ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-1

_MG_6870

1. நான்காவது கோணம்

இந்திய வரலாறு என்று நாம் சொல்வது சென்ற இருநூறு ஆண்டுகளாக எழுதி உருவாக்கப்பட்ட ஒன்று. அதற்கு முன்பாக இங்கு இருந்தது புராண வரலாற்று எழுத்துமுறைதான்.  ‘விழுமியங்களை ஒட்டி புனைந்து உருவாக்கப்படும் வரலாற்றுக்கதைகளின் தொகுப்பு’ என்று புராணத்தை சொல்லலாம். நம்பிக்கைகளும் தொன்மங்களும் ஆழ்படிமங்களும் வரலாற்று நிகழ்வுகளுடன் கலந்து அதை உருவாக்குகின்றன .நெடுங்காலம் நாம் புராண வரலாற்றையே நம்முடையதென்று கொண்டிருந்தோம். காலவரையறை,கருத்து வரையறை ,சூழல் வரையறை ஆகிய மூன்றும் புராண வரலாற்றெழுத்தில்  புறவயமானதாக இருப்பதில்லை. ஆகவே நவீன வரலாற்றாசிரியர்கள் அவற்றை வரலாறென்று கொள்வதும் இல்லை. வரலாற்றுக்கான நம்பத்தகாத ஒரு ஆதாரக் களஞ்சியம் என்ற அளவிலேயே அவர்கள் புராணத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.

புராணவரலாற்றை ஒருவகையான வரலாறாகக் கொள்ளலாமா என்பது விவாதத்திற்குரியது. அது நம்முடைய போதாமை என்றோ, பிழை என்றோ கொள்ளவேண்டியதில்லை என்பது என் எண்ணம். நமது வரலாற்று, பண்பாட்டுச் சூழலில் நமது வரலாற்றெழுத்து அவ்வகையில் அமைந்தது என்பது மட்டுமே இன்று நம்மால் கொள்ளத்தக்கது. இன்றைய பின்நவீனத்துவ அறிவுச்சூழலில் நவீன வரலாற்றெழுத்தின் குறைபாடுகள் பெரிதும் விவாதிக்கப்படுகின்றன. உதாரணமாக, நவீன வரலாற்றெழுத்து அதன் தர்க்கபூர்வ ஒருமை, புறவயமான தகவல்கள் ஆகியவற்றின் வழியாக ஒருவகை மறுக்கமுடியாமையை கட்டமைக்கிறது. அறிஞர்களே அதை விவாதிக்கமுடியும் என்ற நிலை உருவாக்கிறது. அந்த அறிவதிகாரம் அதை மையப்படுத்தப்பட்ட பெருங்கதையாடலாக ஆக்குகிறது. அதிகாரம் மிக்கதாக நிலைநிறுத்துகிறது.

அதேசமயம் அது ஒருபோதும் அதுவே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு புறவயமானதும் அல்ல. எப்போதும் அது வென்றவர்களின் வரலாறே. ஆதிக்கத்தின் பொருட்டு கட்டமைக்கப்படுவதே. அதன் நெகிழ்வின்மை காரணமாக வெல்லப்பட்டவர்கள் அதிலிருந்து தங்களுக்கான வரலாற்றை உருவாக்கிக் கொள்வது அரிதினும் அரிதாகிறது. மிகப்பெரிய அறிவாற்றலும், அமைப்பாற்றலும் அதற்குத்தேவையாகிறது. அதேசமயம் புராணவரலாறு மிக நெகிழ்வானது. தொடர்ந்து உருமாறிக்கொண்டிருப்பது. மிக எளிதில் விரிவாக்கப்படவும் மாற்றுக்களை உருவாக்கவும் வாய்ப்பளிப்பது. இந்தக்கோணத்தில் பார்த்தால் ஏதேனும் ஒன்றை இதுதான் ‘சரியான’ வரலாற்றெழுத்துமுறை என்று சொல்லிவிடமுடியாது என்பதே பின்நவீனத்துவச் சூழலின் புரிதல்.

புராணங்கள் உட்பட எல்லாவகை வரலாற்றெழுத்துக்களும் வெவ்வேறு அதிகாரச்செயல்பாடுகளின் கூறுகள் கொண்டவை. ஒட்டுமொத்தமாக அனைத்துவகை வரலாற்றெழுத்துக்களும் முரண்பட்டும் முயங்கியும் உருவாக்குவதே வரலாறாக கொள்ளப்படவேண்டும். வம்சவரிசை வரலாறுகள் தவிர எல்லா வரலாற்றெழுத்துக்களும் புனைவுகளே என்ற நீட்ஷேயின் புரிதலில் இருந்து தொடங்கி வளரும் கோணம் இது. இந்த அணுகுமுறை புராணங்களை இன்னொருவகை வரலாறாக ஏற்கக்கூடியது. எல்லா வரலாறுகளையும் ஒருவகை புராணங்களாகப் பார்ப்பதும்கூட.இந்தியப் புராண வரலாற்றெழுத்து உருவாக்கிய சித்திரத்தை மாற்றுப்புராண வரலாற்றெழுத்தின் மூலம் ஊடுருவும் அயோத்திதாசரின் அணுகுமுறையை இந்தப்பின்புலத்தில் புரிந்துகொள்ளவே நான் முயல்கிறேன்.

இன்றைய வரலாற்றெழுத்தின் முதல்வடிவம் இந்தியாவில் நமக்கு அறிமுகமாவது ஹசன் நிஸாமி [Hasan Nizami] அமீர் குஸ்ரூ [Amir Khusrow], அப்துல் மாலிக் இஸாமி [Abdul Malik Isami], ஸியாவுதீன் பரனி [Ziyauddin Barani ] போன்ற இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் வழியாகத்தான். அமீர் குஸ்ரூவின் ‘துக்ளக் நாமா’ நவீனவரலாற்றெழுத்துக்கு மிக அணுக்கமான முறைமைகொண்டது எனப்படுகிறது. இஸ்லாமிய பண்பாட்டில் வரலாற்றை புறவயமான தகவல்களுடன் பதிவு செய்வது என்னும் மரபு இருந்து வந்தது. அது கலீஃபாக்களின் வரலாற்றை எழுதுவதிலிருந்து தொடங்கியது. பெரும்பாலான இஸ்லாமிய மன்னர்களின் வரலாறு அவர்களின் அதிகார பூர்வமான வரலாற்றாசிரியர்களால் எழுதப்படுள்ளது.

இந்தியாவிற்கு 12 ம் நூற்றாண்டு முதலே இஸ்லாமியப் பண்பாட்டு ஆதிக்கம் உள்ளது. இஸ்லாமிய மன்னர்களின் வரலாறுகள் புறவயமான தகவல்களுடனும், நிகழ்வுகளுடனும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருந்தும் கூட  பிறகு வந்த இந்திய மன்னர்களின் வரலாறுகள்கூட அவ்வாறு எழுதப்படவில்லை. நமக்கு அரசர்களின் குலவரிசையைச் சொல்லும் நூல்கள் இருந்துள்ளன. கல்ஹணரின் காஷ்மீர வம்சவரலாற்று நூலான  ‘ராஜதரங்கிணி’ போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆயினும் அவை நவீன வரலாற்றிறுக்கு தேவையான புறவயமான காலக்குறிப்புகளும், தகவலொருமையும் கொண்டவை அல்ல. நம்மிடம் பின்னரும் புராணவரலாற்றெழுத்துக்குரிய உளநிலையே நீடித்தது.உதாரணமாக இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களால் தெளிவாக வரலாறுகள் எழுதப்பட்டுவிட்ட பிறகு இந்தியாவில் பெரிய மன்னர்களாக இருந்தவர்கள் என சிவாஜி,பாலாஜி பாஜிராவ், மகாராஜா ரஞ்சித்சிங் போன்றவர்களைச் சொல்லலாம் .இவர்கள் எவரைப்பற்றியும் புறவயமான வரலாறு ஒன்று அவர்களின் அவையிலிருந்தோ வெளியிலிருந்தோ உருவாகி வரவில்லை.

அடுத்த கட்டமாகவே நமக்கு நவீன வரலாற்றாய்வும் வரலாற்றெழுத்தும் ஐரோப்பாவிலிருந்து வந்து சேர்ந்தது. அராபிய வரலாற்றெழுத்து முறையின் பிறிதொரு விரிவாக்கமே ஐரோப்பிய வரலாற்றெழுத்து என்று சொல்லலாம். கிரேக்க- ரோம பண்பாடில் இருந்த நிகழ்வுப்பதிவு முறை [chronicle] அராபிய வரலாற்று எழுத்துமுறையுடன் ஊடாடியதனூடாகவே நவீன வரலாறு எழுதும் முறை உருவாகியது. புறவயமான தரவுகள், அவற்றை முறையாக அடுக்கி உருவாக்கப்படும் ஒற்றைக் கதையாடல், அவற்றினுள் நிறைந்திருக்கும் மதிப்பீடு ஆகிய மூன்று அம்சங்கள் கொண்டது இந்த வரலாற்றெழுத்து. நவீன வரலாற்றெழுத்து ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் வலுப்பெற்று ஐரோப்பியர்கள் உலகை காலனியாக ஆளத்தொடங்கியபோது உலகமெங்கும் சென்றது. பெரும்பாலான உலகநிலப்பரப்புகள் பற்றிய நவீனவரலாறுகள் ஐரோப்பிய ஆய்வாளர்களாலெயே எழுதப்பட்டன. ஏறத்தாழ இருநூறாண்டுக்காலம் ஐரோப்பியர்களின் மிகப்பெரிய ஆர்வம் உலகத்தின் வரலாற்றை ஆராய்ந்து எழுதுவதாகவே இருந்தது. அதன்பொருட்டு நூற்றுக்கணக்கான வரலாற்று ஆய்வு மையங்களையும், வரலாற்று ஆய்விதழ்களையும் அவர்கள் உருவாக்கினர். பல இன்றும் நீடிக்கின்றன

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் வழியாக இந்தியாவிற்கு ஒரு நவீனவரலாற்றுச் சித்திரம் உருவாகியது. இந்தியாவை கைப்பற்றிய பிரிட்டிஷார்  இங்கு ஒரு வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்க முனைந்தனர். அதற்கு இந்த நாட்டை புரிந்துகொள்வதும் வரையறுப்பதும்தான் நோக்கம். இந்தியாவை ஆட்சி செய்வதற்கு அது தேவையாக இருந்தது. இந்தியாவின் மிக ஆரம்பகால வரலாற்றெழுத்து என்பது இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளை ஆட்சி செய்த ஆட்சியர்களால் அடுத்து வருபவர்களுக்காக எழுதப்பட்ட குறிப்புகளே. இவை கையேடுகள் [manual] என்றபேரில் வெளியிடப்பட்டன.  பின்னர் பதிவேடுகள் [gazetteer]என்றபேரில் முறைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டன. தமிழக வரலாற்றை எடுத்துக்கொண்டால் ஜே.எச்.நெல்சன் 1868ல் எழுதிய சென்னை மாநில கையேடு [The Madras District Manual] இவ்வகையில் முன்னோடியானது. அதன்பின் அன்றைய பிரிட்டிஷ் மாவட்டங்கள் அனைத்துமே கையேடுகளையும் பதிவேடுகளையும் வெளியிட்டன. அவற்றில் ஜே.எச்.நெல்சனின் மதுரைநாட்டு பதிவேடு [The Madura Country. A manual] ஒரு பெரும்படைப்பு. அதில் அவர் தமிழக வரலாற்றின் ஒரு கோட்டோவியத்தை அளித்தார். தமிழகவரலாறு பற்றிய முதல் நவீன வரலாற்றுச் சித்திரம் அதுவே எனலாம். பின்னர் நெல்சன் மதுரைநாட்டு அரசியல் வரலாறு [Political History of the Madura Country] என்றபேரில் தனியாகவும் விரித்து எழுதினார்

அன்று கிடைத்திருந்த குறைவான இலக்கிய செய்திகள் மற்றும் தொல்லியல் தரவுகளின் அடிப்படையில் தமிழக வரலாற்றின் முன்வரைவொன்றை ஜே.எச்.நெல்சன் போன்றவர்கள் உருவாக்கினார்கள். உண்மையில் அடுத்த ஐம்பதாண்டு காலத்தில் பல அடுக்குகளாக தொல்லியல் தரவுகளும் வரலாற்று எழுத்துமுறையும் அறிமுகமாகி பல கோணங்களில் தமிழக வரலாறு முன்னெடுக்கப்பட்டுவிட்டாலும் கூட அவர்களின் முன்வரைவிலிருந்து நெடுந்தூரம் ஒன்றும் விலகிச்சென்றுவிடவில்லை என்பது அந்நூல்களின் முன்னோடித்தன்மையின் மதிப்பை காட்டுகிறது.

இந்திய அளவிலும் கூட காலனியாதிக்கவாதிகளால் எழுதப்பட்ட வரலாறுதான் இந்தியாவின் வரலாற்று முன்வரைவாக அமைந்துள்ளது .அதில் ஆதிக்க நோக்கும் இனவாத நோக்கும் இருந்தாலும் கூட, அதன் விளைவான திரிபுகளும் மறைப்புகளும் உண்டென்றாலும் கூட, அது இந்திய அறிவியக்கத்துப் பெருங்கொடை என்பதை மறுக்க முடியாது. அந்த களத்திலிருந்தே பிற வரலாற்றெழுத்துக்கள் தொடங்கி நிகழ்ந்தன . 1806ல் ஜே.எஸ்.மில் எழுதிய [James Mill] பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு [History of British India] இந்தியாவைப்பற்றிய முதல் ஐரோப்பிய நோக்கிலான வரலாறு. ஜே.எஸ்.மில் இந்தியா வந்தவரோ, இந்தியமொழிகளில் எதையேனும் அறிந்தவரோ அல்ல. ஆங்கிலத்தில் கிடைத்த தரவுகளில் இருந்தே அவர் அந்நூலை உருவாக்கினார். அந்தத் தரவுகள் ஆங்கில ஆட்சியாளர்களாலும் ஆய்வாளர்களாலும் திரட்டப்பட்டவை.

ஜே.எஸ்.மில் இந்தியாவின் தொல்வரலாறென்பது முழுக்கமுழுக்க புராணம் மட்டுமே என்றும் அவற்றுக்கு வரலாற்று மதிப்பே இல்லை என்றும் எண்ணினார். இந்தியர்களை வரலாறற்றவர்களாகவே அவர் மதிப்பிட்டார். மூடநம்பிக்கைகள், தத்துவமில்லாமை, அடிமைத்தனம் ஆகியவை கொண்ட பின்தங்கிய பழங்குடிப்பண்பாடாக இந்தியப் பண்பாட்டை அவர் வரையறைசெய்தார். இந்தியாவை அரசாட்சியில் மட்டுமல்லாது சிந்தனையிலும் நவீனப்படுத்துவது பிரிட்டிஷாரின் கடமை என்று எண்ணிய மில் அக்காரணத்தாலேயே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களில் நேர்மையாக நடந்துகொள்ளாதவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நூல் இந்தியாவின் காலனி அரசின்  ஆட்சிப்பொறுப்பிலிருந்த வெள்ளையர்கள் மேல் தீவிரமான செல்வாக்கைச் செலுத்தியது. அவர்கள் எழுதிய பிற்கால நூல்கள் அனைத்திற்கும் முன்வரைவாக அமைந்தது.

காலனிய ஆதிக்க வரலாற்றெழுத்து இந்தியாவை வெவ்வேறு மதங்கள், இனக்குழுக்கள், மொழிகள், நிலப்பகுதிகள், அரசியல் பகுதிகள் ஆகியவற்றின் தொகுப்பாகவும்; அவற்றுக்கிடையேயான முரண்பாடுகளினால் உருவாகி வந்ததாகவும் உருவகம் செய்ததது. இம்முரண்பாடுகள் அனைத்தையும் மேலிருந்து கட்டி ஒருங்கிணைக்கும் விசையாக இந்தியாவிலிருந்த பேரரசுகளை கண்டது. அவற்றின் தொடர்ச்சியாக தன்னை முன்வைத்தது. முரண்பாடுகளை ஒருங்கிணைப்பதுதான் இந்தியாவின் ஆட்சியாளர்களின் பணி என புரிந்துகொண்டது.

பிரிட்டிஷ் வரலாற்றெழுத்துக்கு மாற்றான வரலாறொன்றை உருவாக்க வேண்டிய கட்டாயம் இந்திய தேசிய எழுச்சியின்போது உருவாகியது. இவ்வாறு உருவான மாற்று வரலாற்றை  ‘இந்தியத் தேசிய வரலாற்றெழுத்துமுறை’ என்று சொல்லலாம். அடிப்படையில் பிரிட்டிஷாரின் தகவல்தொகுப்பு முறைமை, வரலாற்றெழுத்தின் கூறுமுறை மொழி ஆகியவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு  இந்தியாவைப்பற்றி அவர்களின் அடிப்படை உருவகத்தை மட்டும் மறுத்து எழுதப்பட்டது இந்தியத் தேசிய வரலாறு.

இந்திய தேசிய வரலாற்றின்படி இந்தியா என்பது மிகத் தொல்காலம் முதலே பண்பாட்டு அடிப்படையில் ஒற்றை நிலமாக, ஒற்றை பண்பாட்டுவெளியாக இருந்தது .முரண்பாடுகள் என்பவை அரசியல் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் இருந்தனவே ஒழிய அடிப்படையில் இருந்த பண்பாட்டு ஒருமையே இந்த தேசத்தை கட்டமைத்தது. பண்பாட்டுத் தேசம் ஒன்று ஏற்கனவே உள்ளதென்றும் அதை அரசியல் தேசமாக மாற்றிக்கொள்ளவேண்டியது மட்டுமே தேசிய இயக்கத்தின் நோக்கமென்றும் அது வரையறுத்து கொண்டது. பிரிட்டிஷார் இங்கு எந்த விதமான தொகுப்பையும் நிகழ்த்தவில்லை. அரசியல் பிளவுகளைப்பயன்படுத்திக்கொண்டு அதிகாரத்தை அடைந்து ஒட்டுமொத்தமான ஆதிக்கம் ஒன்றை நிறுவினார்கள்.

தேசிய வரலாற்று எழுத்தை உருவாக்கிய பெரும்பாலானவர்கள் பிரிட்டிஷ் வரலாற்று முறைமையின் கீழ் பயின்றவர்கள். தேசிய இயக்கத்தின் கருதுகோளால் கவரப்பட்டு தங்கள் மாற்றுதரப்பை முன்வைக்க வந்தவர்கள். இந்திய அளவில் ராஜேந்திரலால் மித்ரா [Raja Rajendralal Mitra]  ஆர்.ஜி.பண்டார்கர்[R.G. Bhandarkar] ஆர்.சி.மஜூம்தார் [Ramesh Chandra Majumdar] டி.ஆர்.பண்டார்க்கர் [D. R. Bhandarkar] எச்.சி.ராய்சௌதுரி [H. C. Raychaudhary] பி.வி.காணே P. V. Kane] கே.பி.ஜெயஸ்வால் [K. P. Jayaswal] எச்.சி.ராய் [H.C. Ray] ஆர்.கே. முகர்ஜி [R. K. Mookerji]  போன்றவர்கள். தமிழகத்தில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, டி.வி.மகாலிங்கம் போன்றவர்களை இந்த மரபுக்கு உதாரணமாக காட்டலாம்.

மூன்றாவது போக்காக இந்தியத் தேசிய வரலாற்று எழுத்திற்குள் உருவாகி, பின்னர் தனிப்போக்காக மாறிய துணைத்தேசிய வரலாற்று எழுத்துக்களை சுட்டிக்காட்ட வேண்டும். இவை இந்தியத் தேசிய வரலாற்றெழுத்தை போலவே பிரிட்டிஷ் வரலாற்றெழுத்து முறைமைக்கு பெரிதும் கடன்பட்டவை. இன்னும் சொல்லப்போனால் இந்தியத் தேசிய வரலாற்றெழுத்து முறைமையிலிருந்து இவை தரவுச்சேகரிப்பு, மொழிபு, பார்வை எதிலுமே வேறுபட்டவை அல்ல. இந்தியத் தேசிய வரலாற்றெழுத்து முறைமை ஒர் இந்திய பண்பாட்டு ஒருமையை கற்பிதம் செய்கிறது என்றால் இவை துணைத் தேசியப் பண்பாட்டு ஒருமையை கற்பிதம் செய்கின்றன என்பது மட்டுமே வேறுபாடு .பாரத அன்னைக்கும் தமிழன்னைக்குமிடையே சிற்ப அளவில் கூட எந்த வேறுபாடும் இல்லை.

இந்தியத் தேசிய வரலாற்று எழுத்தாளர்கள் வேத காலத்திலும், உபநிஷத காலத்திலும், குப்தர் காலத்திலும் தங்கள் பொற்காலங்களைக்கண்டு கொண்டார்கள். மராட்டியர்களிலும் விஜயநகரத்திலும் சீக்கியர்களிலும் தங்கள் மீட்பர்களுக்கான முன்னுதாரணங்களை கண்டடைந்தனர். துணைத் தேசிய வரலாற்று எழுத்தாளர்கள் அதே போன்ற பொற்காலங்களை தங்கள்  தொல்வரலாறுகளிலிருந்து கண்டடைந்தனர். தங்கள் மீட்பர்களையும் கிளர்ச்சியாளர்களையும் தங்கள் வரலாற்றிலிருந்து எடுத்து முன்வைத்தனர் .தமிழகத்தில் சங்க காலமும் சோழர் காலமும் பொற்காலங்களாக கட்டமைக்கப்பட்டன. பூலித்தேவனும் வீரபாண்டிய கட்டபொம்மனும் மருது சகோதரர்களும் கிளர்ச்சியின் நாயகர்களாக உருவானார்கள்.

தங்கள் பண்பாட்டுவெளி என்பது ஒருமையாலானது என்றும் வேறுபாடுகளனைத்தும் மேலோட்டமானவை அல்லது அயலவரால் உருவாக்கப்பட்டவை என்றும் இந்த இரு தேசிய வரலாறு முறைமைகளும் வாதிடுகின்றன. இவ்விரு வரலாறு முறைமைகளுக்குள்ளும் கடுமையான மோதல் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. கூடவே இவை ஒன்றையொன்று வளர்க்கவும் செய்தன. இந்தியா முழுக்க இந்தியத் தேசிய எண்ணங்களை முன்வைத்த முன்னோடிக் கவிஞர்களும் வரலாற்றாசிரியர்களுமே துணைத்தேசிய வரலாறுகளையும் உணர்வுகளையும் முன்னெடுத்திருக்கிறார்கள். அதேபோல இந்தியத் தேசிய வரலாற்றாசிரியர்களின் எழுத்துக்களிலிருந்தே துணைத்தேசிய வரலாற்று உருவகங்களும் முளைத்தெழுந்தன. தமிழில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி. சதாசிவப்பண்டாரத்தார், ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆகியோரை தமிழ்த்தேசிய வரலாற்றெழுத்துக்கும் முன்னோடிகளெனச் சொல்லலாம். கேரளத்தில் இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை, மராட்டியில் வி.கே.ரஜவடே [V.K.Rajwade] போன்றவர்கள்.

இப்போது இந்தியாவின் வெவ்வேறு துணைத் தேசியங்களின் முதன்மைக் கவிஞர்களாக கருதப்படுபவர்கள் அனைவருமே தேசியக் கவிஞர்களும் கூட.  ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாடிய பாரதி தான்  ‘எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்’ என்று பாடியிருக்கிறார். பாரதத்தை ஏத்திப் பாடிய வள்ளத்தோள்தான் கேரள அன்னையைப்பற்றியும் பாடியிருக்கிறார். கே.வி.புட்டப்பா தேசியகவிஞர், கன்னட தேசியத்தின் முதல் கவிஞரும் கூட. தாகூர்  இந்தியதேசியகீதத்தின் ஆசிரியர், வங்காள தேசியத்தின் முகம். இந்த இரட்டை நிலை ஆரம்பத்தில் முரணற்றதாகவே கருதப்பட்டது. இந்தியத் தேசியம் எனும் பேரமைப்பிற்குள் ஒவ்வொரு துணைத் தேசியமும் தன்னுடைய தனியிடத்தை கண்டடைவதாகவே  அது இருந்தது. தமிழ்த் திராவிட இயக்கத்தின் முதன்மைப்பாடலாக கருதப்படும்  ‘நீராருங்கடலுடுத்த’ கூட ‘நிலமடந்தைக்கு எழிலொழுகும் சீராரும் வதனம் என திகழ்பரத கண்டமதில் எத்திசையும் புகழ்மணக்க இருந்த தமிழ் அணங்கே’ என்று தான் பாடுகிறது.

ஆனால் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா எனும் ஒட்டுமொத்தக் கட்டமைப்பு ஓர் உணர்வு நிலையாக, ஒரு பண்பாட்டு தன்னிலையாக இருந்தது மாறி அது மையஆட்சியின் வடிவம் என்றாயிற்று. அதன் கட்டுப்பாட்டுக்குள் இந்திய துணைத் தேசியங்கள் இருக்க வேண்டுமென்ற நிலை உருவாகியது. மொழிவழி மாநிலப்பிரிவினையிலிருந்து மொழிசார்ந்த துணைத்தேசிய கோரிக்கைகள் வலுப்பெற்றன. பஞ்சாபி சுபா இயக்கம், அகண்ட மஹராஷ்ட்ரா இயக்கம், கன்னட தேசிய இயக்கம், கேரள தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய இயக்கம்  என்று வெவ்வேறு துணைத்தேசிய  உருவகங்களும் கிளர்ச்சிகளும்  இந்தியா முழுக்க வலுப்பெற்றன.அவை இந்திய தேசியத்திற்கு எதிரானவையாக தங்களை நிறுத்திக்கொள்ளத்தொடங்கின.

இந்தியதேசியம் ஆதிக்கத்தன்மை கொண்டது என உருவகிப்பப்பட்டமையால் அதற்கு எதிரான துணைத்தேசிய உருவகங்கள் முற்போக்கானவையாகக் கருதப்பட்டன. கொள்கை அளவில் இந்திய தேசியத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றாலும் கூட இந்தியத் தேசியம் அடக்குமுறையாகவும் தமிழ்த்தேசியம் விடுதலைச் சக்தியாகவும் இன்றைய அறிவுச்சூழலில்   பொதுவாக கருதப்படுகிறது.  தமிழ்த் தேசிய உருவகத்திற்குள் இந்தியத் தேசிய உருவகத்தை போலவே வெவ்வேறு பண்பாட்டுக் கூறுகள் அழுத்தி ஒன்றாக்கப்படுகின்றன. பொற்காலங்கள் கற்பிதம் செய்யப்படுகின்றன வீரநாயகர்கள் புனையப்படுகிறார்கள். இந்தக்கூறு பெரும்பாலும் விவாதிக்கப்படாமலே கடந்து செல்லப்படுகிறது.

இந்தியச் சூழலில் தேசியம் பற்றிய உரையாடல் 1910 களில் தொடங்கியது. முப்பதாண்டுகளுக்கு பிறகு 1940 களில் துணைத்தேசியங்கள் பற்ற்றிய சொல்லாடல்கள் ஆரம்பித்தன. மீண்டும் முப்பதாண்டுகளுக்குபிறகு 1970 களில் துணைத்தேசிய கற்பிதங்களுக்கு எதிரான பார்வைகள் எழத்தொடங்கின. அவற்றில் முதன்மையானது தலித் ஆய்வாளர்களின் குரல். சர்வதேச அளவில் உருவான விளிம்புநிலை ஆய்வுகளின் ஒரு பகுதியாக எழுந்தது இது. இந்தியாவின் அரசியல்களத்தில் தலித் இயக்கங்கள் உருவானபோது விசைகொண்டது

தலித் ஆய்வாளர்கள் இந்தியத் தேசிய உருவகத்தை முதன்மையாக ஐயப்பட்டனர். அதன் ஆதிக்கத்தை உடைக்க முயன்றனர். ஆனால் அதே அளவுக்கு தமிழ்த் தேசியம் போன்ற துணைத் தேசியங்களையும் ஐயப்பட்டனர். உடைத்து அதிலுள்ள ஆதிக்கத்தைக் கண்டடைய முயன்றனர்.இந்தியத் தேசியம் எவ்வாறு  இந்தியாவின் வரலாற்றிலிருந்து பல்வேறு முரண்பாடுகளை, ஒடுக்குமுறைகளை, இருண்ட பகுதிகளை மறைத்து ஒளிமிக்க பொற்காலங்களையும் வீரநாயகர்களையும் கற்பனை செய்கிறதோ அதையேதான் தமிழ்த் தேசியம் போன்ற துணைத் தேசியங்களும் செய்கின்றன என்று அவர்கள் கண்டடைந்தனர். பொற்காலம் என்றால் அது எவருடைய பொற்காலம் என்ற கேள்வி எழுந்தது.

முதலில் சொல்லப்பட்ட மூன்று வரலாற்றெழுத்துத் தரப்புகளும் அதிகாரத்தின் குரல்கள் என்பதைக் காணலாம். பிரிட்டிஷ் அதிகாரத்தின் குரல் என ஐரோப்பிய வரலாற்றெழுத்தைச் சொல்லலாம். அவர்களிடமிருந்து அதிகாரத்தை பெறவிழைந்த இந்தியதேசிய நிலப்பிரபுத்துவ –முதலாளித்துவ தரப்பின் குரல் என இந்தியதேசிய வரலாற்றெழுத்தை தலித் சிந்தனையாளர்கள் வரையறை செய்கிறார்கள். துணைத்தேசிய வரலாற்றெழுத்துக்கள் அந்த இந்திய மைய அதிகாரத்திலிருந்து தங்கள் தனியதிகாரத்தை பேணவிழைந்த தரப்புகளால் உருவாக்கப்பட்டவை. இந்தியத்தேசிய வரலாற்றெழுத்தும், துணைத்தேசிய வரலாற்றெழுத்தும் பொற்காலங்களைக் கற்பிதம் செய்வது இதனால்தான்.

மாறாக தலித் வரலாற்றெழுத்தின் தரப்பு வரலாறு முழுக்கவே அதிகாரமற்றவர்களாக இருந்தவர்களின் கோணம். அதிகாரத்தை அடையாதவர்களின், ஒடுக்கப்பட்டோரின் ஆய்வுமுறை. ஆகவே அவர்கள் உருவாக்கும் ஒற்றைவரலாற்று உருவகத்திற்குள் புதைக்கப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாறுகளையும் பண்பாடுகளையும் தேடிச்செல்கிறது அது. இவர்களுக்கு முன்னோடியாக அமைந்த சிந்தனைப் பள்ளிகள் மூன்று. ஒன்று டி.டி.கோசாம்பியை முன்னோடியாகக் கொண்ட இடதுசாரி வரலாற்றாய்வாளர்களின் அணுகுமுறை மற்றும் அவர்களின் ஆய்வுக்கருவிகள். இரண்டு, பேரா ரணஜித் குகா [Ranajit Guha] போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட விளிம்புநிலை வரலாற்றெழுத்தின் கோணங்களும் ஆய்வுமுறைமைகளும். மூன்றாவதாக எண்பதுகளில் இந்தியாவில் செல்வாக்கு செலுத்திய பின்நவீனத்துவ வரலாற்று, பண்பாட்டு ஆய்வுமுறைகளும் கோணங்களும்.

இந்த விரிவான பின்னணியில்தான் ராஜ் கௌதமனை நாம் நிறுத்தி ஆராயவேண்டும். மேலே சொன்ன நான்கு வரலாற்றெழுத்து –பண்பாட்டு வரலாற்றெழுத்து மரபுளில் நான்காவது மரபான தலித் ஆய்வுமுறையைச் சேர்ந்தவர் ராஜ் கௌதமன். தமிழில் அந்த வரலாற்றெழுத்து மரபின் முன்னோடி என்றும் சொல்லலாம். தமிழகத்தில் நமக்கு கிடைக்கும் வரலாற்றுச் சித்திரங்களில் இறுதியானதும், பெரும்பாலும் தொடக்கநிலையிலேயே இருப்பதும் இதுதான். ராஜ் கௌதமன் ஒரு வரலாற்றாசிரியராக அல்ல, பண்பாட்டு வரலாற்றாசிரியராகவே செயல்பட்டிருக்கிறார். அவருடைய ஆய்வுமுறைமைகளில் கோசாம்பியின் மரபும், ரணஜித் குகாவின் மரபும், பின்நவீனத்துவப் பார்வைகளும் செல்வாக்கு செலுத்துகின்றன. ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பண்பாட்டுச் சித்திரங்களில் ஊடுருவி தவிர்க்கமுடியாத வினாக்களை முன்வைத்திருக்கிறார். அவருடைய பங்களிப்பு என்பது இதுதான்

[மேலும்]

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-7
ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-6
ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5

முந்தைய கட்டுரைஅண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -7, கலைச்செல்வி