குகை (குறுநாவல்) : 2

4

குகை- சிறுகதை- பகுதி -1

[3 ]

எப்படி இப்படி ஒரு முரட்டுத்தனமான சுரங்கத்தை ஒரு வீட்டுக்கு அடியில் எழுப்பினார்கள் என்று நான் வியந்துகொண்டேன். ஊஃப் என்று ஒரு ஒலியெழுப்பி பார்த்தேன். ஊஃப் ஊஃப் என்று பல இடங்களில் அந்தக்குரல் எதிரொலித்தது. அந்தப்பாதை நெடுந்தொலைவு செல்கிறதென்று தெரிந்தது. வீட்டுக்குள்ளிருந்து எப்படி ஒரு சுரங்கப்பாதை கீழே செல்கிறது? ஆனால் உள்ளே காற்றோட்டம் இருக்கிறது. அப்படியென்றால் மறுமுனை திறந்துதான் இருக்கிறது ஒருவேளை வேறு எவரேனும் இதுவழியே நடமாடிக்கொண்டிருக்கிறார்களா என்ன?

உள்ளே இறங்க வேண்டுமென்று தோன்றியது டார்ச் அடித்து பார்த்தபோது பத்து பனிரெண்டடி ஆழத்தில் தரை இருப்பது தெரிந்தது.  ஒர் ஏணி இருந்தால் இறங்கிவிடலாம். கொல்லைப்பக்கத்தில் இருந்த அலுமினிய ஏணியின் நினைவு வந்தது. காலடியோசை எழாமல் மிக மெதுவாகசென்று அந்த ஏணியை எடுத்து வந்தேன். எடையில்லாத ஏணிதான். புதியது. இந்த வீட்டில் பல்புகள் மிக உயரத்தில் இருப்பதனால் ஒன்று தேவை என அம்மா வாங்கி வந்திருந்தாள்.

அதை தரையின் துளை வழியாக இறக்கி நிறுத்திவிட்டு டார்ச் லைட்டை அடித்தபடி இறங்கி உள்ளே சென்றேன். என் கால்கள் ஆழத்தை உணர்ந்து நடுங்கின. ஆனால் உள்ளம் மகிழ்ச்சியில் விரைப்படைந்திருந்தது. தரையில் இறங்கிய போது தலைக்கு மேல் அந்த சதுரம் மிக அப்பால் என்று தெரிந்தது. வானத்தில் ஒரு ஓட்டை விழுந்தது போல.

டார்ச் அடித்து அந்த சுரங்கப் பகுதியைப் பார்த்தேன் .எந்த வடிவ ஒழுங்கும் இல்லாத ஒரு துளை. பிரம்மாண்டமான ஒரு  பெருச்சாளி வளை என்று கூட சொல்லலாம். பெரிய பெருச்சாளியின் பற்களால் கரம்பப்பட்ட தடங்கள் சுவரில் இருந்த பிக்காக்ஸ் வடுக்கள். இச்சுவர் சொறிப்பாறை என்று இப்பகுதியில் சொல்லப்படும் செம்மண் இறுகி உருவான பாறையால் ஆனது. சரல்பாறையில் ஏராளமான பூச்சித்துளைகள் இருக்கும். மண்ணிலிருந்து இந்தக்கல்லை வெட்டி எடுத்து வீடு கட்ட பயன்படுத்துகிறார்கள் இங்கெல்லாம். இந்த வீடே அந்தக்கல்லால் ஆனதுதான். இப்பகுதியில் இருக்கும் தொன்மையான் கோட்டைகள் அனைத்துமே அந்த வெட்டுகல்லால் செய்யப்பட்டவைதான்.

ஆகவே இந்த சுவர்கள் இடிந்து விழ வாய்ப்பில்லை, எனவே கல்லடுக்கிப் பாதுகாக்க வேண்டியதில்லை. அதேசமயம் கருங்கல்பாறை போலன்றி எளிதாக வெட்டி சுரங்கம் அமைக்கவும் செய்யலாம். முன்பு இத்தகைய பாறைகளில் குகைகளை வெட்டி வீடுகள் போல ஆக்கி மக்கள் குடியிருந்திருக்கிறார்கள். மென்மையான பாறைகளில் வெட்டப்பட்டவைதான் ஆரம்பகாலக் குகைவீடுகள். சாலமோன் காலத்துக் குகைவீடுகள் ஈரானில் இன்றும் உள்ளன. இந்தியாவின் குகைக்கோயில்களெல்லாம் இப்படி வெட்டப்பட்டவைதான்.

நான் மிக மெல்ல காலடி எடுத்துவைத்து சுரங்கப்பாதையினூடாகச் சென்றேன் .வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது. பின்னர் இன்னொரு பெரிய சுரங்கப்பாதையை சென்றடைந்தது. டார்ச் அடித்து அந்த சுரங்கப்பாதையின் தொலைவுகளைப் பார்த்தேன். இருபக்கங்களிலும் வளைந்து மறைந்தது. சுவரிலிருந்து ஊறிய தண்ணீர் தரையினூடாக ஓடிக்கொண்டிருந்தது. வழியில் யாரும் நடமாடுவது போல் தெரியவில்லை. அதற்குள் மனிதர்கள் வந்தே நெடுங்காலம் ஆகியிருக்கவேண்டும். சேறு இருக்கலாம். எதுவரை புதைகிறது என்று பார்க்கவேண்டும் .நான் அந்த குகை சந்திப்பில் சற்று நேரம் அமந்திருந்தேன். இதனூடாக மீண்டும் தொடர்ந்து செல்வதா திரும்பிவிடுவதா என எண்ணிக்கொண்டிருந்தேன்

அதற்குள் நெடுநேரம் ஆகியிருக்கவேண்டும். இத்தனை பொழுது இங்கிருப்பது சரியல்ல .நாளை காலை எழுந்ததும் அம்மாவை எழுப்பி  இதைச்சொல்ல வேண்டும். இத்தனை பெரிய ரகசியம் இந்த வீட்டில் இருப்பது தெரிந்தால் திகைத்துவிடுவாள் .திரும்பி வந்து ஏணியினூடாக மேலே ஏறி  குனிந்து ஏணியை எடுக்கப்போனபோது இதை அம்மாவிடம் சொல்லிவிட்டால் நான் மட்டுமே அறிந்த ஒரு பெரிய ரகசியத்தை முழுமையாக இழந்துவிடுவேன் என்று தோன்றியது. அதன் பிறகு இந்த வீட்டுக்கு வருவதற்கு முன் நான்  எப்படி இருந்தேனோ அப்படி ஆகிவிடுவேன்.

மேலும் இந்த வீட்டை பெரிய பணம் செலவழித்து வாங்கியிருக்கிறார்கள். இப்படி ஒன்று இங்கே இருக்கிறதென்று தெரிந்தால் இந்த வீட்டின் மதிப்பு இல்லாமல் ஆகிவிடும். அம்மாவும் மனைவியும் மனமுடைந்துவிடுவார்கள். அவர்களுக்கு அத்தனை பெரிய துன்பத்தை கொடுப்பது எந்தவகையிலும் நியாயமல்ல. ஆகவே இதை அவர்களிடம் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் எப்படி மறைக்கமுடியும்? ஏன், எளிதாக மறைத்துவிடலாம். இது இத்தனை பெரிய ரகசியம் என்பதனாலேயே அவர்களால் கற்பனை செய்ய முடியாது

என் உள்ளம் உடனடியாக பல கணக்குகளை போட்டது. அந்தக்கற்பலகையை இழுத்து வைத்து அதன் மேல் செங்கல்களை அடுக்கினேன். தரையோடுகளை அதற்குமேல் போட்டு புழுதியை மெல்ல துடைத்தேன். வெளியே சென்று கொல்லைப்பக்கத்தைப் பார்த்தேன் .பழைய வீட்டிலிருந்து எடுத்து வந்த தரை விரிப்பு சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து உதறி கொண்டு வந்து தரையில் விரித்தேன். எந்த தடயமும் இல்லாமல் ஆயிற்று.

ஏற்கனவே நான் இருந்த அறைக்குள் அது விரிக்கப்பட்டிருந்தது. குளிர்காலத்தில் வெறும் தரையில் கால் வைத்து நடந்தால் எனக்கு குதிகால் வலியும் சிலசமயங்களில் வலிப்பும் ஏற்படுவதுண்டு. அதற்காக வாங்கிய தேங்காய் நாரால் ஆன விரிப்பு அது. இரவில் எனக்கு கால்களில் தசையிறுக்கம் ஏற்பட்டது, ஆகவே அதைக்கொண்டுவந்து விரித்தேன் என்று சொல்லிக்கொள்ளலாம்

அறைக்குள் மெல்ல நடந்தபடி கிளர்ச்சியுடன் புன்னகைத்தேன். இந்த விரிப்புக்கடியில் ஒரு உலகம் இருக்கிறது எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. நான் மட்டுமே செல்லும் ஆழம் .நான் சொல்லாதவரை இப்படி ஒன்று இருப்பதை எவருமே புரிந்துகொள்ளப்போவதில்லை. கட்டிலில் படுத்துக்கொண்டு போர்வையை தலைக்கு மேல் இழுத்து விட்டு என்னை புதைத்துக்கொண்டேன். உடலைக் குறுக்கி உள்ளிழுத்துக்கொண்டேன். புன்னகைத்தபடி ‘யாருக்கும் தெரியாது!’ என்று சொல்லிக்கொண்டேன். அச்சொற்கள் எனக்கு மேலும் கிளர்ச்சி தர நானே சிறிய ஓசையெழச் சிரித்துக்கொள்ளத் தொடங்கினேன்.

.மறுநாள் அம்மா என்னிடம் அந்த விரிப்பை பார்த்து “இத எப்ப எடுத்துபோட்ட?” என்றாள் . “இப்பதான். நீ கூட பாத்தியே”  என்றேன். அம்மாவின் செவி அடுக்களையில் குக்கரின் விசில் ஓசையில் இருந்ததனால் அவள் பெரிதாக எதையும் கவனிக்கவில்லை.“நான் உள்ள இல்ல இருந்தேன்” என்று சொல்லிவிட்டு காப்பி டம்ப்ளருடன் கிளம்பிச்சென்றுவிட்டாள்.

பிறகு எவரும் என்னிடம் எதையும் கேட்கவில்லை. அம்மா என் அறைக்குள் வருவது பெரும்பாலும் குறைவு. அத்துடன் அவள் வெறுங்காலில் வருவதால் அந்த விரிப்பை மிதிக்காமல் ஓரமாகவே நடந்தாள். என்னிடம் வேறு எதையாவது கடுமையாக ஆணையிட்டபடியோ அல்லது வெளியே இருக்கும் என் மனைவியிடம் பேசியபடியோதான் அம்மா உள்ளே வந்தாள். ஆகவே அவள் எதையுமே கவனிக்கவில்லை.

என் மனைவிக்கும் எனக்கும் பெரும்பாலும் பேச்சு வார்த்தையே கிடையாது .திருமணத்திற்குப்பின் ஆறுமாதங்கள் தான் பேசிக்கொண்டோம்.  அதன் பிறகு அவள் என்னை எரிச்சலில்லாமல் பார்த்ததோ இயல்பாக பேசியதோ இல்லை. அவள் சொல்வது எதையுமே நான் கடைப்பிடிப்பதும் இல்லை. அது அவளுக்குத் தெரிந்ததனால் என்னை அம்மாவே கையாளவேண்டுமென்று விட்டுவிட்டாள். ஆகவே அவள் உள்ளே வரும் பேச்சுக்கே இடமில்லை.

என் மனைவி அருகிலிருக்கும் தொலைபேசி நிலையத்தில் அதிகாரியாக வேலை செய்கிறாள். பெரும்பாலும் காலையிலேயே கிளம்பிச்சென்றுவிடுவாள். நன்றாக இருட்டியபிறகுதான் வருவாள். சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தோழிகளுடனும் வேறு நண்பர்களுடனும் வெளியே சென்றுவிடுவாள். அவள் ஆங்கிலத்தில் தொலைபேசியில் பேசிக்கொள்வாள். அவளுக்கு ஒரு நவீன இருசக்கர வண்டி இருந்தது. கார் வாங்கவேண்டும் என அவள் சொல்வதாக அம்மா சொல்வதுண்டு

நானும் அம்மாவும் மட்டும்தான் பெரும்பாலும் வீட்டில் இருப்போம். அம்மா அடிக்கடி கோவில்களுக்குச் செல்வாள். இந்தப்பகுதியிலேயே ஏழட்டு கோயில்களை அவள் கண்டுபிடித்துவிட்டிருந்தாள் .அந்தியில் கோயிலுக்குச் சென்றால் நன்றாக இருட்டியபிறகுதான் திரும்பி வருவாள். வீட்டிலிருக்கும்போதும் பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான். அம்மாவுக்கு காது சற்று மந்தம் ஆகவே தொலைக்காட்சியை உரக்க அலறவிட்டு பார்த்துக்கொண்டிருப்பாள். பெண்களின் துன்பங்கள் காட்டப்படும் தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்து முகம் சிவந்து கண்கள் வீங்க அழுதுகொண்டிருப்பாள். நான் அவ்வழியாகச் செல்லும்போது முகத்தை என்னிடம் காட்டக்கூடாது என்பதற்காக வேறு பக்கம் திரும்பிக்கொள்வாள்.

நாங்கள் முன்பு இருந்த வீடு மிகச்சிறியது என்பதனால் ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டே இருந்தோம். தொலைக்காட்சியின் ஓசையைக் குறைக்கும்படி நான் அம்மாவிடம் எப்போதும் சண்டை போடுவேன். என் மனைவி அவளுடைய அறைக்குள் வைத்திருந்த பொருட்கள் எங்கே என்று எப்போதும் அம்மாவிடம் கேட்டுக்கொண்டே இருப்பாள். இந்த வீட்டில் ஒருவரோடொருவர் பேசுவது மிகவும் குறைந்துவிட்டது. ஒவ்வொருவரும் அவரவர் உலகில் இருந்தோம். அது மிக வசதியாக இருந்தமையால் அதை மேலும் உறுதியாக்கிக் கொண்டோம்

அம்மா எனக்கு மருந்தும் சாப்பாடும் கொண்டுவந்து தந்தாள். நான் மாத்திரைகளை சாப்பிடுவதை எப்போதுமே தவிர்த்தவனல்ல என்பதனால்  எடுத்து தருவதுடன் சரி, நான் சாப்பிடுகிறேனா என்று அவள் கண்காணிப்பதில்லை. மாத்திரைகளை என் அறைக்குள் கொண்டு வந்து ஒரு சிறு பெட்டியில் போட்டேன். பிறகு அவற்றை கொண்டு வந்து கழிப்பறை தொட்டியில் போட்டு நீரைப்பீய்ச்சி அழித்தேன். எனக்கு மாத்திரைகள் தேவைப்படவில்லை. முன்பெல்லாம் நானே கேட்டு வாங்கி சாப்பிடுவேன். மாத்திரை இல்லாவிட்டால் எனக்கு இரவெல்லாம் தூக்கம் இருக்காது. இருட்டு என்னை அச்சுறுத்தும். இரவு பல நாட்களாக நீண்டுசெல்வதாகத் தோன்றும்.

என் வாழ்க்கை அவர்கள் இருவருக்கும் தெரியாமல் வேறொன்றாக மாறிவிட்டிருந்தது. நான் அவர்கள் தூங்கிய பின்னர் மெதுவாக எழுந்து விரிப்பை அகற்றி தரையோடுகளை விலக்கிவிட்டு கல்பாளத்தை நீக்கி சுரங்கத்திற்குள் நுழைந்தேன். ஒவ்வொருமுறையும் உள்ளே இறங்கும்போது என் உடற்தசைகள் எல்லாம் இழுபட்டு வலிப்பு வருமளவுக்கு கிளர்ச்சி ஏற்பட்டது. ஒவ்வொருநாளும் முந்தையநாள் தயங்கி நின்ற இடத்திலிருந்து மேலே சென்றேன்.

ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் சென்றுகொண்டே இருந்தேன். அந்த சுரங்கப்பாதை பல கிளைகள் கொண்டதாகவும் வளைந்து வளைந்து மண்ணின் ஆழத்திற்குள் சென்றுகொண்டே இருப்பதாகவும் அமைந்திருந்தது. ஓர் இடத்தில் உள்ளே காற்று வருவது தெரிந்தது. நான் மறுநாள் அங்கே ஏணியைக்கொண்டுவந்து வைத்து ஏறி  ஏறி மேலே சென்றேன். அது ஒரு வெற்றுக்கிணறு. கிணற்றின் பக்கவாட்டின் உடைசல் வழியாகத்தான் காற்று வந்துகொண்டிருந்தது.

அந்தச் சுரங்கப்பாதை என்ன என்பதை நான் வெவ்வேறு நூல்களிலிருந்து ஆராய்ந்து கண்டுபிடித்தேன். வெள்ளையர்கள் அங்கு வந்திருந்த பொழுது அப்பகுதியில் நிக்கல் கிடைத்திருந்தது. அதற்காக இந்தச் சுரங்கங்களை தோண்டியிருக்கிறார்கள் .உள்ளூர் வேலையாட்களை வைத்து இச்சுரங்கங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் வெள்ளீயமும் கிடைத்திருக்கிறது. ஒருகட்டத்தில் அவர்கள் எண்ணியது போல   பெரிய அளவுக்கு உலோகங்கள் கிடைக்காமலாயிற்று. சுரங்கம் மிக ஆழமாக பல இடங்களுக்குச் சென்றுவிட்டபிறகு தோண்டுவது லாபகரமானதாக இல்லாமலானது. ஆகவே அவர்கள் அதைக் கைவிட்டுவிட்டார்கள்.

நெடுங்காலத்திற்கு பிறகு முதல் உலகப்போரின்போது அன்றிருந்த கேப்டன் சல்லிவன் என்பவர்  இந்த சுரங்கப்பாதைகளின் பழைய  வரைபடத்தை பழைய பிரிட்டிஷ் ஆவணங்களிலிருந்து கண்டெடுத்தார். அந்த இடம் முன்பு மினர்வா ரேர் மெட்டல்ஸ் எனும் நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருந்தது. சுரங்கம் கைவிடப்பட்ட பிறகு அது ஒரு பண்ணையாக மாற்றப்பட்டிருந்தது. அதன் பிறகு அந்த நிலத்தை ரயில்வே விலைக்கு வாங்கி ரயில்பாதையையும் ரயில் நிலையத்தையும் அமைத்தது. அதற்கடியில் சுரங்கங்கள் இருக்கும் செய்தி ஒருதலைமுறையுடன் மறக்கப்பட்டிருந்தமையால் ரயில்வே பொறியாளர்களுக்கும் திட்டமிடுபவர்களுக்கும் அடியில் அப்படி ஒரு சுரங்க வழி இருப்பது முற்றிலும் தெரியாமலே இருந்தது

சல்லிவன் மினர்வா ரேர் மெட்டல்ஸ் நிறுவத்தில் பணியாற்றிய ரெவரண்ட் பீட்டர் மெர்சி எனும்  பாதிரியாரின் மகளைத்தான் திருமணம் செய்திருந்தார் .அவருடைய தந்தை ஜான் மெர்சியின் தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் நாட்குறிப்புகளில்தான் அந்த செய்தி இருந்தது. சல்லிவன் சில ஆண்டுகள் முயற்சி எடுத்துத் தேடி அந்த வரைபடத்தை கண்டுபிடித்தார் .அதை அவர் ரயில்வேக்கு முறையாக தெரிவிக்கவில்லை. எப்போதேனும் உலகப்போரோ அல்லது உள்நாட்டுக்கலவரமோ வெடிக்குமென்றால் வெள்ளையர்கள் தப்பிச்செல்வதற்கும் பதுங்கிகொள்வதற்குமான ஒரு ரகசியப் பாதையாக அதை பயன்படுத்தலாமென்று அவர் எண்ணினார். ரயில்வேயில் இந்திய ஊழியர்கள் இருந்தமையால் அவர் அத்துறையை நம்பவில்லை.

அந்தப்பாதையை சீர்படுத்தி ரயில்வே கட்டிடங்கள் அனைத்திலிருந்தும் அந்த சுரங்கப்பாதைக்குச் செல்வதற்கான வழிகளை அமைத்தார். அந்த ரகசியம் வெள்ளை அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. பெண்களிடம் ரகசியம் தங்காது என்பதனால் அவர்களுக்குச் சொல்லப்படவில்லை. இந்தியவேலையாட்களிடமிருந்து அது மறைக்கப்பட்டது. சல்லிவன் கட்டிய கட்டிடங்களில் ஒன்றுதான் நாங்கள் குடியிருந்தது. அங்கிருந்த பழைய ஓட்டு கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த உறுதியான அடித்தளத்தின்மீது நாங்கள் இன்றிருக்கும் உறுதியான சுதைக்கட்டிடம் கட்டப்பட்டது.

சல்லிவன் இந்தியாவிலிருந்து 1918-லேயே கிலம்பிச்சென்றுவிட்டார். அவருடைய தனிப்பட்ட குறிப்புகளும் ஆவணங்களும் ரயில்வேக்கு சொந்தமான ஆவணக்காப்பகத்தில் இருந்தன. அவர் சென்றபின்னர் அவற்றை ஒருவர் கூட புரட்டிபார்க்கவில்லை. ஒருவேளை ரயில்வே ஆவணக்காப்பகத்திற்கு சென்று முறையான அனுமதி பெற்று அந்த ஆவணங்களைப் பார்த்த ஒரே மனிதன் நானக்கக்கூட இருக்கலாம். அங்கு அப்படி ஏராளமான் பழைய கோப்புகள் இருந்தன. என் அப்பா பழைய ரயில்வே அதிகாரி என்பதனாலும் அவருடைய மாணவர்கள்தான் உயரதிகாரிகள் என்பதனாலும்தான் என்னால் ஆவணக்காப்பகத்திற்குள் செல்ல முடிந்தது.

இந்த நகரத்திற்கு நடுவில் இப்படி ஒரு ஆவணக்காப்பகம் இருப்பதே எவருக்கும் தெரியாது.அந்த தாழ்வான பழைய சிவப்புக்கல் கட்டிடம் எங்கள் வீட்டிலிருந்து பார்த்தாலே தெரியும். காலப்போக்கில் பாதி மண்ணுக்குள் புதைந்துவிட்டதுபோல் இருக்கும். உள்ளே கன்ன எலும்புகள் புடைத்து மங்கிய கண்கள்கொண்ட வயதான ஊழியர்கள் இருவர்தான் இருப்பார்கள். மட்கிய காகிதமும் தூசும் கலந்து தும்மல் வரவழைக்கும் எட்டு பெரிய அறைகள். அவற்றில் தொன்மையான மரத்தால் ஆன அலமாராக்களில் தோல் உறையிடப்பட்ட காகிதத் தொகுப்புகள்.

நான் சல்லிவனின் காகிதங்களை விரித்து படித்துக்கொண்டிருந்தேன்அந்த சுரங்கப்பாதை எவ்வளவு முக்கியமானது என்பதை திரும்பத்திரும்ப எழுதியிருந்தார்.பெரும்பாலும் எல்லா பிரச்னைகளுக்கும் இறுதி தீர்வாக அந்த சுரங்கப்பாதையை அவர் குறிப்பிட்டிருந்தார். நிலைமை கைமீறிப் போகுமென்றால் உடனடியாக அந்த சுரங்கப்பாதைக்குள் இறங்கி தப்பிவிட வேண்டுமென்று அவர் ஆணையிட்டிருந்தார். சில இடங்களில் வேடிக்கையாக ‘இதில் கடைசியில் சுரங்கப்பாதையைத்தான் நாம் தேர்வு செய்யவேண்டியிருக்கும்போல!’ என்று எழுதியிருந்தார்.

அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்குமிடையேயான உரையாடல்களில் சுரங்கம் ஒரு நையாண்டிக் குறிப்பாகவே கையாளப்பட்டிருந்தது. ஒருகட்டத்திற்கு பிறகு டன்னல் என்ற வார்த்தை பிறருக்கு அர்த்தம் தராதபடி பல்வேறு மேலதிக அர்த்தங்களை தன்மேல் ஏற்றிக்கொண்டது. Through the tunnel, the tunnel of truth, in to the tunnel போன்ற ஏராளமான சொற்றொடர்கள் அவருடைய கடிதங்களில் இருந்தன. ஒரு கட்டத்திற்கு பின்னர் tunnelizing, tunnelled, tunnelization, tunnelling   போன்ற விந்தையான சொற்களை அவர்கள் கடிதங்களில் காண முடிந்தது.

‘இன்று  இந்த ஆவணங்களை படித்தால் வேறு எவருக்கேனும் இச்சொற்கள் பொருள் தருமா?’ என்று என்ணிக்கொண்டபோது எனக்கு மீண்டும் ஒரு விதிர்ப்பு ஏற்பட்டது. இந்நகரத்தில் வாழும் ஏறத்தாழ ஒரு கோடி பேருக்கு தெரியாத ஓர் உலகை நான் அறிந்திருக்கிறேன். ஒரு பெரிய அறிதலுடன் இங்கே எவராலும் அறியப்படாமல் இருந்துகொண்டிருக்கிறேன். அந்த ஆவணங்களைப்போலத்தான் நானும். எவராலும் பார்க்கப்படுவதில்லை. பார்த்தாலும் புரிந்துகொள்ளப்படுவதில்லை. மட்கி அழிந்துகொண்டிருக்கிறேன்

அந்த விந்தையான சுரங்கப்பாதை பல்வேறு கிளைகளுடன் நகரமெங்கும் பரந்து சென்றிருந்தது அதன் தொலைவை என்னால் ஊகிக்க முடியவில்லை. இந்த நகரத்தில் இங்கிருந்து எவருமே அறியாமல் அவர்களின் காலடிக்குக்கீழே மிகப்பெரிய வேலைகள் நடந்திருக்கின்றன. 1857-ல் நிகழ்ந்த சிப்பாய் கலவரத்திற்கு பிறகு வெள்ளையர் ஒவ்வொருவரையும் அச்சம் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தது. சல்லிவனுக்கு மேலதிகாரிகள் நிறையவே நிதி அளித்தனர். ஆகவே சுரங்கப்பாதைக்கு இணைப்புகள் பெருகின.

ரயில்வே தலைமை அலுவலகத்திலிருந்து அருகிலிருக்கும் ரயில்வே தலைமை அதிகாரியின் குடியிருப்புக்கு ஒரு சுரங்கப்பாதையை புதியதாக அமைக்கலாம் என்று சலிவன் திட்டமிட்டார். எற்கனவே இருந்த சுரங்க வழியை சற்று வளைத்து நீட்டி அதை அமைக்க முடிந்தது. அந்த சுரங்கப்பாதை எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் எக்கணமும் எவருமறியாமல் அங்கு சென்றுவிட முடியுமென்ற எண்ணமே அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது .ஆகவே மேலும் மேலும் சுரங்க வேலைகளை செய்ய தொடங்கினார்கள்

இந்நகரத்திலிருந்த அனைத்து பிரிட்டிஷ் அலுவலகங்களும் குடியிருப்புகளும் சுரங்கப்பாதைகளால் இணைக்கப்பட்டன. சுரங்கத்திலிருந்து நகருக்கு வெளியே இருக்கும் செமித்தேரி வரைக்கும் பிறிதொரு பாதை அமைக்கப்பட்டது. துறைமுகத்திற்கு கூட பாதை அமைக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் அந்தப்பகுதியில் மண் மிக மெல்லியதாகையால் சுரங்கம் இடிந்து மூடியிருக்கக்கூடும். இந்நகரில் இருந்து பன்னிரண்டு இடங்களில் வெளியேறிச்செல்ல வழிகள் இருந்தன. பன்னிரண்டுமே பிரிட்டிஷாரால் பேணப்பட்டு வந்த செமித்தேரிகளோ கிறித்தவ தேவாலயங்களோதான்.

ரயில்வே கட்டுமானத்திற்கு அழைத்து வரப்பட்ட ஆந்திர மாநிலத்து தொழிலாளர்கள் கண்கள் கட்டப்பட்டு இந்த சுரங்கப்பாதைகளை அமைக்கும் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். கடுமையான பஞ்சம் நிலவி வந்த காலம் அது. உள்நாட்டிலிருந்து ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேர் நகரத்திற்கு பிழைப்பு தேடி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் உடல் வலிமையும் திறமையும் கொண்டவர்களை தேர்ந்தெடுத்து இப்பணிக்கு அனுப்பினார்கள். ஓரிரு மாதங்கள் இப்பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்ட பிறகு இங்கிருந்தே மலேயாவுக்கும் இலங்கைக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் அவர்கள் அனுப்பப்பட்டுவிட்டார்கள் ஆகவே இந்த சுரங்கவலை வெட்டி முடிக்கப்பட்டபோது இதைப்பற்றி அறிந்த இந்தியர்கள் என எவருமே இங்கிருக்கவில்லை.

இங்கிருந்த தொன்மையான எந்த கட்டிடத்திலும் ஏதேனும் ஒரு அறையில் சுரங்க வலைக்குள் நுழைந்துவிடுவதற்கான வழி ஒன்று இருந்தது. இதற்குள் நுழைந்துவிட்டால்       ஒரு வரைபடத்தின் உதவியுடன் முக்கியமான பிரிட்டிஷ் மையங்கள் அனைத்திற்கும் சென்றுவிட முடியும். பின்னர் நகரின் முக்கியமான பகுதிகள் அனைத்தும் வான் வழியாக இணைக்கப்பட்ட போது நிலத்தடி இணைப்புகள் பொருளற்று போய் அப்படியே மறக்கப்பட்டுவிட்டன. சல்லிவனுக்குப்பின் வந்த எவரும் சுரங்கங்களைப் பற்றி அக்கறை கொண்டிருக்கவில்லை. அவர்கள் மேலோட்டமாகவே அறிந்திருப்பார்கள் என தோன்றுகிறது.

ஆனால் தனக்குள் இத்தனை ரகசிய வழிகளை வைத்துக்கொண்டு இந்த நகரம் மேலும் மேலும் வளர்ந்து பெரிதாக்கிக்கொண்டிருந்தது. நகரங்கள் வளர்வது சிதல்புற்றுகள் வளர்வது போல என்று நான் படித்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பெரிய கட்டுமானங்கள் உருவாகியிருக்கும். சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் இடைவிடாது தன்னைத்தானே கட்டிக்கொண்டிருக்கிறது நகரம். அவற்றுக்கிடையேயான இணைப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

நான் பள்ளியில் படித்த காலகட்டத்தில் இந்நகரத்தில் நண்பர்களுடன் சைக்கிளில் நிறையவே சுற்றி அலைந்திருக்கிறேன். இதன் வழிகளும் ஊடுவழிகளும் எனக்கு நன்றாக தெரியும் .ஆனால் நடுவே எட்டாண்டுகாலம் நான் என் அறையைவிட்டு வெளியே செல்லவே இல்லை. அதன் பிறகு ஒருமுறை அம்மா என்னை மருத்துவரிடம் அழைத்து சென்றபோது அம்மாவைத்தேடி நேர் எதிர்வாயிலினூடாக வெளியே இறங்கிவிட்டேன். அது எந்த இடம் என்று தெரியாமல் தவித்து சாலைக்கு வந்தேன். என்னை மீண்டும் அம்மா காவல் துறை உதவியுடன் கண்டுபிடிப்பதற்கு இரண்டு நாட்களாயின.

அந்த இரண்டு நாட்களும் நான் நகரத்தின் தெருக்களில் அழுதுகொண்டும் அரற்றிக்கொண்டும் சுற்றிக்கொண்டிருந்தேன். என்னால் எவ்வகையிலும் அடையாளம் காணமுடியாத பல இடங்களில் நிராதரவாக அமர்ந்திருந்தேன். அந்நகரம் முற்றிலும் எனக்கு தெரியாத ஒன்றாக இருந்தது. அத்தனை வழிகளும், அத்தனை கட்டிடங்களும் மாறிவிட்டிருந்தன. ஒரு முகம் கூட அறிமுகம் கொண்டதாக இருக்கவில்லை. ஒவ்வொரு வழிமடிப்பிலும் நான் முட்டிக்கொண்டு பதறி திரும்பினேன். ஒவ்வொரு முகங்களையும் நோக்கி ஓசையில்லாமல் கதறி அழைத்து புறக்கணிக்கப்பட்டேன்

அவ்விரண்டு நாட்களும் நான் தூங்கவில்லை. பத்துநிமிடங்களுக்குமேல் எங்கும் அமரவும் இல்லை. நகரத்தின் தெருக்களில் சில சமயம் கதறியபடி ஓடினேன் முச்சந்திகளில் நின்று நெஞ்சில் அறைந்து கூச்சலிட்டு அழுதேன். ஆனால் எவருமே என்னிடம் நீ தொலைந்துபோய் விட்டாயா என்று கேட்கவில்லை. ஏன் அழுகிறாய் என்று விசாரிக்கவில்லை. என்னை அவர்கள் எவருமே பார்க்கமுடியவில்லை என்று எனக்குத் தோன்றியது. அவர்களால் பார்க்க முடியாத அளவிற்கு மிகச்சிறியவனாகவோ முற்றிலும் ஒளி ஊடுருவுபவனாகவோ நான் மாறிவிட்டிருந்தேன்.

இரண்டு நாட்கள் என்று என் அம்மா சொல்லிதான் எனக்குத் தெரியும். அது இரண்டு ஆண்டுகளாகவோ அதற்கு மேலாகக்கூட இருக்கலாம் .அம்மாவின் முகம் என்முன் தோன்றியபோது முதலில் எனக்கு அது அடையாளம் கண்டுகொள்ளத் தக்கதாக இல்லை. அம்மா என்னை பிடித்து உலுக்கி என் பெயரைச்சொல்லி பல முறை அழைத்தாள். கனவில் இருந்து  விழித்துக்கொண்டது போல் நான் தன்னுணர்வுகொண்டேன். அம்மாவைப்பார்த்து ஏதோ சொன்னேன். பின் அவளை இறுகக்கட்டிக்கொண்டு கதறி அழுதேன். அம்மாவை தோளிலும் இடுப்பிலும் ஓங்கி ஓங்கி அறைந்தேன். அவர்கள் என்னை இறுகப்பற்றி இழுத்து அங்கேயே படுக்க வைத்து ஊசி போட்டார்கள்.

அதன் பின் நான் வீட்டிலிருந்து வெளியே செல்வதே இல்லை. மிக அரிதாக அம்மா என்னை வெளியே அழைத்துச்செல்லும்போது கூட அம்மாவின் கையை இறுகப்பற்றிக்கொள்வேன் .ஆட்டோவில் அமர்ந்து வெளியே பார்க்கையில் நகரம் மனிதர்களும் நிழல்களும் கலந்து அச்சுறுத்தும் வண்ணக்கொப்பளிப்பாகத் தெரியும். என் உடல் வியர்த்து நடுங்கிக்கொண்டிருக்கும். அம்மா சற்று விலகி அமர்ந்தால் கூட நான் பதறி மீண்டும் அம்மாவின் கையை பற்றிக்கொள்வேன்.

ஆனால் அந்த சுரங்கப்பாதைகளில் எனக்கு வழி தவறவில்லை. பல இடங்கள் நான் ஏற்கனவே வந்தவை போலிருந்தன. ஒருவேளை முற்பிறப்பில் இந்த சுரங்கப்பாதைகளை தோண்டியவர்களில் நான் ஒருவனாக இருந்திருக்கலாம். அல்லது இந்த சுரங்கப்பாதைகளை வடிவமைத்த பொறியளர்களில் ஒருவராகக்கூட இருந்திருக்கலாம். சுரங்கப்பாதையின் மொத்த அமைப்பையுமே கண்களை மூடிக்கொண்டு என்னால் ஒரு மாபெரும் வரைபடம்போல் பார்க்க முடிந்தது.

download

 [ 4 ]

நான் ஒவ்வொரு நாளும் சுரங்கப்பாதையை புதிதாக கண்டுகொண்டேன். மைய பாதையிலிருந்து ஏராளமான கிளைப்பாதைகள் பிரிந்து சென்றன பல இடங்களில் மேலேறிச்செல்வதற்கு குறுகலான செங்கல் படிகள் அமைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் நகரத்திற்கு மேலே இருக்கும் நீர் நிலைகளுக்கு அடியில் அந்த பாதை செல்வதை சுவர்களிலிருந்து கசியும் நீரிலும் அங்கு நிறைந்திருந்த குளிரிலிருந்தும் உணர முடிந்த்து.

அந்த பாதையை அறியும் தோறும் எனது தன்னம்பிக்கை மிகுந்து வந்தது. எனது பார்வை மேலும் கூர்மை பெற்றது. நான் பின்னர்  கைவிளக்கு எதையும் எடுத்துச்செல்லவில்லை. கைவிளக்கு இந்த பாதையை நம் கண்களிலிருந்து மறைத்துவிடுகிறது. விளக்கு ஒளி படும் சிறிய வட்டம் மட்டுமே நமக்குத் தெரிகிறது .அது நம்மை பயமுறுத்தி வழிதவறச்செய்கிறது. உள்ளே இறங்கி இதன் இருட்டுக்கு கண் பழகியபிறகு இதன் ஒட்டுமொத்தத்தை பார்த்துவிட முடியும்.

இருண்ட சுரங்குப்பாதையில் நான் மகிழ்ச்சியுடன் சீட்டியடித்தபடியும் எனக்குப்பிடித்த பழைய இந்திப்பாடல்களை உரக்க பாடியபடியும் நடந்தேன். சில இடங்களில் நின்று மெதுவாக நடனமிட்டேன். ராஜேஷ் கன்னாவின் அந்தக்கால நடனங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை .அப்போது நான் மிகவும் சிறுவனாக இருந்தேன். என் அப்பா ராஜேஷ் கன்னாவின் ரசிகர். ஆகவே அவருக்கு அமிதாப்பச்சனை பிடிக்காது. நடிகன் என்றால் அழகாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். என்னைப்போன்ற பிற பையன்கள் இளையராஜா பாடல்களைக்கேட்டுக்கொண்டிருந்த போது நான் ஆர்.டிபர்மன் இசையமைத்த ராஜேஷ் கன்னாவின் பாடல்களை கேட்டு அவற்றிற்கு நடனமாடிக்கொண்டிருந்தேன்.

பின்னர் அந்த பாடல்கள் ஒலிக்கும்போது அவை நான் முன்னரே கேட்ட பாடல் அல்ல என்று எனக்குத்தோன்றும். நான் இளமையில் கேட்டபோது அந்தப்பாடல்கள் அனைத்துமே உற்சாகமானவையாக, துள்ளலான தாளம் கொண்டவையாக இருந்தன. கிஷோர் குமார் நடனமாடிக்கொண்டே பாடுபவர் போல. ஆனால் பின்னர் கேட்கத்தொடங்கும்போது அவை அனைத்துமே ஆழ்ந்த துயரம் நிறைந்த குரலில் ஒலித்தன. ஆகவே எப்போதாவது அவை தொலைக்காட்சியிலோ செல்பேசியிலோ ஒலிக்கும்போது நான் ஓடிச்சென்று அவற்றை நிறுத்தும்படி கூச்சலிடுவேன். ‘இந்தப்பாட்டு உனக்குப்பிடிக்குமேடா” என்று அம்மா ஒருமுறை சொன்னாள் . “பிடிக்காது! பிடிக்காது! பிடிக்காது!” என்று நான் உரக்க கூச்சலிட்டேன். அந்த ஒலிக்கருவியை தூக்கி தரையில் போட்டு உடைத்தேன்.

நான் இளமையில் கேட்ட பாடல்கள் முழுமையாகவே வெளியே இருக்கும் நகரத்திலிருந்து மறைந்துவிட்டிருந்தன. அவற்றை அழித்துவிட்டு புதிய இசைக்கருவிகளுடன் புதிய தாளங்களுடன் மறுபடியும் பதிவு செய்து  வைத்திருக்கிறார்கள் .ஆனால் அந்த சுரங்கப்பாதைக்குள் நான் அப்பாடல்களை எந்த வேறுபாடும் இல்லாமல் அடையாளம்காண முடிந்தது. ஒருமுறை இதற்குள் நான் சென்றுகொண்டிருந்தபோது ஒர் இடத்தில் ராஜேஷ் கன்னாவின்  ‘தம்மரே தம்’ என்ற பாடலைக்கேட்டேன். அங்கேயே நின்றுவிட்டேன். மிக மெல்லத்தான் அது கேட்டது என்றாலும் எனக்கு மிகத்தெளிவாக அதன் ஒவ்வொரு தாளமும் கிட்டாரின் ஒவ்வொரு மணியோசையும் கேட்டன.

‘அதே பாடல்!  அப்பா நீங்கள் கேட்ட அதே பாடல்!’ என்று சொல்லிக்கொண்டேன். அப்பாவை அந்த லாரி முட்டியபோது அவர் அந்தப்பாடலை மனதில் மீட்டிக்கொண்டிருந்திருக்கலாம். அவர் எப்போதுமே பாட்டை முனகிக்கொண்டிருப்பார். அவரை வீட்டுக்குக் கொண்டுவந்து படுக்கவைத்தபோது தலையை தனியாக ஒட்டி வைத்திருந்தனர். அது பெரிய துணிப்பொட்டலமாக இருந்தது.

தம்மரே தம்.   இப்போது மேலே அந்தப்பாடலை கேட்பவர் யார்? அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது .அவர்களுக்கு அவர்கள் வீட்டுக்கு அடியில் இவ்வாறு ஒருவன் வந்து நின்று அந்தப்பாடலை கேட்டுக்கொண்டிருப்பதும் தெரியாது. ஆனால் அவர்கள் பெரும்பாலும் எனக்குப்பிடித்த பாடல்களை வைத்தனர். பின்னிரவில் ஒரு குறிப்பிட்ட பொழுதில் அங்கு சென்றால் நெடுநேரம் அந்தப்பாடல்களைக் கேட்டுக்கொண்டு அங்கு நிற்க முடியும்.

[மேலும் ]

முந்தைய கட்டுரைகொரியா ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்விழா- சிறப்பு விருந்தினர்- மதுபால்