ரயிலில்- கடிதங்கள் -9

train2

ரயிலில்… [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

தங்களது ‘ரயிலில் ‘  சிறுகதை படித்தேன் .  தங்களின் நிறைய  சிறுகதைகள், ரப்பர் , கன்யாகுமரி , பின்தொடரும் நிழலின் குரல் , காடு, இப்படி சொல்லிக்கொண்டே போவேன்.  ஆனால் இந்த ரயிலில் சிறுகதை அப்படியே வேறு ஒரு வடிவில் என்  பள்ளி பருவ வாழ்க்கையில் என் குடும்பத்திற்கு நேர்ந்தது .  என் குடும்பத்தை பற்றிய ஒரு சிறு சித்திரத்தை கூறா விட்டால், எனக்கு எப்படி இந்த கதை பொருந்தும் என்று தோன்றி விடும் .

 

என் தாத்தா ஓரளவிற்கு நிறைய சொத்துக்கள் சேர்த்திருந்தார்.  அவர் வயதாகி சாவதற்கு முன்பாகவே என் தந்தையும் , அவரது தம்பியும் பெரும்பாலான சொத்துக்களை விற்று அழித்திருந்தனர் .  எனக்கு விபரம் தெரியும் போது, போடிநாயகனுரில் நான்கு சிறிய வீடுகள் அடங்கிய ஒரு காம்பௌண்ட் வீடும் , மூணாறில் ஒரு கடையும் இருந்தது. (எங்கள் கடை மாட்டுக்கறி விற்பனை செய்யும் கடை)  என் தந்தை நலமாக உள்ளார்,  இப்பொழுது 75 வயதிற்கு மேல் இருக்கும், இதுவரை அவர் வேலைக்கு சென்றதோ அல்லது ஒரு தொழிலோ செய்தது கிடையாது.  இந்த நான்கு  வீடுகளையும் அவர், வேறு நான்கு நபர்களுக்கு ஒத்திக்கு விட்டிருந்தார் .  என் ஏழாவது வயதில் மொத்த குடும்பத்தையும் (என்னுடன் சேர்த்து ஆறு பிள்ளைகள் ) வாழ வழியில்லாமல் போடியில் இருந்து திருநெல்வேலியில் உள்ள என் அம்மா வீட்டிற்க்கு அருகில் ஒரு வாடகை வீட்டிற்கு மாற்றினார்.  கடையை ஒரு முஸ்லீம் நபருக்கு வாடகைக்கு விட்டுருந்தார் .

 

இந்த நாட்களில் நாங்கள் கடுமையான வறுமையில், என் அம்மாவை பெற்ற எங்கள் தாத்தாவின் தயவில் வாழ்ந்து கொண்டிருந்தோம்.  என் அப்பா வாடகை வாங்கி வருகிறேன் என்று மூணாறுக்கு செல்வார்.  இரண்டு மாதம் கழித்து தான் வருவார்.  தன் மாமனாரின் (என் அம்மாவின் அப்பா )கேவலமான வசவுகளை தாங்க முடியாமல், ஒரே வருடத்தில் மொத்த குடும்பத்தையும் திரும்பவும் போடிக்கு அழைத்து வந்தார்.  நான்கு வீடுகள் போடியில் இருந்தும் (எல்லாம் ஒத்தியில் அல்லவா உள்ளது ) ஒரு உறவினர் வீட்டில் வாடகைக்கு இருந்தோம் .  என் தந்தையை போல் ஒரு வாய் சொல் வீரரை இது வரை நான் கண்டதில்லை.  என் தாயை போல் ஒரு அன்பான வெகுளியும் ஏமாளியுமான ஒருவரையும் நான் கண்டதில்லை.

 

அந்த உறவினரின் ஆலோசனையின் பேரில், மூணாறில் எங்கள் கடையை வாடகைக்கு நடத்திக்கொண்டிருந்த அந்த முஸ்லீம் நபரிடம் இருந்து (இந்த நபர் வாடகையே கொடுக்காமல் என் தந்தையை ஏமாற்றிக்கொண்டிருந்தார் ) இந்த உறவினர் பல தகிடு தந்தங்கள் செய்து அந்த முஸ்லீம் நபரிடம் இருந்து மீட்டார் .  இருவரும் சேர்ந்து கடையை நடத்துவதாக திட்டம் .  சிலமாதங்களிலேயே அவர் என் தந்தையிடம்

போடிக்கும் மூணாறுக்குமாக நீங்கள் அலைய வேண்டாம், நான் மாத மாதம் உங்கள் குடும்பம் நடத்துவதற்கு தேவையான பணத்தை கொடுத்து விடுவதாக கூறி, வாடகை ஒப்பந்தம் போல ஏதோ போட்டு, என் தந்தையை ஏமாற்றி விட்டார் .

 

என் பால்ய வயதில் கடுமையான வறுமைக்கு இடையில் என் தாயார் வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்களை அடகு வைத்தும் விற்றும் (1980 களில் சற்று வசதி உள்ளவர்கள், பாத்திரங்களை அடகு பிடித்து கொண்டு பணம் தருவார்கள் ) எங்களை படிக்க வைத்து, எங்கள் அப்பாவையும் சேர்த்து வளர்த்து கொண்டிருந்தார்கள் .  என் அப்பா விசித்திரமான குணங்கள் கொண்டவராக இருந்தார்.  சிறு பிள்ளைகளான நாங்கள் பசியால் துடித்து கொண்டிருந்தாலும் , அவர் வீட்டின் ஒரு மூலையில் படுத்து தூங்கி கொண்டிருப்பார்.  பள்ளிக்கூடத்திற்கு நோட்டா அல்லது வருடத்திற்கு ஒரு முறை கட்டும் பள்ளி கட்டணமோ கேட்டால், யாரும் பள்ளிக்கூடத்திற்கே செல்ல வேண்டாம் என்பார் .  என் தாயார் கோபத்தில் செத்து போகிறேன் என்பார் , அதற்கு என் தந்தை ‘சாகணும்னா சாகு , நீ செத்தால் ஒன்றும் சுடுகாடெல்லாம் எலும்பாகி விடாது ‘ என்பார் .

 

அவர் தன் வாழ் நாளில் பெரும் பகுதியில் செய்தது என்னவென்றால் இந்த உறவினரிடம் வாடகை வாங்க போடிக்கும் மூணாறுக்குமாக பஸ்ஸில் அலைந்தது தான் .  நான் பத்தாவது படிக்கும் காலத்தில், பல முறைகள் நானும் இந்த வாடகையை வாங்க போடிக்கும் மூணாறுக்குமாக பஸ்ஸில் அலைந்துளேன்.  ஏனென்றால் என் அப்பா வாடகை வாங்க போனால், இந்த உறவினர் என் அப்பாவிற்கு குடிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் பணம் கொடுத்து, அதை வாடகையிலும் கழித்து கொண்டு , இழுத்தடிப்பார்.

 

அன்று பலமுறை நான் 20 ரூபாய் செலவழித்து மூணாறு சென்று வெறும் 100 ரூபாய் மாத்திரம் வாடகையில் பெற்றுக்கொண்டு வந்திருக்கிறேன்.  கடும் குளிரில் மூணாறில் இருந்து போடி வர அப்பொழுதெல்லாம் மூன்றரை மணிநேரம் ஆகும் .

 

இந்த உறவினர் வாரவாரம் மாடு கொள்முதல் செய்வதற்காக மூணாறில் இருந்து போடிக்கு தன் வைப்பாட்டி வீட்டிற்கு வருவார் .  காலையில் 7 மணிக்குள் அவரை பார்க்க விட்டால் பின் வாடகையில் ஒரு சிறிய பகுதியேனும் பெற முடியாமல் போகும் .  அவர் பலமுறை என் தாயிடம் “காலையில் உன்னை பணம் கேட்டு வரக்கூடாது என்று சொல்லியிருக்கேன்ல ‘, என்பார் .  எனக்கு அந்த வயதில் அந்த அவமானத்தின் வலி தெரியவில்லை .

 

பின் ஒரு நாள், என் அப்பாவையும் அம்மாவையும் இந்த உறவினர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஏதோ ஒரு விசேஷத்திற்கு அழைத்து சென்றார்.  இருவரும் திரும்பி வந்து எங்களிடம் (என் அக்கா தங்கைகளிடம்) ஒரு பத்திரத்தின் ஜெராக்ஸ் காகித்தை கொடுத்து, கடையை அந்த உறவினர் பேருக்கு மாற்றி கொடுத்து விட்டதாகவும், அவர் தான்  உயிர் உள்ளவரை வாடகை கொடுப்பதாக உறுதியளித்ததாகவும் எங்களிடம் கூறினார் .

 

பின் சிலமாதங்களில் எங்களுக்கும் அந்த கடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் போனது.

 

இதெல்லாம் கடந்து பல வருடங்களுக்கு பிறகு மேற்படி உறவினரின் மகள், தன் மகளை எனக்கு மணமுடித்து தர விரும்புவதாக கூறி வந்தார் .  என் தாயார் அதற்கும் சம்மதித்து, என் விருப்பத்தை கேட்டார் .  நான் என் தாயாரிடம் ஒரே வரியில் கூறினேன் ,’நம்மை ஏமாற்றியவனின்  குடும்பத்தில் திருமணம் செய்ய அவ்வளவு மானம் கெட்டவனில்லை நான் .’

 

இந்த உறவினர் சில வருடங்களுக்கு முன் இறந்து போனார் .  இப்பொழுது அந்த கடையை அவர் மகன் தின வாடகைக்கு விட்டு  ஒரு நாளைக்கு ரூ .1000/- மேல் சம்பாதித்து கொண்டிருக்கிறார் .

 

எனக்கு இப்பொது 47 வயது .  இன்றும் என் சகோதர சகோதிரிகளிடம் பேசிக்கொள்ளும் சமயங்களில் அந்த ஏமாந்த சொத்து இருந்தால் நம் பால்ய காலம் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும் என்று ஏங்குவோம் .என் ஏமாளியான தந்தையிடம் பறிக்க பட்ட சொத்து யாருக்கோ அனுபவிக்க கொடுத்து வச்சுருக்கு .

 

வாடகை  கொலையாளிக்கு கூட அவன் செயலுக்கு அவனுக்கான நியாயம் இருக்கும் போலும் .  அடுத்தவன் சொத்தை அபகரிபவனுக்கும் அவனுக்கான நியாயம் இருக்கவே செய்யும் .

 

இந்த கதை என்னை பாதித்தது நியாயம் தானே !!!!!!!!!!!

 

 

அன்புடன்

 

பா .சரவணகுமார்

நாகர்கோவில்

 

 

அன்புள்ள ஜெ

 

ரயிலில் சிறுகதையும் அது உருவாக்கிய எதிர்வினைகளும் மிக முக்கியமான ஆவணங்கள் என நினைக்கிறேன். நாளை இந்தக்கதையை வாசிக்கும்போது இந்த எதிர்வினைகளையும் கருத்தில்கொள்ளவேண்டும். ஏனென்றால் அவற்றில் பெரும்பாலான கடிதங்களில் உண்மையான வாழ்க்கையின் ஒரு சித்திரம் உள்ளது. வாழ்க்கை என்றால் என்ன என்பதைப்பற்றிய சித்திரம் அது. கொடுப்பவன் எடுப்பவன் என்ற ஆடுபுலி ஆட்டம் எப்படி நம் சூழலில் நடந்துகொண்டே இருக்கிறது என்பதை அது காட்டுகிறது

 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயங்கள் என்ரெல்லாம் சொல்லிக்கொள்லலாம். ஆனால் சிலவிஷயங்களுக்கு நியாயமே கிடையாது வந்து உறுத்திக்கொண்டேதான் இருக்கும் என்று சொன்ன அபாரமான கதை இது

 

கணேசமூர்த்தி

 

ரயிலில், கடிதங்கள் -6

ரயிலில்,பிரதமன் -இரு கடிதங்கள்

ரயிலில் -கடிதங்கள்-4

ரயிலில் கடிதங்கள் 5

ரயிலில்- கடிதங்கள் 3

ரயிலில் கடிதங்கள் -2

 

 

முந்தைய கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அகாடமி விருது
அடுத்த கட்டுரைவெளிச்சப்பாடு- கடிதம்