ரயிலில்… [சிறுகதை]
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களின் ரயிலில் சிறுகதையை படித்தேன்.
ரயிலுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு என்ன, ஏன் ரயில் என்ற களத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள், மற்றும் ரயிலி(ல்) என்ற தலைப்பு ஏன் வந்தது. எனது கண்ணோட்டத்தை நான் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
நான் படித்து சிலிர்த்துப்போன “ஒரு கோப்பை காபி” க்கு அடுத்து இந்த சிறுகதை என்னை மிகவும் யோசனையில் ஆழ்த்தியது. அதில்,
“பால்செம்பை தூக்கி அவர்மேல் அடித்திருக்கிறாள்” என்ற வரியில் என்னே ஒரு அர்த்தம். இத்தனை வருடமாக black coffee என்ற பெண்மையில், பால் எனும் தன் ஆண் ஆதிக்கத்தை செலுத்திய அந்த கணவனை நோக்கி ஒருநாள் ஏதோ ஒரு வெறியில் உன் ஆதிக்கத்தை இனிமேல் என்னிடம் செலுத்தாதே என்று தூக்கி எறிய, அவர் பால் சோம்பு மேல் விழுந்த வலியில் சாகவில்லை, தான் இத்தனை வருடமாக அவளிடம் செலுத்திய ஆதிக்கம் இப்போது மொத்தமும் அழிந்துவிட்டதை தாங்கமுடியாத வலியில் இறந்துவிட்டார்.
அதேபோல்,
இந்த சிறுகதையை படிக்கும்போது என் வாழ்வில் நடந்த முக்கியமான ஒரு தருணத்தை மீண்டும் நியாபகப் படுத்தியது. எனது பொறியியல் கல்லூரி இறுதியாண்டில் ஒரு பெண்ணிடம் நட்பு ஏற்ப்பட்டது. அவள் அதே கல்லூரியில் வேறொரு பிரிவு படித்தால். ஒருவாரம் நாங்கள் நன்றாகப் பழகினோம், அந்த ஒருவாரத்தில் அறிமுகமானோம், நட்பானோம், மனதால் உணர்வுகளை பகிர்ந்தோம். என் மனது அவளை விரும்பியது, அவள் மனமும் அதை ஏற்றுக்கொண்டது. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் இறுதியில் அவளிடமிருந்து.
“தயவுசெய்து இனிமேல் என்னுடன் பேசாதே. நீ இப்படிப்பட்டவன் என்று நினைக்கவே இல்லை “I feel shame on you”.
என்ற ஒரு குறுஞ்செய்தி மட்டும் கிடைத்தது. அதன்பிறகு அவளை எவ்வளவோ முயற்சித்தும் தொடர்புகொள்ள முடியவில்லை.
பின்பு, கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப்பின் அவளை சந்திக்கும் சந்தர்ப்பத்தை இந்த ரயில் தான் ஏற்ப்படுதிக்குடுத்தது. வேறு எங்கேயாவது சந்தித்திருந்தால் கண்டிப்பாக விலகிச்சென்றிருப்பாள். ராமேஸ்வரத்தில் இருந்தது சென்னைக்கு செல்லும் தொடர்வண்டியில் நான் ஒரு இருக்கையை பதிவு செய்து அதில் பயணம் செய்தேன். அன்றுதான் திருச்சியில் அவள் ஏறினால்…
கூடவே அவள் கணவனும் ஏறினான்…!
அப்போது அதைக்கண்ட என்னாலும் விலகிச்செல்ல முடியவில்லை.
என் எதிர் இருக்கையில் அமர்ந்த அவளை பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. பின்பு நாங்கள் கண்களால் எங்கள் கோவத்தை பரிமாறினோம்.
“கோவம் உச்சக்கட்ட நிலையில் அடுத்தநொடி சமாதானத்தையோ அல்லது ஆறுதலையோதான் அடையும்”.
அதில்தான் தெரிந்தது அவள் வேறொருவனுக்கு பதில் என்னை தவறுதலாக அப்போது புரிந்துகொண்டால் என்று. இதுவரை ஆனபிறகு என்ன செய்வது, காலமும் பின்னால் செல்லாது. வேறு வழியின்றி அவளால் அழத்தான் முடிந்தது.
இந்த சந்தர்ப்பம் அப்பவே கிடைத்திருந்தால் வாழ்வே மாறியிருக்கும். இதில் எனக்கொரு நிம்மதி. என்னவள் மனதில் இப்போது நான் மீண்டும் இடம் பிடித்துவிட்டேன் அதுபோதும் என்று…
அதேபோல்தான் சாமிநாதன் மற்றும் முத்துசாமியின் இந்த ரயில் பயணம்.
வெளியில் இருந்து பார்க்கையில், மனித வாழ்வைப்போல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயில். ஆனால் ரயிலின் உள்ளே சற்று அமைதியான நிலவரம். இதேபோல் அவர்கள் உள்ளே இருக்கும் மனதின் நியாயத்தால் சற்று யோசித்துப் பேசியிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது.
அந்த ஓடும் ரயிலுக்கு தெரியும் முடிவில் எங்கு போய் நிற்க்கும் என்று. பாவம் அன்று அவர்களுக்கு தெரியவில்லை இந்த்த பிரச்சனை எங்குபோய் முடியும் என்று.
பரந்த உலகில், மனிதர்கள் ஒருவருக்கொருவர் நின்றுபேசவே நேரம் கிடைப்பத்தில்லை. அதிலும் அவர்கள் முதலிலே தங்கள் வெறுப்பைத்தான் காமித்துவிட்டுச் செல்கிறார்கள். ஆனால் இந்த ரயில் எனும் குறுகிய உலகில் வேறெங்கும் செல்ல வழியில்லை. இதிலும் தங்கள் ஒட்டுமொத்த வெறுப்பையும் முதலில் பரிமாறுகிறார்கள். பின் அனைத்தும் ஓய்ந்ததும் அடுத்த கட்டமாக ஒருவருக்கொருவர் தங்கள் வேதனையை ஆறுதாலாக சொல்லி பரிமாறிக்கொள்கிறார்கள்.
பின்பு இந்த கதைக்கு வந்த கடிதத்தில், ஒவ்வொருவரும், என் வாழ்விலும் இதேபோல் பிரச்சனை. எங்களையும் ஒருவர் ஏமாற்றிவிட்டார்கள். என்ற அவர்களின் ஆதங்கத்தை உணரமுடிந்தது. அப்படி அவர்கள் வாழ்வில் ஒரு மறக்கமுடியாத நிகழ்வின் நினைவுகளை ஏற்ப்படுத்துவது மட்டும் இந்தக் கதையின் நோக்கம் அல்ல.
என்னுடைய கண்ணோட்டத்தில் நான் பழகிய நண்பர்கள் உறவினர்கள் சுற்றுவட்டம் முக்கால்வாசிபேர் தன்னை ஒருவன் (உறவு, நட்பு, அல்லது பழகியவர்கள்) ஏமாற்றிவிடாதாக கூறுகிறார்கள். எவரும் இதேபோல் நானும் ஒருவரை இப்படி ஏமாற்றிவிட்டேன் என்று நினைத்து வருந்துவதோ சொல்வதோ இல்லை.
இதன் நோக்கம், இந்த கதையின்மூலம் நானும் ஒருவனை இதேபோல் ஏமாற்றிவிட்டேன் என்று குரூரமான ஒரு உண்மையை ஏற்று வருந்துவதுதான்.
ஏனென்றால் மனிதமனம் எப்போதுமே. தான் செய்த குற்றங்களை வேறொருவன் செய்த குற்றத்துடன் ஒப்பிட்டு. அவனைவிட நான் செய்தது ஒன்றும் பெரிய தவறு இல்லை என்று அப்பட்டமாக தன்னை நியாப்படித்திக் கொள்ளத்தான் முயலும்.
“இதிலே நியாய அநியாயம் பாத்தா முடியுமா? நம்ம பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்கணும். நாம அதைத்தானே பாக்க முடியும்?” என்று முத்துசாமி கேட்டார்”.
“சாமிநாதன் “உண்மைதான்” என்றார் பின்னர் இட்லியை எடுத்து மடிமேல் வைத்து பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தார்”.
இந்த வரியில் அடங்கும் அர்த்தம்தான் அது. என்று எனது எண்ணம்.
அன்புடன்
கா.மயில்ராஜா.
‘ரயிலில்‘ ஒரு மகாபாரதக் கதையாடல்.
‘ரயிலில்’ – சிறுகதை பல கேள்விகளை நமக்கு எழுப்புகிறது. ஒருவர் மூலமாக நமக்கு ஒரு தீங்கு எற்பட்டால் அதை நேரான வழியில் சரிசெய்ய முடியாது போகும்போது நாம் என்னதான் செய்ய வேண்டும்? தீங்கு செய்தவனை அப்படியே விட்டுவிடுவது அல்லது அத்தீங்கே தனக்கு நடக்காததாக பாவித்துக்கொண்டு மறந்துவிடுவது என்பது ஒருவருக்கு இயல்வதா? அப்படி அந்த ஒருவரை விட்டுவிடுவது அறமாகுமா? அப்போது அறம் தோற்றுவிட்டதாக ஆகிவிடாதா? தீங்கு செய்த ஒருவரின் மேல் நமக்கு வஞ்சம் எழுவதை எப்படி தடுக்க முடியும். அந்த வஞ்சத்தின் காரணமாக நாம் அவருக்கு தீங்கு ஏற்படுத்த நினைப்பது சரியென்று ஆகுமா? ஒருவன் செய்த தீங்கைச் சரி செய்ய நாம் முயலும்போது அது தமக்கும் தீங்களிப்பதாக இருப்பதால் அதை கைவிட்டுவிட வேண்டுமா அல்லது சகித்துக்கொள்ள வேண்டுமா? இப்படி நாம் எடுக்கும் எதிர் நடவடிக்கை எதிராளிக்கும் அவனைச் சார்ந்தவருக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்துமென்றால் அது நம்முடைய தவறு என ஆகுமா?
இத்தகைய கேள்விகள் ஒவ்வொரு குற்றம் நடத்தப்பட்டு ஒருவர் துன்பமடையும்போதும் தாம் இப்போது என்ன சேயாவேன்டும் என நினைப்பவர் மனதில் தோன்றுபவையாக உள்ளன. ‘ரயிலில்’ சிறுகதை எழுப்பும் இதே கேள்விகள் மகாபாரதத்தில் தருமனுக்கு துரியோததனால் இழைக்கப்பட்ட குற்றத்தின்போதும் எழுந்தவைதான்.
சாமிநாதன் தந்தைக்கும், முத்துசாமியின் தந்தைக்கும் இடையிலான பிரச்சினை தருமன் துரியோதனன் இடையேயான் பிரச்சினையைப்போன்றதுதான். முன்னதில் ஒரு வீட்டு மணை பின்னதில் ஒரு நாடு. துரியோதனன் தான் ஆண்ட நாடு தனக்கே சொந்தம் என்கிறான். மற்றவர் கூறும் நெறிகளை ஏற்பதில்லை. முத்துசாமி தந்தையும் அப்படியே சாமிநாதன் தந்தைக்கு வீடு உரிமையானது என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்கிறார்கள். இத்தனை நாள் தான் குடியிருந்ததால் எனக்கே உரிமையானது என்கிறார்கள். தருமருக்கு, பீஷ்மர், துரோணர் போன்றவர் நிறைந்த அஸ்தினாபுர அவை நியாயம் செய்யாததைப்போலவே அரசு காவல் நிலையம் சாமிநாதனுக்கு நீதி அளிக்காமல் விடுகிறது. பதிநான்கு வருட வனவாசத்திற்கு ஒப்பானதாக நீதிமன்ற வழக்கில் சாமிநாதன் குடும்பத்தினர் அல்லல்படுகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் முத்துசாமி ஏற்றுக்கொள்ளாது போதல் துரியோதனன் வனவாசம் திரும்பி வந்த பாண்டவர்களுக்கு நாடுகொடுக்க மறுப்பதைப்போன்றதாகிறது. அப்புறம் ஒரு முரடன் கையில் முத்துசாமி குடும்பம் சிக்கி அழிதல் போரில் துரியோதனன் தன் தம்பியரை பிள்ளைகளை நண்பர்களையெல்லாம் இழந்து அடையும் பெருந்துயரத்தை நினைவூட்டுகிறது.
தருமனுக்கு பேரழிவுதரும் ஒரு போரை நடத்துதல் அவருக்கு மனதில் பெரும் குற்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கும் . இருப்பினும் அவர் போரை நிகழ்த்துகிறார். வெற்றி பெற நெறி மீறல்கள்தான் ஒரே வழி என்றால் வேறு என்னதான் செய்ய முடியும் என்று உடன்படுகிறார். அவர் போரின் பேரழிவுக்கு பிறகு ஒரு அரசனென முடிசூட்டிக்கொள்வதை தவிர்ப்பதில்லை. சாமிநாதனும் இதைப்போன்ற மன நிலையை தானும் கொண்டு தன்னுடைய குற்ற உணர்வை தவிர்த்துக்கொள்கிறார்.
இப்படி சிந்தித்துவிட்டு சிறுகதையை மறுபடியும் வாசிப்பது எனக்கு மேலும் பல புரிதல்களை அளிப்பதாக இருக்கிறது. மகாபாரதக்கதை எப்போதோ எழுதப்பட்டு ப்ல்லாண்டுகாலமாக வாசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மனிதர்கள் அதிலிருந்து தமக்கான பாடத்தைக் கற்றுக்கொள்ளமல் இருப்பதால் அந்தக் கதை மீண்டும் மீண்டும் பல்வேறு அளவுகளில் பல்வேறு வடிவங்களில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஒருவகையில் பார்த்தால் ரயிலில் சிறுகதை மகாபாரதத்தை ஒரு குறுவடிவில் சுருக்கி அளித்திருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.
தண்டபாணி துரைவேல்
ரயிலில், கடிதங்கள் -6
ரயிலில்,பிரதமன் -இரு கடிதங்கள்
ரயிலில் -கடிதங்கள்-4
ரயிலில் கடிதங்கள் 5
ரயிலில்- கடிதங்கள் 3
ரயிலில் கடிதங்கள் -2