ஆடைகளில்லாத தெய்வம்

nir

நாங்கள் வடகேரளத்து தொலைபேசித்துறை நண்பர்கள் காஞ்ஞாங்காட்டில் காயல் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது கருத்துரிமை பற்றிய பேச்சுக்கள் வந்தன. ஒருவர் சொன்னார் “எம்.டியின் நிர்மால்யம் இப்போது வந்திருந்தால் அவரை ஓட ஓடத் துரத்தியிருப்பார்கள்”

நாங்கள் எண்பதுகளில் காசர்கோடு ஃபிலிம் சொசைட்டி என்ற அமைப்பின் தீவிர உறுப்பினர்கள்.முரளி மாஸ்டர் அதன் மையவிசை. அவர் ஓர் ஆசிரியர். இப்போது ஓய்வுபெற்று கண்ணனூரில் வசிக்கிறார். அன்றி மிகத்தீவிரமாகச் செயல்பட்ட அமைப்புக்களில் ஒன்று அது. ஜான் ஆபிரகாம், பி.ஏ.பக்கர் போன்ற சினிமா இயக்குநர்கள் அடிக்கடிவருவார்கள். விஜயகிருஷ்ணன், ராஜகிருஷ்ணன், சானந்தராஜ் போன்ற சினிமா விமர்சகர்கள் வருவார்கள்.

அன்று உலகசினிமா என்பது திரைப்பட விழாக்கள் வழியாக மட்டுமே பார்க்கப்பட இயல்வது. டெல்லியிலுள்ள தூதரகங்களிலிருந்து படப்பெட்டிகளை சிறிய வைப்புத்தொகை பெற்றுக்கொண்டு, இலவசமாக அனுப்பிவைப்பார்கள். ரயிலில் அப்பெட்டிகள் வரும். அச்செலவை மட்டுமே ஃபிலிம் சொசைட்டி அளிக்கவேண்டும். அதை ஃபிலிம் சொசைட்டிகள் பகிர்ந்துகொள்ளும். ஒரு படப்பெட்டி திருவனந்தபுரம் சூரியா ஃபிலிம் சொசைட்டிக்கு வந்து அங்கிருந்து காசர்கோடுவரை வந்து மங்களூர் செல்லும்

Nirmalyam3

[நிர்மால்யம் படப்பிடிப்பில்]

கேரள கலைப்பட இயக்கம் சிறப்பாக இருந்த காலம் அது. ஆண்டுக்கொரு படம்வீதம் பி.ஏ.பக்கர் வெளியிட்டுக்கொண்டிருந்தார். அடூர் கோபாலகிருஷ்ணனும், அரவிந்தனும், லெனின் ராஜேந்திரனும் தொடர்ந்து படங்களை இயக்கிக்கொண்டிருந்தனர். இந்திய கலைபப்ட இயக்குநர்களான மிருணாள் சென், மணி கௌல், புத்ததேவ் தாஸ்குப்தா, ரிஷிகேஷ் முக்கர்ஜி, கிரீஷ் காசரவள்ளி போன்றவர்களின் படங்கள் கோவா திரைப்பட விழா முடிந்ததும் சுற்றிவரும்.

16 எம்எம் திரையில் அப்படங்கள் காட்டப்படும். அதற்கென நூறு பார்வையாளர்கள் இருந்தனர். அடிக்கடி தர்கோவ்ஸ்கி, கொதார்த், பாஸ்பைண்டர், லூயி புனுவல்,  சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் போன்ற முன்னோடிகளின் படங்கள் ஒற்றை நிகழ்வாக ஒருவாரம் முழுக்க காட்டப்படும்.அம்முறை எம்.டி.வாசுதேவன் நாயரின் ஐந்து படங்களை நாளுக்கொன்று என்ற வகையில் திரையிட்டார்கள். எல்லாமே கறுப்புவெள்ளை படங்கள். அதிலொன்று நிர்மால்யம்

நிர்மால்யம் என்றால் ஆடைகளற்ற, சூடாத  என்று பொருள். தெய்வங்களை அதிகாலையில் வெறும்சிலையாகத் தரிசனம் செய்வது அது. பகவதியின் நிர்மால்யபூஜை தொழுவது அரிய ஒரு வழிபாடு. 1973ல் வெளிவந்த படம் நிர்மால்யம். எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி இயக்கி தயாரித்தது. கதைநாயகனாக நாடக நடிகர் பி.ஜே.ஆண்டனி நடித்திருந்தார். அந்தப்படத்துக்காக ஆண்டனி சிறந்த நடிகருக்கான தேசியவிருதை பெற்றார். மிகச்சிறந்த சினிமாவுக்கான கேரள அரசு விருதையும், கேரள விமர்சகர் சங்க விருதையும் இந்தப்படம் பெற்றது. இன்றும் மலையாளத்தின் செவ்வியல்படைப்புக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய ’பள்ளிவாளும் கால்சிலம்பும்’ என்ற சிறுகதையின் திரைவடிவம் இந்தப்படம். எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய இன்னொரு சிறுகதையும் இதில் துணைக்கதையாக உள்ளடக்கப்பட்டிருந்தது [கதகளி ஆசானின் கதை]. மலையாள  இலக்கிய வரலாறும் எம்.டி.வாசுதேவன் நாயர்ரின் இலக்கிய வாழ்க்கையும் ஏறத்தாழ இணையானவை. 1933ல் பிறந்த எம்.டி.வாசுதேவன் நாயர் 1948ல்  தன் 15 வயதில் விஷுவாகோஷம் [விஷூ கொண்டாட்டம்] என்ற சிறுகதை வழியாக மலையாள இலக்கியத்தில் அறிமுகமானவர். மலையாள இலக்கியம் உருவாகிக்கொண்டிருந்த காலம் அது. அந்த முதல்கதையே கவனிக்கப்பட்டது.

Nirmalyam_3

[சுகுமாரன் , ரவி மேனோன், சுமித்ரா]

தன் இருபதாம் வயதில் The New York Herald Tribune. நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டியில் சர்க்கஸ்காரர்களின் வாழ்க்கையைப்பற்றிய வளர்த்துமிருகங்கள் என்ற கதைக்கு முதல்பரிசு பெற்றார். அவருடைய முதல்நாவலான நாலுகெட்டு 1958ல் கேரளசாகித்ய அக்காதமி விருது பெற்றது. அப்போது அவருக்கு வயது 23. அத்துடன் மலையாளத்தின் மாபெரும் படைப்பாளிகளில் ஒருவராக நிலைகொண்டார்.

மாத்ருபூமி இதழின் ஆசிரியராக பணியாற்றிய எம்.டி.வாசுதேவன் நாயர் அங்கிருந்த காலகட்டத்தில் 1965ல் முறப்பெண்ணு என்ற படம் வழியாக திரைக்கதையாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து அவர் எழுதிய படங்கள் பெருவெற்றிபெற்று மலையாளத் திரையுலகின் முதன்மைத் திரைக்கதையாசிரியராக ஆனார். 1969ல் அவருடைய ஆறாவது திரைப்படமான ஓளவும் தீரவும் மாநில அரசு விருதுபெற்றது. அவருக்கு சிறந்த திரைக்கதையாசிரியருக்கான விருதும் கிடைத்தது.

மலையாளத் திரைப்பட ரசனையையே எம்.டி.வாசுதேவன் நாயர் தான் உருவாக்கினார் என்றால் அது மிகையல்ல. சர்வதேச விருதுகளைப் பெற்ற அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் மலையாளத்தில் உண்டு. ஆனால் அவர்கள் பெருவாரியான மக்களால் பார்க்கப்படவில்லை. எம்.டியின் படங்கள் பெரும் வணிகவெற்றி பெற்றவை, அதேசமயம் திரைப்படக்கலையின் அழகியலைக் கொண்டவை, கூரிய உணர்ச்சிகளும் நிறைந்தவை. மலையாள சினிமா ரசிகர்களின் இரண்டு தலைமுறையினர் அவருடைய சினிமாக்களைக் கண்டு உருவாகிவந்தார்கள்.

நிர்மால்யம் எம்.டியின் 11 ஆவது படம். அதற்கு முன் வெளிவந்த ஓளவும் தீரவும் ,மாப்புசாக்‌ஷி, குட்டியேடத்தி அசுரவித்து இருட்டின்றே ஆத்மாவு முறப்பெண்ணு ஆகியவை மாபெரும் வணிகவெற்றிகள் பெற்று அவர் ஒரு நட்சத்திரமாகக் கருதப்பட்டார். அவருடைய திரைக்கதைக்காக பெரிய இயக்குநர்கள் காத்திருந்தனர். ஆனால் எம்.டி நிர்மால்யத்தை ஒரு கலைப்படமாக இயக்கினார். அது வணிகவெற்றி பெறவேண்டியதில்லை என்ற எண்ணமும் அவரிடம் இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அது பெரிய வெற்றிபெற்று மலையாளத்தின் ‘கல்ட் கிளாஸிக்’குகளில் ஒன்றாக ஆகியது.

ஒளிப்பதிவு ராமச்சந்திரபாபு. பூனா ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவரான ராமச்சந்திரபாபு ஜான் ஆபிரகாமின் நண்பர். ஜானின் முதல் படமான வித்யார்த்திகளே இதிலே படம்தான் அவருக்கும் முதல் படம். அவருடைய நான்காவது படம் நிர்மால்யம். அவரை முக்கியமான ஒளிப்பதிவாளராக கேரளத்திற்கு அடையாளம் காட்டிய படம் அது. அதன்பின் நான்குமுறை மாநிலவிருது பெற்றிருக்கிறார். பரதனின் புகழ்பெற்ற படங்களின் ஒளிப்பதிவாளர் அவர்.

எம்.டி சத்யஜித் ரேயின் பாதேர் பாஞ்சாலியால் பெரிய அளவில் பாதிப்படைந்திருந்தார். அதன் செல்வாக்கை நிர்மால்யத்திலும் காணலாம். மலையாள சினிமாவில் அன்றிருந்த நாடக அம்சம் துளிகூட இல்லாத படம் அது. பெரும்பாலும் காட்சிகள் வழியாகவே தொடர்புறுத்தியது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்குப் பின்னரும்கூட அதன் திரைமொழி முதிர்ச்சியானதாக இன்றும் உள்ளிழுத்து ஒரு நிகர்வாழ்க்கையை அளிக்கக்கூடியதாகவே உள்ளது

Nirmalyam_unit
நிர்மால்யம் படப்பிடிப்பில் ராமச்சந்திரபாபு

திரிச்சூருக்கும் குற்றிப்புறத்திற்கும் அருகே எடப்பாள் என்ற இடத்தில் அமைந்திருக்கும் முக்கோலா என்னும் பகவதிகோயிலைச் சுற்றி பெரும்பாலான பகுதிகள் படமாக்கப்பட்டன. கோயிலின் கருவறைப்பகுதி மட்டும் கோழிக்கோட்டில் ஒரு செட் போட்டு எடுக்கப்பட்டது.கதையில் வருவதைப்போலவே கைவிடப்பட்டு நாள்பூசை இல்லாமல் இடிந்து கிடந்தது அந்த பெரிய பகவதி ஆலயம்.

சினிமா தெளிவான ஒரு நிலச்சித்திரத்தை பார்வையாளர் உள்ளத்தில் உருவாக்கவேண்டும். அது உண்மையான நிலச்சித்திரத்தின் நகலாக இருக்கவேண்டியதில்லை. ஆனால் சினிமாவுக்குள் தெளிவான திசையடையாளங்களும் இடம்சார் குறிப்புகளும் இருக்கவேண்டும். அப்போதுதான் அங்கே உண்மையாகவே சென்றுவாழ்ந்து மீண்ட அனுபவத்தை வாசகன் அடையமுடியும்.வெவ்வேறு உணர்ச்சிப்புலங்களாக, வெவ்வேறு கோணங்களில் திரும்பத் திரும்ப வரும் இடங்கள்தான் சினிமாவில் படிமங்களாகின்றன. பார்வையாளர்கள் அங்கே வாழ்ந்ததுபோல உணரச்செய்து அவர்களின் கனவுகளுக்குள் செல்கின்றன.

நிர்மால்யம் படத்தில் வரும் பாரதப்புழா படிக்கட்டு திருமிட்டக்கோடு என்னும் ஊரில் படமாக்கப்பட்டது. ஆனால் முக்கோலா பகவதியின் படித்துறையாகவே அது ரசிகர்களிடம் பதிந்திருக்கிறது. இன்றும் முக்கோலா பகவதி ஆலயம் செல்பவர்கள் அந்தப்படிக்கட்டைக் காண ஆசைப்படுகிறார்கள். நிர்மால்யம் மிகக்குறைவான முதலீட்டில் எடுக்கப்பட்டது நடிகர்கள் அனைவரும் ஒரு கட்டிடத்தில் ஒன்றாகத் தங்கினர். அசைவ உணவு கிடையாது. ஜெனரேட்டர்கூட கிடையாது. படமாக்குவதற்கான அடிப்படை விளக்குகள் இல்லை. எதிரொளிப்பான்கள்கூட துணியைக்கொண்டு அங்கேயே செய்யப்பட்டவை. ஒரு கட்டத்தில் பணம் முழுமையாகத் தீர்ந்தது. ஐந்தே ரூபாய் எஞ்சியிருந்தது. உள்ளூரில் பலரிடம் கடன் வாங்கி படத்தை முடித்தார்கள். அக்காலகட்டத்தில் இரண்டு லட்சம்ரூபாயில் படம் முடிவடைந்தது

நிர்மால்யத்தின் நடிகர்களில் முக்கியமானவர் பி.ஜே.ஆண்டனி. முதலில் இந்தப்படத்திற்கு சங்கராடியைத்தான் தெரிவுசெய்திருக்கிறார்கள். ஆனால் அவர் தன் தோற்றம் அதற்கு ஒவ்வாது என்று சொல்லி பி.ஜே.ஆண்டனியை சிபாரிசு செய்தார். இந்தப் படத்தில் ஆண்டனியின் நடிப்பு மலையாளத் திரைநடிப்புகளில் ஓர் உச்சம் என கருதப்படுகிறது. அவருக்குத் தேசியவிருது கிடைத்தது.

pj
பி ஜெ ஆண்டனி

பி.ஜே. ஆண்டனி [1925 – 1979] மலையாள நாடக உலகின் பெரிய பெயர்களில் ஒன்று. கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவரான $ கம்யூனிஸ்டுக் கட்சியின் நாடகக்குழுவான கே.பி.ஏ.சியின் முதன்மை நடிகர். பின்னர் கொச்சி பிரதீபா ஆர்ட்ஸ் என்னும் நாடகநிறுவனத்தை சொந்தமாக ஆரம்பித்தார். அவருடைய நாடகக்குழுவிலிருந்து அவருடைய மாணவர்களான பலர் நடிகர்களாக வந்தனர். முக்கியமானவர் திலகன். தகழி சிவசங்கரப்பிள்ளையின் ரண்டிடங்கழி என்னும் படம் வழியாக 1958ல் சினிமாவுக்குள் வந்த ஆண்டனி ஐம்பது படங்களுக்குமேல் நடித்திருக்கிறார். அவர் நடித்த அரிய படங்களில் ஒன்று யூகே குமாரன் இயக்கிய அதிதி என்னும் கலைப்படம்.

வெளிச்சப்பாடு என்பவர் கேரளப் பண்பாட்டின் முக்கியமான உருவகவடிவம். கண்ணகி தொன்மத்திலுள்ளது அதன் வேர். வெளிச்சப்படுதல் என்றால் மலையாளத்திலும் தூயதமிழிலும் வெளிப்படுதல் என்றுதான் பொருள். பகவதி சன்னதம் வந்து வெளிப்படும் மனிதர்தான் வெளிச்சப்பாடு. கேரளத்தின் பழங்குடிகளில் வெளிச்சப்பாடு உண்டு. அங்கே அவர்தான் பூசகர். பெரும்பாலும் வெளிச்சப்பாடு நாயர் சாதியைச் சேர்ந்தவர்தான். பரம்பரையாக அப்பதவி அவரை வந்தடையும். அது ஒருவகை வாழ்நாள் நோன்பு.அவர் கூந்தல் வளர்க்கவேண்டும். அசைவம் உண்ணக்கூடாது. ஒவ்வொருநாளும் நீராடி ஆலயத்திற்கு வந்து சில சடங்குகளைச் செய்யவேண்டும். எப்போதுமே செம்பட்டுக் கச்சை அணிந்திருக்கவேண்டும். பழங்காலத்தில் அவர் பகவதியின் தட்டகம் எனப்படும் ஊர் எல்லைக்கு வெளியே எதன்பொருட்டும் செல்லக்கூடாது.

பகவதி தோன்றாதபோதும் வெளிச்சப்பாடு பகவதியின் வடிவமாகவே கருதப்படுவார். அவர் குழந்தைகளுக்காக மந்திரிப்பது, தாயத்துகள் கட்டுவது, சினைப் பசுக்களுக்காக சில சடங்குகள் செய்வது என ஊரின் பிரிக்கமுடியாத ஓர் அம்சம். இப்படிச் சொல்லலாம், பழங்குடிகளில் பூசகர் எந்த இடத்திலிருக்கிறாரோ அங்கே வெளிச்சப்பாடு இருக்கிறார். ஆனால் பகவதி ஆலயங்கள் பிராமணிய பூசைமுறைக்குள் வந்தபோது வெளிச்சப்பாடு ஆலயக்கருவறைக்குள் நுழையமுடியாதவராம மாறினார். ஆலயப்பூசை நம்பூதிரிகளிடம் சென்றது. ஆனாலும் மக்கள் வெளிச்சப்பாடையே பகவதியாக கண்டனர். பகவதி ஆவேசம் கொண்டு அவரில் எழும்போது நம்பூதிரியும் அவரை வணங்கியாகவேண்டும். சென்ற தலைமுறைவரை  ஒர் ஊரின் முதன்மையான மரியாதைக்குரிய மனிதர் வெளிச்சப்பாடுதான்.

mt

[எம்.டி.வாசுதேவன் நாயர்]

வெளிச்சப்பாடு என்ற கதாபாத்திரம் கண்ணகி வழிபாட்டிலிருந்து வந்தது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கேரளக் கடற்கரையோரமாக 108 கோயில்களை உருவாக்கியதாக தொன்மம் சொல்கிறது. அந்த பகவதிகள் இன்று குறும்பா பகவதிகள் எனப்படுகின்றன. குறும்பர்கள் என்னும் பழங்குடிகளின் பகவதி என பொருள். கூர்ம்பா என்றும் சில இடங்களில் சொல்வார்கள். அங்கே முதன்மையுரிமை குறும்பர்களுக்குரியது. குறும்பாடு பலியாக அளிக்கப்பட்டு வந்தது. குறும்பர்கள் ஏற்கனவே கண்ணகியை வழிபட்டு வந்தனர். கண்ணகி சன்னதம் வந்து தோன்றும் குறும்பர்களின் பூசகர்  கொண்டைபோடப்படாமல் நீண்டு கிடக்கும் கூந்தல் கொண்டிருப்பார். காலில் சிலம்பு அணிந்து வளைந்த முனைகொண்ட பள்ளிவாளை ஏந்தி சன்னதம் வந்து துள்ளி ஆடுவார். பின்னர் செங்குட்டுவனின் ஆலயங்களில் நாயர்களில் ஒருபிரிவினர் வெளிச்சப்பாடாக மாறினர்.

பகவதிகள் மெல்ல துர்க்கையின் அம்சத்தை பெற்றன. பிராமணிய தாந்திரீக முறைப்படி வழிபடப்பட்டன. ஆனாலும் பகவதிகளின் இயல்பில் பழங்குடி அம்சம் இருந்துகொண்டே இருந்தது. பகவதிதான் அம்மைநோயை உருவாக்குபவள், கட்டுப்படுத்துபவள் என கருதப்பட்டது. அம்மை நோயிலிருந்து ஊரைக்காக்க வெளிச்சப்பாடு சன்னதம் துள்ளி பலி ஏற்றுக்கொண்டாகவேண்டும்.  இதைத்தவிர பகவதியின் கட்டுப்பாட்டில் உள்ள சில சிறிய தெய்வங்கள் உண்டு, கோமரங்கள் என்பார்கள். அவர்களையும் வழிபட்டு நிறைவுசெய்யவேண்டியவர் வெளிச்சப்பாடுதான்.

வடக்கே சில ஊர்களில் பெருவண்ணான் எனப்படும் சாதியினர் வெளிச்சப்பாடுகளாக இருக்கிறார்கள். இவர்கள் வேலன் என்றும் அழைக்கப்படுகிறார்கள். சங்ககாலத்தில் வேலன் வந்து வெறியாட்டு ஆடி குறிசொல்லி தீய ஆவிகளை விரட்டுவதாகச் சொல்லப்படுகிறது. அந்த வேலன் இவர்தான். தெய்யம்கெட்டு [தெய்வம்கெட்டு] என்னும் அனுஷ்டான கலையில் நாட்டார் தெய்வமாகவும் பகவதியாகவும் வந்து ஆடுபவர்கள் பெருவண்ணான்சாதியினர்தான். தெய்யம்கெட்டுக்கும் வெளிச்சப்பாடுக்கும் அணுக்கமான தொடர்பு உண்டு. தெய்வம் மனிதவடிவம் கொள்வது என்னும் கருத்துரு பொதுவானது.

நிர்மால்யம் படத்தில் பி.ஜே.ஆன்டனி வெளிச்சப்பாட்டின் உடல்மொழியை அற்புதமாக நடித்துக் காட்டியிருக்கிறார். பணிவும் கடுமையும் ஒருங்கே கலந்த நடையும் பேச்சும். தான் தேவியின் வெளிச்சப்பாடு என்னும் பெருமிதம், கூடவே வறுமையின் குறுகல். இத்தகைய இரட்டைநிலை கொண்ட கதைமாந்தரை மாபெரும் நடிகர்களே நிகழ்த்திக் காட்டமுடியும். படம் முடிவை நோக்கி நெருங்க நெருங்க அவர் நிமிர்வும் தோரணையும் கொள்வது மிகையே இல்லாமல் இயல்பாக வெளிப்படுகிறது.

Nirmalyam_2

இந்த சினிமாவில்தான் பின்னாளில் மலையாளத்தின் மையநடிகர்களில் ஒருவராக ஆன சுகுமாரன்[1948 –1997] அறிமுகமானார். இன்று அவருடைய மகன்களாகிய பிருத்விராஜும் இந்திரஜித்தும் கதாநாயகர்களாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள். சுகுமாரனின் சொந்த ஊர் எடப்பாள். அவர் திருவனந்தபுரம் பல்கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுகலைப் படிப்பில் தங்கமெடல் பெற்று வென்று நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். இந்த முதல்படத்திலேயே சுகுமாரனின் நடிப்பின் இயல்பு வெளிப்பட்டுள்ளது. கசப்பும் எள்ளலுமாக தான் சிக்கிக்கொண்ட மரபுசார்ந்த சூழலில் இருந்து திமிறிக்கொண்டிருக்கும் எம்.டியின் பல கதைமாந்தரை சுகுமாரன் திரையில் நடித்திருக்கிறார்.

இன்னும் இருவரை குறிப்பிடவேண்டும். பின்னாளில் தமிழில் புகழ்பெற்ற நடிகையாக மாறிய சுமித்ரா நடித்த இரண்டாவது படம் இது. முதல்படம் போஸ்ட்மேனே காண்மானில்ல. அதில் மிகச்சிறிய கதாபாத்திரம். இந்தப்படம் அவரை கதைநாயகியாக ஆக்கியது. ஓர் இந்திப்படத்தில் தலைகாட்டியிருந்த ரவிமேனன் நிர்மால்யத்தில் கோயில்பூசகராகிய இளம்நம்பூதிரி கதாபாத்திரத்தை நடித்து புகழ்பெற்றார். மலையாளத்தின் முக்கியமான நடிகராக மாறினார். சங்கராடி இப்படத்தில் கால் ஒடிந்த கதகளி ஆசானாக ஒரு சிறிய வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

அடூர் . அரவிந்தன் போன்றவர்களின் படங்கள் வெளிநாட்டு ரசிகர்களை நோக்கி எடுக்கப்படுபவை. அவர்களுக்கு புரியும் பண்பாட்டுக்கூறுகளே அவற்றில் இருக்கும். நிர்மால்யம் போன்ற படங்கள் முழுக்கமுழுக்க மலையாளிகளுக்காக எடுக்கப்படுபவை. மலையாள வாழ்க்கையின் நுணுக்கமான பண்பாட்டு உட்குறிப்புகள் நிறைந்தவை இத்தகைய படங்கள். ஒவ்வொரு சாதிக்கும் உரிய மொழிவேறுபாடுகள். உடல்மொழிகள். சமூகச்சூழலின் நுட்பங்கள். அவ்வகையில் மகத்தான காலப்பதிவு நிர்மால்யம்.

எந்த மாபெரும் புனைவெழுத்தாளரையும்போல எம்.டியும் வாழ்க்கையின் அடிப்படையான ஒருசில புதிர்களிலேயே மீண்டும் மீண்டும் முட்டிக்கொள்கிறார். வெவ்வேறு கோணங்களில் அதை அவிழ்க்க முனைகிறார். அவர் தன் வாழ்விலிருந்து பெற்றுக்கொண்டது அது. எம்டியின் கதைச்சூழல் எப்போதும் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தின் இறுதியில், நவீனகாலகட்டத்தால் மோதி அடித்தளம் உடைந்து மெல்ல மூழ்கிக்கொண்டிருக்கும் கிராமம்தான். இரண்டுவகை மனிதர்கள்தான் அங்கே. அதனுடன் முழுமையாகப் பிணைக்கப்பட்டு வேறுவழியில்லாமல் சேர்ந்து மூழ்குபவர்கள். வெவ்வேறுவகையில் அதிலிருந்து வெளியேறிச் செல்பவர்கள்.

இந்த இருவகையிலேயே பல நுட்பமான வேறுபாடுகள். இந்த சினிமாவில் வெளிச்சப்பாடு, மாரார் போன்றவர்கள் அங்கேயே மூழ்குபவர்கள். அவர்கள் உயிர்வெறியுடன் அந்த மூழ்கும் அமைப்பையே கெட்டியாகப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள். வெளிச்சப்பாட்டின் மனைவியும் மகளும் தப்ப விரும்புபவர்கள். ஆனால் அதற்கு வழியே இல்லை. கதகளி ஆசான் அதிலிருந்து உதைத்து வெளியேற்றப்படுபவர். அவர் தப்பலாம், மூழ்கி அழியவும்செய்யலாம். அந்த அமைப்பு மூழ்குவதை முன்னரே ஊகித்து மிகச்சாமர்த்தியமாக முதலீடுகளாக ஆக்கிக்கொண்டவர் பெரியநம்பூதிரி. அவருக்கு ஆலயம் வெறும்சுமை.

Nirmalyam.jpg.image.784.410

ஆலயத்தின் முதல் நம்பூதிரிப்பூசகர் தப்பிவெளியேறிவிட்டார். ஒரு ஓட்டல் நடத்துகிறார். இரண்டாவது பூசக நம்பூதிரி இளைஞன். தப்ப விரும்புபவன். அதற்கு முடிவதில்லை. வெளிச்சப்பாட்டின் மகன் வெளியேறிவிடுகிறான். வேட்டியை மடித்துக்கட்டி கசப்புடன் ஊரைப்பார்த்துவிட்டு கிளம்பிச்செல்லும் அவன் ஒருகாலகட்டத்தில் கேரளத்தின் வெளிமுகம். இந்தியா முழுக்க ஒற்றைபீடியுடன் வந்திறங்கி டீக்கடை முதல் பார்பர்ஷாப் வரை உருவாக்கி வாழ்க்கையை உருவாக்கிக்கொண்ட ’நாயர்களின்’ அடையாளம் அவன். வெளிச்சப்பாட்டின் மகன் அடுத்த ஐந்தாண்டுகளில் சென்னையில் ஒரு ‘நாயர் டீஷாப்’ உரிமையாளன் ஆகலாம். மும்பையில் ஒரு சோட்டாராஜன் ஆக மாறவும்கூடும்.

இந்த மிகப்பெரிய வாழ்க்கைச்சித்திரம் இரண்டேகால்மணிநேர சினிமாவுக்குள் வடிவ ஒருமையுடன் முழுமையாகவே அடக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் காட்சிகள் வழியாகவே அனைத்தும் சொல்லப்பட்டுள்ளது. தன் ஊருக்கு எல்லையில், அப்பாலுள்ள வெட்டவெளியை நோக்கி, தயங்கி நின்றுவிடுகிறாள் வெளிச்சப்பாட்டின் மகள். தொலைவிலிருந்து மெல்ல கிராமத்தை அணுகி மீண்டும் தொலைவுக்கே செல்கிறார் இளம் நம்பூதிரி. பெரும்பாலும் ஓசையில்லாமல் அணைந்துகிடக்கும் கிராமம் திருவிழாவால் கொந்தளிப்படைகிறது. உடைந்த ஆலயத்திற்குள் வெறித்த பார்வையுடன் பகவதி அமர்ந்திருக்கிறாள்.

இந்தப்படம் வெளிவந்தபோது. எனக்கு 11 வயது  . குமுதத்தில் இதன் மதிப்புரையை வாசித்த நினைவு. குமுதம் விமர்சகருக்கு இரண்டே விஷயங்கள்தான் இந்தப்படத்தில் சொல்லும்படியானதாகத் தெரிந்தன. கோயிலுக்குள்ளேயே பூசாரி இளைஞன் பெண்ணுடன் உறவுகொள்வது. இன்னொன்று அதன் கொந்தளிப்பான, சீண்டக்கூடிய உச்சகட்டம். இன்று இந்த சினிமா வெளிவந்திருந்தால் இவற்றுக்காக பெரிய எதிர்ப்பைச் சந்தித்திருக்கும். கதைநாயகனாக நடித்திருப்பவர் கிறிஸ்தவர் என்பது மேலும் வெப்பத்தைக் கிளர்த்தியிருக்கும். மிகச்சமீபத்தில் இந்து ஐக்யவேதி என்னும் குண்டர்படையின் தலைவியும் வெறுப்புமிழும் கீழ்த்தரப்பேச்சாளருமான சசிகலா டீச்சர் எம்.டி. இன்று அப்படத்தை எடுத்திருந்தால் தலை உருண்டிருக்கும் என பேசினார்

மதம்சார்ந்த புண்படுத்தல் ஒரு குற்றமாக இந்தியச் சட்டம் சொல்கிறது. நெடுங்காலமாக அதை இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களுமே சொல்லி சட்டநடவடிக்கையும் அரசியல் நடவடிக்கையும் எடுத்துவந்தனர். இன்று இந்து அமைப்புக்களும் அந்த வெறியை பெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்துக்கள் அப்படி இல்லையே என்றால் இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் மதம்சார்ந்து புண்படுவதை சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்தக் கெடுபிடி முதலில் கலையை அழிக்கும். காலப்போக்கில் வாழ்க்கையை இறுக்கமாக ஆக்கி செயலிழக்கச் செய்யும். தமிழ்ச்சூழலில் மதத்தை விமர்சனம் செய்யலாம், எந்தச் சாதியையும் சுட்டி எந்த முற்போக்காளரும் எதையும் விமர்சனமாகச் சொல்லிவிடமுடியாது [பிராமணர்களை என்னவேண்டுமென்றாலும் சொல்லலாம்] அவ்வாறு சாதி விமர்சனமின்றி விடப்பட்டதே இன்றைய சாதிய இறுக்கத்திற்கான அடிப்படைக் காரணம்.

nir

மதத்துடன் வாழ்க்கை பிணைந்துள்ளது, ஆசாரங்களாக, அன்றாட நம்பிக்கைகளாக. ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் விமர்சனம் செய்யாமல், மறுபரிசீலனை செய்யாமல் முன்னேற்றமில்லை. கலையின் அடிப்படை நோக்கமே அதுதான். விமர்சனம் இல்லாத இடத்தில் முதலில் அழிவதும் கலையே. ஆக்கபூர்வமான விமர்சனத்தால் மட்டுமல்ல எந்தவகையான கடுமையான விமர்சனத்தாலும் உண்மையிலேயே உள்ளீடு கொண்ட பண்பாடும் மதமும் அழிவதில்லை. விமர்சனங்கள் அவற்றின் சக்கையை அழித்து சாரத்தை வளர்க்கும்.

உள்நோக்கம் கொண்ட மதச்சிறுமைகள் கண்டிக்கப்பட வேண்டுமல்லவா என்று சிலர் கேட்கலாம். அப்படிக் கண்டிக்கப்போனால் முதலில் அதற்கு இரையாவது கலையாகவே இருக்கும், ஏனென்றால் கலைதான் மேலும் கூர்மையான விமர்சனத்தை முன்வைப்பது. கட்டற்றது. கலைஞன் எந்த அமைப்புவல்லமையின் பின்புலமும் இல்லாமல் தனித்து நிற்பவன். அவனைத்தான் மதவுணர்வு புண்படும் கும்பல் முதலில் இரையாக்கும்.

மதவுணர்வு புண்படுவதனால் தெருவிலிறங்கி அரசியல் செய்பவர்கள் முதலில் அழிப்பது பண்பாட்டுவிவாதங்களுக்கான வெளியை. நுண்ணிய தத்துவவிவாதங்கள் கூட பண்பாட்டுவிவாதங்களின் அடித்தளம் மீதுதான் நிகழமுடியும். இன்றிருந்திருந்தால் விவேகானந்தரும் நாராயணகுருவும்கூட அவருடைய கருத்துக்களுக்காக மதநிந்தனை வழக்குகளை எதிர்கொண்டிருப்பார்கள்.

இந்தியா இன்றுபோல சிந்தனைக் கெடுபிடி நிறைந்த ஒருகாலகட்டத்தைச் சந்தித்ததில்லை. எல்லா தரப்பும் கடுமையாக இறுகிவிட்டிருக்கின்றன. எப்போதும் மையப்பாதையை தெரிவுசெய்யும் கலை அனைவருக்கும் எதிரியாக கல்லடி வாங்குகிறது. நிர்மால்யம் ஒரு காலகட்டத்தின் குரல். என்றுமுள்ள மானுட இக்கட்டுகளின் கதை. அதைப்போன்ற ஒன்றை இன்றைய கெடுபிடிச்சூழல் கருவிலேயே  அழிக்குமென்றால் இந்தியாவின் அழிவேதான் அது

நிர்மால்யம் முழுப்படம். யூ டியூப்

நிர்மால்யம் உருவான விதம் 
நிர்மால்யம் இன்று எடுத்தால் என்ன ஆகும்? கமல்ஹாசன்
நிர்மால்யம் நினைவுகள் ராமச்சந்திர பாபு
முந்தைய கட்டுரைரயிலில்- கடிதங்கள் -8
அடுத்த கட்டுரைபரியேறும்பெருமாள் விழா -கடிதங்கள்