வெறுப்பு… சமூக ஊடகத்திடமிருந்து வெளிப்படுகிறதா, நம்முடைய மன வக்கிரத்திலிருந்து வெளிப்படுகிறதா?
முகநூலிலும் பிற சமூக ஊடகங்களிலும் வெளிப்படும் வெறுப்பு பற்றிய ஆழமான கட்டுரை.. இக்கட்டுரையை ஒட்டி எனக்குப்படுவன.
இத்தகைய நடுநிலையான, உண்மையான அக்கறைகொண்ட ஒரு கட்டுரையை எழுதும் அறிவுஜீவி என எவரும் இங்கு இல்லாத நிலையே கவலைக்குரியது. சூரியா சொல்வதுபோல அத்தனைபேரும் முகநூலின் வெறுப்பலைகளுக்குள் தாங்களும் சிக்கிக் கிடக்கிறார்கள். அல்லது அதை அஞ்சி அகன்று வாழ்கிறார்கள். எத்தனைநேரடியான உண்மை, இதைச் சொல்லுமளவுக்குக்கூட இங்கே எழுத்தாளர்கள் இல்லை என்றால் நாம் என்னதான் சிந்திக்கிறோம்?
சூரியா கவனிக்காதது ஒன்று உண்டு. இந்த வெறுப்பின் ஊற்றுமுகங்கள் எளிய மனிதர்கள் அல்ல. அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள்தான். அப்பட்டமான வெறுப்பின் காழ்ப்பின் மொழியில் அவர்களே பேசுகிறார்கள். பொதுவெளியில் பொறுக்கிமொழியில் பேசுவதென்பது ஒரு மரபாகவே ஆனது இவர்களிடமிருந்துதான். நக்கல்கள், கிண்டல்கள், வசைகள், ஆபாசச் சொற்கள், சிறுமைப்படுத்தல்கள் என்றே இவர்களின் செயல்பாடுகள் சமூக ஊடகச்சூழலில் அமைகின்றன
இந்த வரிசையில் ஆண்கவிஞர்கள், பெண்கவிஞர்கள், பத்திரிகைகளின் ஆசிரியர்கள், இதழாளர்கள். உளவியலாளர்கள், கட்சிப்பொறுப்பில் உள்ளவர்கள், எழுத்தாளர்கள்,சினிமா விமர்சகர்கள்,கோட்பாட்டாளர்கள் என ஏறத்தாழ எல்லா தரப்பினரும் உண்டு. இவர்கள் அனைவருக்குமே முன்னுதாரணம் இப்படி வெறுப்பை மட்டுமே கக்கி ‘பிரபலப் பதிவர்’களாக ஆகி சில சில்லறை உலகியல் லாபங்களை அடைந்தவர்கள்தான். அந்தப் ‘பிரபலப்பதிவர்’கள் வாழ்நாளில் ஒரு புத்தகம்கூட படித்தவர்களோ, எதைப்பற்றியேனும் அடிப்படை அறிதல்கள்கொண்டவர்களோ அல்ல என்ற உண்மை இவர்களுக்கு மேலும் நம்பிக்கை அளிக்கிறது. தங்கள் அரைவேக்காட்டு அறிவுக்கு பெரிய சந்தை இருக்கிறது என எண்ணத்தலைப்படுகிறார்கள்.
இவர்கள் ஆண்டுக்கணக்காக அனேகமாகத் தினமும் எழுதிக்குவிப்பவர்கள். ஆனால் ஒரு நூல், ஒரு கட்டுரை, ஒரு எளிய கருத்து இவர்களால் மேற்கோள்காட்டப்பட்டிருக்காது. அவர்களிடம் கேட்டால் ஒரு நூலைப்பற்றி எழுதினால் எவருமே படிப்பதில்லை, ஒரு கீழ்மொழி வசையாடல், மலினமான நையாண்டி என்றால் நூறு லைக் விழுகிறது, அதுவே வெற்றிக்கு வழி என்பார்கள். எந்த ஒரு அறத்தைப்பற்றியும் அறிவுச்செயல்பாடு பற்றியும் ஒருவரி சொல்வதற்கான தகுதி அற்றவர்கள் எல்லாவற்றையும் பற்றி கூச்சலிடும் களம் அது.
இச்செயல்பாடுகளை நியாயப்படுத்த இவர்கள் ஒருவகையான மிகையான மானுடநேயத்தை, மிதமிஞ்சிய சமூகஅறத்தை, உணர்ச்சிகரமான கொள்கைச்சார்பை பாவனைசெய்வார்கள். இவர்களின் வாழ்க்கையுடனும் செயல்பாடுகளுடனும் அவை எவ்வகையிலும் சம்பந்தப்பட்டிருப்பதில்லை. இந்த பாவனைகள் இருந்தால் பொறுக்கிமொழியில் பேசுவதற்கான ‘நியாயம்’ அமைகிறது. பொறுக்கிமொழியில் பேசினால்தான் சமூகவலைத்தளங்களில் கூட்டம் கூடுகிறது. இவ்வளவுதான் இவர்களின் செயல்முறை
இன்று பலகோடி இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் வழியாகவே அறிவியக்கத்துக்கு வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களை இந்த வெறுப்புமையங்கள் கவர்ந்துகொள்கின்றன. இவர்களும் அதே கீழ்மொழியில் எழுதத் தொடங்குகிறார்கள். மொத்தச்சூழலே அழுகிநாறத் தொடங்குகிறது. ஒருவருக்கு இச்சூழல்மேல் சற்றேனும் ஒவ்வாமை உருவானால், விலகி வேறொன்றுக்காகத் தேடத்தொடங்கினால், அவர் தப்பித்தார். இல்லையேல் எஞ்சியவாழ்நாள் முழுக்க இந்தச்சேறுதான்
சில நாட்களிலேயே அவர் கண்டடைவார். சமூகவலைச்சூழலில் ஒரு ‘ நிலைபாடு’ எடுத்துக்கொண்டால்போதும் . அது புரட்சி,மானுடநேயம், கலகம், சமூகநீதி, திராவிட இயக்கம் இந்துத்துவம் என ஏதேனும் அரசியலாக இருக்கலாம். சாதியாக இருக்கலாம். அதன்பின் தன் சொந்தக்காழ்ப்புகளை அனைத்தையும் திறமையாக உருமாற்றி கக்கிக்கொண்டே இருக்கலாம். அன்றன்றைய செய்திகளில் இருந்து அந்த பேசுபொருளைக் கண்டெடுக்கலாம். அதை முன்வைத்துக்கொண்டு வசைபாடத் தொடங்கலாம். எள்ளிநகையாடலாம்.இதற்குத்தான் இச்சூழல் அனைவரையும் பயிற்றுவிக்கிறது
ஆனால் இதில் மிகத்தெளிவான சாதி, கட்சிச் சார்புகள் அனைவருக்கும் உண்டு. எப்போதுமே மென்மையாகக் கருத்துக்கள் சொல்பவர்கள், பிறகுரல்களைச் செவிமடுப்பவர்களே இரையாகிறார்கள். எந்நிலையிலும் உண்மையிலேயே அதிகாரத்தைக் கையாள்பவர்கள் இரையாவதில்லை.சாதிப்பற்றாளர்களுக்கு அவர்களுக்குரிய கும்பல் உண்டு என்பதனால் அவர்களும் இரையாவதில்லை..
பண்பாட்டுவெளி முழுமையாகவே எந்த வகையான உரையாடலுக்கும் வாய்ப்பற்றதாக, மொண்ணை நக்கலும் அரைவேக்காட்டுக் கிண்டலும் அவதூறுகளும் வசைகளும் போலி ஆவேசங்களும் மட்டுமே கொண்டதாக முன்பெப்போதும் தமிழ்ச்சூழலில் இருந்ததில்லை.எப்போதுமே பூசல்கள் இருந்துள்ளன.ஆனால் எதையுமே புரிந்துகொள்ளாமல் எதையுமே அறியும் ஆர்வமும் இல்லாமல் வெறுமே சார்புநிலையையும் காழ்ப்பையும் உமிழ்பவர்கள் ‘பிரபலப்பதிவர்’ என்ற அடைமொழி பெற்று கருத்துதிர்ப்புக்குத் தகுதிபெறும் சூழல் முன்னர் உருவானதே இல்லை.
இந்தச்சூழலின் நீண்டகால விளைவுகள் மிகமிக கொடுமையானவை. இப்போதே எவரும் எதையும் விவாதிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவர் தன் கருத்துக்கு எதிரான லும்பன்மொழியை எதிர்கொள்வார் என்றால் ஒன்று அவரும் அதேமொழியை கையாளவேண்டும். அல்லது முற்றாகத் தவிர்த்துவிடவேண்டும். விவாதம் கருத்துப்பரிமாற்றம் எதற்குமே அதன்பின் இடமில்லை. இன்றைய சூழல் இதுவே. எந்த ஒரு கருத்துக்கும் வளர்ச்சிநிலையே இல்லை.
இத்தகைய சூழலின் மிகப்பெரிய அபாயம் எல்லா கருத்துக்களையும் அது இருமை [binary ] ஆக மாற்றிவிடுகிறது என்பது. உச்சகட்ட நிலைபாடுகளுக்கு, அதைச்சார்ந்த வெறுப்புக்கக்கல்களுக்கு மட்டுமே இடமிருக்கும் ஒரு சூழல் அமைகிறது. கருத்துக்கள் எப்போதும் முரணியக்கம் வழியாக வளர்பவை. மாற்றுத்தரப்புடன் உரையாடுபவை. ஆகவே எந்த அறிவுச்சூழலிலும் மையப்போக்குக்குத்தான் அதிக மதிப்பிருக்கும். அந்த மையப்போக்கு முற்றாக ஒழிக்கப்படுகிறது இங்கே. அது சிந்தனைச்சூழலில் பேரழிவை உருவாக்குவது.