காந்தி- பழியும் ஊழும்

mahatma-mahatma-gandhi-17992131-300-287

அன்புள்ள ஜெ

சமீபத்தில் கோட்ஸேயை ஆதரித்தும் காந்தியை அவர் கொன்றது நியாயம்தான் என்றும் எழுதப்பட்ட பல கட்டுரைகளை வாசித்தேன். இந்தியாவில் கோட்ஸேக்கு நினைவிடம் ஏற்படுத்தவேண்டும், அரசு அமைப்புக்களுக்கு அவருடைய பெயரைப் போடவேண்டும் என்றும் வாதிட்டனர். அவர்களுக்கு ஏராளமான ஆதரவு இருந்தது.

நான் அவற்றைப் படித்துக்கொண்டிருந்தேன். நான் பிராமணன். ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆகவே முதலில் எனக்கு அந்த வன்முறை ஒவ்வாமையை உருவாக்கியது. ஆனால் தொடர்ந்து வாசிக்க வாசிக்க என் மனம் மாறத்தொடங்கியது. நான் கொஞ்சம் பாரதிய ஜனதா ஆதரவுமனநிலை கொண்டவன். அத்துடன் அதை எழுதியிருந்த பலரும் ஆழமான மதக்கல்வி கொண்டவர்கள். அவர்கள் எழுதிய வேறுவிஷயங்களைப் படிக்க அவர்கள் மேல் மதிப்பு வந்தது. ஆகவே அந்தக்கருத்துக்களை நானும் உள்வாங்கத்தொடங்கினேன்

என் மனைவியிடம் நான் அதிகம் இதையெல்லாம் பேசுவதில்லை. அப்பாவிடமும் பேச்சு குறைவு. அம்மாவிடம் சாதாரணமாகப் பேசும்போது கோட்ஸேபற்றிச் சொன்னேன். அழ ஆரம்பித்துவிட்டார்கள். என்னால் சமாதானமே செய்ய முடியவில்லை. என் பேச்சை காதுகொடுத்துக் கேட்கவே மறுத்துவிட்டார்கள். என் மனம் கலங்கிவிட்டது. உங்களிடம் கேட்கவேண்டும் என்று தோன்றியது. இதில் உள்ள உண்மை என்ன?

எம். ஸ்ரீதர்

Gandhi Smiles

அன்புள்ள ஸ்ரீதர்,

நான் பிராமணன் என்ற வரியை இருவகையில் சொல்லலாம். இனக்குழு அடையாளமாக, எல்லாரும் சொல்வதைப்போல. அல்லது இங்கே நாலாயிரமாண்டுக் காலமாக நிலைநின்றுகொண்டிருக்கும் மகத்தான மரபு ஒன்றின் தொடர்ச்சியாக. இந்தத் தேசத்தை ஒருங்கிணைக்கும் விசை ஒன்றின் பிரதிநிதியாக.  வன்முறையற்ற ஒருங்கிணைவு ஒன்றை வாழ்நெறியாகக் கொண்ட மரபு அது. ஒவ்வொரு யுகத்திற்கும் தன்னை விமர்சனம் செய்துகொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் தயங்காதது

இரண்டாவது பொருளில் நீங்கள் சொல்லியிருந்தால், எந்த வகையான எதிர்நிலைகளை எடுக்கவும் உங்களுக்கு உரிமை இல்லை. எங்கும் கசப்புகளை, காழ்ப்புகளை வெளிப்படுத்தவே கூடாது. எத்தருணத்திலும் ஒருங்கிணைவையும் வன்முறையற்ற உரையாடலையும் உருவாக்க மட்டுமே விழையவேண்டும். ஆகவே இன்றைய காழ்ப்பரசியலின் வெறிக்கூச்சல்களில் இருந்து அரைச் சொல்லைக்கூட நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது.

உங்களுக்கு ஒரு குருமரபு உள்ளது. உங்கள் அடையாளமே அதுதான், உங்கள் பிறப்பு நிகழ்ந்த குடிமரபு அல்ல உங்களுடையது. அந்த குருமரபு எந்த மெய்மையைச் சொன்னதோ அதுவே உங்களுக்கான வழிகாட்டல். ஐம்பதாண்டுகளுக்கொருமுறை தலைகீழாக ஆகும் அரசியல் அல்ல. இங்கே, உச்சகட்ட வன்முறையும் அழிவும் நிகழ்ந்த காலகட்டங்களில் கூட தங்கள் அறத்தை நம்பியிருந்த , எதிர்மறை உணர்வுகளை அடையாமலிருந்த முன்னோர்கள் அன்றி உங்களுக்கு முன்னுதாரணங்கள் தேவையில்லை

எந்த மரபிலும் உச்சமும் கீழ்நிலையும் உண்டு. உச்சமே அதன் சாதனை, கீழ்நிலை அதன் மேல் மோதிக்கொண்டிருக்கும் மானுடக்கீழ்மை. மனிதர்களை ஆசாரங்களால் பகுத்து ஒடுக்கிய, அதிகாரத்தை  மட்டுமே நாடிய, அதைநோக்கி இச்சகம் பேசிக்கொண்டிருந்த, மேட்டிமைத்தனத்தையும் அறியாமையையும் ஒருங்கே சூடிக்கொண்டிருந்த ஒரு தரப்பு உங்கள் குடிமரபில் உண்டு. எந்தக் குடிமரபிலும் அவர்களே பெரும்பாலானவர்கள். அவர்கள்தான் இன்று இந்த வெறுப்பரசியலைக் கூவுபவர்கள். நேர்மாறாக, உங்கள் குருமரபு மெய்மைநோக்கி தன்னை முற்றாகத் திருப்பிக்கொண்டது. அதன் ஒளியை மட்டுமே நாடியது. இரண்டில் எதைத் தெரிவுசெய்யவேண்டுமென முடிவெடுங்கள்.

உங்கள் முன்னோர்களின் வாழ்க்கை உங்களுக்குச் சொல்லிக்கொடுப்பது இரண்டுதான். ஒன்று நெடுங்கால ஆசாரங்களைக் கடைப்பிடித்து நிலைத்த வாழ்க்கை ஒன்றை நடத்துவது. அல்லது அதை ஆன்மிகமாக, படைப்பூக்கம்சார்ந்து மீறிச்செல்வது. அதற்கு எதிர்நிலையில் சென்று வெறுப்புக்குரலெழுப்புவதும் தெருமுனைப்பூசலிடுவதும் மாபெரும் வீழ்ச்சி.

நான் இன்று வந்தடைந்திருக்கும் புரிதல்கள் சில உண்டு. அவற்றை உணர்தல்கள் என்றே சொல்வேன்.  அவற்றை எவரிடமும் விவாதிக்க விரும்ப மாட்டேன். ஒன்று, மறுபிறப்பு உண்டு என்பது. இன்னொன்று, ஆத்மாவின் அழிவின்மை மற்றும் தன்னிலை. மூன்று, பாவபுண்ணியங்களின் தொடரே வாழ்வு என்பது. நான்கு ஊழ் என்னும் மாபெரும்வலையே இவ்வாழ்க்கை, அது தற்செயல்கள் அல்ல என்பது

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதி இவற்றை எனக்குச் சொன்னபோது நான் கடுமையாக முரண்பட்டிருக்கிறேன். என் தர்க்க அறிவுக்கு எட்டுவனவற்றை மட்டுமே ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லியிருக்கிறேன். அவர் என்னிடம் வாதிடவில்லை. ஆகவே நானும் எவருடனும் வாதிடப்போவதில்லை. இவை புறவயமான உண்மைகள் அல்ல.

முன்பு ஏசுகிறிஸ்து குறித்து ஓர் அந்தணர் இதேபோன்ற ஐயம் ஒன்றை என்னிடம் கேட்டபோது சொன்னதையே இங்கும் சொல்கிறேன்.  நம் மரபில் ஒரு நெறி உண்டு, ரிஷிநிந்தனை என்பதே முதல்பெரும்பாவம். வேதத்தைப் பழிக்கும் ரிஷியைப் பழிக்கும் உரிமைகூட வைதிகனுக்கு இல்லை. ரிஷிமூலம் தேட, ரிஷிகளை மதிப்பிட நமக்குத் தகுதியும் இல்லை. வெறும் உலகியல் லாபத்துக்காக செய்யப்படும் எளிய கீழரசியலைச் செவிமடுத்து அந்தப் பழிகளைச் சூடிக்கொள்ளவேண்டாம். நாம் நம் மைந்தர்களுக்குச் சேர்த்துக்கொடுப்பது அந்தப்பழி. அது தலைமுறைகளைக் கடந்துசெல்வது.

இங்கிருந்து சென்றவர்கள் எவரும் முற்றாகச் சென்றுவிடுவதில்லை. இங்கே அவர்களின் இருப்பு என்றும் உள்ளது.  நாம் அவர்கள் கண்முன் வாழ்கிறோம். அந்நினைவை தலைக்கொள்க.

ஜெ

முந்தைய கட்டுரைபிரதமன் – கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைநிழல்யுத்தம் -கடிதங்கள்