அன்புள்ள ஜெ
2.0 படத்தில் வில்லனுக்கு எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனின் பெயரை வைத்துவிட்டீர்கள் என்று மீண்டும் ஒரு வம்பு சுற்ற ஆரம்பித்துவிட்டது. சர்க்காரில் சுந்தர ராமசாமி பெயர் தற்செயல்தான், உங்கள் பங்களிப்பு இல்லை என்று சொன்னீர்கள். இதற்கும் ஒரு விளக்கம் சொல்லிவிடுங்கள்.
கூடவே சொல்லிவிடுகிறேன். படம் அற்புதமான அனுபவம். சந்தேகமில்லாமல் இதுவரை இந்தியாவில் வந்த படங்களிலேயே பெரிய பிளாக்பஸ்டர் இதுதான். வெறும் கிராஃபிக்ஸ் மூவி என்றே விளம்பரங்களில் காட்டி தியேட்டருக்கு சென்றபின் உணர்ச்சிமிக்க ஒரு படத்தைக் காட்டி அசரவைத்தது அற்புதமான தந்திரம்
கே.செந்தில்குமார்
அன்புள்ள செந்தில்,
அ. படத்தில் பக்ஷிராஜன் என்று பெயர் வைத்தது நான்தான்.
ஆ. பக்ஷிராஜன் என்பது பி.ஏ.கிருஷ்ணைன் பெயர் அல்ல, அவர் அப்பாவின்பெயர். நான்குநேரி பக்ஷிராஜ அய்யங்கார் ஒரு கம்பராமாயண-நாலாயிரத் திவ்யப்பிரபந்த அறிஞர், வழக்கறிஞர். கம்பராமாயணம் மர்ரே ராஜம் பதிப்பின் ஆசிரியர்குழுவில் இருந்தவர். ராஜாஜியின் நண்பர்
இ. பக்ஷிராஜபுரம் என்பது எங்களூரில் இருக்கும் பறக்கையின் சம்ஸ்கிருதப்பெயர். தமிழில் பறவைக்கரசனூர். சுருக்கம் பறக்கை. அங்கே ஜடாயு பெருமாளுக்கு நிகராக வழிபடப்படுகிறார்
ஈ. அந்தப் பெயர் ’வில்லனு’க்கு வைக்கப்படவில்லை. படத்தில் அவர் வில்லன் அல்ல. அவர்தான் படத்தின் உணர்ச்சிகரமான மையம், படத்தின் ஆன்மா என்னும் கருத்து அவர் வழியாகவே சொல்லப்படுகிறது
உ.அது பறவையியல்நிபுணர் சலிம் அலியின் சாயல் கொண்ட கதாபாத்திரம்.சலிம் அலி இன்றிருந்தால், மனிதர்களின் இந்த தொழில்நுட்ப, நுகர்வு வெறியைப் பார்த்தால் சங்கைக் கடித்திருக்கமாட்டாரா என்ற எண்ணத்திலிருந்து உருவானது
ஊ. அந்தக்கதாபாத்திரம் முதலில் கமல்ஹாசனுக்காக உத்தேசிக்கப்பட்டது, அவருக்காகவே எழுதப்பட்டது. ஆகவேதான் மரபுசார்ந்த பலவிஷயங்கள் அவருக்காக சேர்க்கப்பட்டன.
எ. அது ஏன் பக்ஷிராஜன்? நம் மரபில் பறவையின் இடமென்ன என்று அந்தப்பெயரே சுட்டுகிறது. ‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப்புள்ளினங்காள்!” என்ற நம்மாழ்வாரின் வரியே அந்தக் கதாபாத்திரத்தை, பக்ஷிராஜன் என்றபெயரை உருவாக்கியது
ஏ.அவருடைய வரியை அடிக்கோடிட்டுத்தான் படம் முடிகிறது. ஆகவே என் பெருமதிப்பிற்குரிய நான்குனேரியின் அறிஞரையும், பறக்கையின் தெய்வத்தையும், நம்மாழ்வாரையும் கௌரவப்படுத்தியதாகவே நினைத்துக்கொள்கிறேன்.
ஒ.ஏன் ஜடாயு என்ற பொருளில் பக்ஷிராஜன் என்ற பெயர் அளிக்கப்பட்டிருக்கிறது என படம் பார்த்தால், அல்லது அக்ஷய்குமாரின் தோற்றங்களைப்பார்த்தாலே புரியும்.
பி.ஏ.கிருஷ்ணனே கூப்பிட்டு அவரிடம் சிலர் மெயில் அனுப்பி அவர் தந்தைபெயரை பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டியதாகச் சொன்னார். விரிவாகவே விளக்கிவிட்டேன்
ஜெ