மலினப்பெருக்கு, மீம்ஸ் கலாச்சாரம்- கடிதங்கள்

face

 

 

சமூகவலைச்சூழலெனும் மலினப்பெருக்கு…

 

அன்புள்ள ஜெ

 

சமூகவலைத்தளம் என்னும் மலினப்பெருக்கு பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் உங்கள் கட்டுரை வந்தது.

 

நாங்கள் பேசிக்கொண்டிருந்தது இதுதான். தமிழில் பல்வேறு கலாச்சார அம்சங்கள் உள்ளன. வணிகசினிமா முதல் அம்சம், அதுதான் 90 சதவீதம். சாதியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இன்னொரு முக்கியமான அம்சம். மூன்றாவதாக சமயம் சார்ந்த ஈடுபாடு. நான்காவதாக இயற்கைநலவாழ்வு, ஆரோக்கியம் போன்றவற்றிலுள்ள ஈடுபாடு. இங்கே சித்தர்மரபு, வள்ளலார் என எப்போதும் சில பேசுபொருட்கள் உண்டு. அதோடு கொஞ்சம் சரித்திரம், சிற்பம், பயணங்கள் பற்றிய ஈடுபாடு.

 

மேலே சொன்னவற்றில் கொஞ்சம் பாஸிட்டிவான, சிந்தனைக்குரிய அம்சங்களும் உள்ளன. இந்த சிந்தனைக்குரிய அம்சங்கள் எங்காவது இணையத்தில் சமூக வலைத்தளத்தில் காணக்கிடைக்கின்றனவா? உண்மையில் இணையம் ஆரம்பித்தபோது மிகுந்த உற்சாகத்துடன் நல்ல அம்சங்கள்தான் வலையில் ஏறின. சைவம்.ஓர்ஜ் சைவ நூல்களையும் சைவத்தலங்களையும் முழுமையாகவே வலைப்படுத்தியது. மதுரைத்திட்டம் முழுமையாகவே தமிழ் மரபுசார்ந்த நூல்களை வலையேற்றி ஒவ்வொரு தமிழனும் நினைத்தால் விரல்தொடுகையில் தமிழின் எந்த ஒரு மாபெரும் இலக்கியமும் வந்து நிற்கும் நிலையை உருவாக்கியது. அழியாச்சுடர்கள் தொகுப்புகள் போன்ற தளங்கள் வழியாக  ஏராளமான புனைவிலக்கியங்கள் இலவசமாகக் கிடைக்க ஆரம்பித்தன. அத்தனை நவீன இலக்கியவாதிகளும் இன்று இணையத்தில் உள்ளனர்.

 

ஆரம்பத்தில் கொஞ்சமாவது இவற்றைப்பற்றிய கவனம் இருந்தது. சிறிய குழுக்களாக தமிழ்ப்பண்பாட்டுச் செய்திகளை வலையேற்றுவதெல்லாம் நடந்தது. ஆனால் சமூகவலைத்தளங்கள் உருவானதுமே வெறும் அரட்டை மட்டுமே அதில் நிகழ ஆரம்பித்தது. மேலே சொன்ன எந்த தளங்களிலிருந்தும் ஒரு வரிகூட எவரும் மேற்கோள் காட்டுவதில்லை. எவருக்குமே எந்த ஆர்வமும் இல்லை. மாறிமாறி வசைபாடுவது. ஊடகவெளியில் அறியப்பட்டவர்களை கேவலப்படுத்துவது. சினிமாவை நையாண்டிசெய்வது. அவ்வளவுதான். எல்லா தரப்பும் சமூக வலைத்தளத்தில் உள்ளன. எல்லா தரப்பிலிருந்தும் கேவலமான குரல்கள் மட்டுமே ஒலிக்கின்றன என்பதுதான் வருத்தம்.

 

சொல்லப்போனால் இணையம் ஆரம்பித்த புதிதில் சினிமா பற்றி பலபேர் எழுதினர். இப்போது அதுகூட இல்லை. வெறும் வசை, காழ்ப்பு. அதற்குத்தான் இந்த மீம்ஸ்கலாச்சாரம் என்று பெயர். அவ்வப்போது ஒருவரை பிடித்துக்கொள்வது. ஆனால் நீங்கள் சொல்வதுபோல அதில் சாதி மிக முக்கியமானது. அதோடு கட்சி. தமிழகத்தில் இந்த மீம்ஸ் கலாச்சாரத்தை திமுக மறைமுகமாக தன் இணைய அணி வழியாக முன்னெடுக்கிறது என்று குற்றச்சாட்டு உள்ளது. அதற்கு பெரிய பணம் செலவிடப்படுகிறது. ஆரம்பத்தில் இது சொல்லப்பட்டபோது நான் நம்பவில்லை. விஜயகாந்த், சீமான் போன்றவர்கள் கேவலப்படுத்தப்பட்டபோது வேடிக்கைக்காகச் செய்கிறார்கள் என்றுதான் நினைத்தேன்

 

ஆனால் இந்த மீம்ஸ்கலாச்சாரம் திமுகவின் பின்புலம் உடையது என்பதற்கான ஆதாரங்கள் சில உண்டு. இன்று பலரும் அதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஸ்டாலின் இந்தியக்குடியரசுதினம் பற்றி தேதியை மாற்றி மாற்றி உளறினார். அந்த அளவுக்கு விஜய்காந்த் உளறியதில்லை. ஆனால் விஜய்காந்த் பற்றி எவ்வளவு மீம்ஸ் வந்தன? ஸ்டாலின் பற்றி மீம்ஸே வரவில்லை. ஒன்றிரண்டுபேர் சொந்தமாகச் சிலவற்றைச் செய்ததோடு சரி. அவை டிரெண்ட் ஆக்கப்படவில்லை. வைரமுத்து மீடூவில் கேவலப்பட்டபோது இந்த மீம்ஸ் உலகம் வாயே திறக்கவில்லை. திமுக சார்பாளர்கள் ஒரு மீம்ஸ் போட்டு திட்டமிட்டு அதை பரப்பி டிரெண்டிங் ஆக்குகிறார்கள். இதை கருணாநிதி இறந்தபோது தங்களுக்காக அவர்கள் போற்றிப்பாடடி கலாச்சாரமாக ஆக்கிக்கொண்டார்கள். ஒருமாதம் இணையத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.

 

இதேபோல ஒரு வசைக்கலாச்சாரத்தை இணையத்தில் பாரதிய ஜனதாவும் முன்னெடுக்கிறது. தேசிய அளவில் மிகப்பிரம்மாண்டமாக இதைச் செய்கிறார்கள். அவர்கள்தான் திமுகவுக்கே முன்னோடி. ராகுல்காந்தியை ஒரு கோமாளியாகவே நாட்டின் கண்முன் நிறுத்திவிட்டார்கள். பப்பு என்ற பெயரிட்டு கேவலப்படுத்தினார்கள். தமிழகத்திலும் இவர்கள் செயல்படுகிறார்கள். ஆனால் திமுக அளவுக்கு வீரியமாக இல்லை. மூன்றாவதாக இதில் சி.பி.எம் ஒரு வகையில் செயல்படுகிறது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்களே லும்பன் மொழியில் எழுதிவருகிறார்கள். மீம்ஸ் போடுகிறார்கள், மீம்சை பகிர்கிறார்கள் மற்ற கட்சிகள் இதில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை.

 

இந்த மீம்ஸ் கலாச்சாரம், வசைக்கலாச்சாரம் நம்முடைய பொதுவெளியையே சீரழித்துவிட்டது. எதையுமே பேசமுடியாத நிலையை உருவாக்கிவிட்டது. இதன் விளைவுகள் மிகமிக கொடூரமானவை. இதைப்பற்றிப் பேசவேண்டுமென்றால் முகத்தில் துணிபோட்டு மூடிக்கொள்ளவேண்டிய நிலைமை. இணையத்தில் தமிழை வலையேற்றுவதில் நிறைய பங்காற்றியவன் நான். என் மனம் சோர்ந்துவிட்டது.

 

இதிலிருந்து மீட்சி ஒரே வழியில்தான் வரும். இதை வாசிப்பவர்கள் இது ஒன்றும் வேடிக்கையோ மனமகிழ்ச்சியோ அல்ல என உணரவேண்டும். இதை ஒருநாள் காலையில் வாசிப்பது நம் மனதை கலக்கி நம்மை எதிர்மறை மனநிலை கொண்டவர்களாக ஆக்கிவிடும் என உணரவேண்டும். அப்படி பெரும்பாலானவர்கள் ஒதுங்கிக்கொண்டால் மட்டுமே நம் பண்பாடு வாழமுடியும்

 

 

கே.

 

இனிய ஜெயம்

 

மலினப்பெருக்கு வாசித்தேன். நீங்கள் சுட்டிக்காட்டிய சரிவில் மூன்று தளங்கள் உண்டு ,மூன்று தளங்களிலும் மீள இயலா இடர் என ஒன்றுண்டு .முதல் தளம் சராசரிகள்.  இன்று சிவகுமாரை ‘கழுவி கழுவி ஊற்றிய ‘ ‘வச்சி செஞ்ச ‘ஆட்கள் யார் என்று பார்த்தால் மனதளவில் .இந்த வீ ஐ பி உடன் ஒரு நாள் ஒரே ஒரு சந்திப்பாவது நிகழ்த்திவிட மாட்டோமா என ஏங்கும் சராசரிகளே . அப்படி ஒரு ஆழ்மன விருப்பம் தங்களை அலைகளிப்பதை இத் தகு தருணத்தில் நேருக்கு நேர் இந்த சராசரிகள் காண நேர்கிறது .சராசரிகள் ஈகோ தூண்டப்பட்டு , பாதிக்கப்பட்டவன் நிலையில் தன்னை வைத்து உள்ளுக்குள் வெகுண்டு ,மீம்ஸ் போட வைக்கிறது .கவுண்டர் மணியையும் ,வடிவேலுவையும் பார்த்து வளர்ந்த வேற்று வேட்டு சராசரிகள் , மீம்சை கூட சொந்தமாக உருவாக்கும் படைப்புத் திறன் இன்றி, எப்போதும் தங்களை பின்னோட வைக்கும் கவ்வர்ச்சி  நடிகர்கள் கொண்டே அவர்களிடம் கடன் வாங்கி மீம்ஸ் போடுகிறார்கள் .சூர்யா தனக்கு என்ன நிகழக்கூடும் என அறிந்தே இதை எழுதி இருக்கிறார் .எனினும் அவர் அறியாத ஒன்று உண்டு ,இந்த விஷயத்தில் ‘வச்சி செய்யும் ‘சராசரிகள் ஒவ்வொருவரும் ,வேறொரு பொது வெளியில் சூர்யாவை காணும் போது,அடித்து பிடித்து முகம் பார்க்க ,சேர்ந்து செல்பி எடுக்க ஓடுவார்கள் .காரணம் இந்த சராசரிதான் சூர்யாவை மீம்ஸ் போட்டு தாக்கியவர் என சூர்யாவுக்கு தெரியாது இல்லையா ?  இந்த சராசரிகளின் தளம் முதலாவது .

 

இரண்டாவது தளம் ,இந்த சமூகத்தில் ‘கருத்தியல் பாதிப்பு ‘ஒன்றை தன்னால் நிகழ்த்த இயலும் என்று நம்பி செயல்பட்டு ,அத்தகு ஆற்றல் எதுவும் தனக்கு இல்லை என கண்டு கொள்ளும் எளிய அறிவு ஜீவிகள் . [இதையே துள்ளிப்பார்க்கும் புழு பாம்பாகிவிடாது , படமெடுக்கவில்லை என்பதால் பாம்பு புழுவாக ஆகிவிடாது என்றொரு உரையாடலில் ஜெயகாந்தன் சொன்னார் ] .இதக்கு எளிய அறிவு ஜீவிகள் சுற்றி சூழ சூழ நடக்கும் எதிலும் ,தனது கருத்துக்கள் கொண்டு எந்த பாதிப்பையும் நிகழ்த்த முடியவில்லை என திட்டவட்டமாக தெரிந்த பின்பு , சராசரிகளின் உலகத்துக்கு கருத்தில் தாக்கம் செய்ய திரும்பி விடுகிறார்கள் . இந்த அறிவு ஜீவி எதையேனும் சொல்வார் , அடடே அறிவு ஜீவியே சொல்லிட்டாரே என , சம்பதப்படத்த்யும் வாசிக்காமல் அது சார்ந்து அந்த எளிய அறிவு ஜீவி சொன்னதையும் வாசிக்காமல் , சராசரிகள் அதை ஷார் செய்து கொண்டும் ,லைக்கிக்கொண்டும் இருப்பார்கள் .இந்த ஷேர் லைக் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்வதே இந்த எளிய அறிவு ஜீவிகள் மேற்கொள்ளும் பயணம் இது இரண்டாவது .

 

மூன்றாவது  ஹீலர்பாஸ்கர் ,தோழர் வே மதிமாறன் வகையறா .இவர்கள் பேக்குத்தனத்தை மறுத்தால் போச்சு ,இவர்கள் சமகால கலக கண்மணிகள் ஆகி விடுவார்கள் .யு ட்யுப் வந்து தாக்கும் ரேட்டிங் எகிறும் அதன் வழியே விளம்பர வருமானம் வேறு தனி . மறுக்காவிட்டால் அதுவும் போச்சு சமகால ‘புரட்சிகர சிந்தனையாளர்கள் ‘ஆகி விடுவார்கள் .இவர்கள் பேசும் பேக்குத்தனம் முழுதும் மறுக்க இயலாத ஒன்று ஆகவேதான் யாராலும் மறுக்க இயலவில்லை .ஆகவே மறுக்க இயலா உண்மையை முன்வைக்கும் இத்தகு பேக்குகள் ,சராசரிகளை பேக்காக்கி மேலெழுந்து வரும் ஆளுமைகள் .இது மூன்றாவது தளம் .

 

இந்த மூன்று தளத்திலும் எந்த நிலையிலும் அறிவார்ந்த கருத்தியல் உரையாடல் சாத்தியமே இல்லை .காலக் கொடுமை இன்று வலிமையாக இயங்கிக் கொண்டிருப்பது இந்த மூன்று தளங்கள் மட்டுமே .

 

கடலூர் சீனு

 

முந்தைய கட்டுரைதிராவிட இயக்கம் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைரயிலில்- கடிதங்கள் -8