சுபாகு புரவியில் ஏறி முட்டித் ததும்பிக்கொண்டிருந்த படைகளினூடாக விரைந்து துரியோதனனின் படைப்பகுதியை அடைந்தான். அவன் புரவியிலிருந்து இறங்கியதுமே அவனை நோக்கி வந்த துச்சலன் “மூத்தவர் பிதாமகர் வீழ்ந்த இடத்திற்கு சென்றுள்ளார்” என்றான். அவன் திரும்பி நோக்க “வடக்கு எல்லையில்… படைகளின் விளிம்பில்” என்றான் துச்சலன். அவனுக்கு முன்னால் கௌரவப் படைகளை பாண்டவர்களின் படைகள் கடல்பாறையை அலைகள் என வந்து அறைந்துகொண்டிருந்தன. “வெறிகொண்டு தாக்குகிறார்கள். பீமசேனர் உக்ராயுதனையும் துர்விகாகனையும் பாசியையும் கொன்றுவிட்டார். நம் மைந்தர்கள் கீர்த்திமானும் கீர்த்திமுகனும் நீரஜனும் நிரலனும் களம்பட்டுள்ளனர்” என்றான் துச்சலன்.
“பிதாமகரைக் கொன்றதை கொண்டாடுகிறார்கள்!” என்றான் துர்மதன். “இல்லை, அனைத்து அறங்களையும் கடந்துவிட்டதை கொண்டாடுகிறார்கள்” என்ற சுபாகு “நான் மூத்தவரிடம் செல்கிறேன்” என்று புரவியில் ஏறிக்கொண்டான். காலபதனும் புசனும் கொல்லப்பட்ட செய்தியை முரசுகள் முழங்கின. அவன் புரவியை படைகள் நடுவே செலுத்தினான். “எதிர்கொள்க! பீமனையும் மைந்தரையும் இணைந்து எதிர்கொள்க!” என்று சகுனியின் முரசொலி எழுந்தது. தருணனும் தமனும் அதரியும் வீழ்ந்தனர். சுபாகு பெருமூச்சுவிட்டான். அவன் துரியோதனனின் அரவுக்கொடியை தொலைவில் நோக்கியபோது உக்ரசிரவஸும் உக்ரசேனனும் கொல்லப்பட்டதை முரசு கூறிக்கொண்டிருந்தது. பீஷ்மரின் படுகளம் கௌரவப் படைகளால் சூழப்பட்டிருந்தது. அங்கிருந்த பாண்டவப் படைகள் விலகி வேறு இடங்களில் குவிந்து தாக்கிக்கொண்டிருந்தனர். அர்ஜுனன் போர்முனையில் இல்லை என்று தெரிந்தது.
சுபாகு புரவியிலிருந்து இறங்கி பீஷ்மரின் படுகளம் நோக்கி சென்றான். விவித்சுவும் துர்விமோசனும் கொல்லப்பட்டதை முழங்கிக்கொண்டிருந்தது முரசு. அவனை எதிர்கொண்ட துச்சாதனன் “எங்கிருந்து வருகிறாய்? என்ன நடக்கிறது?” என்றான். “மூத்தவரே, பாண்டவப் படையும் பீமனும் களிவெறிக்கொண்டு எழுந்து வந்து நம்மை தாக்குகிறார்கள். நம் உடன்பிறந்தாரும் மைந்தரும் வீழ்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் சுபாகு. “கௌரவ மூத்தவர்கள் எழுக! பீமனை தடுத்து நிறுத்துக!” என்று சகுனியின் ஆணையை ஒலித்தது முரசு. துச்சாதனன் அங்கே பீஷ்மரின் உடலருகே குனிந்து நின்றிருந்த துரியோதனனை நோக்கி ஓடிச்சென்று “மூத்தவரே, நாம் களம் சென்றாகவேண்டும். இளையோர் மறைந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான்.
துரியோதனன் கைவீசி “நாம் இங்கிருந்தாக வேண்டும். பிதாமகரை கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது. பகதத்தரும் பால்ஹிக பிதாமகரும் சென்று அவர்களை எதிர்கொள்ளட்டும்!” என்றான். கௌரவ மைந்தர்களான துராசதனும் வீரஜிஹ்வனும் வீரதன்வாவும் வீரபாகுவும் களம்பட்ட செய்தியை முழவுகள் கூறின. கௌரவர்கள் அலோலுபனும் அபயனும் பீமனால் கொல்லப்பட்டார்கள் என்று முரசு கூறியபோது துச்சாதனன் “மூத்தவரே, படுகொலை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. பிதாமகரைக் கொன்ற களிவெறியில் அவர்கள் நம்மை அழிக்கிறார்கள்!” என்றான். கீழே பீஷ்மரை தொட்டுநோக்கிக்கொண்டிருந்த மருத்துவன் நிமிர்ந்து நோக்கி “உயிர் எஞ்சியிருக்கிறது” என்றான்.
துரியோதனன் திகைப்புடன் “உயிருடனிருக்கிறாரா? மெய்யாகவா?” என்றான். மண்ணில் முழந்தாளிட்டுக் குனிந்து பீஷ்மரின் செவிகளில் “பிதாமகரே! பிதாமகரே, நான் உங்கள் மைந்தன், துரியோதனன்!” என்றான். பீஷ்மர் “நீயா?” என மெல்ல முனகினார். “குருதியும் குடியும் காப்பவனே நல்லரசன்… மைந்தா, வஞ்சத்தைவிட, மண்ணைவிட, நெறிகளைவிட, அறத்தைவிட, தெய்வங்களைவிட குலம் வாழ்வதே முதன்மையானது” என்றார். அவர் சொல்வதை சரியாக புரிந்துகொள்ளாமல் துரியோதனன் “தந்தையே! மூதாதையே!” என்றான். சுபாகு “மூத்தவரே, நாம் பிதாமகரை மருத்துவநிலைக்கு கொண்டுசெல்லவேண்டும்” என்றான். “எப்படி அவரை தூக்குவது? அவர் உடலில் அம்பு தைத்திருக்காத இடமே இல்லை” என்றான் துச்சாதனன்.
சுபாகு “முதுமருத்துவர்களை கொண்டுவருவோம்… அவர்கள் ஏதேனும் சொல்வார்கள்!” என்றான். துரியோதனன் “செல்க, முதுமருத்துவர் வஜ்ரரை உடனே அழைத்து வருக!” என்றான். திரும்பி சுபாகுவிடம் “பிதாமகர் உயிருடனிருப்பது விந்தை. இத்தனை அம்புகளுக்குப் பின்னரும்!” என்றான். “அவர் இறக்க விழையவில்லை, மூத்தவரே. முதியவர்கள் சிலர் அவ்வாறு இறக்க விழையாமல் மண்ணில் தங்கியிருப்பதுண்டு” என்றான் சுபாகு. “எத்தனை அம்புகள்!” என துரியோதனன் மீண்டும் வியந்தான். “முழு விழைவுடன் தொடுக்கப்பட்ட அம்பு ஒன்றுகூட இல்லை என்பதே அவர் இறக்காமலிருப்பதன் பொருள்” என்றான் சுபாகு.
பீஷ்மர் மயக்கத்தில் “ஆனால்” என முனகினார். “என்ன சொல்கிறார்?” என்று துரியோதனன் கேட்டான். பீஷ்மர் மீண்டும் “ஆனால்…” என்றார். துரியோதனன் துச்சாதனனை நோக்க அவன் “புரியவில்லை… வேறேதோ எண்ணத்தின் நீட்சி” என்றான். “ஆனால்… ஆனால்” என்றார் பீஷ்மர். சுபாகு புன்னகைத்தான். “என்ன? என்ன?” என்றான் துரியோதனன். “ஒன்றுமில்லை” என்றான் சுபாகு. “சொல், மூடா… என்ன எண்ணினாய்?” என்றான் துரியோதனன். “ஒன்றுமில்லை, மூத்தவரே. ஒரு குறுக்கு எண்ணம்” என்றான் சுபாகு. “அவர் வாழ்க்கையை ஒற்றைச் சொல்லில் சுருக்கிக்கொண்டாரோ என…” துரியோதனன் “என்ன சொல்கிறாய்?” என்று முகம் சுளித்தான். “வெற்று எண்ணம், பொருளற்றது” என்றான் சுபாகு. “அறிவிலி” என்று துரியோதனன் முகம் திருப்பிக்கொண்டான். பீஷ்மர் மீண்டும் ஆழ்ந்த முனகலோசையை எழுப்பினார்.
அப்பால் ஆணைமாடங்களிலிருந்து முரசுகள் களநிகழ்வுகளை சொல்லிக்கொண்டிருந்தன. நிலைகுலைந்திருந்த துரியோதனன் “என்ன? என்ன அறிவிப்பு?” என்றான். “பகதத்தரும் பால்ஹிகரும் களம்செல்கிறார்கள். அபிமன்யூவை பூரிசிரவஸும் ஜயத்ரதரும் சேர்ந்து எதிர்க்கிறார்கள்” என்றான் சுபாகு. “நன்று. நம் இளையோர் பின்னகரட்டும்… இன்று அவர்கள் வெறியாடுவார்கள்” என்றான் துச்சாதனன். துரியோதனன் பொருளிலா விழிகளுடன் அவனை நோக்கினான். அவன் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தான். பற்களை இறுகக் கடித்துக்கொண்டிருந்தமையால் தாடை அசைந்தது. கழுத்துத் தசைகள் நெளிந்தன. துச்சாதனன் “இன்று அவர்கள் இருளில் வீழ்ந்துவிட்டனர். இனி அவர்கள் எதை வென்றாலும் இழுக்கே” என்றான். துரியோதனன் அவனை விளங்கா விழிகளுடன் நோக்க “ஆணிலியை முன்னிறுத்தி போரிடுதல். படைக்கலம் தாழ்த்தியவரை கொல்லுதல். கீழ்மை!” என்றான். துரியோதனன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் தலைமட்டும் ஆடியது.
சகட ஓசை கேட்டது. மருத்துவர் வஜ்ரர் விரைவுத்தேரில் வந்திறங்கினார். கூன்விழுந்த உடலுடன் அவர் விரைவடி எடுத்துவைத்து வர அவருக்குப் பின்னால் அவருடைய மாணவர்களான இரண்டு மருத்துவ உதவியாளர்கள் மூங்கில் பெட்டிகளுடன் வந்தனர். அவர் துரியோதனனுக்கு தலைவணங்கி “செய்தியை சற்று முன்னர் அறிவித்தனர். களம்பட்டார் என்றே முழவுகள் சொல்லின. ஆகவே நான் இங்கு எவரையும் அனுப்பவில்லை. பொறுத்தருளவேண்டும்” என்றார். “களம்பட்டார் என்றே எண்ணினோம். உயிர் எஞ்சியிருப்பது விந்தைதான்” என்றான் துச்சாதனன். பீஷ்மரை அதன் பின்னர்தான் வஜ்ரர் பார்த்தார். அதிர்ந்து ஓரடி பின்னகர்ந்த பின் “அவரா?” என கைசுட்டினார். “அவரேதான். தெய்வங்களே, உயிர் இருக்குமென்றால் அது இறையாடல் அன்றி வேறல்ல!”
சுபாகு “உயிர் இருக்கிறது, பேசுகிறார்” என்றான். வஜ்ரர் விரைந்து பீஷ்மரின் அருகே சென்று முழந்தாளிட்டு அமர்ந்து இடக்கை பற்றி நாடிநோக்கி “சீரடி… மூன்று நாடிகளும் முற்றிலும் ஒத்திசைந்துள்ளன. உயிர் பழுதின்றி உடலில் திகழ்கிறது!” என்றார். “ஆனால்…” என்றார் பீஷ்மர். வஜ்ரர் திடுக்கிட்டு அவர் உதடுகளை பார்த்துவிட்டு “உயிர் எப்படி தங்கியிருக்கிறது என்பது பெருவிந்தை!” என்றார். சுபாகு “அம்புகள் உயிர்நிலைகளை தொடவில்லை போலும்” என்றான். “இல்லை, அத்தனை உயிர்மையங்களிலும் அம்புகள் தைத்திருக்கின்றன” என்ற வஜ்ரர் “ஆனால் இங்கே குருக்ஷேத்ரத்திற்கு வந்த பின்னர் நான் வியப்படைவதை விட்டுவிட்டேன்…” என்றார்.
“இங்கிருந்து பிதாமகரை கொண்டுசெல்லவேண்டும். மருத்துவநிலைக்கு சென்ற பின் அத்தனை மருத்துவர்களும் வந்தமர்ந்து அவரை நோக்கட்டும். அவர் எழுந்துவரவும் கூடும்” என்றான் துரியோதனன். வஜ்ரர் மீண்டுமொருமுறை நாடியை நோக்கிவிட்டு “அரசே, அது இயல்வதல்ல. அவர் உடலில் அம்புகள் இடைவெளியில்லாமல் தைத்துள்ளன. உயிர் ஒரு மெல்லிய விந்தையாக ஓடிக்கொண்டிருக்கிறது. அரிதான ஒரு சுடர் அது. விளக்கமுடியாத எதனாலோ எரிகிறது. விளக்கவே முடியாதபடி அணைந்துவிடவும் கூடும். நாம் இங்கிருந்து அவரை அகற்றவே முடியாது” என்றார். “பிறகு என்ன செய்வது? இந்தக் களத்தில்…” என்றான் துரியோதனன்.
“அரசே, இது முகக்களம் அல்ல. போர் இப்போதே தெற்கே நகர்ந்துவிட்டது. அவர்களிடம் சொல்க, இது பிதாமகரின் படுகளம் என! நாளை முதல் போர் தெற்கே நிகழட்டும். அவர் இங்கேயே இவ்வண்ணமே இருப்பதே நன்று. உண்மையில் அது ஒன்றே இயல்வது” என்றார் வஜ்ரர். துரியோதனன் துச்சாதனனை நோக்க “அது உகந்ததே, மூத்தவரே. இது களமல்ல” என்றான். துரியோதனன் “ஆணையிடுக!” என்று கைகாட்டினான். சுபாகு “இங்கேயே ஓர் மருத்துவநிலையை அமைக்கலாம்” என்றான். வஜ்ரர் சில கணங்கள் எண்ணிவிட்டு “அதை அவர் விழைவாரா என தெரியவில்லை. அவரிடமே கேட்கிறேன்” என்றார். “அவர் உளத்தெளிவுடன் இல்லை” என்றான் சுபாகு. “ஆம், ஆனால் ஆத்மன் இப்போதுதான் உள்ளத்தின் தடையில்லாமல் சொல்கூர்வான்” என்றார் வஜ்ரர்.
வஜ்ரர் பீஷ்மரின் செவியில் “பிதாமகரே, இங்கே தங்களுக்கு மேல் கூரை தேவையா?” என்றார். “பிதாமகரே, செவிகூர்க! இங்கே கூரை தேவையா?” அவர் மீண்டும் மீண்டும் கேட்க துரியோதனன் அதிலிருந்த பொருளின்மையைக் கண்டு பொறுமையிழந்தான். அவன் ஏதோ சொல்லத் தொடங்குவதற்குள் பீஷ்மர் “விண்மீன்கள்!” என்றார். “ஆம்” என்றபின் வஜ்ரர் எழுந்துகொண்டு “அவர் விண்மீன்களின் கீழ் படுக்க விழைகிறார்” என்றார். சுபாகு “எண்ணினேன்!” என்றான். துரியோதனன் “ஏன்?” என்று அவனிடம் கேட்டான். அவன் விழிகள் சிவந்து கலங்கியிருக்க உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன. “மூத்தவரே, இறப்பவர்கள் விண்மீன்களுக்குக் கீழே படுத்திருக்கவே விழைகிறார்கள்” என்றான் சுபாகு. “அவர் இறக்கமாட்டார். அவர் இறப்பற்றவர்” என்று துரியோதனன் கூச்சலிட்டான். சுபாகு ஒன்றும் சொல்லாமல் வெறுமனே நோக்கினான். “அறிவிலிகள்!” என்று துரியோதனன் திரும்பிக்கொண்டான்.
வஜ்ரர் “அரசே, தாங்கள் இங்கே இருக்கவேண்டியதில்லை. நாங்கள் எங்கள் பணியை ஆற்றுகிறோம். தாங்கள் சென்று தங்கள் பணியை ஆற்றுக!” என்று கடுமையான குரலில் சொன்னார். “பிதாமகரின் உயிர் போக விழைந்தால் அதற்கான வாசலை திறந்து கொடுப்போம். தங்க விழைந்தால் இந்தப் பீடத்தை அதற்கென ஒருக்குவோம். எங்கள் தொல்மரபு துணைநிற்கட்டும்!” துரியோதனன் ஏதோ சொல்லவந்த பின் தலையசைத்தான். சுபாகு துச்சாதனனை நோக்கி விழியசைத்தான். துச்சாதனன் “மூத்தவரே, இங்கே நாம் இருந்து ஆவதொன்றுமில்லை. பிதாமகர் சாகவில்லை என்ற செய்தியை உங்கள் அறிவிப்பாக படையினர் அறியட்டும். அது இக்களத்தில் நம்மை வீழாமல் காக்கும். யானை மீதேறி நீங்கள் களம்புகுந்தால் இன்றும் நாமே வெல்வோம்” என்றான்.
துரியோதனன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். திரும்பி சுபாகுவை நோக்கி “நீ இங்கேயே இரு. நாழிகைக்கொருமுறை பிதாமகர் எவ்வண்ணமிருக்கிறார் என்னும் செய்தி என்னை வந்தடைய வேண்டும்” என்றபடி கிளம்பினான். அவன் நடை தளர்ந்திருப்பதை சுபாகு வெறுமனே நோக்கிக்கொண்டு நின்றான். துரியோதனன் தேரிலேறிக்கொண்டான். துச்சாதனன் சுபாகுவிடம் “நற்செய்தி மட்டும்” என்றபின் தானும் சென்று தேரில் ஏறிக்கொண்டான். தேர் குலுங்கி அதிர்ந்து கிளம்பிச்சென்றது. சுபாகு திரும்பி மருத்துவரிடம் “அவரை தங்களிடம் ஒப்படைத்துள்ளோம், மருத்துவரே. இயன்றதை செய்க!” என்றான்.
வஜ்ரர் “இப்போது செய்யவேண்டியது பிதாமகரை சரியாக படுக்க வைப்பது. அவர் உடலில் எங்கென்றில்லாமல் அம்புகள். சிறிய புல்லம்புகளே பல உள்ளன” என்றார். “அம்புகளை பிழுதெடுக்க முடியுமா என்றுதான் பார்த்தேன். இத்தனை அம்புகளை பிடுங்கினால் புண்வாய்களிலிருந்து வழியும் குருதியே அவரை கொன்றுவிடும். அம்புமுனைகளையே குருதியை அடைக்கும் தடையாக நிறுத்திக்கொள்ளலாமென நினைக்கிறேன்” என்றார். கூர்ந்து நோக்கியபடி பீஷ்மரை சுற்றிவந்தார். “பெரும்பாலான அம்புகள் இரும்புக்கூர்களில் மரத்தண்டு பொருத்தப்பட்டவை. சற்றே உருகிய நெய்விட்டால் அவற்றை தனியாக பெயர்த்து எடுத்துவிட முடியும். ஆனால் எப்படி படுக்கவைப்பது? மென்மயிர்ச் சேக்கையிலானாலும் இந்த அம்புப்புண்கள் அழுந்துமே.”
அவருடைய மாணவர்களில் ஒருவன் தாழ்ந்த குரலில் “அதற்கொரு வழி உள்ளது” என்றான். “என்ன?” என அவர் விழிதூக்கினார். “முன்பு வத்ஸநாட்டு அரசர் சுவாங்கதருக்கு பெரிய கட்டிகள் உடலெங்கும் வந்து புண்ணாயின. அன்று எங்கள் நிலத்து மருத்துவர் ஒருவர் அவரை முட்படுக்கையில் படுக்க வைத்தார். நூற்றெட்டு நாட்கள் அப்படுக்கையில் கிடந்து அவர் நோய்நீங்கினார்” என்றான். வஜ்ரர் கேள்வியுடன் நோக்கிக்கொண்டிருக்க “முதுகில் புண்கள் இருந்த இடங்களை கணக்கிட்டு புண்களின் நடுவிலூடாக ஊன்றும்படி ஆயிரத்தெட்டு முட்களை நிறுத்தி அவற்றின்மேல் அவரை படுக்கச் செய்தார். முட்கள் மிகச்சரியான உயரம் கொண்டிருந்தால் உடலில் அவை தைப்பதில்லை. நாமும் அவ்வண்ணம் ஒன்றை இங்கே உருவாக்கலாம்” என்றான்.
வஜ்ரர் “ஆம், முயன்று பார்க்கலாம். முறையாக படுத்தாலே அவர் உடலின் வலி பெரும்பாலும் குறைந்துவிடும்” என்றார். “இங்கே களமெங்கும் மெல்லிய உறுதியான நீளம்புகள் சிதறிக்கிடக்கின்றன. இவற்றை நாட்டியே நாம் அவ்வண்ணம் ஒரு படுக்கையை உருவாக்கிக்கொள்ள முடியும். ஆணையிட்டால் நானே செய்கிறேன்” என்றான். வஜ்ரர் திரும்பி சுபாகுவிடம் “தென்றிசையில் தமிழ்நிலத்தைச் சேர்ந்தவன். அவர்கள் இசையிலும் மருத்துவத்திலும் தெய்வங்களால் தனித்து பயிற்றுவிக்கப்பட்டவர்கள்” என்றார்.
சுபாகு “ஆனால் அம்புகள் மேல்…” என்றான். “அரசே, நூற்றுக்கணக்கான அம்புமுனைகளாலான கண்ணுக்குத் தெரியாத வலை அது என்று உணர்க! அதன்மேல் உடல் அழுந்துகையில் பலநூறு இடங்களிலாக உடல் எடை பகிரப்படும். காற்றில் மிதக்கும் எடையின்மையை பிதாமகர் உணர்வார்” என்றான் மாணவன். வஜ்ரர் “முட்காலணியில் நின்றிருப்பீர்கள், அதைப்போல” என்றார். “ஆகுக!” என்றான் சுபாகு. மாணவன் தலைவணங்கினான். சுபாகு “உன் பெயர் என்ன?” என்று கேட்டான். “சாத்தன்” என்று அவன் மறுமொழி சொன்னான். வஜ்ரர் “அவன் பெயர் ஆதன். இருவருமே தென்றிசையினர். அகத்திய மரபினர்” என்றார். சுபாகு பெருமூச்சுவிட்டான். பின்னர் நினைத்துக்கொண்டு புன்னகைத்தான். வஜ்ரர் வினாவுடன் நோக்க “நெடுநாட்களுக்கு முன்பு எங்கள் குலமூதாதை விசித்திரவீரியரை நோக்க தென்றிசையிலிருந்து சாகா நிலைகொண்ட சித்தராகிய அகத்தியர் வந்தார் என ஒரு கதை உண்டு” என்றான்.
அவர்கள் இருவரும் மிக விரைவாக செயல்பட்டனர். வஜ்ரர் பீஷ்மரின் முதுகிலும் இடையிலும் கால்களிலும் இருந்த அம்புகளின் எண்ணிக்கையையும் இடங்களையும் கணக்கிட்டு அதை அருகே தரையில் ஓர் அம்புமுனையால் வரைந்தார். ஆதன் அங்கே சிதறிக்கிடந்த நீண்ட அம்புகளை பொறுக்கி சேர்த்தான். சாத்தன் நூற்றெட்டு நீண்ட அம்புகளை நிலத்தில் இறக்கி நாட்டினான். அருகே கிடந்த கதை ஒன்றால் அவற்றை அறைந்து இறுக்கி நிறுத்தியபின் பீஷ்மரின் முதுகுப்புண்களை கணக்கிட்டு அவற்றுக்கேற்ப மேலும் அம்புகளை நாட்டினான். அவற்றின் நீளம் மிகச் சரியாக அமையும்படி கண்களாலும் கைகளாலும் அளவிட்டான். தூக்கணாங்குருவி கூடுசெய்வதுபோல என்று சுபாகு எண்ணிக்கொண்டான்.
அம்புகள் நாணல்புதர்போல் நின்றிருந்தன. ஆனால் அவற்றின் மேற்தளம் கூர்களாலான மென்பரப்புபோல தெரிந்தது. சற்றே அகன்று நோக்கியபோது அக்கூர்புள்ளிகள் இணைந்து ஒரு படுக்கை போலாயின. நிலத்தில் கிடந்த பீஷ்மரின் காலையும் தலையையும் பற்றி அவர்கள் இருவரும் மெல்ல தூக்க வஜ்ரர் அவரை கிடத்தவேண்டிய வகையை முழந்தாளிட்டு அமர்ந்து நோக்கி ஆணையிட்டார். முனகலோசையில் “மெல்ல… வடக்கே! வடக்கேதான்! ஆம்! சற்று… ஆம், மேலும்… மேலும் சற்று” என அவர்கள் பேசிக்கொண்டார்கள். அவர் முதுகில் தைத்து நின்றிருந்த அம்புகள் அனைத்துமே எங்கும் முட்டாமல் நீட்டி நிற்க அவரை அம்புப்படுக்கைமேல் மெல்ல படுக்கவைத்தனர்.
உடல் அம்புப்பரப்பு மேல் அமைந்ததும் பீஷ்மர் மெல்ல முனகி நீள்மூச்செறிந்தார். அவர் உடல் இழுவிசை இழந்து தளர்வதையும் அதுவரை சுருங்கியிருந்த முகத்தசைகள் நெகிழ்வதையும் சுபாகு பார்த்தான். வஜ்ரர் “நலமாக உணர்கிறார்” என்றார். பீஷ்மர் புரண்டு எழ முயல்பவர்போல ஓர் அசைவை உருவாக்கினார். “அஞ்சவேண்டாம், அவர் நன்கமைந்து கொள்கிறார்” என்றான் சாத்தன். பீஷ்மர் மீண்டும் பெருமூச்சுவிட்டு “ஆனால்…” என்றார். வஜ்ரர் “என்ன சொல்கிறார்?” என்று சுபாகுவிடம் கேட்டார். “அவர் அடிக்கடி சொல்லும் சொல் அது” என்றான் சுபாகு. “ஆம், அப்படி ஒரு சொல் இருக்கும்” என்றார் வஜ்ரர். பீஷ்மர் மீண்டும் சற்று உடல்தளர்ந்தார். முட்கள்மேல் படிந்த ஆடை போலாயிற்று அவர் உடல்.
அந்த அம்புப்படுக்கையை அகன்று நின்று நோக்கியபோது சுபாகு விந்தையான ஒரு கூச்சத்தை அடைந்தான். அவன் உடலில் அந்த அம்புகள் குளிராக கூர்பாய்ந்து நிற்பதைப்போல. பீஷ்மரின் கரண்டைக்கால்கள் ஆறு கூரிய அம்புகளால் தாங்கப்பட்டிருந்தன. அவன் நோக்குவதைக் கண்ட வஜ்ரர் “கரண்டைக்காலின் எடை ஆறுமுறை பகிரப்பட்டுள்ளது. மென்மலர் தொடுகை போலிருக்கும்” என்றார். ஆயினும் அவனால் அந்த உடற்கூச்சத்தை வெல்ல முடியவில்லை. தசைகள் விதிர்த்து மெய்ப்பு கொண்டபடியே இருந்தன. “நூற்றெட்டு அம்புமுனைகளால் ஓரு யானையை காற்றில் மிதப்பதுபோல படுக்க வைக்க முடியும், அரசே. உரிய முறையில் எடை பகுக்கவேண்டும். இங்கே பிதாமகரின் உடலின் அம்புகளுக்கேற்ப படுக்கை அமைக்கப்பட்டுள்ளமையால்தான் இத்தனை அம்புகள்” என்றான் சாத்தன்.
சுபாகு பெருமூச்சுடன் அப்பால் சென்று உடைந்த தேர் ஒன்றின் மேல் அமர்ந்தான். போர்க்களம் மிக அப்பால் விலகிச்சென்றிருந்தது. அவனுடைய அணுக்கனாகிய காஞ்சனன் வந்து நின்றிருந்தான். சொல் என அவன் கைகாட்டினான். “அரசே, பால்ஹிகரும் பகதத்தரும் களமுகப்பிற்கு வந்தனர். அதற்குள் கௌரவ வில்லவர்களும் தேர்வலர்களும் பரிவீரர்களுமாக பெரும்பகுதியினர் களம்பட்டிருந்தனர். பால்ஹிகரின் அறைபட்டு இடும்பர்கள் சிதறி விழுந்தனர். கடோத்கஜன் அவருடைய பெருங்கதையை எதிர்கொண்டபடியே பின்னடைந்தார். பகதத்தரின் யானை விழுந்து கிடந்த கௌரவர்களின் மேல் எழுந்து வந்து பீமனை தாக்கியது” என்று காஞ்சனன் சொன்னான்.
“பூரிசிரவஸ், ஜயத்ரதர், அஸ்வத்தாமர் மூவரும் அம்முகப்பிற்கு வந்தனர். அபிமன்யூ அவர்களை எதிர்கொண்டபடி பின்னடைய சுருதகீர்த்தி முன்னால் சென்று அபிமன்யூவை அவர்களின் தாக்குதலிலிருந்து காத்தார். மெல்ல பின்னடைந்து அவர்கள் பாண்டவப் படை விரிவிற்குள் புகுந்துகொண்டனர். அதற்குள் கௌரவப் பேரரசர் களத்திற்கு வந்தார். பிதாமகர் கொல்லப்படவில்லை என்ற செய்தியை முரசுகள் அறிவித்தன. நம் படைகள் அதனால் ஊக்கம் பெற்று அவர்கள் மேல் பாய்ந்து தாக்கி பின்னடையச் செய்தன. வெல்ல முடியாதவர். எவராலும் கொல்ல முடியாதவர். மூதாதை வடிவர். எட்டு வசுக்களால் ஏந்தப்பட்டவர் என்று பீஷ்மரின் புகழைக் கூவியபடி நம்மவர் போரிட்டனர்.”
“மறுபக்கம் பாண்டவப் படையினர் பீஷ்மப் பிதாமகர் இறக்கவில்லை என்ற செய்தியால் உளச்சோர்வடைந்தனர். அவர்கள்தான் அவருடைய இறப்புக்காக கதறியழுதவர்கள். ஆனால் அவர் மீண்டும் எழுவார் என எண்ணியதுமே ஏமாற்றமும் அதன் விளைவான சீற்றமும் கொண்டு அர்ஜுனரையும் சிகண்டியையும் இளைய யாதவரையும் வசைபாடினர். அவர்களில் உருவான குலைவை பயன்படுத்திக்கொண்டு நமது படையினர் அறைந்து முன்சென்றனர். நமது படைகளால் பாண்டவப் படை தென்கிழக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது. பொழுதணைந்து வருகிறது. இன்னும் சிறுபொழுதில் போர்நிறுத்தம் முழங்கும்.”
சுபாகு அவனிடம் போகலாம் என்று கையசைத்தான். வஜ்ரரும் சாத்தனும் ஆதனும் அமர்ந்து மருந்தெண்ணையை செம்புக்குடுவைகளிலிருந்து அம்புகள்மேல் சொட்டுகளாக ஊற்றினர். எண்ணை வழிந்து அம்புமுனை பதிந்திருந்த புண்வாயில் சென்று பொருத்தில் தேங்கி சற்று ஊறி உள்ளிறங்கியது. சிறிய தோல்பட்டையால் அம்புகளின் தண்டை சாத்தன் சுற்றி பிடித்துக் கொண்டான். ஆதன் அம்புமுனையை பிடித்தான். வஜ்ரர் பீஷ்மரின் உடலை பற்றிக்கொண்டார். அம்புத்தண்டுகளை அவர்கள் புல்லை பிடுங்குவதுபோல விசையுடன் இழுத்து உருவி எடுத்தனர். பீஷ்மர் மெல்ல முனகினார். அவர் உதடுகள் அசைந்தன. அவர் “ஆனால்” என்றுதான் சொல்கிறாரா?
அவன் அம்புகள் ஒவ்வொன்றாக அகல்வதை நோக்கி நின்றிருந்தான். எத்தனை அம்புகள் என்ற எண்ணம்தான் ஏற்பட்டது. அவை அர்ஜுனனும் சிகண்டியும் மட்டும் தொடுத்தவைதானா? பாண்டவப் படையின் பிறரும் அவற்றை ஏவினார்களா? அங்கிருந்த படையினர் அனைவருமே அவர்மேல் அம்புகளை பெய்திருப்பார்கள். எட்டியவை அவர்கள் இருவரும் எய்தவை. அவர்கள் அப்படையிலிருந்து முழுத்தெழுந்தவர்கள். கலத்தில் ஊறிக் கனிந்த நீர்த்துளிகளைப்போல. அவன் பீஷ்மர்மேல் அம்புதொடுத்த அர்ஜுனனின் முகத்தை நினைவில் உருவாக்கிக்கொள்ள முயன்றான். அவன் அர்ஜுனனை காணவில்லை. ஆனால் பாண்டவப் படையினர் அனைவரிடமும் அந்த முகம்தான் இருந்திருக்கும். அவனெதிரே வில்லுடன் நின்றிருந்த கிராதப் படைத்தலைவன் சாகரனின் முகம்போலவே இருந்திருக்கும் அர்ஜுனனின் முகமும்.
சாத்தன் பீஷ்மரின் தலையை கையால் சற்றே தூக்கிப்பிடிக்க வஜ்ரர் அவர் வாயில் மருந்தை ஊற்றினார். பீஷ்மரின் நா வந்து துழாவிச்சென்றது. “உண்கிறார், சுவை தெரிகிறது. நன்று” என்றார் வஜ்ரர். மேலும் மருந்தை அளித்தபோது அவர் உதடுகளைக் குவித்து பெற்றுக்கொண்டு அருந்தினார். “இது உடலை ஆற்றும். சற்றுப்பொழுது கழித்து உணவை அளிக்கலாம்” என்றார் வஜ்ரர். “உணவா?” என்றான் சுபாகு. “தேனும் கனிச்சாறும் மட்டும். அவை உடலுக்குத் தேவையான அனைத்தையும் அளிக்கும்” என்றார் வஜ்ரர். சாத்தன் சிறிய புட்டியிலிருந்து ஒரு மருந்தை எடுத்து குலுக்கி அதில் ஒரு சிறுகுழாயை விட்டு மேல்திறப்பை விரலால் தொட்டு மூடிக்கொண்டான். அதை எடுத்து பீஷ்மரின் மூக்கில் இரு சொட்டுகள் விட்டு வாயால் ஊதி உள்ளே செலுத்தினான். அவர் தும்மப்போகிறவர்போல இருமுறை உடலை உலுக்கிய பின் மீண்டும் முகம் தளர்ந்தார்.
“அது பீதர்நாட்டு மருந்து. அவரை புலரும்வரை ஆழ்துயிலில் ஆழ்த்தும். காலையொளியில் அவர் உளம்மீண்டுவிட்டிருப்பார்” என்றார் வஜ்ரர். “இச்செய்தியை நான் மூத்தவருக்கு அனுப்பலாம் அல்லவா?” என்றான் சுபாகு. “ஆம், இப்போது நலமாக இருக்கிறார். மஞ்சம் அமைந்துள்ளது, மருந்துண்டார், உறங்குகிறார் என்று தெரிவியுங்கள்” என்றார் வஜ்ரர். சுபாகு திரும்பி அப்பால் நின்ற ஏவலனை அருகழைத்து அச்செய்தியை அறிவிக்கும்படி ஆணையிட்டான். ஏவலன் புரவியில் ஏறிச் சென்றான். வஜ்ரர் “இந்த இடம் காட்டுக்கு அருகே உள்ளது. இதைச் சூழ்ந்து காவல் அமையவேண்டும். பந்தங்கள் இரவெல்லாம் எரியவேண்டும். விலங்குகள் குருதிமணம் நாடி வந்துவிடக்கூடாது. சிற்றுயிர்களும் அணுகலாகாது. நுண்ணுயிர்கள் அணுகாமலிருக்க மூலிகைப்புகை எப்போதும் இருக்கவேண்டும்” என்றார். “ஆணையிடுகிறேன்” என்றான் சுபாகு.
முழவோசை அவன் சொற்களை வான்நிறைத்து சொல்லத் தொடங்கியது. அவன் அவற்றை ஏவலனிடம் சொல்லும்போது நம்பிக்கையின்மையுடன்தான் உரைத்தான். ஆனால் வானிலிருந்து அது இடியின் மொழியில் பொழிந்தபோது மறுப்பிலா மெய்யென்றும் தெய்வச்சொல்லென்றும் தோன்றியது. அவன் ஆறுதலுடன் பெருமூச்சுவிட்டான். வஜ்ரர் பீஷ்மரின் புண்களுக்கு மருந்திடுவதை நோக்கியபடி மீண்டும் உடைந்த தேர் ஒன்றின் தட்டில் அமர்ந்தான்.