[ 1 ]
அந்த வீட்டுக்கு நாங்கள் வந்த போதே எனக்கு ஒரு மாறுபட்ட உணர்வு தோன்றியது. சில தருணங்களில் ஒவ்வாமையும் படபடப்பும் அதன் விளைவான பேரார்வமும் ஒரே சமயம் தோன்றுமல்லவா? எவரோ அனுப்பிய ஏதென்று தெரியாத பரிசுப்பொருள் போல் இருந்தது அந்த வீடு. அதன் படிகளில் என்னால் கால் வைக்க முடியவில்லை வியர்வை பூத்த உடம்புடன் மெல்லிய நடுக்கத்துடன் நான் அதன் முன் நின்றிருந்தேன். என் மனைவியும் அம்மாவும் கதவைத்திறந்து உள்ளே சென்றார்கள்.
மனைவிதான் அந்த வீட்டை விலைக்கு வாங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தாள். அவளும் அம்மாவும் பத்து தடவைக்கு மேலாக அந்த வீட்டை வந்து பார்த்திருந்தார்கள். ஆனால் அப்போதும் அவர்களால் தங்களால் ஒரு வீடு வாங்கப்பட்டுள்ளது என்ற உண்மையை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கதவைத்திறந்த மனைவி கூடத்தை வியப்புடன் சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். சுவர்களையும் அலமாரா தட்டுகளையும் கையால் நீவினாள். அம்மா வெளியிலிருந்து பைகளை உள்ளே எடுத்து வைத்தபிறகுதான் என்னைப்பார்த்தாள். “உள்ளே வாயேன்டா. ஏன் நிக்கிறே?” என்றாள். நான் நடுங்கிக்கொண்டிருந்தேன். என்னை பார்த்துவிட்டு “என்ன கருமமோ” என்று அவள் உள்ளே சென்றாள்.
நான் செருப்பைக் கழற்றிவிட்டு மிக மெல்ல காலெடுத்து படிகளில் வைத்தேன். எனக்கு மீண்டும் புல்லரித்தது. ஒவ்வொரு அடியாக வைத்து உள்ளே சென்றேன். மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு கப்பலில் நின்றிருப்பது போல் என் கீழ்முதுகில் ஒரு நிலைகுலைவு. மூச்சுத்திணறல் போல, உடற்திரவங்கள் உள்ளே அலைக்கழிவது போல. மெல்ல நாற்காலியில் அமர்ந்தேன். மனைவி வெளியே சென்று லாரியில் வந்துகொண்டிருந்த பொருட்களைப் பார்த்தாள். லாரியில் இருந்தவர்கள் “போலாம்! ரைட்! மெல்ல! லெஃப்ட் ஒடி! லெஃப்ட் ஒடி!” என்று கத்திக்கொண்டிருந்தார்கள்.
சற்று நேரத்தில் பெரிய மீசை வைத்த, மூக்கின் மேல் கரிய மரு கொண்ட ஒருவன் உள்ளே வந்து என்னிடம் “சாமான்களை எங்கே எறக்கறது சார்?” என்றான். .நான் பதில் சொல்லாமல் அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் அந்த இடத்திற்கு திடீரென்று வந்து சேர்ந்தவன்போலிருந்தான். அவன் மூக்கின் மரு அசிங்கமாக இருந்தது. “பீரோ கட்டில்லாம் கடைசியா சார். சின்ன சாமானுங்கதான் மொதல்ல” என்று அவன் மறுபடியும் சொன்னான். நான் அவனை பார்ப்பதைத் தவிர்த்தேன்
மீண்டும் என்னை சற்று நேரம் பார்த்தபின் சமையலறையிலிருந்து வந்த அம்மாவிடம் “எங்கே எறக்கறதும்மா?” என்றான். “வா காட்றேன்” என்று அவள் அவனைக் கூட்டிச்சென்றாள். அவர்கள் சோபாக்களை பெட்டிகளையும் பாத்திரங்களையும் இறக்கினர். பின்னர் கட்டிலும் பீரோவும் கண்ணுக்குத்தெரியாத தண்ணீரில் மிதந்து அலைக்கழிந்து வருவது போல வீட்டுக்குள் நுழைந்தன. அறைகளில் முட்டி மோதி, குழம்பி தயங்கி, மெல்ல அவற்றுக்கான இடங்களைக் கண்டடைந்தன.
வீடுமுழுக்க கூச்சல்கள், அழைப்புகள், பல்வேறு பொருட்கள் முட்டி எழுப்பும் ஓசைகள் நிறைந்திருந்தன. எனக்கு வெளியிலிருந்து ஒரு வெள்ளப் பெருக்கு வீட்டுக்குள் வந்து சுழித்துக்கொண்டிருப்பதாகவே தோன்றியது. நான் அந்த நாற்காலியிலேயே அமர்ந்தபடி கைகளைக் கோத்து மடியில் வைத்துக்கொண்டு அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா என்னிடம் “கொஞ்ச நேரம் உக்காந்துக்கோ .எல்லாம் கொஞ்சம் செட் பண்ணிட்டு உனக்கு டீ போட்டுத்தரேன்” என்றாள். நான் அதற்கும் பதிலேதும் சொல்லவில்லை.
பணியாட்கள் கூலி பெற்றுக்கொண்டு திரும்பிச் சென்றார்கள். “லெஃப்ட்ல… லெஃப்ட்ல! லெஃப்ட்லே ஒடிங்க! ரைட் !” என்றெல்லாம் வெளியே கூச்சல் ஒலிகளும் லாரி உறுமி இரைந்து மெல்ல திரும்பும் ஓசையும் கேட்டுக்கொண்டிருந்தது.. பின்னர் மெல்ல அமைதியாயிற்று. அமைதி எனக்கு மேலும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது.
என் மனைவி செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்த துடைப்பத்தை எடுத்து உதறிவிட்டு வீட்டை கூட்டத்தொடங்கினாள். கூடம் முழுக்க பிளாஸ்டிக் கயிறுகளும் பாலிதீன் உறைகளும் தக்கைகளும் காகிதங்களும் சிதறிக்கிடந்தன ஒவ்வொன்றாக எடுத்து சுருட்டினாள். “காயிதங்களை எல்லாம் அப்பால வைடீ. தேவைப்படும்” என்று அம்மா சொன்னாள். “காகிதங்கள வச்சு என்னத்த பண்றது?” என்று என் மனைவி சொன்னாள்
அம்மா எனக்கு டீ போட்டுக்கொண்டுவந்து தந்தாள் நான் அதை வாங்கி மெதுவாக குடித்தபடி மனைவி வீட்டை தூய்மை செய்வதை பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு பாலிதீன் உறை வெளியிலிருந்து வந்த காற்றில் அலைக்கழிந்து கூடத்தில் அங்குமிங்கும் ஒடி ஒருமூலைக்குச் சென்று பதுங்கிக்கொண்டது என் மனைவி ஓடி ஒளிந்த கோழிக்குஞ்சை தூக்குவது போல் அதை துரத்திச்சென்று கையிலெடுத்து சுருட்டி இறுக்கி சிறிதாக்கி அவள் கையிலிருந்த கூடைக்குள் போட்டாள்.
சில கணங்களில் அந்த வீடு நெடுங்காலமாக நாங்கள் அங்கே குடியிருப்பது போல மாறிவிட்ட ஆச்சரியத்தை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லா இடங்களும் எனக்கு நன்கு தெரிந்திருந்தன. நாங்கள் ஏற்கனவே குடியிருந்த அதே வீடு இங்கே வேறு ஒரு இடத்தில் இந்த இடத்தின் அமைப்புக்கேற்ப கொஞ்சம் தன்னை மாற்றிக்கொண்டு நிகழ்ந்திருந்தது. அம்மா என்னிடம் “டேய் இந்த ரூம நீ வெச்சுக்கோ” என்றாள். “எந்த ரூம்?” என்றேன் . “இங்க வா காட்றேன்” என்றாள். நான் எழுந்து அந்த அறையை நோக்கிச் சென்றேன்.
வழக்கமாக இத்தகைய வீடுகளில் கதவுகள் மென்மையான பிளைவுட்களால் போட்டிருப்பார்கள். இங்கு நன்கு தடித்த மரக்கதவு. ஏனென்றால் இந்த வீடு எண்பதாண்டுகளுக்கு மேல் பழைமை கொண்டது. என் மனைவி கட்டிடப் பொறியாளராகிய அவள் அப்பாவைக் கூட்டிவந்து இதன் சுவர்களையும் தரையையும் பரிசோதித்தபின் இன்னும் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு இது உறுதியாக இருக்குமென்று தெரிந்து இதை வாங்கினாள்.
இவ்வளவு பெரிய வீடு எங்கள் மூன்று பேருக்கும் தேவையில்லாதது. ஆனால் கொல்லையிலும் முற்றத்திலும் மரங்கள் கொண்ட பெரிய காம்பவுண்டுக்குள் வாழவேண்டுமென்று என் மனைவிக்கு ஒரு கனவிருந்தது. எங்கள் கிராமத்து நிலம் விற்கப்பட்டபோது அந்த பணத்தை உடனடியாக சரியாக முதலீடு செய்யவேண்டுமென்ற அவசரமும் இருந்தது.
இந்த நிலத்தில் ஏதோ சிறிய வில்லங்கம் உண்டு. இது நூறாண்டுகளுக்கு முன்பு ரயில்வேக்கு சொந்தமான நிலமாக இருந்திருக்கிறது. அதன்பிறகு ஒரு ரயில்வே குத்தகைதாரர் இதை பட்டா போட்டுக்கொண்டுவிட்டார். வில்லங்கம் பார்த்த எனது மாமா “தொண்ணூத்தி ஆறு வருஷமா பட்டா லேண்டாதான் இருக்கு. வக்கீல்ட்ட கேட்டேன் இங்க எல்லா லேண்டுமே ஒரு அம்பது வருசத்துக்கு முன்னாடி கெடச்ச பட்டாதான் வெச்சிருக்கோம், அதனால் ஒண்ணும் பிரச்னை இல்லன்னு சொன்னார்” என்றார். எல்லா வகையிலும் மிக மலிவாக கிடைத்தது அந்த உற்சாகம் என் மனைவியிடமும் அம்மாவிடமும் இருந்தது.
என் அறைக்குள் ஒரு மேசையும் கட்டிலும் மட்டுமே போடப்பட்டிருந்தன. கட்டில் நாங்கள் முன்னால் தங்கியிருந்த வீட்டில் போடப்பட்டிருந்த அதே ஒற்றைநாடா கட்டில். மேசையும் சிறியதுதான். மடிப்பு நாற்காலி . அந்த அறை மிகப்பெரியதாக இருந்தது .ஆகவே மிகப்பெரும்பகுதி ஒழிந்து கிடப்பது போல் தோன்றியது. அம்மா “இங்கே சட்டைய மாட்டிக்கோ. பின்னால ஒரு நல்ல வார்ட்ரோப் வாங்கி இங்க வெப்போம்” என்றாள். நான் தலையசைத்தேன். வெளியே என் மனைவி “இந்த கேஸ் சிலிண்டரைப் பிடிங்க” என்று சொன்னதை கேட்டேன் அம்மா “இதோ வரேண்டி” என்று வெளியே சென்றாள்.
நான் திடீரென்று அந்த இடத்தை மிகவும் அணுக்கமாக உணர்ந்தேன். கைகளை விரித்து அந்த வெளியை அனுபவித்தேன். சிறுபையனைப்போல ஒரு சுவரைத்தொட்டு இன்னொரு சுவரை தொட ஓடவேண்டுமென்று தோன்றியது. ஏற்கனவே நாங்கள் இருந்த வீட்டில் எனக்கு தனி அறை இருக்கவில்லை. எந்த காலத்திலும் நான் மட்டுமே இருக்கும் ஒர் அறை எனக்கு அமைந்ததே இல்லை. நான் மட்டுமே இருக்கும் அறை எனக்கு உரியது .நான் மட்டுமே இருப்பது. இதற்குள் எவரையும் விடக்கூடாது .இதற்குள் என்னுடைய பொருட்களை மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் இந்த வீட்டுக்கு பொதுவான எதுவும் இதற்குள் வரக்கூடாது.
“ஆம் இது என்னுடையது!” அப்படிச் சொல்லச் சொல்ல அந்த அறை எனக்கு மேலும் பிடித்தமானதாக ஆயிற்று. எவ்வளவு இனிமையானது, தனியாக ஒரு அறை என்பது! இந்த ஜன்னல்களை திறந்து வெளியே பார்க்கலாம். மரங்கள் சூழ்ந்த தோட்டம். கொல்லைப்பக்கம் முழுக்க வேம்பும் நெல்லியும் மாமரமும் தென்னையும் செறிந்திருந்தன. பக்கவாட்டு அறை வழியாக பார்த்தால் அருகே ஒரு காலிமனை. அதில் கட்டி முக்கால் பங்கு விடப்பட்டிருந்த ஓர் அடித்தளம். தொலைவில் நீலவானம்.
வெளியே காடும் வானமும் நிறைந்திருக்கும். அங்கே எவராலும் வழி கண்டுபிடிக்க முடியாது. எப்போதும் தொலைந்துபோவதற்கான வாய்ப்பு உண்டு. இங்கு இந்த அறை எனக்கு மட்டுமே உரியது. என்னால் எல்லாவகையிலும் ஆளப்படுவது. பாதுகாப்பாக பொட்டலம் கட்டி வைக்கப்பட்ட பொருள் போல என்னை உணர்ந்தேன். அந்த எண்ணமே எனக்கு புன்னகையை உருவாக்கியது நான் எழுந்து சென்று ஓசை கேட்காமல் அந்தக்கதவை மூடினேன்
தாழைப்போட்டுவிட்டு திரும்பியபோது ஒர் அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டது. என்ன என்று அதை அடையாளம் காணமுடியவில்லை ஆனால் மனம் படபடத்தது உடனடியாக கதவைத் திறந்துவிடவேண்டுமென்று தோன்றியது ஆனாலும் நான் அப்படியே நின்றுவிட்டேன். பின்னர் மெதுவாக நடந்து சென்று அந்த நாற்காலியில் அமர்ந்தேன் ஏன் இந்த படபடப்பு என்று திரும்ப திரும்ப என் எண்ணத்தை செலுத்தினேன் .அந்த அறைக்குள் முழுமையான தனிமையை என்னால் உணர முடிந்தது. அந்த தனிமை எனக்கு உகந்ததாகவும் இருந்தது. அறைச்சுவர்கள் அளித்த மறைவும் பாதுகாப்புணர்வும் வேண்டியிருந்தது .ஆனாலும் அந்த படபடப்பு இருந்துகொண்டே இருந்தது
பின்னர் மெல்ல தெளிந்து அந்த அறை எனக்கு ஏன் அந்த படபடப்பை அளிக்கிறது என்பதை சோதித்துப் பார்க்க எண்ணினேன். எழுந்து அறையின் சுவர்களையும் தட்டிபார்த்தேன் .அறை நடுவே நின்றேன் .எந்த வேறுபாடும் தெரியவில்லை. பின்னர் சென்று நாற்காலியில் அமர்ந்தேன் .வெளியே அம்மா வந்து கதவை தட்டி “ஏண்டா கதவை மூடியிருக்கே?” என்றாள். நான் “இதோ” என்று எழுந்தேன். மடிப்பு நாற்காலி சரிந்து கீழே விழுந்தது.
நான் கதவை திறந்து “சும்மா மூடிப்பார்த்தேன்” என்று சொன்னேன் . “கதவெல்லாம் மூடிக்காதே. ஒடம்பு சரியில்ல, தெரியும்ல?” என்று அம்மா சொன்னாள். “இல்ல” என்றேன் . “ஏன் ஒருமாதிரி இருக்கே?” என்றாள். “ஒண்ணுமில்ல” என்றேன். “மூச்சுத்திணறுதா?” என்றாள். “இல்ல” என்றேன் . “மாத்திர சாப்பிட்டல்ல இல்ல?” என்றாள் . “சாப்ட்டேன்” என்றேன். “சரி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ” என்றபின் அம்மா திரும்பிச்சென்றாள்.
நான் திரும்பி கீழே விழுந்துகிடந்த நாற்காலியைப் பார்த்தேன் .ஒரு நொடிப்பு போல எனக்கு ஒன்று தெரிந்தது, அந்த நாற்காலி விழுந்த ஓசை முற்றிலும் வேறுபட்டிருந்தது. தரையில் ஓர் உலோகப்பொருள் விழும் ஒலி அல்ல அது. என்ன வேறுபாடு என்று எண்ணியபடி அந்த நாற்காலியைச் சுற்றிச் சென்று கட்டிலில் அமர்ந்துகொண்டேன். நாற்காலியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் எழுந்து மேசையிலிருந்த சிறிய எவர்சில்வர் செம்பை எடுத்து அந்த நாற்காலி விழுந்த இடத்தில் போட்டேன். ஓசை மாறுபட்டிருந்தது.
உண்மையா கற்பனையா? அந்த செம்பால் தரையில் பல இடங்களில் மெதுவாக தட்டிப்பார்த்தேன். ஓசை மாறுபட்டிருந்தது உண்மைதான். கண்டிப்பாக அது என்னுடைய கற்பனை அல்ல. என்ன மாறுபாடு என்று தட்ட தட்ட எனக்கு தெளிவாகிக்கொண்டே வந்தது அந்த அறைக்கு அடியில் ஏதோ வெற்றிடம் இருந்தது.[ 2 ]
அன்று பகல் முழுக்க நான் பெரும்பாலும் எதுவும் செய்யாமல் நாற்காலியிலேயே அமர்ந்திருந்தேன் .காலால் மெல்ல தரையை தட்டிக்கொண்டும் விரல்களால் வருடிக்கொண்டும் இருந்தேன். தரைக்கு அடியில் இருப்பது என்னவாக இருக்க முடியும்? ஒரு ரகசிய அறை அல்லது ஒரு சுரங்கப்பாதை .மிக ஆழத்தில் அல்ல. கூடிப்போனால் ஒரு அடி ஆழத்தில். இல்லையேல் இத்தனை ஒலி வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை.
இத்தகைய வீட்டுக்கு அடியில் அப்படி என்னதான் இருக்கக்கூடும்? ஒரு சுரங்க அறையா? நிறைய எலும்புக்கூடுகள அல்லது பொன்நாணயங்கள் நிறைக்கப்பட்ட பெட்டிகள்! இரண்டாம் உலகப்போர் காலத்து புதையல்! என்ன அது? நான் எண்ணி எண்ணி அந்த இடத்தை கற்பனை செய்துகொள்ளும் தருணத்தில் உடல் விதிர்க்க நடுங்கி பின்னடைந்தேன். ஆனால் தவிர்க்க முடியாமல் மீண்டும் அதே கற்பனைச் சுழலுக்கு சென்று சேர்ந்தேன். அங்கு இருப்பதென்ன?
அந்த அறை எனக்கு வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லிவிடலாம் என்று தோன்றியது. ஆனால் அங்கு அடியில் ஓர் இடமிருக்கிறது என்பதை நான் சொன்னால் அம்மாவோ மனைவியோ நம்பப்போவதில்லை அவர்கள் நான் சொல்லும் எதையுமே நம்புவதில்லை. வேறு அறை கேட்டுப்பார்த்தால் என்ன?
நான் எழுந்து சென்று சமையலறைக்குப்போய் அம்மாவிடம் “அம்மா எனக்கு அந்த ரூம் வேண்டாம்” என்றேன். “ஏன் இங்கே இருக்கிறதிலேயே நல்ல ரூம் அதுதான். ஹால்லேர்ந்து நல்லா தள்ளி இருக்கு. நீ தனியா சந்தோஷமா அங்க இருக்கலாம். மத்த எல்லா அறையிலயும் ஜாமான் வெக்க வேண்டியிருக்கு” என்றாள். “இல்லை எனக்கு அந்த ரூம் வேண்டாம்” என்றேன். என்னைப் பார்க்காமல் சப்பாத்திமாவைப் பிசைந்தபடி “எந்த ரூம் குடுத்தாலும் இதுதான் சொல்லப்போறார். ஆரம்பத்திலிருந்தே வீடுபிடிக்கல்லேன்னு சொல்லிட்டிருந்தார்” என்றாள் என் மனைவி
நான் அவளையும் அம்மாவையும் பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டேன் என்னால் அவர்களிடம் எதுவுமே சொல்ல முடியாதென்று தெரிந்தது. மேலும் அந்த அறை வேண்டாம் என்று மாற்றிக்கொண்டாலும் அந்த அறையைப்பற்றி எண்ணுவதை நான் தவிர்க்கப்போவதில்லை. இன்னொரு அறையில் இருந்துகொண்டு அந்த அறையைப்பற்றி எண்ணிக்கொண்டிருப்பேன். அந்த அறைக்கு அடியில் என்ன என்று பார்க்காமல் என்னால் இருக்க முடியுமா? அந்த அறையில் என் மனைவியோ அம்மாவோ வந்துவிட்டார்கள் என்றால் அதற்குள் வருவதோ தரைக்கு அடியில் என்ன இருக்கிறதென்று பார்ப்பதோ நடக்காது. என்னால் திறக்கவே முடியாத அந்த ரகசியத்தைப்பற்றி பற்றி பயந்துகொண்டும் கற்பனை செய்துகொண்டும் இருப்பேன் அதைவிட அந்த அறையிலேயே அதை எவ்வகையிலாவது திறக்க முடியுமென்று எண்ணிக்கொண்டிருப்பது மேல்.
மீண்டும் அறைக்குள் வந்தபோது முதலில் இருந்த பதற்றம் விலகி எனக்கு ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. மிக ரகசியமான ஒன்றை அறிந்துவைத்திருப்பவன் போலவும் மிக நுட்பமான ஒரு செய்தியை உள்ளத்தில் ஓட்டிக்கொண்டிருப்பவன் போலவும் உணர்ந்தேன். இவர்கள் எவருக்கும் ஒன்றும் தெரியாது, இந்த உலகத்தில் எவருக்கும் இது தெரியாது என்று சொல்லிக்கொண்டபோது முதல்முறையாக நான் புன்னகைத்தேன் .எப்போதாவது புன்னகைக்கும்போதுதான் எனது முகம் புன்னகைக்க முடியாதபடி இறுக்கமான தசைகளால் ஆனது எனக்குத் தெரியும் சிமெண்டாலான முகத்தை வைத்துக்கொண்டு புன்னகைக்க முயல்வது போல, முகம் ஆங்காங்கே விரிசல் விடுவது போல தோன்றும்.
எப்போதாவதுதான் நான் கண்ணாடியில் என்னைப்பார்த்துக்கொள்வேன். கண்ணாடியில் பதற்றமும் படபடப்பும் கொண்ட ஒரு மனிதன் என்னைப்பார்ப்பான். அவனை எனக்கு முற்றாகவே தெரியாதென்று தோன்றும். அந்தக்கண்கள் என்னை பயமுறுத்துவன என்பதனால் நான் கண்ணாடி பார்ப்பதையே பெரும்பாலும் தவிர்ப்பேன். கைகளால் தலைமயிரை அழுத்தி சீவி ஒதுக்கிக்கொள்ளுவதோடு சரி .முகச்சவரம் செய்யும்போது கூட கண்களை மூடிக்கொண்டு கையால் தொட்டுத் தொட்டுதான் சவரம் செய்து கொள்வேன்.
மீண்டும் கதவைத் தாழிட்டால் என்ன? வேண்டாம் என்ற அச்சம் எழுந்ததுமே அச்சத்தையும் கிளர்ச்சியையும் நான் அறிந்தேன். மெல்லிய அச்சத்தைப்போல இனிமையான துணை எதுவுமில்லை. கதவை மூடிக்கொண்டால் இந்த அச்சமும் நானும் மட்டும் இங்கிருப்போம். உலகம் வெளியே எதுவும் அறியாமல் இயங்கிக்கொண்டிருக்கும். அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்களோ அதற்கு நேர்மாறான ஒருவனாக நான் உள்ளே இருப்பேன்.
எத்தனை விந்தையானது! இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைத்ததே இல்லை. இனி இந்த ரகசியத்தை நான் எவரிடமும் சொல்லப்போவதில்லை. இது எனக்கு மட்டும் உரியதாகும். ஒருவேளை நான் ஈட்டிக்கொள்வதைவிட மிகப்பெரிய செல்வமாக இது இருக்கலாம் .இந்த தரைக்கு கீழே இருப்பவை இந்த நகரையே விலைக்கு வாங்குமளவுக்கு மிகபெரிய செல்வமாக இருக்கலாம். அல்லது இந்த நகரையே பதற அடிக்கும் பயங்கர ஆயுதங்கள். ஒருவேளை கொன்று புதைக்கப்பட்ட உடல்கள். ஒருவேளை வெளிவந்தால் இந்த நகரத்தின் அனைத்து செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் பலநாட்களுக்கு கதறிக்கொண்டிருக்கும் அளவுக்கு மிகப்பெரிய ஒன்று!
அவர்களை எப்போது வேண்டுமானாலும் என்னால் கதற அடிக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய அதிகாரம்! கட்டிலில் படுத்துக்கொண்டு நான் புன்னகைத்துக் கொண்டிருந்தேன். என் கட்டிலுக்குக் கீழே அந்த இருண்ட ரகசிய அறை இருக்கிறது. இந்த தரையை பெயர்த்தெடுக்க முடியுமா? தரை பழைய வழக்கப்படி தரையோடுகள் வேய்ந்தது. சுட்ட களிமண்ணாலான தரையோடுகள். செராமிக் போல வழவழப்பானவை அல்ல. இந்தக் கட்டிடம் நூறாண்டுகளுக்கும் மேல் பழமையானது. மேலே கூரையைத்தான் புதுப்பித்திருக்கிறார்கள். சுவர்களும் அடித்தளமும் அதேதான்
எழுந்து தரையை காலாலும் கைகளாலும் வருடிப்பார்த்தேன். கல் அளவுக்கே உறுதியாக இருந்தன ஓடுகள். நெடுங்காலமாக கால்பட்டு புழங்கிய வழவழப்பும் மனிதர்கள் நடமாடும் தடத்தில் தேய்வும் இருந்தது. எடை மிக்க சில பொருட்கள் அங்கே வைக்கபப்ட்டிருந்ததன் தடம் ஓரமாக இருந்தது. தரையோடு என்றால் பெயர்த்தெடுப்பது எளிதுதான். இடிக்கவேண்டியதில்லை. மீண்டும் பொருத்தி மறைத்துவிடவும் முடியும்
நான் வெளியே சென்று கொல்லைப்பக்கத்தை பார்த்தேன் .அங்கு லாரியிலிருந்து இறக்கி வைக்கப்பட்ட பொருட்கள் இருந்தன. ஒரு கடப்பாரை ஒன்றும் கூரிய இரும்புப்பட்டை ஒன்றும் கண்ணில் பட்டது. அம்மாவும் மனைவியும் உள்ளே பேசிக்கொண்டிருக்கும் ஒலி .நான் அந்த இரும்புப்பட்டையை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தேன். என் அறைக்குள் அவற்றை எங்கு ஒளிப்பதென்று பார்த்தேன். மேசை இழுப்பைத் திறந்து அதை உள்ளே வைத்தேன். அதன் பிறகுதான் கட்டிலைப்பார்த்தேன். கட்டிலுக்கு அடியில் அந்த கடப்பாரையை நீள்வாக்கில் பொருத்தி வைக்க முடியும்.
மீண்டும் வெளியே சென்றேன். அவ்வளவு ரகசியமாக ஒன்றை செய்வது எனக்கு கை விரல்கள் நடுங்குமளவுக்கு பதற்றத்தையும் உவகையையும் அளித்தது.கடப்பாரையை எடுத்துக்கொண்டு வந்து கட்டிலுக்கு அடியில் பொருத்தி பிளாஸ்டிக் கயிறால் கட்டி நிறுத்தினேன். இப்போது இன்னும் மர்மமும் கிளர்ச்சியும் கொண்டதாக அந்த அறை மாறியது. அந்த அறைக்குள் இப்போது என்னால் எவரும் நான் செய்வேன் என்று ஊகித்துப்பார்க்க முடியாத ஒன்றை செய்யமுடியும்.
நான் செய்வேனா என்பது வேறு. இறுதிவரை செய்ய முடியாமலே போகலாம். தரைக்கு அடியில் எதுவும் இல்லாமலே இருக்கலாம். ஆனால் நான் செய்துவிடக்கூடும் என்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு! அங்கே அதிபயங்கரமாக ஏதோ ஒன்று இருக்ககூடும் என்பது மேலும் பெரிய வாய்ப்பு. முன்பு எப்போதும் அப்படி எண்ணிப்பார்க்கமுடியாத ஒன்றை செய்துவிடக்கூடியவனாக நான் எப்போதும் இருந்ததில்லை.
இளவயதிலிருந்தே உடல் நிலமில்லாமல், அம்மா பேச்சைக்கேட்டு நடந்துகொள்பவனாகவே இருந்திருக்கிறேன். அம்மா சொல்வதற்கு அப்பால் எதையும் நான் யோசித்ததில்லை. பின்னால் அம்மா ஒன்றைச் சொன்னால் அம்மாவுக்குத் தெரியாமல் அதை மறுத்துக்கொள்ளத் தொடங்கினேன் .அது அளிக்கும் மெல்லிய கிளர்ச்சிக்கு அப்பால் இந்த வாழ்க்கையில் நான் எய்தியது எதுவுமில்லை. ஆனால் இப்போது நான் வேறு.
அன்றிரவு வரை நான் காத்திருந்தேன். அம்மா எனக்கு இரவு உணவை அளித்தபின்பு நான் சாப்பிடவேண்டிய மாத்திரைகளை சாப்பாட்டு மேசையில் எடுத்து வைத்தாள். நான் அவற்றை கையில் எடுத்துக்கொண்டேன் . “சாப்ட்டு போடா” என்று அம்மா சொன்னாள். “சாப்பிடறேன்” என்றபின் தண்ணீரையும் கையில் எடுத்துக்கொண்டு என் அறைக்குள் வந்தேன்
அந்த மாத்திரைகளை நான் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டுவிட்டால் பத்தே நிமிடங்களில் என் காலுக்குக்கீழே தரை நெளியத் தொடங்கிவிடும். அது திரவப்பரப்பு போலாகி என்னை மூழ்கடிக்கும். கட்டிலில் படுத்துக்கொண்டால் காற்றில் மிதப்பது போலவும் தலை எடை மிகுந்து கீழே சரிந்துகொண்டே இருப்பது போலவும் உணர்வேன். அதன்பின்னர் காலையில்தான் விழிப்பு வரும்.
அவற்றை காகிதத்தில் பொதிந்து மேசை டிராயருக்குள் போட்டேன். அம்மாவும் மனைவியும் வெளியே பேசிக்கொண்டிருந்த ஓசை கேட்டுக்கொண்டிருந்தது பாத்திரங்களின் ஓசை .பின்னர் அவர்கள் தங்கள் அறைகளுக்குச் சென்று படுப்பதன் ஓசை .விளக்குகள் அணைக்கப்படும் ஒலியை அவ்வளவு துல்லியமாக கேட்டேன் பின்னர் இரவுக்குரிய ஒலி மட்டும் எஞ்சியது
நான் இரவுக்குரிய ஒலிகளைக்கேட்டு நெடுநாளாகிறது. அது ஒரு நிறமில்லாத பிளாஸ்டிக் நூல் போல அறுபடாத நீண்ட ரீங்காரம் என்பதை உணர்ந்தேன். சுழன்று சுழன்று அது சென்று கொண்டே இருந்தது. நெடுநேரத்திற்கு பிறகு நான் எழுந்தபோது என் உடல் புத்துணர்ச்சி கொண்டிருந்தது. அவ்வளவு ஆற்றலை என் கைகளிலும் கால்களிலும் உணர்ந்ததே இல்லை.
இரும்பப்பட்டையை எடுத்து தரையோடின் விளிம்புகளைக் கூர்ந்து பார்த்தபடி அறையைச்சுற்றி வந்தேன். ஓர் இடத்தில் தரையோட்டின் இடைவெளி சற்று தெளிவாக தெரிந்தது .அந்த இடத்தை சுரண்டி அங்கிருந்த சுண்ணாம்புக்காரையைப் பெயர்த்து தூளாக்கி மாறினேன் .ஊதி அதை வெளியே தள்ளினேன் பின்னர் அதன் இடுக்கில் இரும்புப்பட்டையை செலுத்தி அழுத்தி மெல்ல பெயர்த்தேன்.
நான் நினைத்ததை விட எளிதாக தரையோடு மேலேவந்தது. அடியில் சுண்ணாம்புக்காரை மிகப்பழையது. தரையோட்டின் தடம் அச்சாகப் பதிந்திருந்தது. கடப்பாரையை எடுத்து ஒவ்வொரு தரையோடாக பெயர்த்து அகற்றினேன், பத்து தரையோடுகளை அகறியபோது சதுரவடிவான ஓர் இடைவெளி தெரிந்தது அதற்கு கீழே சுண்ணாம்புக்காரைப் பரப்பு தட்டியபோது தெளிவாக முழவுபோல கார்வை கொண்டிருந்தது. கடப்பாரையால் மெல்ல சுண்ணாம்ப்புக் காரையை சுரண்டி எடுக்கத்தொடங்கினேன். அந்த தூசு என்னை தும்மலிட வைத்தது ஓசை கேட்கிறதா என்று நிறுத்தி கவனித்தேன். அம்மாவும் மனைவியும் விடும் ஆழ்ந்த மூச்சொலிதான் கேட்டது மீண்டும் கடப்பாரையால் சுரண்டினேன்.
அறை முழுக்க புழுதி பறப்பதை பார்த்ததும் மெல்ல கதவைத் திறந்து வெளியே சென்று அங்கிருந்து பிளாஸ்டிக் பக்கெட்டில் நீர்மொண்டு எடுத்து வந்தேன். நீரை அந்தச் சுதைமேல் ஊற்றி நன்றாக ஊற வைத்து கடப்பாரையால் நெம்பியபோது சேறாக வெளிவந்தது. அந்தச் சேறை பக்கெட்டிலேயே அள்ளி கொண்டு சென்றேன் இருட்டில் பக்கத்து காலி மனைக்குள் அதை கொட்டினேன். பத்துப் பதினைந்து முறை அவ்வாறு காரைச்சேறு கொண்டு கொட்டுமளவுக்கு கனமாகவே தரையின் தளம் போடப்பட்டிருந்தது.
தரைத்தளத்தின் காரை விலகியபோது அடியில் மீண்டும் தரையோடு தெரிவது போல் இருந்தது கையால் தொட்டுப்பார்த்தேன். செங்கல் அடுக்கப்பட்டிருந்தது. நீரூற்றி இடைவெளியைக் கடப்பாரையால் ஆழநெம்பி எடுத்தபோது செங்கல்கள் பெயர்ந்து வந்தன. மிகப்பழைய செங்கற்கள். அக்காலத்தில் செங்கற்களை இரண்டு இஞ்ச் கனத்தில் சிறிய பிஸ்கட்டுகள்போலச் செய்திருந்தார்கள். ஆனால் அவை உறுதியாக, கல்போலவே இருந்தன. அன்றெல்லாம் செங்கல்லை மிதமான வெப்பத்தில் பதினைந்துநாட்கள் வைத்துச் சுட்டு எடுப்பார்கள்.
செங்கலை அகற்றியபின் அதற்கும் கீழே கற்பாளம் ஒன்றிருப்பதை பார்த்தேன். அதை கடப்பாரையால் மெல்லத் தட்டியபோது கீழிருக்கும் வெற்றிடத்தின் முழக்கம் கேட்டது. அந்தக்கற்பாளம் மிகப்பெரியதென்றால் அதை அகற்ற முடியாது .மொத்த அறையையும் இவ்வாறு உடைத்து பெயர்க்க வேண்டியிருக்கும் .ஆனால் அது இனி எளிதுதான். அம்மாவைக் கூப்பிட்டுக் காட்டினால் இங்கே அடியில் ஒரு அறை இருப்பதை அவள் உறுதியாக நம்புவாள்.
அந்தக்கற்பாளத்தை தட்டிக்கொண்டே இருந்தேன். அது அதிர்ந்து தூசி விலகியபோது அதன் பொருத்து ஒன்று தெரிந்தது அங்கே கடப்பாரையை வைத்து அழுத்தி நெம்பியபோது அந்த கற்பாளம் அடியில் சற்றே சென்று விலகி வழிவிட்டது உள்ளிருந்து மட்கிய சேற்றின் மணம் கொண்ட காற்று பெருகி மேலே வந்தது
நான் மெல்ல குனிந்து அந்த இருட்டுக்குள் பார்த்தேன் .ஆழமான இருட்டு. அங்கிருக்கும் அறையை என்னால் விழிகளால் அளக்க முடியவில்லை. ஆனால் உள்ளே நல்ல காற்றோட்டம் இருப்பது தெரிந்தது. நாட்பட்ட சேற்றின் மணம். சேற்று மணம் எப்படி வர முடியும் ?அப்படியானால் எங்கோ ஈரம் இருக்கிறது. உறுதியாக அங்கே உடல்கள் ஏதுமில்லை. உடல்கள் இருந்தால் கூட அவை எண்பது வருடம் பழையவையாக இருக்கும். அவற்றுக்கு ஊன்மணமோ அழுகல் வாடையோ இருக்க வாய்ப்பில்லை.
நான் தரையோடு தரையாக படுத்து உள்ளே கையை விட்டு ஆட்டினேன். டார்ச் விளக்கு இருக்குமா என்று யோசித்தபடி மிக மெதுவாக வெளியே சென்றேன். அம்மா அறைக்கதவை சற்றே சாய்த்து மூடிவிட்டு தூங்கிக்கொண்டிருந்தாள். கதவை ஓசையின்றி திறந்து அவள் அருகே சென்றேன் .இந்த வீட்டில் கதவுகள் அனைத்திற்குமே பித்தளைக்கீல்கள் என்பதனால் ஓசையின்றி அவற்றை திறக்கவும் மூடவும் முடிந்தது. வழுக்கி அந்தக் கீல் சுழல்வது ஏதோ ஒரு இனிய உணர்வை உள்ளத்திற்கு அளிக்கவும் செய்தது.
அம்மாவின் தலைமாட்டில் டார்ச் விளக்கு இருந்தது அதை எடுத்துக்கொண்டு மீண்டும் கதவை மூடியபின் திரும்பி வந்தேன் முழந்தாளிட்டு அமர்ந்து டார்ச் லைட்டை அடித்து உள்ளே பார்த்தேன். உள்ளே சற்று பெரிய ஒரு பாதை இருந்தது .அது நான் எண்ணியது போல ஒர் அறை அல்ல. மண்ணைக்குடைந்து உருவாக்கப்பட்ட ஒரு குகைவழி. டார்ச்சை நன்றாக அடித்து பார்த்தபோது அதன் சுவர்களில் பழைய பிக்காக்ஸ் தடங்கள் இருப்பதைக் கண்டேன்.
[ மேலும் ]