நட்பு- கடிதங்கள்

IMG-20181119-WA0024

வடகேரளம்- ஒரு நண்பர்கூடல்

 

அன்புள்ள ஜெ,

 

உங்கள் முப்பதாண்டுக்கால நண்பர்களின் படங்களைப் பார்த்ததும் ஒரு பெரிய நிறைவு ஏற்பட்டது. பத்தாண்டுகளுக்குமேல் நீடித்த நட்பு என எனக்கு ஏதுமில்லை. அவற்றை நட்பு என்றுகூடச் சொல்லமுடியாது. அருகே வசிப்பதனால், அல்லது ஆபீஸில் அடிக்கடிச் சந்திப்பதனால் உருவாகும் நட்பு. கண்முன்னால் இருந்து அகன்றதுமே அதுவும் இல்லாமலாகிவிடுகிறது.

 

நான் அறிந்தவரை பெரும்பாலானவர்களுக்கு இதுதான் நிலைமை. அவர்கள் நட்பு என்று சொல்வது இப்போது இருக்கும் கூட்டம்தான். சேர்ந்துகுடிக்கவோ அரட்டை அடிக்கவோ ஒரு கூட்டம். அவ்வளவுதான். முப்பதாண்டுகள் நட்பு என்பதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் மிக ஆச்சரியமானவை. வேறு எல்லாவற்றையும் விட நட்பை பெரிதாக நினைப்பவர்கள்தான் அப்படிப்பட்ட நட்பைப் பெறமுடியும். என்ன வந்தாலும் நட்பை விட்டுவிடக்கூடாது என நினைக்கவேண்டும். உண்மையான பிரியம் வைத்திருக்கவேண்டும்.

IMG-20181119-WA0052

[ஸ்ரீதரன்,நந்தகுமார், கருணாகரன்,பரதன்,விஸ்வநாதன்]

 

அவர்கள் நீங்கள் எழுத்தாளர் ஆனதனால் வந்த நண்பர்கள் அல்ல. அவர்கள் நீங்கள் எழுத்தாளர் ஆவதற்கு முன்பே நண்பர்கள். அவர்கள் உங்கள் பெர்சனாலிட்டியில் உள்ள சில குணங்களைத்தான் விரும்பியிருக்கிறர்கள். படங்களில் உங்கள் முகத்திலிருக்கும் மகிழ்ச்சி நெகிழ்ச்சியூட்டுகிறது.

 

அந்த நட்பை எல்லாம் பேணிக்கொள்ளும் ஓர் அம்சம் இருக்கிறது. அந்நண்பர்களைப் பார்க்கையில் அவர்கள் எல்லாரும் உங்களை மையம்கொண்டவர்கள் என்று தெரிகிறது. இன்றைக்குள்ள உங்கள் ஆகிருதி உருவாவதற்கு முன்னாடியே உங்களுக்கு இந்த மையம் இருந்திருக்கிறது. அந்த குணாதிசயம்தான் இன்று உங்களைச்சூழ்ந்து இப்படி ஒரு பெரிய கூட்டம் உருவாக அடிப்படையாக உள்ளது.

 

ஜெயராமன்

 

IMG-20181119-WA0055

அன்புள்ள ஜெமோ

 

ஏற்கனவே வற்கீஸின் அம்மா கட்டுரையை வாசித்தபோது நினைத்துக்கொண்டேன்.ஆரம்பப் பள்ளி நாட்களில் உங்களுடன் படித்தவர்கள் முதல் இன்றைக்கு வரை நண்பர்கள் இருக்கிறார்கள். அத்தனை நண்பர்களும் அப்படி ஒரு மதிப்புடனும் பிரியத்துடனும் இருக்கிறார்கள். அவர்கள் மானசீகமாக விலகிச்செல்லவே இல்லை. அவர்கள் அனைவரையும் ஈர்க்கும் அந்த அம்சம் என்ன? அது எழுத்து அல்ல. நீங்கள் அப்போதெல்லாம் எழுத்தாளரே அல்ல.

 

அந்த அம்சம் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் பெரும்பாலும் அன்பை காட்டுவதே இல்லை. நான் இரண்டுமுறை உங்களைப் பார்த்திருக்கிறேன். மிகையாக வரவேற்புச் சொற்களைச் சொல்வதில்லை. வேறே எங்கோ இருக்கிறீர்கள். இரண்டுமுறை சொன்னபின்னரே திரும்பிவருகிறீர்கள். ஆனால் நினைவு வைத்திருக்கிறீர்கள். அக்கறையுடனும் இருக்கிறீர்கள். உங்களிடம் அதிகம் பழகியதில்லை. ஆனால் ஒரு நெருக்கத்தை எப்போதுமே உணர்கிறேன்

 

சத்யமூர்த்தி

 

IMG-20181119-WA0042

அன்புள்ள ஜெ,

 

நண்பர்களுடன் நீங்கள் கொண்டாட்டமாக இருந்ததும், உங்களுக்குப் பிடித்த உணவை உங்கள் நண்பரின் மனைவி நினைவு வைத்துக்கொண்டு சமைத்ததும் அந்த இடமும் எல்லாம் அற்புதமாக உள்ளன. ஆழமான கட்டுரைகள் நடுவே இத்தகைய இனிமையான அனுபவக்கட்டுரைகள் தான் ஒரு பெரிய மகிழ்ச்சியை அளிக்கின்றன்

 

உங்கள் நண்பர்கள் உங்களை வாடாபோடா என அழைப்பதை நானும் கவனித்திருக்கிறேன். அப்படி அழைக்கும் நண்பர்கள் இருப்பது ஒரு பெரிய பேறு

 

ஆனந்த்

 

IMG-20181119-WA0047

 

 

அன்புள்ள ஜெ

 

உண்மையிலேயே எனக்கு ஆச்சரியமானது நீங்கள் ஏன் தமிழில் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது. ஒருமுறை எர்ணாகுளம் ரயிலில் பேசிக்கொண்டிருந்தேன்.  போனில் ஜெயமோகன் என்று சொன்னதுமே பக்கத்திலிருந்தவர் ‘எழுத்துகாரன் ஜெயமோகனா?” என்றார். உங்கள் யானைடாக்டர், நூறு சிம்ஹாசனங்கள் இரண்டு கதைகளையுமே வாசித்திருந்தார்

 

அங்கே உங்கள் பேட்டிகளும் செய்திகளும் வந்துகொண்டே இருக்கின்றன.நானே பல இதழ்களில் பார்த்திருக்கிறேன். இங்கே எப்போதாவது நக்கலாக ஒரு குறிப்பு வருவதோடு சரி. ஓர் எழுத்தாளராக இங்கே உங்களுக்கு தமிழ்ச்சமூகம் அளித்தது மிகக்குறைவு. அங்கிகாரமோ புகழோ எல்லாமே குறைவு. வசைகளும் அவமதிப்புகளும் மிக அதிகம். ஆனாலும் இதையே உங்கள் களமாகக்கொண்டிருக்கிறீர்கள்

 

IMG-20181119-WA0057

 

நண்பர்களுடன் நீங்கள் இருக்கும் இடமும் அழகாக உள்ளது. பின்னணியில் உள்ள காயல். பெரும்பாலானவர்கள் குமரகம் பக்கம்தான் செல்வார்கள். மேலும் அழகான இடங்கள் மலபாரில் உள்ளன. அங்கே நிறையபேர் செல்வதில்லை

 

உங்கள் நண்பர்கள் ஏறத்தாழ அனைவருமே ஒல்லியாக இருக்கிறார்கள். மலபாரின் இயல்புகளிலே அதுவும் ஒன்று. அங்கே குண்டர்கள் மிகக்குறைவு. அவர்கள் அதிகம் உண்பது மீன்தான். சிக்கன் மிகக்குறைவு

 

ராமச்சந்திரன்

 

IMG-20181119-WA0046

 

 

அன்புள்ள ஜெ

 

நண்பர்களுடன் நீங்கள் அமர்ந்திருக்கும் இடமும் அந்தச்சூழலும் ஒரு அழகான கதைபோல உள்ளது. இதைப்போன்ற விஷயங்கள் உண்மையில் வாழ்க்கையில் மிக அபூர்வமாகவே நிகழ்கின்றன. கல்லூரி அலுமினி நிகழ்ச்சிகளில் எல்லாம் எவருமே எவரையுமே அறிந்திருப்பதில்லை. சும்மா போஸ் காட்டவும் மேட்டிமைத்தனம் பேசவும்தான் நேரம் போகும். கல்லூரியைவிட்டுப்பிரிந்தபிறகு நட்பே இல்லாமலானவர்கள் பின்னர் சந்தித்து என்ன பேசமுடியும்

 

ஆனால் இதற்கான ஏக்கம் எல்லா மனதிலும் உண்டு. அபூர்வமாகவே வாய்க்கிறது. 96 போன்ற படங்கள் அப்படித்தான் ஆகா ஓகோ என கொண்டாடப்படுகின்றன.

 

ராஜ்குமார்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-73
அடுத்த கட்டுரைதேங்காய் எண்ணை -கனவு- கடிதம்