குஜராத் – தமிழ்நாடு – வளர்ச்சியும் முன்னேற்றமும் – ஓர் ஒப்பீடு.
கலையரசனின் கட்டுரை- பாலா
இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! -பாலா
1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா
1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா
1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா
இந்தியாவில் தமிழகத்தின் இடமும் வளர்ச்சியும் முக்கியமான சமூக மாற்றங்களில் ஒன்று. இந்தியாவின் வேறு எந்த முக்கிய மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஜீவ நதிகளையோ, பெரிய பாசன நிலங்களை தரும் நதிகளையோ நாம் கொண்டிருக்கவில்லை. பருவ மழையை நம்பியே இந்த நிலம் இருந்தது. விடுதலைக்கு பின் இருந்த மாநிலங்களில் கூட தமிழகத்திற்கு குறிப்பிட்டு சொல்லும்படியான வருவாயோ இன்றைய வளர்ச்சிக்கான அடித்தளங்களோ இல்லை. சென்னை மற்றும் பிற சிறு துறைமுகங்கள் தவிர வேறு எதுவும் இல்லாத நிலம் தான்.
இந்த மழையை மட்டும் நாம் நம்பி இருக்க வேண்டிய நிலையை அதிகம் அறிந்தவர்கள் கரிசல்பூமிக்காரர்கள். இதனால் தான் காமராஜரின் காலத்தில் பல பெரும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த அளவுக்கு அடிப்படை கட்டமைபுகளில் அதன் பிறகு யாரும் கவனம் செலுத்தவில்லை என்பதே கருணாநிதி காலக்கட்டம் உட்பட இருக்கும் உணமை. அணைகளின் எண்ணிக்கை வேறு மொத்த நிலத்தில் பாசனத்திற்கு உட்படுத்தப்பட்ட சதவீதம் என்பது வேறு என்பதை இங்கேயே சொல்லிவிடுகிறேன்.
தமிழகம் இன்று இந்தியாவின் சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்று கிட்டத்தட்ட உறுதியாக சொல்லலாம். பெரிய மாநிலங்களின் வரிசையில் தனி நபர் ஆண்டுவருமானம், மொத்த உற்பத்தி அளவிலும் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் சிறந்த மாநிலம் என்பதை மிக மிக அடிப்படையான புள்ளிவிவரங்களில் காணலாம். பொதுக் கல்வி, சுகாதாரம், சராசரி ஆயுட்காலம், ஆண் பெண் பிறப்பு விகிதாச்சாரம் இவை தான் கிட்டத்தட்ட ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை குறிக்கும் குறியீடுகள். சாலைகள் இன்றி ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் சரியாக செயல்படாது. போக்குவரத்து வசதி இன்றி ஒருவர் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட முடியாது. எனவே இவை அனைத்தும் அதற்கு உண்டான பல தரவுகளை உள்ளடக்கியவை. ஆனால் இது இப்படியே தொடரும் என்று சொல்வதற்கில்லை. சென்ற ஆண்டிலேயே மொத்த உற்பத்தியில் தமிழகம் சறுக்கியிருக்கிறது.
தமிழகத்தின் இன்றைய நிலைக்கு முக்கியமான காரணங்கள் என்று நாம் காணும்போத, அவை காமராஜர் காலத்து ஆட்சி என சொல்லிக் கொண்டாலும் உண்மையில் அது திராவிட கட்சிகளின் ஆட்சிக் காலமே. காமராஜரின் காலத்தில் பல முக்கிய பணிகள் நடைபெற்றன. அதைப் பற்றி பலவகையில் எழுதப்பட்டுவிட்டது. ஆட்சிக் காலத்தைப் பற்றி பேசுவதற்கு முன்னர் சொல்ல வேண்டிய முக்கிய விசயம் இங்கிருந்த அரசு மேலாண்மை.
அதிகாரம் என்ற வார்த்தையை நான் குறிப்பாக தவிர்க்கிறேன் காரணம் அது சிலரின் கையில் மட்டுமே ஆண்டு ஆனால் மேலாணமை என்பது பல அடுக்குகளில் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் அரசு மேலாணமை என்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பணிகளை கடைசி நிலை வரை கொண்டு சேர்ப்பதில் சிறப்பாக இருந்திருக்கிறது. இதில் இருக்கும் இன்றைய லஞ்சம் என்பது கடந்த பதினைந்து ஆண்டுகளில் எல்லா அடுக்குகளிலும் நுழைந்த ஒன்று. இந்த மேலாண்மை இன்று வரை யார் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிற செயல்கள் சரிவர நடப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. எடுத்துக்காட்டாக 1984ல் அன்றைய முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் உடல் நிலை குன்றியிருந்தபோதும் இன்றைய காலத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும் எந்த சிக்கலும் இன்றி சென்றதற்கு இந்த நிர்வாக முறையே காரணம். இந்த நிர்வாக முறை திராவிட ஆட்சிக்காலத்தில் எப்படி வலுப்பெற்றது என்பதையும் பார்க்கலாம்.
அண்ணாத்துரை ஆட்சி பொறுப்பில் அமர்ந்த போது இருந்த ஆட்சி என்பது முக்கிய மந்திரிகள அவர்களை தொடர்ந்து இருந்த ஆட்சியாளர்கள் மட்டுமே என கட்டமைக்கப்பட்டது. இந்த ஆட்சி என்பது பணத்தை வீணாக செலவு செய்யக்கூடாது, இருக்கும் பணத்தை கொண்டு ஆட்சியை சிக்கனமாக நடத்தி கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்ற தொன்றுதொட்டு வந்த ஒரு ஆட்சிமுறை. இதில் அண்ணாத்துரையின் ஒரு ரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி என்ற சிந்தனை அனவருக்கும் பெரிய வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என முடிவாகி சென்னை மற்றும் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் இதற்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்ய மறுத்தது. இது தவறான கொள்கை எனவும் கூறியது. தமிழகம் தொடங்கிய பல திட்டங்களை இப்படி மத்திய அரசு ஆரம்பத்தில் பிற்போக்குத்தனம் என்று கூறியுள்ளது. இந்த அரிசி திட்டமே அன்றைய ஆட்சியாளர்களுக்கு புதிதாக இருந்தது. அதுவரை இத்தனை மக்களை நேரடியாக சென்றடையும் திட்டம் என்று தமிழகத்தில் எதுவும் இருக்கவில்லை.
பள்ளியில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட மதிய உணவு திட்டம் என்பது தமிழகம் முழுவதும் நடைபெறவில்லை மேலும் அதில் அரசாங்கம் நேரடியாக பணிசெய்யவில்லை என்பதே உண்மை. அந்தந்த ஊரில் இருக்கும் மக்களும் பெரிய மனிதர்களும் நன்கொடை கொண்டுதான் பெரும்பாலும் நடைபெற்றது. அதில் பல சிக்கல்கள் இருந்தன.
ஒரு சமூகத்தின் மாற்றம் மேலிருந்து கீழ் வரும்போது அதற்கான காலம் அதிகமாக தேவைப்படுகிறது. 1960 களில் இருந்த இந்தியாவின் நிலைமை மிக சுவாரசியமானது. கிட்டத்தட்ட நேருவுக்கு பின் கனவு இந்தியாவின் மீது இருந்த நம்பிக்கையை இழந்திருந்த மக்கள் வாழ்ந்த காலம். வேலைவாய்ப்பின்மை, பஞ்சம் போன்றவை வந்த நேரம். காங்கிரஸ் அல்லாத ஆட்சியை தந்த முதல் வரிசை மாநிலங்களில் முக்கிய மாநிலம் தமிழகம்.
வங்காளம் தான் இந்தியாவின் வளர்ச்சியில் பெரிதும் சாதிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. நிலத்தை பிரித்து கொடுத்ததில் ‘ஆபரேசன் வர்கா’ என்று இந்தியாவில் மிக சிறப்பாக செய்த மாநிலம் வங்காளம். இருப்பினும் அந்த எதிர்ப்பார்த்த அளவு அந்த மாநிலம் வளரவில்லை. சொல்லப்போனால் இன்று மிகவும் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்று.
கிராமங்களில் ‘கர்ணம்’ என்ற முறையைப் பற்றி தி.மு.க ஆட்சியில் ஒழித்ததைப் பற்றி எழுதப்பட்டுவிட்டன. அதை தனியாக நிறுத்தி பார்த்தால் பெரும் சாதனையாக தெரியாது. வங்காளத்தில் நடந்ததை எதிரில் நிறுத்தி பார்க்கும்போது அதில் இருக்கும் ஆழம் புரியும்.
இடதுசாரிகள் எதிர் எல்லையில் நிற்பதை உணர்ந்த கருணாநிதி அவர் முதல்வர் ஆன பல கூட்டங்களில் (குறிப்பாக தஞ்சை, புதுக்கோட்டை – திரு.நாராயண் அந்த புத்தகத்தில் குறிப்பிடுகிறார்) இதை குறிப்பிட்டு பேசுகிறார். நிலத்தை சரியாக முறைமை செய்யும் வேலை நடக்காவிடில் இடதுசாரிகள் மேலும் வலுப்பெறுவார்கள் என்று உணர்ந்து தான் இதை முக்கிய முடிவாக தொடக்க காலத்திலே எடுக்கிறார். இதுக்கு மிக மிக உறுதுனையாக இருந்தவர் திரு.திரவியம் ஐ.ஏ.எஸ். தமிழகத்திற்கு பெரும் பணியாற்றிய பல அரசு ஊழியர்களுள் முக்கியமானவராக திரு. நாராயண் குறிப்பிடுகிறார். ஒரே இரவில் சத்துணவு திட்டத்திற்கான அமலாக்க முறையை (இன்று வரை நீடிப்பது) அவரே தலைமை செயலாளராக இருக்கும்போது எழுதியிருக்கிறார்.
கிராமத்தில், கிராம நிர்வாக அதிகாரி தொடங்கி பல அடுக்குகளில் இந்த பணிகள் திறக்கப்பட்டன. மேலும் மாநில அளவில் நடக்கும் ஆள் எடுப்பு என்று அன்றைய காலத்தில் பெரிய சாதனை. இன்று கூட, இது போன்ற வேலைக்கு மாவட்டவாரியாகத்தான் பல மாநிலங்களில் ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதில் நிச்சயம் விருப்பு வெறுப்புக்கான சாத்தியங்கள் அதிகம் இதில் அமைந்த முக்கிய அம்சம், பிற்படுத்தப்பட்டோருக்கு கொடுக்கப்பட்ட பணிகள்.
வங்காளத்தில் அதே மேட்டுக்குடி மக்கள் தான் தொடர்ந்து பணியில் அமர்ந்தனரே தவிர பிறப்டுத்தப்பட்டோருக்கான வாய்ப்புகள திறக்கப்படவே இல்லை. இது தான் தமிழகத்தில் நடந்த முக்கிய மாற்றங்களில் ஒன்று. தமிழ்நாடு தேர்வாணையம் 1960 முதல் 1980 க்குள் நடத்திய பல தேர்வுகளில் தமிழகத்தின் மக்கள் தொகையில் இருந்த சமூக கட்டமைப்புக்கு ஏற்ப புதியவர்கள் சேர்க்கப்பட்டார்கள். எம்.ஜி.ராமச்சந்திரன் பிற்படுத்தப்பட்டோருக்கு கொண்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டில் இது மேலும் வலுப்பெற்றது.
கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தின் பல அடிப்படை விசய்ங்களில் பெரும் மாற்றம் கொண்டுவரப்பட்டது. உலகில் எந்த நாடும், வரலாறு முதல் இன்று வரை தங்களின் நிலம் சம்பந்தப்பட்ட மேலாண்மையை மாற்றாமல் முன்னேற்றம் கண்டது கிடையாது. சோழர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்து, அக்பர் காலம் வரை, ஆங்கிலேயரின் ஆட்சி உட்பட இதுதான் நடந்தது. நிலம், அதன் ஆவண்ங்கள், அதற்கான மேலாண்மை மேலும் அதற்கான சரியான வரி. இவற்றை தெளிவாகவும் சரியாகவும் செய்த எந்த நாடும் மோசமான நிலைக்கு சென்றதில்லை.
ஐரோப்பாவின் வளர்ச்சிக்கும் அமெரிக்காவின் வளர்ச்சிக்கும் இது முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சி வரை இருந்த சட்டம் என்பது ‘மெட்ராஸ் பரம்பரை கிராம நிர்வாகிகள் சட்டம் 1895’. இதன்படி ‘கர்ணம்’ என்பவர் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரே குடும்பத்தில் இருந்து வம்சாவளியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது பொதுவாக பிராமண் நிலஉரிமையாளர்களிடமோ அல்லது அதற்கு நிகரான சாதிக்குள் தான் இருந்தது.
1973ம் வருடம் அமைக்கப்பட்ட ‘அதிகார சீரமைப்பு ஆணையம்’ இந்த வம்சாவளி சட்டத்தை ரத்து செய்யவும் ஒரு நிரந்திர கிராம அதிகார அமைப்பை உருவாக்கவும் பரிந்துரை செய்தது. . தமிழகம் கடன்பட்டிருக்கும் பெயர் தெரியாத(அவசியமும் இல்லை) பல ஆட்சியாளர்களுள் ஒருவர் திரு.கே.திரவியம். சமூக நீதியின் மேல் பெரிய பற்று கொண்டவர். அவர் வருவாய்துறை செயலாளராக இருக்கும்போது இந்த பரிந்துரை நிறைவேற்றப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் ஒரு கிராம நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். கடைசி கிராமம் வரை இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறவில்லை. 1975ம் வருடத்திற்குள் ஒவ்வொரு கிராமத்திற்கு ஒரு அரசாங்க ஊழியர் என்பது ஒரு பெரிய நிர்வாக அமைப்பு. அரசு மேலாண்மை மீது இவ்வளவு முதலீட்டை வேறு எந்த மாநிலமும் அன்று செய்யவில்லை. பொதுவாகவே இந்தியாவில் மக்கள்தொகைக்கு நிகரான அரசு ஊழியர்களின் அளவு என்பது வளர்ந்த நாடுகளுடன் ஒப்பீடும்பொழுது மிகக் குறைவு.
இன்று வரை இலவச திட்டங்கள், இயற்கை சீற்றத்திற்கான சீரமைப்பு பணிகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு இந்த அமைப்பும் பொதுவிநியோக கடைகளுமே காரணம். இந்த கிராம நிர்வாக ஆட்சி அமைப்பு என்பது சமூக நீதிக்கு உட்பட்டு அதன் இட ஒதுக்கீட்டு அளவு கொண்டு உருவாக்கப்பட்டது. பிறப்டுத்தப்பட்ட சாதியில் இருந்த பலர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இது ஒரு பெரும் வேலைவாய்ப்பாகவும் அமைந்தது. கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கி 1981ல் எம்.ஜி.ஆரின் ஆட்சியில் முடிந்தது. ஆனால் எந்த தடையும் இல்லாமல் நடந்தது.
தி.மு.க வின் இன்னொரு முக்கிய அம்சம் மாவட்ட செயலாளர்களின் முக்கியத்துவம். அரசாங்கம் தொடங்கும் எந்த திட்டத்தையும் மக்களிடம் சென்று சேர்க்க அதிகாரப்பூர்வமாக மாவட்ட ஆட்சியரும், கொள்கை ரீதியில் கட்சியின் மாவட்ட செய்லாளரும் பணியாற்றினர். ஒரு லட்சியவாத கட்சியாக இருந்த தி.மு.க வில் அன்று அந்த ஊழலற்ற லட்சியவாத மாவட்ட செயலாளர்கள் இருந்திருக்க வேண்டும். இது வங்காளத்திலும் நடைபெற்றது ஆனால் அதற்கும் இதற்கும் முக்கிய வேறுபாடு இருந்தது.
அந்த வேறுபாடு என்பது மாவட்ட ஆட்சியரின் அதிகாரம் என்பது எவ்வகையிலும் குறைக்கப்படவில்லை. மாவட்ட செயாளர்கள் முன்பைவிட கோரிக்கைகள் மனுக்கள் மற்றும் மக்கள் கருத்தை முன் எடுத்து வந்தாலும் எந்த வகையிலும் மாவட்ட ஆட்சியருக்கான ஒரு மாற்று அமைப்பாக திகலவில்லை. ஆனால் வங்காளத்தில் அப்படி இல்லை. மாவட்டவாரியாக ஒரு மாற்று அமைப்பாக திகழ ஆரம்பிப்பது என்பது முடிவுகளை எடுப்பதில் பெரும் தடையாக இருந்தது. மேலும் வங்காளத்தில் ஒரு வலுவான எதிர்கட்சியும் இல்லை. அப்படி இல்லாதபோது இந்த அமைப்புகள் மேலும் வலுப்பெற்று முடிவு எடுக்கும் செயல்பாட்டை முற்றிலும் மறந்துபோனது. தமிழகத்தில் முடிவுகள் எப்போதும் பொதுவாக விரைவாகவே எடுக்கப்பட்டுள்ளன. மேலும் செயலின்மையை இங்கு ஒரு குற்றமாக சொல்லவே முடியாது. தவறான செயல்களால் வரும் பாதிப்பைவிட செயலின்மையால் வரும் நஷ்டம் மிக அதிகம்.
வங்காளத்திலோ வேறு எந்த மாநிலத்திலோ அப்போது இல்லாத அளவு தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பல நிலைகளில் அரசாங்க பணிகள் திறக்கப்பட்டன. இந்த பணிகள் மாவட்டவாரியாக இல்லாமல் ஒற்றை தேர்வு முறையில் நடைபெறும்போது அதில் தகுதியான ஆட்களுக்கான வாய்ப்பு கிடைத்தது. முதல் தலைமுறை ஊழியர்கள் தமிழகத்தில் 1970களிலேயே சேரத்தொடங்கினர். மேலும் இதில் சமூக நீதியும் இருந்தமையால் பலதரப்பட்ட மக்களும் பங்குகொண்டனர்.
எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவருக்கு கொள்கைகள் என்று தெளிவாக சொல்லும்படி ஓர் நேர்கோட்டில் நின்ற திட்டங்கள் இல்லை. தன்னை ஒரு மன்னனாகவும், நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய விளையும் ஒரு வீரனாகவும் தான் தன்னை நினைத்திருந்ததாக தெரிகிறது. அந்த மன நிலையில் இருந்து பார்க்கும்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கைகளிலோ கருணாநிதியின் திட்டங்கள் மேலோ எந்த காழ்ப்பும் இல்லை. எனவே தி.மு.க வின் திட்டங்கள் தொடர்ந்தன. தமிழகத்தில் எடுக்கப்பட்ட அரசு உதவி திட்டங்களின் இன்னொரு முக்கிய அம்சம் அனைவருக்கும் சென்று சேர்த்தல் என்ற முறை (universal distribution). ஐ.நா, உலக வங்கி போன்றவை தேர்ந்தெடுத்து கொடுங்கள்(targeted distribution) என்று கூறினாலும் அனைவருக்கும் கொடுப்பதில் இருக்கும் நஷ்டத்தைவிட சரியானவர்களை விட்டுவிடுவதால் வரும் நஷ்டம் என்று இப்போது அனவருக்கும் புரிகிறது.
எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் நடந்த முக்கிய அரசியல் திருப்பங்கள் என்பது, கட்சியின் கொள்கைக்கு அன்றி தனி நபர் வழிபாட்டுடன் செயலாளர்கள் உருவானது. அவரின் திட்டத்தை நிறைவேற்றினால் போதும். அவர் முகத்தை கொண்டு யாரையும் எதையும் நிறுத்தி வெற்றிபெறலாம் என்ற நிலையை கொண்டுவந்தார். பல ரசிகமணிகளை சிற்றரசர்களாக்கி மகிழ்ந்தார். அவர்கள் இன்று தமிழகத்தின் முக்கிய கல்வி தந்தைகளாக இருக்கின்றனர். இதை ஜெயலலித்தாவும் தொடர்ந்தார்.
அதிமேதாவி அரசாள்வதைவிட நல்ல உள்ளம் படைத்தவர்கள் அங்கிருப்பதே மேல் என்று பொதுவாக நம்பும் வழக்கம் உண்டு. அது நல்லதா இல்லையா என்று சரியாக சொல்ல தரவுகள் இல்லை. நல்ல மனம் மட்டும் நிச்சயம் போதாது. முதல்வராக ஒருவர் எடுக்கும் எந்த முடிவும் நாளை சமூகத்தை எப்படி பாதிக்கும் என்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட திறன் வேண்டும். திரு.இராமச்சந்திரனுக்கு அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மேல் எல்லாம் எப்போதும் நம்பிக்கை இல்லை. தன்னை உண்மையாக ஒரு ரட்சகனாகத்தான் அவர் கருதியிருக்க வேண்டும்.
கூட்டங்களில் அவருடைய சினிமாப் பாட்டு போடும் வழக்கத்தை தொடங்கிவைத்ததே ஒரு மாவட்ட ஆட்சியர்தான். சில சமயங்களில் ஐந்து முதல் எட்டு மணி நேரம் வரை தாமதமாக அவர் வருவார். அது வரை அனைவரையும் மகிழ்ச்சியாக வைக்க இந்த முறை கையாளப்பட்டது. இன்று இந்தியா முழுவதும் இதுவும் ஒரு பழக்கமாகிவிட்டது.
சாதி அரசியலுக்கு யார் வித்திட்டது என்ற விவாதம் தி.மு.கவின் ஆட்சிக்கு முன்னரே துவங்கினால்தான் சரியானதாக இருக்கும். மேலும் இது உலகம் முழுக்க வெவ்வேறு வகையில் மக்களாட்சியில் நடைபெறுவதுதான். கறுப்பின் மக்கள் நிறைந்த ஒரு அமெரிக்க பகுதியில் வெள்ளையர்களை இரு கட்சிகளும் நிறுத்துவது கிடையாது. எனவே அந்த பகுதிக்குள் இந்த கட்டுரையில் செல்வது சரியானதாக இருக்காது.
திரு.பாலா அவர்களின் கட்டுரை அறிமுகத்திற்கு (அவரின் பிற கருத்துகளுடன் நான் முரண்பட்டாலும்) நண்பர்கள் அளித்த எதிர்வினைகள் சிறு பிள்ளைத்தனமாக இருந்தது. ஏன் இதை மேடையில் சொல்லவில்லை? இது கூடவா தெரியாம இருக்கும் போன்ற பின்னூட்டங்கள் சப்பையாக இருந்தன. இன்று இருப்போர் யார் இதை படிக்கிறார்கள். அதற்கும் அரசியலுக்கு எந்த தொடர்பும் இல்லை என்ற நிலையே இன்று உள்ளது. நியாயமாக அவர்கள் மறுதலிக்க வேண்டியது என்பது,
- அப்படி முன்னேறிய தமிழகம் ஏன் இன்று இலவசங்களுக்கும் வாக்குக்கு பணம் என்ற தேர்தல் விளையாட்டையும் இந்தியா முழுமைக்கும் பரப்பிய “நற்பெயரை” பெற்றது என்பதையே. இலவசங்கள் நல்லதே என்று தொடங்குவதற்கு முன், இலவசங்கள் எந்த அளவுக்கு நல்லது என்பதை பல பொருளாதார கட்டுரைகள் ஆராய்ந்து அதில் இன்று தமிழகத்தில் தரப்படும் பெரும்பான்மையானவை தேவையற்றது என்பதையும் அதற்கான முதலீடு சாராய வியாபாரத்தில் இருந்துதான் வருகிறது என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
- திரு. நாராயணும் பலரும் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகுதான் இது போன்ற புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதுகின்றனர். இதை ஏன் என சிந்திக்க வேண்டும். சமூக நீதியின் மேல் நம்பிக்கை கொண்ட இயக்கத்தின் கொடையா இது?
- திராவிட கட்சியின் ஆட்சி தொடங்கியதில் இருந்து (குறிப்பாக தனி நபர் வழிபாடு என்ற எம்,ஜி.ஆரின் ஆட்சிக்கு பின்) தான் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் காழ்ப்பு முறை பிறந்தது. வங்காளத்திலும் கேரளாவிலும் திரிபுராவிலும் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஒரே மேடையில் இன்றும் கூடுகின்றனர். ஒரு சமூகத்தை வெறுத்தே உருவாக்கப்பட்ட இயக்கமாக மாறிப்போனது. அந்த வெறுப்பை பலமாக் கொண்டு பல தலைமுறைகளின் அடிமனதுவரை கொண்டு செல்லப்பட்டது. இதை அரசியலிலும் வேரூன்றவைத்த ஜெயலலிதா போன்றோரை அந்த இயக்கம் எதைக் கொண்டும் தடுக்க முடியவில்லை. அப்படியானால் அந்த இயக்கத்தின் பலம்தான் என்ன?
- இவை யாவையும்விட முக்கிய சிக்கலாக பார்க்கப்படவேண்டியது தலித்துகளின் நிலை. சமூக நீதியின் பெயரால் தொடங்கப்பட்ட இயக்கம், ஆட்சி எல்லாம் கடைசியில் ஒரு வெறுப்பு அரசியலாக மாறி இன்று அந்த சமூக நீதி தேவைப்படும் தலித்துகள் மீதே ஏவப்படுகிறது. இவ்வளவு முன்னேற்றம் இருந்தும் ஏன் அது தலித்துகளிடம் முழுமையாக சென்று சேரவில்லை? இது ஆட்சியில் இருந்த சிக்கலா இல்லை சித்தாந்தந்த்திலே இருந்த சிக்கலா என்பதை கூர்ந்து ஆராய வேண்டும். பரியேறும் பெருமாள் படத்தில் வரும் அந்த மூன்று தலைமுறை தான் தமிழகத்தின் ஒரு பிரதிபலிப்போ என்று தோன்றவைக்கிறது. சாதி பித்து கொண்ட அதை கடவுளின் பெயரில் காப்பாற்ற நினைக்கும் ஒரு தலைமுறை, சற்றே சமூக நீதியும் உரையாடல் மீதும் நம்பிக்கை கொண்ட ஒரு தலைமுறை இதை எதுவும் புரிந்து கொள்ளாத சரியான கல்விக்கான வாய்ப்பு இருந்தும் மனதில் எதையும் வாங்கிக்கொள்ளாத சாதி வெறிப்பிடித்திருக்கும் கடைசி தலைமுறை.
- இத்தனை சிக்கல்கள் இன்று இருந்தும் தமிழகம் வளர்ச்சியின் பாதையில்தான் இருக்கிறது என்றால் அதற்கு வெறும் ஆட்சி மட்டுமே காரணமாகவா இருக்க முடியும்?
[கட்டுரையாளர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ]