சிதைவு -கடிதங்கள்

anitha

 

சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி

அன்புள்ள ஜெயமோகன் சார்,

 

வங்காள எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரியின் “சிதைவில்” மொத்த கதையும் ஒரு உச்சகட்ட சம்பவத்தின் மீது நிற்பது போன்று படிக்கும்போது உணர்ந்தேன். ஆனால் அதின் பாத்திரங்களான சிவாஜி அவன் குடும்பத்தினர் சோர்வாக உணர்ந்த போது….அவர்களுக்கு அப்படிதான் இருக்கும், உச்சகட்டங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து வந்த விழிப்பும் பயமுமாய் ஒரு வருடம் ஒட்டியபின் வந்த சோர்வு…. அது அப்படித்தானே என்ற எண்ணமும் வந்தது.ஆதலால்தான் ஸ்மிதா கிளம்புகிறாள். கதை முழுதும் உடம்புகள், கட்டிடங்கள்,மனங்கள்,நம்பிக்கைகள்,குடும்பங்கள் சிதைகின்றன.

 

“கைகழுவுதல்” என்னும் ஒரு குறியீட்டில் தொடங்கும் கதை. அரசாங்கமும், அதிகாரிகளும் காடுகளை கைகழுகிவிடவேண்டும் என அதன் மக்களிடம் கூறும்போது கதை ஆரம்பிக்கிறது. ஆனால் பல நாட்களாய் புழங்கிய இடத்தை நேசித்த மனிதர்களை  மானிட மனத்தால் முழுதும் அப்படியே கைகழுகி விட்டு சென்றுவிடமுடியாது என்ற முரணில் கதை நடக்கிறது.

 

அந்த வனத்துக்குள் எத்தனையோ கோடைகாலங்கள் வந்து சென்று இருக்கும். சிவாஜி கோடைகாலத்தில் பலி ஆடாக உள்ளே நுழைகிறான், ஒருவேளை அவனுக்கு சிவாஜி என்னும் பெயருக்கு ஏற்ப வீர தீர செயல்கள் புரிந்து சாகசங்கள் செய்து சிலையாகவும் ரோடாகவும் மாறி வரலாற்றில் வாழலாம் என்ற எண்ணம் கூட இருந்திருக்கலாம். ஸ்மிதாகூட அவளால் முடிந்த அளவு சாகசத்தை செய்கிறாள். ஆனால் சிவாஜி இங்கு எதற்கும் எந்த பயனும் இல்லை என்பதை தெரிந்துகொள்கிறான்.செயல் சலிப்பூட்டுகிறது.

 

இலையுதிர்காலம் தொடங்குகிறது. வீர தீர செயல்கள் என்ன தன்னால் அங்கு வாழும் மக்களுக்கு ஒரு குவளை நல்ல குடிதண்ணீர் கூட கொடுக்க முடியாது என உணரும்போது அவனிடம் கேள்விகள் மட்டுமே இருக்கின்றன, பதில் யாரிடம் என்பதும் அவனுக்கு புரியவில்லை. அப்போதுதான் ஸ்மிதாவிற்கு  அவனை கைகழுவிவிடவேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கலாம். வனவாசம் என்பதை புராண காலத்தில் இருந்து அனுபவித்த பெண்ணின் மனது அல்லவா? .அதற்குபிறகு அவனிடம் வேலையை கைகழுகிவிடும்படி ஆரம்பிக்கிறாள்..அவனும் வீராவேசமாக ஒத்துகொள்கிறான். ஆனால் கைகழுவது அவ்வளவு எளிதா என்ன? அதே புராண காலத்தில் இருந்து காப்பது, தோல்வியை ஏற்றுகொள்ளாத அகங்காரம் போன்றவை கொண்ட ஆணின் மனது அல்லவா அது? அவளை கைகழுக ஒருவேளை அவன் எண்ணி இருக்க கூடும்.

 

இதற்கு சம்பந்தமே இல்லாததுபோல் காடு இருக்கிறது, ஆனால் விரிந்து பரவ வழி தேடியபடியே இருக்கிறது. கடைசியில் அனைத்தையும் கைகழுகிவிட்டு சிவாஜி வனவாசம் சென்று விடுகிறான்.

 

நினைக்க நினைக்க காடுபோலவே விரிந்து விரிந்து பரவும் கதை.

 

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்

ramkumar

அன்புள்ள ஜெ

சிதைவு ஒரு நேரடியான அரிய கதை. காட்டின் வஞ்சம் என்று சொல்லலாம். இந்தக்கதையும் என்ன ஏது என்று தெரியாமல் நடுவில் வந்து மாட்டிக்கொண்டவர்களைப்பற்றியது. அவர்கள் அதிகாரவர்க்கத்தின் உறுப்பினர்கள். ஆனால் அந்த அதிகாரத்தின் லாபம் அவர்களுக்கு இல்லை. அந்த அதிகார வர்க்கத்தின் கருத்துக்களும் அவர்களிடம் இல்லை. ஆனால் அவர்கள்தான் பலியாகவேண்டியிருக்கிறது

 

கைகழுவமுடியாத கதைநாயகன் கொல்லப்படுவதுதான் கதை. காடு அவனைச் சூழ்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. காட்டின் அந்த கொலைப்பார்வையை கதை முழுக்கப் பார்க்கமுடிகிறது. நல்ல கதை. மிகச்சிறப்பாக ராம்குமார் மொழியாக்கம் செய்திருக்கிறார்

 

எஸ்.மகேந்திரன்

முந்தைய கட்டுரைஒரு முதல்கடிதம்
அடுத்த கட்டுரைஐராவதம் மகாதேவன் – கடிதம்