ஆனந்தியின் அப்பா- கடிதங்கள்

chilks

ஆனந்தியின் அப்பா சிறுகதை

 

ஹலோ சார்,

“ஆனந்தியின் அப்பா” இரண்டாம் முறை படித்துவிட்டு எழுதுகிறேன். அப்படி ஒரு சினிமாவை edit செய்ய கதைசொல்லியைத் தூண்டியது எது என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன். அதுபோலவே alzimer இல்லாவிட்டால் ஆனந்தி தன்னுடைய அப்பாவை இந்த அளவுக்கு விரும்பியிருப்பாரா என்றும். ஆனால் ஒன்று, வாசகர்களை அரூபமாகக் கொண்டுபோய் பாத்திரங்களுக்கு நடுவே இறக்கி விட்டு விடுகிறீர்கள். நாங்களும் கதாபாத்திரங்களையும் ஆசிரியனையும் வெகு அருகே தரிசிக்க முடிகிறது. கதைசொல்லிக்கும் மகேஷுக்கும் நடக்கும் உரையாடல் கதையின் முக்கியமான பகுதி. அதேபோல் கதை எங்கு முடியவேண்டுமோ அங்கு முடிந்து விடுகிறது. உங்களுடைய கதை எதுவும் உங்கள் பழைய கதைகள் எதையும் ஞாபகப்படுத்துவது இல்லை. ஒவ்வொன்றும் புதிய கதை. புதிய களம். புதுப் புது மனிதர்கள். “வெண்முரசு ஓடிக்கிட்டிருக்கும் போதே கைப்புள்ளை இந்தப் போடு போடுறாரே..வெண்முரசு முடிஞ்சாச்சுன்னா நமக்கு ஒரே கொண்டாட்டம் தான்னு சொல்லு..” என்று என்னைப் போன்ற சிறுகதை ரசிகர்களின் mind voice கேட்கிறது. இந்தத் தக்குனூண்டு கடிதத்தை எழுதவே அரை மணி நேரம் ஆகிறது, நீங்கள் வெண்முரசுக்கு நடுவில் இத்தனை பெரிய கதைகளை எழுதி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. சந்தேகமென்ன? அதிமானுட எழுத்தாளர்தான்.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

 

ch

ஆசிரியருக்கு,

உலகம் ஒரு வாடகை வீடு யாருடைய யார்
இதில் வசிப்பது.

– குஞ்சுண்ணி

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இக்கவிதையை நான் வாசித்திருக்கிறேன், அது ஞாபகத்தில் எங்கோ மங்கிவிட்டது, ஆனந்தியின் அப்பா படித்து முடித்தவுடன் கனத்து கண்முன் வந்து நிற்கிறது.

இந்த உலகமே ஒரு மாபெரும் எடிட்டிங் டேபிள் என தோன்றியது, நாம் பொதுவாகவே நம்முடன் தொடர்புடைய உறவுகளையும் நட்புகளையும் துண்டான சித்திரங்கள் வழியாக ஒழுங்கமைத்துக் கொள்கிறோம், இதில் அவர்கள் நம்மிடம் காட்டிய பாவனை, நமது அதிக அல்லது குறையுடைய அவதானிப்பு, மற்றும் சிறிதளவு உண்மை என கலந்தே இருக்கும். ஆகவே மனிதர்களை எப்பொழுதும் முற்றாக அறியவே முடியாது என்பது எனது கொள்கை.

ஒரு பொருளை அறிய அதை சுருக்கிக் கொண்டே சென்றால் அதன் அணு எண் கிடைக்கும், அது அப்பொருளின் அடிப்படைப் பண்பு. ஒரு நிறத்தை அறிய அதை மங்க வைத்து கொண்டே சென்றால் இறுதியாக கருப்பு வெள்ளைக்கு சென்று விடும், அது அப்பொருளின் அடிப்படை நிறம். இது போலவே தான் ஒரு நபரை அறிய அவரை மங்க வைத்துக்கொண்டோ அல்லது சுருக்கிக் கொண்டோ சென்றால் இறுதியில் எஞ்சுவது அவருடைய பாவனை, உடல் மொழி மற்றும் அவருடைய அசல் கூறு ஏதேனும் ஒன்று. அதற்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா என்பது பதிலளிக்க முடியாத ஒரு கேள்வி. ஒரே சமயத்தில் இருக்கவும் செய்யும் இல்லாமலும் இருக்கும்.

ஆனந்திக்கு தனது தந்தை ஸ்ரீராமின் ஞாபகம் தொலைதூரத்திற்கு செல்ல செல்ல அந்தச் சித்திரமும் மங்கிக் கொண்டே செல்கிறது, இறுதியில் அவருக்கு கிடைத்தது அவர் தக்கவைத்துக்கொண்டது ஒரு கோட்டோவியம் மட்டுமே. அதில் சென்று கவித்துவமாக கலக்கிறார்.

ஞாபகம் ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுது நாம் புரிந்துகொள்ளும் முகம் பலகீனமானது எனவும் நமது ஞாபகம் மங்கிக்கொண்டே செல்லும் பொழுது நமக்கு கிடைக்கும் சித்திரம் அசலானதாக இருக்கக்கூடும் எனவும் சற்று அதிர்ச்சிகரமாக எண்ண வைக்கிறது இக்கதை.

படைப்பாளியின் கலாம்சம் என்பது வெளிநிற்கும் வாழ்க்கை துணுக்குகளில் இருந்து அவன் தேர்வு செய்து கொள்வதா, உள்ளிருந்து வெளியே படைப்பதில் உள்ளதா அல்லது இரண்டுமேவா என்கிற கேள்விக்கு உண்மை என்பது நாம் வெளியில் இருந்து துண்டாக சேகரித்து கொள்வதா, உள்ளிருந்து வெளியே புனைந்து கொள்வதா அல்லது இரண்டுமேவா என்கிற கேள்வியை பதிலாக அளித்துள்ளது ஆனந்தியின் அப்பா.

வியக்கத்தக்க தருணங்களை கொண்டுள்ள சமீபத்திய வெண்முரசு, பிரதமன், ஆனந்தியின் அப்பா போன்ற வரிசையான வண்ண வண்ணமான கதைகள் என உங்கள் படைப்பின் உச்சத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள், அது சரியாமல் நிலைபெற எனது பிரார்த்தனைகள்.

கிருஷ்ணன்,
ஈரோடு.

ch2

 

அன்புள்ள ஜெ

ஆனந்தியின் அப்பா அழகான ஒரு நவீனக் கவிதை போல் இருந்தது. சுருக்கமாக அப்பா மகளுக்கான ஈர்ப்பு என்று சொல்லிவிடலாம். ஆனால் மகள் தேடுவது எதை என்ற கேள்வி இருக்கிறது. அப்பாவின் சாராம்சத்தை. அது வாழ்க்கையில் வெளிப்படவில்லை. அவர் வாழ்க்கையில் பொய்யாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய அந்த பிம்பத்திலுள்ள பொய்யை நீக்கி உண்மையைக் கண்டடைய அந்த மகள் முயன்றுகொண்டே இருக்கிறாள்.

ஆகவேதான் அவளுக்கு அப்பாவின் சினிமாக்கள் ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. அவர் மறைந்தபின் அந்த சினிமாக்களிலிருந்து அப்பாவை மீட்டெடுக்க அவள் முயல்கிறாள். அதிலிருந்து அப்பாவின் டப்பிங் குரலை அவள் நீக்குவது அந்த உண்மை அப்பாவை மீட்பதற்காகவே. அதைப்புரிந்துகொண்ட எடிட்டர் அப்பா அல்லாத எல்லாவற்றையும் வெட்டி நீக்கி உண்மை அப்பாவை கொண்டுவருகிறார். ஆனந்தி அவர் தேடியதை அடைந்துவிட்டாள். பல அடுக்குகள் கொண்ட அழகிய கதை.

எம்.ராஜேந்திரன்.

முந்தைய கட்டுரைரயிலில் கடிதங்கள்-7
அடுத்த கட்டுரைவாக்கும் தாரையும்