிட்டிருக்கான். உள்ள போ. கடல் உன்ன கூப்பிடுது பார்.

சிவப்புக்கல்லு போட்ட நட‌பாதை மரம் செடிகளுக்கு நடுவே போகுது. அடர்ந்த மரக்கிளைக்கு இடையில கொஞ்சமா நிலவொளி தரையில விழுது. ஆனாலும் இந்த இராத்திரி வேறெந்த இராத்திரியையும்விட வித்தியாசமானதுண்றது தெளிவு. எதையும் யோசிக்காம பாதையில இருந்த ஒரு வளைவ நீ கடக்கும்போது பூமியுடைய மொழி மாறிப்போயிருக்கிறத உணர ஆரம்பிச்சே. தோட்டம் அந்த இடத்துல கொஞ்சம் மேலே எழுந்து நிக்குது. அதனாலத்தான் கடல் தெரியல. ஆனா இப்ப அந்த வெளிர்நீலக் கடல் உன் முன்னால விரிஞ்சு கிடக்குது, அடிவானம் வரைக்கும். அலைகளோட சங்கீதம் உன் காதுக்கு பக்கத்துல கேக்குது. இப்போ அது உறுமலா இல்ல – கடல் உன்ன அதோட மார்பிலே வாஞ்சயா தழுவ விரும்புது.

ஆமா, நீ முழுநிலவ கவனிச்சியா? கிச்சன் காலண்டர்ல ராக்கி பூர்ணிமான்னு போட்டிருந்தது – ஆனா நீ எப்படி கவனிச்சிருப்ப – இதெல்லாம் லீலாவோட கடமைகள்.

இப்ப நீ கடற்கரையில நிண்ணு தென்மேற்கா பாக்கிறே. என்ன ஒரு காட்சி! முழுநிலாவும் உடைஞ்சு உயரமான அலைகளுக்குள்ள கரைஞ்சுபோயிடுச்சு. அதுலேந்து யாரும் கண்ணெடுக்க முடியாது. நீயும் மயங்கிப்போய் அதப் பாத்துகிட்டேயிருக்க. அப்ப காலாகாலமா கரையிலேயே கிடக்குற அந்தப் பாறைகளுக்கு மத்தியில யாரோ ஒரு நிழலப்போல போறாங்க. யார் அது? உன் கை உன்ன அறியாமலேயே பாக்கெட்டுக்குள்ள போகுது, உன்கிட்ட பிஸ்டல் இல்லைண்ணாலும், தற்காப்புக்கு நீ ஏதாச்சும் செய்யணுமில்லியா?

பாறையில உக்கார்ந்திருந்த உருவம் இப்ப மெல்ல அசையுது. இல்ல, அது ஆம்பிள இல்ல. ஒரு பெண்தான். ஆயுதமில்லாம இருக்க வாய்ப்பு அதிகம். நீ அவள விட்டு தள்ளி தூரமா நிக்கிறே. நிலா வெளிச்சம் வலுவாயிருக்குது, உன்ன மறைச்சுக்க எடமில்ல. எங்கதான் நீ பின்வாங்கிப் போறது? இல்ல அவ உன்ன கவனிக்கல. தலைய கவுத்துட்டு கண்ண முந்தானைல தொடச்சிகிட்டே அவ நடந்து போறா. ஓ அது நம்ம லீலா! லீலா இங்க என்ன பண்ணுறா?

இப்ப கேளு, நீங்கள்ள்லாம் உங்க மேசையில உக்காந்து திரைக்கத எழுதுறது சரியானதில்லைண்ணு நெனைக்குறேன். லீலா இங்க என்ன செய்யுறாண்ணு உனக்கு தெரிஞ்சுக்கணுமா? கோஃப்தாவும் ரொட்டியும் மனசார சாப்பிட்டிட்டு நீ டி.வில வங்காளச் சேனல்கள பாக்க ஆரம்பிச்சே, உனக்கு ஊர்க்காய்ச்சல். ஆனா லீலா எங்கப்போனாண்ணு, அல்லது என்ன சாப்பிட்டாண்ணு அல்லது அவ ஏதாவது சாப்பிட்டாளாண்ணு உனக்கு தெரிஞ்சுக்கத் தோணல இல்ல? விருந்தாளிண்ணா இதப்பத்தியெல்லாம் கவலப்படத் தேவையில்லண்ணு நீ நினைக்குறே. யாரு கவலப்படணுமோ அவங்க மாத்தெரான்ல இருக்காங்க. ஆனா நீ ஒரு எழுத்தாளன்- கதை சொல்றவன் – டி.விக்கும் சினிமாவுக்கும் கதை எழுது ஆரம்பிச்சிருக்க. ஏன்னா அதுல பணம் வருது. ஆனா உன் மனசோட போக்கு மாறக்கூடாது. கருணையும் சமநீதியுமுள்ள உன்னோட இதயம் எங்கபோச்சு?

அப்படீன்னா நான் சொல்றேன். ஆமா நான் சொல்வேன். லீலா இன்னும் சாப்பிடல்ல. நடுராத்திரியிலேந்து விடியலுக்கு இருட்டு நகந்துகிட்டிருக்கிற இந்த நேரம் அவ சாப்பிடுற நேரமுமில்ல. மதியானத்திலேந்து அவளோட சிவந்த கன்னத்துலேயும் கண்ணோரத்திலேயும் சேர்ந்திருக்கிற சோர்வ உன்னால பாத்திருக்க முடியாது. ஆனா அவ உன்ன கவனிக்காம இல்ல. ஒரு ரொட்டி கொஞ்சம் தீய்ஞ்சு போனப்ப அவ இன்னொண்ணு செஞ்சு தந்தா – இல்லியா? அவ நாள் முழுக்க சாப்பிடவேயில்ல.

இன்னைக்கு ராக்கி பூர்ணிமா பாத்தியா. ரக்ஷாபந்தன். அவ மும்பைக்கு வந்ததுலேர்ந்து அவளோட மச்சானுக்குத்தான் காலையில ராக்கி கட்டி சாப்பாடு போட்டு அனுப்புவா. அவ குழந்தைங்களும், புருஷனும், அக்காவும் சாப்பிடுவாங்க. அதனாலத்தான் உனக்கு காலையிலேயே சமைச்சு வச்சிட்டு போயிட்டா – இப்ப ஞாபகம் வருதா? மும்பையிலேந்து டில்லிக்கு டிரெய்ன், அப்புறம் அலிகாருக்கு இன்னொண்ணு, அங்கேர்ந்து பஸ்ல அஞ்சு மணி நேரம் அப்புறம் மாட்டு வண்டியில ஒரு மணி நேரம் அப்டித்தான் அவளோட சொந்த ஊருக்கு அவ போக முடியும். கல்யாணமாகி வந்த புதுசுல அவ வீட்ட விட்டு வந்ததும் அழுது புலம்புவா.

இப்ப இருக்கிறதப்போல அப்ப அவதிறம‌சாலியா இல்ல. பதினாறு வயசுகூட இருக்காது. வருமானமும் இல்ல. முதல் ரக்ஷாபந்தனப்போ வீட்டையே தலைகீழா புரட்டிபோட்டு ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா. அவளோட அண்ணன் வேணுமாம். அப்பத்தான் அவ மச்சான் நீ மும்பையில இருக்கிறமட்டும் என்னோட கையிலேயே ராக்கி கட்டுண்ணு சொல்லிட்டான். அப்போலேந்தே இப்டித்தான்.

பல சேரிகள்லயும் இருந்துட்டு கடைசியா ஆஷாநகர்ல லீலாவும் அவ புருசனும் குடியேறினாங்க. அவ புருசன் பக்கத்துல இருக்கிற பில்டிங் சொசைட்டில வேல பாக்குறான். லீலா ரெண்டு சின்ன குழந்தைங்களையும் அவங்க அறையில வச்சு பூட்டிட்டு வேற வீடுகளுக்கு சமையல் வேலைக்குப் போயிடுவா. ஏன் முகத்தக் கோணுற? என்னக் கொடுமை. நெருப்பு கிருப்பு வந்திடுச்சுண்ணா என்னாகும்…

‘ஆண்டவன் அவங்கள பாத்துக்குவான்’ லீலாவக் கேட்டா உங்கிட்ட சிரிச்சுகிட்டே இப்டித்தான் சொல்லுவா. ‘வேல பாக்கிற அம்மாங்களோட‌ பிள்ளைங்க வேற எப்படி வாழமுடியும்?’ ஏழைகளோட அதே கடவுளோட அருளால லீலா பசங்களுக்கு இப்ப ஆறு வயசும் எட்டு வயசும் ஆகுது. லீலாவுக்கே இருபத்தேழு ஆகப்போகுது. அவதான் எல்லாவிதத்துலேயும் வீட்டோட தலைவி, வீட்டு வருமானத்துல முக்கால் பாகம் அவளோடது. காலைல அஞ்சுமணிக்குத் தொடங்கி நடுராத்திரிவரைக்கும் அவ கஷ்டப்பட்டு ஒழைக்கணும். ரெண்டுபேருமே அடிம மாதிரி வேல பாக்கணும். வீட்ல உள்ளவங்களுக்கு சமையல், பாத்திரம் கழுவுறது, துணி துவைக்கிறது, பசங்கள பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டுப் போறது, ஸ்பெஷல் கிளாஸ். இதுக்கெல்லாம் மேலத்தான் அவங்கவங்க வேலைகளச் செய்யணும். அவ புருசனுக்கு பல முதலாளிங்க. ஆனா அவன் ஆம்புளைங்கிறதால அவன் வீட்டுக்கு வரும்போது ஒரு கப் டீயும் ரெண்டு ரொட்டியும் தயாராயிருக்கும். அவன் பேர‌ச் சொல்ல மறந்துட்டேனே: விஜய். விஜய் வால்மிகி.

வால்மிகிண்ணு குடும்பப் பேர் வச்சிருக்கவங்களப்பத்தி ஏதாவது தெரியுமா ஒனக்கு? அவங்கள பிர‌ம்மன் அவரோட மலத்துலேந்து உருவாக்கி உலகத்தோட கழிவையெல்லாம் சுத்தமாக்குற‌ வேலைய தந்தார். கழிப்பறை சாக்கடையெல்லாம் சுத்தம் செய்யுற மஹிதார் அல்லது மேதார் அவுங்க. ஒவ்வொரு எடத்திலேயும் ஒவ்வொரு பேரு அவங்களுக்கு. நீ முகஞ்சுளிச்சியா? ஒரு மேதாரோட பொஞ்சாதி உனக்கு சமைச்சுபோட்டுட்டால்ல… நீ ஒரு மார்க்ஸிஸ்ட் எழுத்தாளர்தான? நீ பேதம் பாக்குறதில்ல, சரிதான். சாதிமேல நம்பிக்க இருக்கா?

லீலா அழகானவ, வடிவானவ சிவந்த கன்னம், பெரிய கண்ணு, ஒழுங்கா பின்னின‌ கூந்தல், அவளோட கையில நாத்தமடிக்குற‌ கழிவு இருக்கும்ணு உன்னால கற்பன செய்ய முடியுதா? முடியாது. இங்க நிறைய பெரியமனுசனெல்லாம் வால்மீகிண்றது பழய புலவர் பெயரோட சம்பந்தமுள்ளதுண்ணு நினைக்குறாங்க. சிலருக்கு இதுல எல்லாம் அக்கறையே இல்ல. இன்னும் சிலபேருக்கு இதையெல்லாம் கற்பன செஞ்சு பார்க்கவும்கூட முடியாது, உன்னப்போல. அவங்க‌ கிராமத்துல‌ விருந்தாளிக்கு தண்ணிகூட தர அனுமதியில்லாத மக்கள், அவங்க வீட்டுக்கு பக்கத்துல வந்துட்டாலே சமைச்சத தூக்கி குப்பையில போடுற நெல‌மைல இருந்தவங்க இப்ப அவங்க சந்ததியெல்லாம் இந்த மெட்ரோபாலிட்டன் ஜனக்கூட்டத்துல சாதி அடையாளத்தை துடைச்செடுத்துட்டு ஒண்ணாக்  கலந்துபோறத பாக்குறாங்க. இங்க பணத்துக்கும் உழைப்புக்கும்தான் மதிப்பு. சுருண்டு விழுறவரைக்கும் அடிமை‌ மாதிரி உழைக்கணும். லீலாவும் அவபுருசனும் பிள்ளைங்கள இங்கிலீஷ் மீடியத்துல சேத்திருக்காங்க, குடும்பப் பெயர் இல்லாம. யூனிபார்ம போட்டுகிட்டு  ‘ஹை மம்மி’ ‘குட் மார்ணிங் டாடி’ண்ணு அவங்க ஓடிவரும்போது எல்லா கஷ்டமும் சரியாப்போயிரும்.

ஆனா இன்னைக்குக் காலையில லீலாவோட மச்சான் சூரஜ்குமார் ராக்கி போட்டுக்க வரல. ஒன்பதரைக்கு மொபைல்ல ஒரு செய்தி அனுப்பி பிசியா இருக்கேன் இப்ப வரமுடியாது சாயங்காலந்தான் பாக்கணும்ணு சொன்னான். விஜயும் காலையிலேயே வெளிய போயிட்டான்- இந்த ஆம்புளைங்கெல்லாம் சமீபகாலமா அமைதியாகிட்டே இருந்தாங்க, கூட்டுக்குள்ள போயிட்டதப் போல. ஏதாவது போதை பழக்கமாண்ணு லீலா சந்தேகப்பட்டா, மனசுல பயம் நிறைஞ்சிருந்தாலும் வேலைக்குப் போனப்புறம் அதையெல்லாம் மறந்துட்டா.

உனக்கு தெரியுமா  நீ தினம் ஸ்டூடியோக்களுக்கு போற பாதையில மேற்குஅந்தேரி தொடங்கி சோபோண்ணு எல்லாரும் சொல்லுற தெக்கு மும்பைக்கு ஓர்லி வழியா போய் அங்கேர்ந்து ஸீ-லிங்க் வழியா  வடக்க எக்ஸ்பிரஸ் வே ரோட்ல போகும்போது வடமேற்க, கிழக்க, அல்லது அதையும் தாண்டி இருக்கிற பகுதியையெல்லாம் நீ பாக்கிறதே இல்ல. கோவந்தி, நள‌சொபொரா, மன்குர்த், ஐரோலி, மலாட் கண்டிவளி – இதையும் சாவுக்கு பக்கத்துலேயே  கிடக்கிற வேற பல பாழடைஞ்ச இடங்களையுமெல்லாம் நீ பாக்கல.

கடல்முகமெல்லாம் அங்க இல்ல. சாலைகளில்ல, ஏதோ சில புதுசா முளச்ச வீடுங்க, பக்கத்துலேயே திறந்து கிடக்கிற சாக்கடையும் பிதுங்கி வழியும் சேரிகளும் இருக்கும். நீ அங்க போனா தீப்பெட்டி கணக்கா பல அடுக்குமாடி கட்டிடங்களப் பாக்கலாம். உயரமா செவ்வக வடிவத்துல, அசிங்கமா, சிமென்ட்ல நாரகொழச்சி பூசினாப்ல.

கொஞ்சம் தன்னோட சொந்த ஆசையாலயும் கொஞ்சம் நம்ம லீலாவோட கண்ணீர் அவனை கரைச்சதாலேயும் சூரஜ்குமாரும் விஜயும் அங்க ரெண்டு ஒருபெட்ரூம் வீடுங்களுக்கு முன்பணம் கொடுத்திருந்தாங்க. நள‌சொபொராவுக்கு பக்கத்துல. ஆளுக்கு ஒண்ணுன்னு. இவங்களபோல ஆழமான வேரில்லாத பல ஆட்களும் அதே பில்டர்கிட்ட காசு குடுத்திருந்தாங்க. விஜய் பில்டிங் சொசைட்டிலேர்ந்து கடன் வாங்கியிருந்தான். அவனோட சம்பளம் முழுக்க கடனுக்கே போயிடும். சூரஜ்குமாரும் அதப்போல கடன் வாங்கியிருந்தான் – கொஞ்சம் அவன் முதலாளிகிட்டேந்து, மீதி வட்டிகாரங்கிட்டேந்து. வீடு தயாரானதும் அத வாடகைக்கு விட்டு சம்பாதிக்க வேண்டியதுதான். அவ்வளவு தூரமா போய் அவங்க குடியிருக்க விரும்பல.

இப்பிடித்தான் மும்பைல உள்ளவங்க வீடு வாங்க முடியும்ணு லீலா சொன்னா, இல்லைண்ணா பணம் வெரலிடுக்கு வழியா வழிஞ்சு ஓடிடும்.

வீடு கட்டுமானம் நடந்துகிட்டிருந்தது – அப்பப்ப போய் பாத்துகிட்டு வந்தாங்க. மேல்தளம் போட்டாச்சு, சன்னலெல்லாம் போட்டிடிருக்காங்க. தீவாளி நேரத்துல வீட்டுச் சாவி குடுத்திருவாங்க. இந்த மாசம் துவங்கும்போதுதான் பில்டர் கடைசித் தவணைய வாங்குனான்.ஒருலட்சத்தி எழுபத்தஞ்சாயிரம். மும்பையோட லெவலுக்கு ரெம்ப மலிவுதான். விஜய் சூரஜோட மூணு வருஷ சம்பளம்.

ஆமா, அவங்க கஷ்டப்பட்டு சம்பாதிக்கணும், ஆனா வீடு தயாராயிடுச்சே – அப்புறமா எதுக்கு லீலா நடுராத்திரியில கடலுக்கு முன்னால நின்னு அழணும்? ஒரே நாள்ல அவங்க வாழ்க்கையே மாறியிருக்குமா? அப்படி ஆகுமா?

உண்மையில ஒரு நாளெல்லாம் இல்ல – லீலாவோட வாழ்க்க அஞ்சு பத்து நிமிஷட்துல மாறிப்போச்சு. சரியா ராத்திரி பத்து மணிக்கு.

லீலா எங்க தங்கியிருக்காண்ணு உனக்க்குத் தெரியாதுங்கிறது எனக்கு நிச்சயம். உனக்குத் தெரிஞ்சதெல்லாம் அவ நாளைக்கு அஞ்சுமுறை, கொலுசு சிணுங்க, வந்துட்டுப் போறாங்கிறதுதான். எட்டு நாளைக்குள்ள ஒருத்தர் எங்க தங்கியிருக்காங்கண்ணு எப்படி தெரிஞ்சுக்க முடியும்? அதுவும் உனக்கு அவ பேரே தெரியாதப்போ! முன்கதவு வழியா வெளிய போகும்போது பக்கத்துலேயே இன்னொரு கத‌வு இருக்கும் பாத்திருக்கியா? பாக்கலேல்ல? அங்கதான் லீலா குடியிருக்கா. ஒரே ஒரு ரூம். பத்துக்கு பன்னிரெண்டு அடி. இந்த குடியிருப்புக்குள்ள ஒரு ஒதுக்குப்புறமா வேலைக்காரங்களுக்கான இடம் இருக்கு. விஜய் லீலா போல நிறையபேர் மும்பைல இதுபோல ஒரு இடத்துக்காக உயிரையும், த‌ன்மானத்தையும் எல்லாத்தையும் விட்டுக்குடுக்கலாம்.  ஏண்ணா அவங்களுக்கு அங்க தங்க ஒரு எடம் இருந்தா வேற எல்லாத்தையும் சம்பாதிக்க முடியும். அங்கதான் பணக்காரங்கெல்லாம் தங்கியிருந்தாங்க. லீலாக்களும் விஜய்களும் எந்த வேலைண்ணாலும் அவங்களுக்காகச் செய்வாங்க, மனுசன் கற்பனைசெய்யக்கூடிய என்ன வேலைண்ணாலும்.

ஆனா விஜய் இண்ணைக்கு வீட்டுக்கு வரல. சூரஜ்தான் வந்தான். குடிச்சிட்டு. நல்லவேளையா குழந்தைங்க அப்ப இல்ல. சூரஜோட மனைவி, லீலாவோட அக்கா, அவங்கள காலையிலேயே கூட்டிட்டு போயிட்டா. சபிதாவுக்கு குழந்தையில்ல, அதனால தங்கச்சி குழந்தைங்கள லீவுக்கு வீட்டுக்கு கூட்டிட்டுப் போவா. லீலாவுக்கும் அது ஆசுவாசம்தான்.

சூரஜ் லீலாவுக்கு முன்னாலயே விஜய திட்டித் தீர்த்தான். ராக்கி சடங்கு எதுவுமில்ல. விருந்து சாப்பாட்ட யாரும் தொடல. லீலாவோட நெஞ்சு அழுது பொங்கிடிச்சு. ஆனா சூரஜ் அவளை அறைஞ்சப்போ அவ தன் புருஷன் எங்க போயிருப்பாண்ணுதான் நினைச்சுகிட்டிருந்தா. ஒரேயடியா ஓடிப்போயிருக்கமாட்டான்ல? அவ கண்ணுக்கு முன்னால நளசொப்பராவ்ல அவ மாசத் தொடக்கத்துல பாத்த அந்த அடுக்குவீடெல்லாம் வந்து போச்சு, ஏனோதானோண்ணு வெள்ளையடிச்சிருந்தாங்க. அவ விஜய்கிட்ட இரகசியமா நாம இன்னொருவாட்டி வெள்ளையடிக்கணும்னு சொல்லியிருந்தா.

அக்கம்பக்கத்துல செய்தி கேள்விப்பட்டு சூரஜ் நளசொப்பராவுக்கு அவசரமாப் போனான். வதந்தியா இருக்குமோ? மூணுநாளைக்கு முன்னால நகர்பாலிகா அதிகாரிங்க கட்டிடச் சுவர்ல நோட்டிஸ் ஒட்டியிருக்காங்க. நோட்டிஸ்ல என்ன இருந்ததுண்ணு அவங்களுக்குத் தெரியல.  இண்ணைக்கு காலைல பத்து மணிக்கு கட்டிடத்துக்குப் போகிற பாதைய முனிசிபாலிட்டி லாரி, குப்பவண்டி ,போலிஸ் வண்டி எல்லாம் வ‌ச்சி  அடைச்சிட்டாங்க. சூரஜப்போல இன்னும் ரெண்டு டசன்பேரு அங்க சத்தமும் கூச்சலுமா போராடிகிட்டே அந்த புத்தம்புதுசான கட்டிடங்க எல்லாம் தரைமட்டமாக்கிகிட்டிருக்கிறத பாத்துகிட்டிருந்தாங்க. பில்டர் எங்க போனான்? ஊர்ல இருக்கானா? ஓடிப்போன சுமன் ஷா எங்க? சூரஜோட பில்டரும் மத்தவங்களப் போல நளசொப்பரா, மங்குர்ட் போல ஏரியாக்கள்ல‌ இடங்ளத் தேடிப்பிடிச்சு வீடு கட்டுறாங்கண்ணு சூரஜ் தெரிஞ்சிகிட்டான். முன்பணமெல்லாம் வாங்கிகிடுவாங்க, பில்டிங்கெல்லாம் எப்பவுமே முடியுற கட்டத்துலதான் இருந்துகிட்டேயிருக்கும்.

அப்புறம் அந்த நிலத்தோட சொந்தக்காரங்கெல்லாம் வந்து அந்த கட்டிடங்களையெல்லாம் இடிச்சு தள்ளிருவாங்க. பில்டருக்கு கிடச்ச பணத்துல கொஞ்சம் இவங்களுக்குப் போயிரும். மிச்சமெல்லாம் பில்டருக்குத்தான். அது ஒரு மோசடி வளையம். சூரஜும் விஜயும் அந்தமாதிரி கம்பெனிக்குத்தான் வேல பாக்கிறாங்க. பட்டப்ப‌பகல்ல சந்தடியில்லாம சுத்தி சுத்தி ஏழைகளுக்கு வீடு வாங்குற கனவ விக்குற வளையம். ஏமாளிங்க மாட்டிக்கிறாங்க. பத்துக்குப் பன்னிரெண்டு ரூம்ல இருந்துகிட்டு தான் எங்கிருந்து வந்திருக்கோம், எவ்வளவு தூரம் முனேற‌முடியுங்கிறதையே மறந்திடுறாங்க.

என்ன கேட்ட? நிலம் பில்டருக்கு சொந்தமாண்ணு  அவங்க ஏன் சரிபாக்கலைண்ணா? அதெல்லாம் மறந்துடு – அவங்க போட்டிருக்க மலிவான டீ சர்ட்டையும் கூலிங் கிளாசையும் பாத்து மயங்கிராத. விஜய்களும் சூரஜ்களும் படிச்சவங்கண்ணா நினைக்கிற? அவங்க கிராமத்து வாத்தியார் உங்களுக்கெல்லாம் படிப்பெதுக்குண்ணு சாதி பேர்ச் சொல்லி சபிச்சிட்டாரு. அவங்களால நோட்டிசையோ சட்டத்தையோயெல்லாம்  படிக்க முடியாது. செய்தியப் படிக்கக்கூட அவங்க நினைச்சுப்பாக்கல. நிலம் யாருக்கு சொந்தம்ணு அவங்களுக்கு எப்டித் தெரியும்? அப்புறமா.. அவங்க பில்டரும் அரசாங்கமும் ஒண்ணுதான்னு நம்பிகிட்டிருக்காங்க. ஒருத்தர் கட்டினத இன்னொருத்தர் இடிப்பாங்கண்றது அவங்க கற்பனையில கூட இல்ல.

உன்னோட தாடையெல்லாம் இறுகுதே. ரெம்ப நல்லது. உனக்கு கோபம் வருது. இல்லியா? நல்லதுதான். உனக்குள்ள இருக்கிற எழுத்தாளன் வெளிய வர்றான். புரட்சியாளன். போலீஸுக்குப் போனா என்ன‌? எஃப்.ஐ.ஆர் போட்டா என்ன? கோடிக்கணக்குல பணம் புரளக்கூடிய மோசடி இது. இல்ல சார், அவங்க செய்தி வாசிக்கல சரி, நீங்க வாசிக்கிறீங்கல. டி.வில எல்லாம் தேசிய, உலக செய்திக்குதான் முக்கியத்துவம். இந்த மாதிரி லோக்கல் ஆட்களோட செய்தியெல்லாம் வர்றதில்ல. வீடு பெருக்குறவளோட மகள் எஞ்சினியர் ஆனாளே படிச்சியா?  அவள மானபங்கப்படுத்திட்டங்க – குண்டர்கள். அவளோட அண்ணனும் அம்மாவும் போலிஸுக்குப் போனாங்க. அவங்கள அடிச்சு தொவ‌ச்சு துணியெல்லாம் கிழிச்சுட்டாங்க. அண்ணன திருட்டுகேஸ்ல உள்ள போட்டாங்க. ஆமா ஏன் கூடாது? அந்தத் தடியனுங்க கவுன்சிலரோட ஆளுங்க‌, போலிஸ் அவங்க கைல இருக்கு. தப்பிக்கிறதுக்காக கடைசில அந்தப் பொண்ணு தற்கொல செஞ்சுகிடுச்சு. பத்தாவது பக்கத்துல செய்தித் துணுக்கு. கட்சித் தலைவர் அந்தக் கவுன்சிலரை கொஞ்சலா ‘விளைடாட்டுப் பிள்ளை!’ண்ணு அழைச்சிருந்தாரு.

செய்தித்தாளெல்லாம் படிக்கமாட்டாங்க. ஆனா சூரஜ், விஜய் அவங்க நண்பனுங்க எல்லாம் ஒன்ன விட புத்திசாலிங்க. போலிசப் பத்தி அவங்களுக்கு எல்லாம் தெரியும். அதனால அவங்க போலிஸ்கிட்ட போகவே மாட்டாங்க. இப்ப என்ன குறைஞ்சுபோச்சு? நூறு குடும்பங்கள் மூணுவருசமா முதுகெலும்ப ஒடச்சி செஞ்ச வேலை வீணாப்போச்சு. மூண நூறாலப் பெருக்கினா முன்னூறு வருச மனுச உழைப்பு கணக்குல விட்டுப்போகுது. அதனால என்ன? முடிவில்லாத காலம் இன்னும் மிச்சமிருக்கு.

ச்செ! உங்கிட்ட இந்த முடிவே இல்லாத கதையச் சொல்லி நோகடிச்சிட்டேன், இது என்ன சினிமா கதையாகவா மாறப்போகுது?. நிலா இப்ப எங்க இருக்கு? தண்ணி மேல நீண்டு கிடந்த தங்க வால் எங்க? நிலா மறைஞ்சதுமே தண்ணி இருட்ட‌ப்பாத்து உள்ளப் போக ஆரம்பிடுச்சு. கடலேத்தம் முடிஞ்சுபோச்சு. கடலிறங்க ஆரம்பிடுச்சு. தன்னோட இடவெளியில்லாத கர்ஜனைய கொஞ்சநேரமாவது நிறுத்திக்கணும்னு கடலுக்கு தெரிஞ்சிருக்கு.

உன்னோட ஷூவ கழட்டிட்டே. ஆனா இப்ப உன் டி சர்ட்டையும் ஜீன்சையும் கழத்தாம படுக்கையில படுத்திருக்கே. தலைக்குக் கீழ கைய மடிச்சு வச்சிருக்கே. இன்னும் தூக்கம் வரலியா? இரு இரு நீ தூங்கிருவ. வெளிய வெளிச்சம் வர ஆரம்பிடுச்சு. எவ்வளவு நேரந்தான் ஒருத்தரால தூங்காம இருக்க முடியும்? ஆனா இப்ப நீ இன்னொரு சத்தத்த கேக்க ஆரம்பிச்சிருக்கே. ஒத்துக்க. லீலா பொத்திப் பொத்தி அழுற சத்தம். வேற சத்தத்திலேந்து அத பிரிச்சு கவனமா கேளு. உன்னால முடியும். நீ ஒரு எழுத்தாளன் இல்லியா?

ஆனா அதைக் கேக்காமலே நீ தூங்கிட்டே. இப்ப நீலக் கடலும் அதோட கரையும் தோட்டமும் சூரிய வெளிச்சத்துல மினுங்கிகிட்டிருக்கு. ஒவ்வொரு புது நாளும் இப்படித்தான் வருது, இரவோட நினைவெல்லாத்தையும் அழிச்சுகிட்டு. இருக்கட்டுமே. இதுக்குத்தான மனுசன் வாழுறான்.

அதோ அங்க லீலா கதவத் திறந்து உள்ள வந்துட்டா, குளிச்சிட்டு, சிவந்து வீங்குன கண்ண மறைக்க அவளோட ரோஸ்கலர் சுடிதார்-கமீசப் போட்டுகிட்டு. ஒரு அருமையான புன்னகையோட அவ உங்கிட்ட சொல்லுறா ‘எழும்புங்க, சாஹிப், டீ எடுத்துகிட்டு வ‌ர்றேன்’.

அனிதா அக்னிஹோத்ரி கதைகள்

‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி
‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி
சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி
நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி
முந்தைய கட்டுரைராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-2
அடுத்த கட்டுரைராஜ் கௌதமன்- முன்னோட்டம்