வெளிச்சப்பாடு- கடிதம்

Nirmalyam.jpg.image.784.410

 

ஆடைகளில்லாத தெய்வம்

 

அன்புள்ள ஜெ
நிர்மால்யம் தொடர்பான உங்கள் கட்டுரையை வாசித்தேன் .

 

அ)நம் ஊரிலும் கேரளாவிலும் நிர்மால்ய தரிசனம் என்பது அதிகாலையில் மூல மூர்த்திக்கு அலங்காரங்கள் களையபட்ட தரிசனம் என்றே கணக்கு . ஆடை இல்லாத தரிசனம் என்று இல்லை . சிவன் கோவிலிலும் நிர்மால்ய தரிசனம் உண்டே .வட மொழியிலும் சமர்பிக்க பட்ட பொருட்களை நீக்குதல் என்று தான் பொருள் .அவ்வாறு நீக்க பட்டவற்றை முதலில் பெற்றுக் கொள்ளும் உரிமை உடைய கண தேவதை தான் நிர்மால்ய தாரி. நிர்மால்ய தாரியை சிலையாகவும் சூக்ஷ்மமாகவும் ஸ்தாபிப்பதுண்டு .வட மொழி வேர்ச்சொல் கணக்கில் ‘ மல ‘ .அதாவது அழுக்குகள் , அதை களைவது நிர்மால்யம் என்று கொள்ளலாம் .நிர்மல் என்றால் அழுக்குகள் அற்றவன் .ஒரு வேளை எம் டி இந்த எண்ணத்தில்  பெயரை வைத்திருப்பாரா என்று தெரியாது.

 

ஆ)அதே போல மற்றொரு விஷயமும் உண்டு .வெளிச்சபாடுகள் பூர்வ பூஜாரிகள் என்னும் கோட்பாடு இப்போது மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கபடுகிறது . நீங்கள் குறிப்பிட்டது போல நாயர் உட்பட பல சமூகத்தினரும் வெளிச்சபாடுகளாக இருந்து வருகின்றனர் .இதில் நம்பூதிரி வெளிச்சபாடுகள் குறித்து அதிகம் வெளியில் பேசப்படுவதில்லை .ராமசந்திரன் நாயர் என்பவரை தவிர்த்து வேட்டைக்கொரு மகனின் வெளிச்சப்பாடுகளாக காலம் காலமாக இருப்பது நம்பூதிரிகள் தான் .வேட்டைக்கொருமகனின் அருளாடியாக இருப்பது தீச்சாமுண்டியின் அருளாடியாக இருப்பதை விட பல மடங்கு கடினமானது .மூன்று மணி நேரத்தில் ஒற்றை ஆளாக இருந்து 12,000 தேங்காய்களை உடைக்க வேண்டும் .( இதெல்லாம் நம்பூதிரி சதி என்றால் வேட்டைக்கொரு மகனின் அருளாடியாக நாயர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள் :) ) .அதே போல சபரிமலை உட்பட பல இடங்களில் சாஸ்தாவிற்கான அருளாடியாக இருந்தது ( இருப்பது ) தமிழ் ஸ்மார்த்த அந்தணர்கள் .

 

இ) உங்கள் கட்டுரையை வாசிக்கும் போது எனக்கு இன்னொரு விஷயமும் தோன்றியது. நாற்பதுகள் தொடங்கி எண்பதுகள் இறுதி வரை சடங்கு , பாரம்பர்யம் போன்றவற்றை தளைகளாக காணும் போக்கு பலமாக இருந்தது .அத்வைதம் போன்ற விஷயங்களை ஏற்றுக்கொள்ள முயன்றவர்களுக்கு கூட கோவில் , அருளாடி போன்றவை ஒவ்வாமையை தந்தது . நவீனத்துவம் மற்றும் அதன் எச்சம் போல .தவிரவும் விவேகானந்தர் , நாராயண குரு போன்றவர்களின் தாக்கமும் உண்டு . இடிந்த கோவில்கள் , நசித்த அரண்மனைகள் , பக்தர்களால் கைவிடப்பட்ட / பக்தர்களை கைவிட்ட தேவதைகள் என்பது எல்லாம் தான் பேச்சு பொருளாக காணக் கிடைக்கிறது .ஆனால் 90 களுக்கு பிறகு கோவில்கள் , கோவிலகங்கள் , அருளாடிகள் , சடங்குகள் என்று அனைத்தையும் பெருமிதத்தோடு பார்க்கும் நிலை உள்ளது .நிர்மால்யத்தில் பகவதியை பார்த்த விதத்திற்கும் வெடி வழிபாட்டில் பகவதியை புரிந்து கொண்ட விதத்திற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உண்டு என்று தோன்றுகிறது .இது வணிக திரைப்படம் , கலை திரைப்படம் என்று வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டது என்றும் தோன்றுகிறது

 

நன்றி
அனீஷ் க்ருஷ்ணன் நாயர்

முந்தைய கட்டுரைரயிலில்- கடிதங்கள் -9
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்