பிரதமன் -கடிதங்கள்-3

ada-pradhaman-article

 

பிரதமன்[சிறுகதை]

அன்பின் ஜெ,

 

வணக்கம்.எப்படி இருக்கிறீர்கள்? கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன.ஆனால் எல்லாவற்றையும் வாசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

 

 

பிரதமன்’ சிறுகதை   பற்றி:

 

 

ஆசானின் மனக்கணக்குகளே இதன் மையம் என்றெண்ணுகிறேன். அவர் மனதுக்குள் எப்பொழுதும் கணக்கு ஓடிக் கொண்டே இருக்கு. அவர் மனதுக்கு மட்டுமே அது தெரியும் .அவர் வாழ்வது தனி உலகு அவருக்கு வாயும் இல்லை காதும் இல்லை .அவர் மனதின் கணக்குகள் மட்டும் உண்மை .இச்சிறுகதையில் சமையலையும்,உணவுகளையும் வைத்து உணர்வுகளை மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.

 

 

‘உள்ளதச் சொன்னா ருசீன்னு அப்படி ஒண்ணுமில்ல.மனசுக்கு பழக்கமாட்டம்  ருசி’ என்பதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. இச்சிறுகதையில் கூறப்பட்டிருக்கும் சமையலின் ரகசியங்கள் எல்லாமே மனித உறவுகளுக்கும் சேரும். சமீபத்தில் நான் வாசித்த சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று .ஆசானின் சமையல் திறமைகள் மூலம் அவரது மனதை ,அவரது ஆளுமையை உணரலாம் .மெதுவாக எரிய பச்சை விறகு வேணும் அதுதான் வாழ்வு .தேங்காயின்  எண்ணிக்கையையும் விறகின் பக்குவத்தையும் ,வெல்லத்தின் தன்மையும் மிகச்சரியாக சொல்லும் ஆசானுக்கு அவளது மனதை மட்டும் தெரியாதா? அதுவும் அவருக்கு தெரியும். ஒருவேளை இத்தனை சரியாக எல்லாவற்றையும் கணிப்பதால் தான் அவளை இழந்து இருக்கலாம். ருசி என்பது மனம் சம்பந்தமானது தானே.

 

 

அத்தனை பக்குவமாய் அவருக்கு மட்டும்தான் பிரதமன் செய்ய வரும் என்பதே  அத்தனைக்கும் அடிப்படையாகிறது. உண்மையில் யோசித்துப் பார்த்தால் இத்தனை நிதானமாய் இதனை பக்குவமாய் சமைப்பவர்கள் இன்று இல்லை என்றே சொல்லலாம்.வாழ்க்கையில் இத்தனை நிதானமாய் நாம் எதையும் அனுபவிப்பதில்லை என்பதே உண்மை. போகிற போக்கில் இச்சிறுகதையில் நிறைய இடங்கள் வருகின்றன. 12 வயதிலேயே நேசித்த பின் அவள் அந்த அன்பு பின்பு பெருகுகின்றது. அத்தனை காலத்திற்கு பிறகும் அவளை கண்டதும் ஆசானின் கைகள் நடுங்குகின்றன. நல்ல சிறுகதை. ஒவ்வொரு பகுதியையும் மிகவும் ரசித்து படித்தேன் .

 

 

ஜெ  இன்னொரு முக்கியமான விஷயம் இதுவரைக்கும் எனக்கு அடை பிரதமன் பற்றித் தெரியாது .நான் சாப்பிட்டதில்லை. இந்த சிறுகதையை படித்தபிறகு யூடியூபில்  பார்த்து தெரிந்துகொண்டேன். அம்மாடி!  எவ்வளவு தேங்காயை யூஸ் பண்றீங்க. எங்கள் வடார்க்காடு சமையலில் தேங்காய் மிகவும் குறைவுதான். அதுவும் என் சமையலில் தேங்காயே இருக்காது. மீன் குழம்புக்கு கூட தேங்காய் பயன்படுத்த மாட்டேன்.அப்படி சமைத்தால் தான் எனக்குப் பிடிக்கும்.

 

 

என் பெற்றோர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் நான்  பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவண்ணாமலை மாவட்டம் ..அதிலும் நான் பக்கா ஜவ்வாதுமலை  மலைவாசி.எங்கள் மலையில் சமையலுக்கு தேங்காய் என்பதெல்லாம் கிடையவே கிடையாது .முதன்முறையாக நான் கல்லூரியில் படிக்கும்போது எங்கள் உறவினர் திருமணத்திற்கு நாகர்கோயில் வந்து இருந்தேன்.அப்பொழுதுதான் இத்தனை கூட்டுகளுடன் திருமண விருந்து சாப்பிட்டு சாப்பிட்டேன். எனக்கெல்லாம் அந்த ருசி நாக்கில் ஒட்டவில்லை .சுவைகளின் மாறுபாடு அதுதான்.நாங்கள் உப்பும் புளிப்பும் உறைப்புமாய் சாப்பிடுவோம்.ஒரு தமிழ்நாட்டுக்குள்ளேயே இத்தனை சமையல் வேறுபாடுகள் என்றால் உலகெங்கிலும் அது எத்தனை மாறும்?

 

 

தேங்காய்ப்பால் கொதிக்கும் மணமும்,வெல்லமும்,அரிசி அடையும் நெய்யும் சேர்ந்தாலும் அடைப்பிரதமனின் மணம் ஆசான் கிண்டியதும் தான் எழுகிறது.அது போலத்தான் நம் உணர்வுகளும்,வாழ்வும் உருவாகி வருகிறது.

 

நன்றி

மோனிகா மாறன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

வணக்கம்

 

பெருமழை பெய்துகொண்டிருக்கும் இக்காலையில் ’பிரதமன்’ வாசித்தேன்.

நான்சிறுமியாக இருக்கையில்,   வீட்டுக்கு பக்கத்து நிலத்தில் ஐயப்பன் கோவில் கட்டினார்கள். அந்தக்கோவிலோடே சேர்ந்து வளர்ந்தவள் நான். அன்றாடம் ஐய்யப்பனுக்கு பூசை நடக்கையில் அங்கேயே பழி கிடப்பேன் அதிகாலையிலிருந்து.

 

பிரதமனுக்கு  உருளியை அடுப்பில் ஏற்றி,  தேங்காய் துருவி பாலெடுத்து , சிற்றுளிகளில் நெய்யுருக்கி வெல்லம் பாகாகி என்று அதற்கான சேர்மானங்கள்வேறு வேறு இடங்களில், தயாராகி கலந்து கொதித்து தெய்வம் எழுந்துவருவதைபோல பிரதமன் தயாராவதை வாசிக்கையில் அன்று அங்கு ஐய்யப்பனுக்கு அதிகாலையில் குளித்துவிட்டு மெல்ல மெல்ல ஆடைமாற்றி அலங்காரம் செய்து , சந்தனமும் குங்குமமுமாய் பொலிவேற்றி, ஆபரணங்கள் பூட்டி, பல நிறங்களிலான மலர்மாலைகளை ஒரு குறிப்பிட்ட வரிசையில் அடுக்கடுக்காய் எல்லாம் தனித்தனியே தெரியும்படி அணிவித்து, அதன்பின்னரும் சில ஒற்றைப்பெருமலர்களை பொருத்தமான இடத்தில் செருகி எல்லாம் தயாரானதும், இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே, தலைமைப்பூசாரியின்  மகன்களுடன் சேர்ந்து விளையாடியவாறே பெரிய சந்தனக்கல்லில் சந்தனத்தை குழம்பாய் அரைத்துக்கொணடிருக்கும்   நானும் ஓடிவந்து கருவறையின் முன்னால் மிக அருகிலென நிற்கையில், அவர்  அடுக்கு விளக்கொன்றில் சுடராட்டு காட்டுகையில்  எழுந்துவந்த தெய்வத்தை  மீண்டும் பார்த்தது போலிருந்தது

 

தேங்காய் இல்லாமல் பருப்பில் பாயஸம் சாப்பிடும், 15 வருஷமாக  தேங்காய்க்கு ஏங்கும் முன்காமுகியும்,  //நினைச்சா மனசை பழக்கி எடுக்கலாம், மனசுக்க பழக்கமாக்கும் ருசி// என்று சொல்லும், எதையும் நாவிலிட்டு சுவைக்காத  அரிவைப்பு ஆசானுமாய் ஊடே ஒரு காதல்கதையும்,எதையும் தொடாமலேயெ கணக்கிடும், பிரதமனையே ஒருசொட்டுக்கூட சுவைக்காத ஆசானின் சுவை மனதிலிருக்கிறது  அச்சுவையே  பிரதமனிலும் கூட்டிலும் அவியலிலும் மணக்கிறது

 

என்ன சேர்மானங்கள் எத்தனைபேர் தயாரித்து எப்படி சேர்த்தாலும்  உணவில்,தெய்வமெழுந்து  வரனுமில்லையா அது சுவைக்க? .பல வகையான பதார்த்தங்கள்  தயாரிக்கும்  முறையிலேயெ சுவைத்ததுபோல இருந்தது அந்த முன்காதலும் பெரிய துக்கமெல்லாம் இல்லாமல் ’’மனசை பழக்கிக்கிட்டா எல்லாம் ருசிதான்’’ என்றதிலும், மகள் கல்யாணத்துக்கு  அவர் சமையலென்று முடிந்ததிலும் ஒரு சொல்லத்தெரியா நிம்மதியும் நிறைவும் வந்தது

 

எத்தனை சம்பிரதாயங்கள் அடுப்பு பற்ற வைப்பதிலிருந்து முதலில் செய்யும் பதார்த்தமும் , வரிசை முறைகளும் , சேர்மானங்களின் தரமுமாக!

 

திருவலக்குற்றி என்றும் துருவிக்கு ஒரு பெயரிருப்பதையும் தேங்காய்ப் பாலெடுத்தபின்னர் வரும் கசடுக்கு தேங்காய்சண்டு என்று பெயரென்பதும் இப்போதுதான் தெரிந்துகொண்டேன் இன்னும் என்ன என்னவோ எழுதனூம்னு தோண்றினாலும் மனம் முழுக்க ஒரு பெரு விருந்து உண்ட கனமும், சோர்வும்  தொலைத்த எதுவோ மீளக்கிடைத்ததுபோல ஒரு  நிறைவுமாய் மனம் இனித்துக் கிடக்கிறது சார்

அன்புடன்

லோகமாதேவி

 

பிரதமன் -கடிதங்கள்1

பிரதமன் -கடிதங்கள்2

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-80
அடுத்த கட்டுரைதமிழர்களின் வரலாறு இருண்டதா -கடிதங்கள்