அஞ்சலி: ஐராவதம் மகாதேவன்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர் களுக்கு,
வணக்கம் .
திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களின் அஞ்சலி கட்டுரை படித்தேன்.தமிழ் மொழி ஆய்விலும் கல்வெட்டு ஆய்விலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அத்துறையின் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவராக இருந்ததை அறிந்து கொண்டேன். மேலும் நவீன தமிழ் இலக்கியத்தை பொது ஜன பத்திரிகை யில் அறிமுகம் செய்ததைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். ஆனால் இப்பேர்பட்ட அறிஞரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 40 பேர்தான் என்றும் அதிலும் 30 பேர் அவரின் உறவினர்கள் என்றும், இன்று “ஹிந்துவில்” வந்த செய்தியை படித்து அதிர்ச்சி அடைந்தேன். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று வெட்டி கூச்சல் போட மட்டும் தமிகத்தில் கும்பல் இருக்கிறதே தவிர அன்று பாரதி முதல் இன்று இவர் வரை இந்த அவல நிலைமை ஒரு தொடர்கதை தான் போலும்!
அன்புடன்,
அ.சேஷகிரி.
அன்புள்ள சேஷகிரி,
ஐராவதம் மகாதேவன் அவர்களின் இறுதிமரியாதைக்கு மக்கள் வராததற்கு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. திரு ஐராவதம் மகாதேவன் ஒன்றும் பிரபலமான ஆளுமை அல்ல. அவர் ஆய்வாளர். ஆகவே அறிஞர் வட்டாரத்திற்கு மட்டுமே தெரிந்தவர். மக்கள் அவரைத் தேடித்தேடி வாசிப்பதில்லை. ஆகவே நினைவில் வைத்திருப்பதுமில்லை
ஆனால் அவர் மூன்று தளங்களில் செயல்பட்டவர். தொல்லியல், எழுத்தியல், இதழியல். இம்மூன்று தளங்களிலிருந்தும் முக்கியமானவர்கள் சென்றிருக்கலாம். தினமணியிலிருந்து ஏன் ஊழியர்களும் பிறரும் செல்லவில்லை, ஏன் கல்லூரிகளிலிருந்து எவரும் செல்லவில்லை என்பது வியப்பும் வருத்தமும் அளிக்கிறது
ஐராவதம் அவர்கள் பொதுவாக தமிழகத்தில் எந்த கௌரவத்தையும் பெறவில்லை என்றே சொல்லவேண்டும். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் செம்மொழித்தமிழாய்வு நிறுவன விருதும் பெற்றிருக்கிறார். இங்கிருக்கும் திராவிட இயக்கத்தவர்களுக்கு அவரை அவர் சாதியைக்கொண்டு மட்டுமே மதிப்பிட முடியும்- கருத்து அடிப்படையில் அவரே அவர்களுக்கு மிகமிகச் சாதகமான பெருங்கொடைகளைச் செய்தவர் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது
திரு ஐராவதம் அவர்களுக்கு தமிழகம் சார்பில் அளிக்கப்பட்ட விருது கனடாவின் இயல் அமைப்பு சார்பில் அளிக்கப்பட்டது. 2009ல் அவ்விருது அளிக்கப்பட்ட விழாவில் அவரைப் பாராட்டிப்பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவ்வகையிலேனும் ஒரு நன்றி நம்மால் அவருக்கு சொல்லப்பட்டது என்பது நிறைவளிக்கிறது
ஜெ