பிரதமன் கடிதங்கள் 7

Pazhayidom

 

பிரதமன்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

 

உங்கள் சமீபத்திய சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது பிரதமன். எனக்கு மிகவும் பிடித்த சுவைகளில் ஓன்று பிரதமன். என் அம்மா வைக்கும் பிரதமனை விட என் அக்காவின் மாமியார்  வைப்பது எனக்குப் பிடிக்கும். அதற்க்குக் காரணம் அவர் சரியாக சேர்க்கும் அந்த தேங்காய்ப்பால் தான் போல.  இதை படித்தவுடன் பிரதமனின் வாசம் மெல்ல எழுந்து வந்தது.

 

இயல்பாகவே மனம் இந்த கதையை அயினிப்புளிக்கறி கதையுடன் ஒப்பிடுவதை தவிர்க்கமுடியவில்லை.

ஆனால் இந்த கதை அதன் மறுஎல்லை. அயினிப்புளிக்கறியில் பாலப்பன் ஆசான் ஒற்றை சுவையில் தொற்றி நிற்பவர்; பிரதமனின் வேலு ஆசான் எல்லாவற்றிலும் சுவையை அறிந்தவர். மேலும் இது ஒரு கலைஞனின் கதை, அவர் எப்போதும் அந்த கோட்டுக்குமேலே நிற்கிறார். அதனால்தான் அவள் இவரை வந்து தொட்டுப் பார்த்துவிட்டு சென்றுவிடுகிறாள், அவர் அதை ஒரு சுவையாக/மணமாக மாற்றிக் காட்டுகிறார். பாலப்பன் அப்படி அல்ல அவர் அவளுக்காக காதிருந்திருந்திருக்கிறார்.  அவள் வந்ததும் அள்ளி எடுத்துக்கொள்கிறார். இவர் எல்லாவற்றையும் சுருக்கி ஒரு சுவையில் கொண்டு முடிகிறார், அவர் சுவையிலிருந்து சுவையென மேலும் விரிந்து அறிகிறார்.

 

மேலும் எனக்கு தனிப்பட்ட முறையில் இவ்வகையான முடிவுகளே மனத்திற்கு அதிகமும் நெருக்கமாய் இருக்கிறது. பெரிய திருப்பங்கள் இல்லாமல் ஆனால் பூடகமாக, ஒரு கவிதை போல் எண்ணங்களை கிளர்த்தும் தருணங்களை வாசகனுக்கு கடத்தும் இந்த வகையான முடிவுகள். தெய்வம் மட்டுமே அறியும் அந்த வாசனை எழும் தருணம்.

 

நன்றி ஜெமோ மேலும் ஒரு அற்புதமான கதைக்கு.

 

(புதிதாக படிக்க விருப்பும் எனது ஆன் நண்பர்களுக்கு அறம் சிறுகதையும், பெண்கள் கேட்டால் வெண்கடல் தொகுப்பும் வாங்கிக்கொடுப்பது எனது வழக்கம். இந்த கதையை வெண்கடல் தொகுப்பில் சேர்க்கலாம்)

 

 

அன்புடன்

ஆனந்த்

 

sat

அன்புள்ள ஜெ

 

பிரதமன், ஆனந்தியின் அப்பா இரண்டு கதைகளையும் என் மனசுக்குள் ஒருங்கே தொகுத்துக்கொண்டேன். இரண்டுக்கும் இடையே ஓர் ஒற்றுமை உள்ளது. இரண்டு மாஸ்டர்களும் செய்வது ஒன்றைத்தான். ஆனந்தியின் அப்பா கதையில் எடிட்டர் சொல்கிறார். இந்தப்பூமியிலுள்ள பொருட்களுக்கு எந்தவகையான அர்த்தமும் இல்லை என்று. அந்தப்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும்போதே அர்த்தம் வருகிறது. அவர் காட்சிகளைத் தொகுத்துத் தொகுத்து அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார். அதேபோலத்தான் ஆசானும். இங்கே உள்ள பலவகையான பொருட்களைக் கலந்து சுவைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். எடிட்டர் ஒரு காட்சித்துளியை உருவாக்குகிறார். ஆசான் பிரதமனை உருவாக்குகிறார். இரண்டும் இரண்டு வகையான உச்சங்கள். The are brewing the essence என்று சொல்லலாம். அதுதான் கலைஞர்களின் வேலை. இரண்டு கலைஞர்களைச் சந்தித்த உணர்ச்சி ஏற்பட்டது. இரண்டும் இரண்டு வகையில் அழகான கதைகள். Metaphysical and artistic என்று தோன்றியது.

 

 

எஸ்.கிருஷ்ணன்

 

பிரதமன் -கடிதங்கள்1

பிரதமன் -கடிதங்கள்2

பிரதமன் கடிதங்கள் 3

பிரதமன் கடிதங்கள் 4

பிரதமன் கடிதங்கள் 5

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-8
அடுத்த கட்டுரைநீலத்தாமரை