நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி

anitha

  அனிதா அக்னிஹோத்ரி

 

விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதை.

 

தமிழில் சா ராம்குமார்

a

 

 

நள்ளிரவில் திடீரென்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் திதி. யார் அது? யாராக இருக்கும்?

 

புதிதாக நியமிக்கப்பட்ட காவலாளி தன் ஊதுகுழலை சத்தமாக ஊதினார். அங்கு வரக்கூடாதவர்களை மானசீகமாக விரட்டவும் தன் பயத்தை போக்கவும் இதை தினமும் செய்து கொண்டிருந்தார். இதற்குமுன் இருந்த காவலாளி இப்படி செய்யவில்லை. பிரதான வாயிலுக்கு அருகில் இருந்த தன் சிறு அறையில் அமர்ந்து கொண்டிருப்பார். காலை நான்கு மணி அளவில் உறங்கியும்விடுவார். திதியும் ரித்விக்கும் அதைப்பற்றி என்றும் கண்டுகொண்டதே கிடையாது.

 

ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது.திடீரென்று உறக்கம் கெட்டது ரித்விக்கிற்கும் பிடிக்கவில்லை. எரிச்சல் மேலும் பதற்றத்தை அதிகப்படுத்துவதை அறிந்தவன், ‘ஆள் புதுசு. இன்னும் பழகவில்லை. தூங்கு’ என்று சுருக்கமாக முடித்தான்.

 

படுக்கையில் இருந்து கொண்டே தன் கால்களை முழுவதுமாக நீட்டி சுருக்கினாள். அவர்களின் ஒன்றரை வயது பிள்ளை இவர்களின் கட்டிலுக்கு அருகில் போடப்பட்டிருந்த ஒரு சிறு கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தது. ஆறு மாதத்திற்கு பிறகு பக்கத்து அறையில் ஆயாவை தரையில் உறங்கவைத்துவிட்டு இவனை அங்கேயே படுக்கவைக்க வேண்டும். வெளி நாடுகளில் இன்னும் முன்னரே பிள்ளைகளை தனியாக உறங்கவைப்பதுண்டு. வெளியில் ஏன் இவ்வளவு இருளாக இருக்கிறது? நிலவின் வெளிச்சம் கூட இருப்பதாக தெரியவில்லையே? நுழைவாயிலுக்கு அருகில் இருந்த விளக்குகள் இருளை போக்கும் எண்ணத்துடன் தங்கள் கடமையை செய்வதாகத் தெரியவில்லை.

 

முன்பெல்லாம் இப்படி ஒர் இரவில் திதியும் ரித்விக்கும் பின்னிப்பிணைந்து ஒருவரின் மூச்சுக்காற்று மற்றொருவர் உணர்ந்தபடிதான் ஊறங்குவார்கள். ஆனால் இப்போது உடல்கள் ஒருவரை ஒருவர் தேடுவதில்லை.

 

‘ஒன்னு கேக்கவா?’, அவன் முதுகின் மீது கைவைத்து மெதுவாக அவன் காதுகளுக்கு மட்டும் கேட்கும் வகையில் கேட்டாள்.

 

‘ம்ம்….என்ன?’

 

‘நிஜமாவே அவங்க எல்லாரோட கையையும் வெட்டிக் கொண்டுவர சொன்னீங்களா?’

 

ரித்விக் இவள் பக்கம் விருப்பமில்லாமல் திரும்பினான். ‘ நீ நம்புறியா?’ என்று கவலையுடன் கேட்டான்.

 

‘சொல்லேன்….ப்ளீஸ்’

 

‘மூன்றாம்தர பத்திரிகையை படிக்கிறத விட்டுட்டு உனக்குன்னு இருக்கிற புத்தியை கொண்டு யோசிச்சுத்தான் பாரேன்’

 

தன் அறிவைப் பற்றி ரித்விக் சொன்ன கருத்திற்கு இந்த இரவு நேரத்தில் அவளுக்கு கோபம் வரவில்லை. ரித்விக் அறிவாளிதான். பி.டெக் மற்றும் எம்.டெக்கை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தான். திதி அழகானவள். பி.ஏ. பொது பிரிவில் பட்டம் பெற்றிருந்தாள். கல்லூரியில் இருக்கும்போது அழகி போட்டிகளில் கலந்து கொண்டிருந்தாள்.

 

‘ஆனா இத்தன பேரு?’

 

‘எத்தன பேரு?’

 

‘அதுவந்து…. போலீஸ் இரண்டு ரவுண்ட் சுட்டதுக்கப்புறம் கொஞ்சம் கவனமா இருந்திருந்தா…. மக்கள் எல்லோரும் கலைஞ்சு போறாங்களான்னு பார்த்திருந்தா…’

 

இம்முறை ரித்விக் பொறுமையை இழந்திருந்தான். கோபத்துடன் எழுந்து அமர்ந்து கொண்டான்.

 

‘சட்டம் ஒழுங்கை அப்படி பார்க்க முடியாது. அப்படி எல்லாம் யோசிச்சு நிறுத்தி நிதானமா செஞ்சிருந்தா நாங்க எல்லாரும் மொத்தமா காலி. அதப்பத்தி நினைச்சு பார்த்தியா?’

 

தன் அருகில் இருக்கும் பிரியமான முகத்தை, அதைவிட விருப்பமான முன் நின்ற மோவாயை திதிக்கு ஏன் பிடிக்காமல் போனது? பதினைந்து நாட்களாக இருவரும் கண் பார்த்து பேசிக்கொள்ளவில்லை. ரித்விக் தன் முதுகை அவள் பக்கம் காட்டி உறங்குவது போல படுத்தான். காக்கை குஞ்சொன்று கூட்டில் மெதுவாக அழுவது போல சப்தம் கேட்டது. கண் விழித்திருந்த திதி, சருகுகள் விழும் ஒலியையும் காய்ந்த மரக் கிளைகளின் உரசல் சத்தத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள். விருப்பமின்றி ஒரு யோசனை பிறந்தது. அப்படி நிகழ்ந்திருந்தால் உண்மையாகவே ரித்விக்கும் அவன் ஆட்களும் கொல்லப்பட்டிருப்பார்களா? அவர்கள் அந்த இடத்திற்கு அருகே கூட இல்லை. திரளாக கூடியிருந்த மக்கள் துப்பாக்கிச்சூடு தொடங்கியதும் நாலாப்பக்கமும் ஓடிக் கொணடிருந்தார்கள். வெறும் கற்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு வந்திருந்தார்கள். வேறு எந்த ஆயுதமும் இல்லை. அந்த பன்னிரெண்டு பேரை கொல்லாமல் தவிர்த்திருக்கலாமா?

 

திடீரென்று காலை பிறந்திருந்தது. சூரிய ஒளிக்கதிர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அறைக்குள் நுழைந்து கொணடிருந்தன. காலைத் தேனீருக்கு காத்திருந்த திதி நினைத்துக்கொண்டாள், அவளுடைய பெற்றொர் எதையும் புரிந்து கொண்டிருக்கவில்லை. கொல்கத்தாவில் இருந்து தொடர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

‘நீ இங்கு வந்திடு. அங்கு பாதுகாப்பு இருக்கிற மாதிரி தெரியல. மக்கள் எல்லாம் கோவமா இருக்காங்க. ரித்விக் கிட்ட லீவு எடுக்க சொல்லு’

 

‘எல்லாத்தையும் விட்டுட்டு எப்படி போக முடியும்?’. திதி கோபமாக பதிலுரைப்பாள். ‘அவருக்குன்னு சில பொறுப்பு இருக்குல்ல? பத்திரிகை எல்லாம் அவங்கள பத்தி எழுதும் போது அதுல ஒருத்தர் மட்டும் போயிட்டாருன்னா மத்தவங்க சங்கடப்பட மாட்டாங்களா?’

 

இங்கு இருப்பதும் விட்டு செல்வதும் இரண்டும் ஒரே அளவு ஆபத்தானதுதான். இதை எல்லாம் தன் பெற்றோருக்கோ ரித்விக்கின் பெற்றோருக்கோ சொல்லி புரியவைப்பது கடினம். தொலைவில் இருந்த மல்காங்கிரி பகுதியில் ஆர்.டி.எக்ஸ் குண்டை கண்டுபிடித்தால் கூட ‘உங்களுக்கு ஒன்னும் இல்லையே’ என்று தான் கேட்பார்கள். அவர்களை சொல்லி குறையில்லை. ஊடகங்கள் அந்த அளவிற்கு இங்கு நடக்கும் விஷயங்களுக்கு அதீத பதற்றத்தை அளித்திருந்தன.

 

கடந்த பத்து நாட்களாக அங்கிருந்து இரண்டு மணிநேர தூரத்தில் இருந்த மாநில தலைநகரத்தில் தொடர் போராட்டங்களும் மறியலகளும் ஊர்வலங்களும் நடந்து கொண்டிருந்தன.  ஒரு சாரார் உள்துறை அமைச்சரின் இராஜினாமாவை கோரினர். இன்னொரு குழுவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மீது வழக்கு தொடர வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தினர். ஆனால் அனைவரும் ஒரே குரலில் இந்த  நிறுவனம் வெளியேற வேண்டும் என்று கூறினர். அவர்கள்தான் காவல்துறையை ஏவி விட்டு துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். அத்தனை பேரின் சாவுக்கும் அவர்கள் தான் காரணம்.

 

இவை அனைத்தையும் திதி ஆச்சரியத்துடன் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தாள். பொதுவாக அமைதியாக இருக்கும் மக்கள் திடீரென்று வெறிகொண்டு அதையெல்லாம் செய்தார்களா? சுத்தமாக கல்வி கற்ற்றிராதவர்களான கிராம மக்கள் தீப்பந்தங்களுடன் நகருக்குள் ஊர்வலமாக சென்றார்கள். ஒரு பெருநகரை அதுவரை பார்த்திராத மக்கள் அவர்கள் என்பது அவர்களின் மகிழ்ச்சியற்ற கடினமான முகங்களை தொலைக்காட்சியில் பார்க்கும்போது தெரிந்து கொள்ள முடிந்தது. முறுக்கிய கைகளும், துடிக்கும் நரம்புகளுமாக அவர்களின் அறிந்த முகங்கள்கூட அன்னியர்கள் போல காட்சியளித்தன. நகருக்குள் ஆங்காங்கு தீ மூட்டி இரவில் அதை சுற்றி அமர்ந்து கொண்டனர். அவர்கள் கைகளில் இருந்த ஈட்டிகளும் கோடாரிகளும் வானத்தை நோக்கி தூக்கிப்பிடிக்கப்பட்டிருந்தன. பழைய டயர்களில் இருந்து எழுந்த புகை சுருள் சுருளாக மேலே எழுந்து  கொண்டிருந்தது. எரியூட்டக்கூடிய அனைத்து பொருட்களும் இழுத்து வரப்பட்டன. வீதியில் இருந்த விளம்பரப் பலகைகள் நொறுக்கப்பட்டிருந்தன. எத்தனை தைரியமானவர்கள்! காவல்துறையினர் சிவந்த முகங்களுடன் கைகளில் கேடயத்துடனும் துப்பாக்கியோடும் காணப்பட்டனர். எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எரியும் தீப்பந்தங்களுக்குள் அவர்களின் உருவங்கள் ஒருவகை சோர்வோடும் தனிமையுற்றும் இருப்பதாக தெரிந்தது.

 

கடந்த இரண்டு வாரங்களாக் தனக்கு கிடைத்த அனைத்து பத்திரிகைகளையும் தொலைக்காட்சி ஊடகங்களையும் திதி தீவிரமாக  பின் தொடர்ந்தாள். அவளின் ஒன்றரை வயது மகன் கூட அவளுடையதாக தோன்றவில்லை. நல்லகாரியமாக அவளுடைய பணியாள் பசந்தி உள்ளூர் இல்லை. கொல்கத்தாவிற்கு அருகில் இருந்த மத்யம்கிராம் அவளது ஊர். அப்படி இருந்தும், திதியின் அம்மா குழந்தையை யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று  நூறு முறையாவது கூறினாள். நொடி நேர ஆத்திரத்தில் என்ன செய்வார்கள் என்ற சொல்ல முடியாது. ரித்விக் காலையில் சென்றால் சில நாட்கள் மதிய உணவுக்கு வருவதுண்டு. சில நாட்களில் இரவில் தான் திரும்புவதுண்டு. திரும்பி வந்ததும் தன் மதுக் கோப்பையுடன் அன்றைய சோர்வை களைய முயற்சிப்பான். திதியின் கூற்று எதுவும் அவன் காதில் விழுவதில்லை. அலுவலகத்தில் அவன் என்ன செய்கிறான் என்று யாருக்கு தெரியும்? கோப்புகளை சரிபார்த்து கொண்டிருக்கலாம். ஆனால் புத்தாண்டை கொண்டாடியிருக்க வேண்டும். அவர்களின் மனைவியர் சங்கம் ஒவ்வொரு விடுமுறையின் பொழுதும் சொகுசுப் பேருந்தை வாடகைக்கு பிடித்து சுற்றுலா செல்வதுண்டு. குளிர்காலம் என்பதால் கேரட், பட்டாணி, பீன்ஸ், குடைமிளகாய் போன்ற காய்கள் சந்தையில் கிடைக்கும். புதிய உணவு வகைகளை முயன்று பார்த்துவிட்டு பெண்கள் மதிய அரட்டையை முடித்து டி.வி.டியில் புதுப்படம் பார்ப்பது வழக்கம். இம்முறை எதுவும் நடக்கவில்லை. அலுவலர்களின் குடியிருப்பே இறுக்கமாக இருந்தது.

 

ரித்விக் புத்தாண்டு அன்று மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்திருக்க வேண்டும். பிரியாணியின் வாசமும் கோழி வறுவலின் மணமும் வீடெங்கும் நிறைந்து வெளியில் இருந்த புல்வெளிகள் வரை பரவியிருந்தது. தொலைக்காட்சியில் காட்சிகளாக செய்தி ஓடிக் கொண்டிருந்தது. அன்றுதான் திதி வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். ஒரு துண்டை தனது இடையில் சொருகிக் கொண்டு நடந்து கோண்டிருந்தாள். அவ்வப்போது சமையல் அறைக்கு சென்று பண்டங்களை ருசி பார்த்துக் கொண்டிருந்தாள். தொலைக்காட்சிக்கு முன்பிருந்த சோபாவில் கால் மேல் காலிட்டுக் கொண்டு கையில் வெள்ளரி துண்டோடு அப்போதுதான் அமர்ந்தாள். திடீரென்று தொலைக்காட்சியில் சில இறந்த உடல்களைத் தூக்கிக் கொண்டு போகும் காட்சிகள் ஓடிக்கொண்டுருந்தன. குண்டுவெடிப்பு ஜம்முவிலா தில்லியிலா பம்பாயிலா என்று மனம் தேடியம்போது ‘பழங்குடிகள்’ என்ற வார்த்தை காதுகளை நிறைத்தது. செய்தியை பார்த்த பின்பு ரித்விக்கை அழைத்தாள். ஒரே மணியோசை சென்ற நிலையில் தொலைபேசி துண்டிக்கப்பட்டது. அதற்குள் அச்செய்தி குடியிருப்பு எங்கும் பரவியிருக்க வேண்டும். தோட்டக்காரர்கள், சமையல்காரர்கள், ஓட்டுனர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். யாருக்கும் இதில் சொல்ல ஒன்றும் இருக்கவில்லை. உணர்வுகளை அடக்கி வைத்திருக்கிறார்களா? அவர்களின் உணர்வுகளை பற்றி அந்த நேரத்தில் அக்கறை கொள்ள முடியவில்லை. ரித்விக்கை பற்றிய எண்ணங்கள் இறந்த உடல்களின் ஊடாக ஓடி கவலையாக மாறிக் கொண்டிருந்தன.

 

இந்திய விடுதலை காலத்திற்கு பின் இந்தப் பகுதியில் இத்தனை மக்கள் துப்பாக்கிச்சூட்டில் இறந்திருக்கவில்லை. அதை அடுத்த நாள் நாளிதழ்கள் உரக்க கூச்சலிட்டன. அதென்ன சுதந்திரத்திற்கு பின்? அதற்குமுன் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிர் இழந்தால் அது நாட்டுக்கான தியாகமாக கருதப்பட்டது. அதற்குபின் இயல்பான வாழ்க்கை என்பது உயிர் வாழ்ந்து காவல்துறையின் அராஜகத்துக்கு ஆளாகாமல் இருப்பதுதானே. தொழிற்சாலை வர இருக்கும் பகுதியில் நடந்த இத்தனை விஷயங்களை ஒருமுறைகூட ரித்விக் அவளிடம் முழுவதுமாக பகிர்ந்திருக்கவில்லை. நாளிதழ்களில் இருந்துதான் அவள் தெரிந்து கொண்டாள். புத்தாண்டின் முதல் வேலையாக பூமிபூஜைக்குப் பின் அந்த இடத்தில் எல்லைச்சுவர் எழுப்புவதற்கான பணிகள் தொடங்கின. தொழிற்சாலைக்கான நிலம் மிகப்பெரியது. அந்த இடம் நிறுவனத்தின் பெயரில் ஏற்கனவே மாற்றப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய முழு நஷ்டஈடும் கிடைக்கப்பெறவில்லை என்றனர். ஆதலால் சில நாட்களாகவே ஒரு பதற்றமான சூழல் உருவாகிக் கொண்டிருந்தது. அந்த நிலம் பழங்குடிகளுக்கும், சிறு விவசாயிகளுக்கும் அன்றாடக் கூலிகளுக்கும் சொந்தமாக இருந்தது. இந்த முழுப் பகுதியும் காடுகளால் முன்னொரு காலத்தில் சூழப்பட்டிருந்தது. இந்த மக்கள் அதில் இருந்த கிடைத்த பழங்கள், கிழங்குகள் தேன் போன்ற பொருட்களைக் கொண்டு தங்கள் வாழ்வை கடத்திக் கொண்டிருந்தார்கள். நாகரீகம் வளர்ந்து காடுகளில் இருந்த மரங்களை வெட்டிச் சாய்க்க தொடங்கிய பின்னர் அவர்களின் நிலம் சுருங்கியது. நிலம் சுருங்கச் சுருங்க அந்த மாவட்டத்தில் அவர்களின் பகுதி என்பது அவர்களின் அந்த மலையில் இருந்து புகை எழுப்பி அது முகிலுடன் கலக்கும் பகுதியோடு முடிவுற்றது. அதில் சிலர் வயல்களில் கூலிவேலைக்கும், சிலர் செங்கல்சூளைகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்லத் துவங்கினர். அவர்களுக்கு இருந்த சொற்ப நிலம் என்பது வருடம் முழுவதும் வாய்க்கும் வயிற்றுக்குமே போதவில்லை. அனைவரிடத்தில் நிலமும் இருக்கவில்லை.

 

எவ்வளவு சொற்பமாக இருப்பினும் அது அவர்களின் நிலமாக் இருந்தது. அந்த நிலம் மேடுபள்ளமாகவும், காட்டு மரங்களையும் முள் புதர்களையும் கொண்டதாக இருப்பினும் சில நெற்பயிர்களைக் கொண்டு மக்களின் வாழ்வை காத்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவியாக இருந்தது. அந்த நிறுவனம் இந்த நிலத்தை அரசாங்கத்திடம் இருந்துதான் பெற்றோமே தவிர மக்களிடம் இருந்து எடுக்கவில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தது. ஆதலால அரசாங்கம் தான் உங்களுக்கு பணம் கொடுத்து காக்க வேண்டும் என்று கைகழுவியது. அந்த நிறுவனம் பெரிய லாரிகளையும் புல்டோசர்களையும் கொண்டு வந்து பணிகளை துவக்குவதற்காக முழு மூச்சாக ஈடுபட்டிருந்தது. ஆனால் அரசாங்க இயந்திரம் அங்கு இல்லை. நிறுவனம் கூறுவதற்கு அங்கு செவிசாய்க்க ஆளில்லை.

புத்தாண்டின் முதல் நாளில் அந்த பதற்றம் முழுவடிவம் கொண்டுவிட்டிருந்தது. அரசியல் தலைவர்கள் ஒருவர்பின் ஒருவராக வரத் தொடங்கினர். பிற மாநிலங்களை சார்ந்த பழங்குடித் தலைவர்கள் வரத் தொடங்கினர். ஐநூறுக்கும் மேலான பழங்குடிகள் ஒன்று கூடி செங்கற்கல்லாலும் சிறிய பாறைகளையும் கொண்டு எதிர்த்துத் தாக்குவது என்பது அசாதாரணமானது. காவல்துறைக்கு இந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதற்குமுன் சிறு ஆர்ப்பாட்டங்கள் தவிர சொல்லும் அளவுக்கு எதுவும் நடந்திருக்கவில்லை. பழங்குடிகள் தாக்கத் துவங்கியதும், அங்கிருந்து தப்பி ஓடிய காவலர்கள் அருகில் இருந்த சிறிய குட்டையில் இறங்கினர். அந்த குட்டையில் தஞ்சம் தேடி விழுந்த முதல் காவலாளியை ஒரு கும்பல் தங்கள் ஈட்டியை கொண்டும் கோடாரியை கொண்டும் சரமாரியாக வெட்டினர். அவரை காப்பாற்ற எண்ணிய காவல் அதிகாரியின் கையிலும் கோடாரி பாய்ந்தது.  அதிகாரி தாக்கப்பட்ட பின் காவல்துறையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. எந்த அதிகாரியின் உத்தரவிற்கும் காத்திராமல் நாலாப்பக்கமும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பன்னிரெண்டுபேர் உயிரிழந்தனர். முப்பதுபேர் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

 

அடுத்த பத்து பன்னிரெண்டு நாட்கள் ஒருவிதமான குழப்பத்துடன் கடந்தது. நீதிவிசாரனைக்கு ஆணையிடப்பட்டிருந்தது. நிறுவனத்தின் பொறுப்பினமையை பற்றி மாவட்ட நிர்வாகம் குற்றம் சாட்டியது. ஒப்பந்தம் காலாவதி ஆகிவிடுமோ என்ற பதற்றத்தில் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் இருந்தன. அப்பகுயைச் சேராத ஆட்கள் இறந்தவர்களைக்கொண்டு நடத்திய அரசியல், காலை முதல் மாலை வரை தொடர்ந்து அங்கே சுற்றிக் கொண்டிருந்த செய்தி ஊடகங்கள் என நாட்கள் சென்றன. சிலர் அந்த கிராமத்திலும் சிலர் மாநில தலைநகரிலும் சிலர் மருத்துவவமனகளிலும் முகாமிட்டு தங்கள் செய்தி சேகரிக்கும் பணியை நடத்தினர்.

 

 

அப்படித்தான் கைகள் வெட்டப்பட்ட செய்தி பரவியது. ஆறு அல்லது ஏழு சடலங்களில் இருந்து முழங்கைக்குக் கீழே வெட்டப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அதுவும் அவர்கள் இறந்தபின் நடந்திருப்பதாக கூறப்பட்டது. இறந்தவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேறு வழியில்லாததால் அவர்களின் கைகள் பரிசோதனைக்காக  வெட்டப்படிருப்பதாக ஊடகங்களால்  கூறப்பட்டது. அங்கு அரங்கேறிக்கொண்டிருந்த சூழலில் இப்படி சற்றும் இறந்தவர்கள் மீது மதியில்லாமல் சில மருத்துவர்களோ யாரோ செய்த செயலினால் பெரும் கோபமும் வெறுப்பும் உருவாகியிருந்தது.இது அவர்களை சுட்டு கொன்றதைவிட மோசமாக கருதப்பட்டது.

 

அவள் கேட்டபோது ரித்விக் ஆத்திரம் கொண்டான். ‘எல்லாம் பொய்’ என்றான். ‘கை வெட்டப்பட்ட ஒரு படத்தையாவது நீ பார்த்தியா?’

 

‘அப்போ இந்த பெரிய பெரிய ரிப்போர்ட்டெல்லாம்?’

 

‘எல்லாம் அரசியல். யாருக்கு என்னவேண்மோ அதை சொல்றாங்க. நாங்க என்ன பொணந்தின்னிகளா?’

 

ரித்விக்கின் ஓட்டுனர் ஜூலியசின் தம்பி மருத்துவமனையில் இறந்தான். வரவிருக்கும் மார்ச் மாதத்தில் மாத்யமிக் பரீட்சையை அவன் எழுதுவதாக இருந்தது. பதினெட்டு நிரம்பாத பாலகனான அவன் போராட்டத்தில் இறந்திருந்தான். ரித்விக் அவன் சார்பில் தில்லியில் இருந்து அவசர மருந்துகளை அந்த பாலகனை காக்க வரவழைத்தான். அப்படி முயன்றும் அவன் பிழைக்கவில்லை. ஜூலியஸ் அவன் தம்பியின் இறுதி சடங்குகளுக்காக விடுப்பு எடுத்தான்.

 

‘ஜூலியஸ் இப்போ இல்ல. அவனை நிறுத்திடறது இப்போ நல்லது’. என்றான் ரித்விக். இரவுக் காவலாளி மாற்றப்பட்டிருந்தான். சமையல்காரர் அவராக வேலையை விட்டார்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த திதி ‘இந்த வேலையும் போயிடுச்சுன்னா பாவம் என்ன செய்வான் அவன்? என்று கேட்டாள்.

 

‘அவனுக்குன்னு இன்னொரு வேலை தேடிக்குவான். டிரைவர் வேலைக்கு எப்பவும் ஆள் தேவை. இன்னும் அவனை வச்சிருந்தா என்னவேணும்னாலும் நடக்கலாம். அவன் ஓட்டும்போது எதையாவது செஞ்சிட்டான்னா? இவங்க யானை மாதிரி. எதையும் மறக்கமாட்டாங்க’

 

‘வேலைவிட்டு நிறுத்திட்டா உன்னை விட்ருவான்னு என்ன நிச்சயம்? நாம எப்பவும் தனியா வெளியில போக முடியாதா? காலனியில் நான் அடிக்கடி இராத்திரியில் கூட நடக்கிறேன். யாராவது குண்டு வீசினா? இல்ல ஆசிட் அடிச்சா?”

 

உண்மையில் அவளுக்கு ஜூலியஸை பணியில் இருத்திக் கொள்ளச் சொல்ல வேண்டும் என்றுதான் எண்ணம். ஆனால் ரித்விக்கிறாக சற்றே கவலையுற்றாள். அவனுக்காகத்தான் அக்கறைப்படுகிறாள் என்று புரியவைப்பதற்காக ஜூலியஸுக்கு சில கற்பனையான குணங்களை அடுக்கினாள்.

 

ஜூலியஸ் திரும்ப வரும் வரை காத்திருப்பதாக ரித்விக் முடிவு செய்தான். தற்காலிகமாக ரித்விக் ஒரு தினப்படி ஓட்டுனரை வைத்துக் கொண்டான். காரில்லாமல் இங்கு எந்த வேலையும் செய்ய முடியாது.

 

நெடிய கட்டுரைகள் செய்திகளில் இருந்து பெட்டிச் செய்தியாக அந்த சம்பவம் மாறிக் கொண்டிருந்தது. சில நாட்களிலேயே அது நடுவில் ஏதோ ஒரு பக்கத்திற்கு ஓரம்கட்டப்பட்டது. நான்கு ஐந்து மாதங்களுக்கு பின் காணாமல் போனது. குளிர்காலம் சென்று வசந்தம் பிறந்திருந்தது. குயில்கள் இரவில் அழைப்பு விடுத்தன. திதியும் ரித்விக்கும் புதுக் காவலாளியின் குழல் சத்தத்திற்கு பழகியிருந்தார்கள்.

 

வசந்த கால சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் காரசாரமாக சென்றது. எதிர்க்கட்சிகள் அரசின் அறிக்கையை கிழித்தெறிந்து கூட்டமாக வெளியேறினர். பின் அமைதி திரும்பியது. தொடக்கத்தில் நீதிவிசாரனை மிக பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்பட்டது. யார் எல்லாம் அழைக்கப்படுவார்கள், என்ன நடக்கும் என்று. நகரின் ஒரு மூலையில் விசாரனை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கோப்புகள்ளும், வாக்குமூலங்கள்ளும், விசாரனை அறிக்கைகள்ளும் என சூழப்பட்டிருந்தது அது.  அந்த காகிதச் சிலந்திக்குள் நீதிமான்களும் சிக்கிக் கொண்டனர். அதற்கு மிகச்சரியாக யார் பொறுப்பு என்று தேடும்படலத்தில் அதன் காலம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே சென்றது.

 

தொடக்கத்தில் இறந்தவர்களின் நினைவிடத்தில் பூச்செண்டுகளும் மலர்வளையங்களும் வைக்கப்பட்டன. பின்னர் மரத்திலிருந்து சருகுகள் மட்டும் காற்றோடு விளையாடி கீழே விழுந்து காணப்பட்டன. அவர்களின் குடும்பத்தார் எந்த நஷ்ட ஈடையும் வாங்க மறுத்தனர். இடைத்தரகர்கள் பலமுறை கிராமத்திற்கு சென்று அவர்களின் உறுதியைக் குலைக்க எண்ணினர். ஆனால் ஆறு மாதங்கள் கடந்தும் ஒரு குடும்பத்தை தவிர அரசால் வேறு யாரையும் சம்மதிக்கவைக்க முடியவில்லை. பொதுமக்களும் அவர்களின் பிடிவாதத்திற்கு பழகிவிட்டிருந்தனர்.

சில பித்தர்கள் மட்டும்  காலத்தைப்ய பிரக்ஞை இல்லாமல் அங்கே மேலும் சுற்றிக் கொண்டிருந்தனர்.  கிராமத்திற்கு செல்லும் முதன்மை வழியை மரக்கிளைகள் கொண்டும், பழைய டயர்களை எரிக்கவிட்டும் தடுத்து யாரும் வராமல் இருக்கச்செய்தனர். இறந்தவர்களின் நினைவிடத்திற்கு அருகில் கிடத்தப்பட்டிருந்த அந்த கிளைகளோ டயர்களோ மக்களை வராமல் தடுக்க முடியவில்லை. அந்த கிராமத்திற்கு செல்ல பல வழிகள் இருந்தன. இருந்தும் இதுவே முதன்மையான வழி என்பதால் அவர்கள் ஒருவர்மாறி ஒருவர் இரவெல்லாம் காவல் கொண்டு தடுத்தனர். இது அவர்களுக்கு ஒரு கவுரவ குறியீடாக மாறியிருந்தது. ஊர்காரர்கள் அவர்களுக்கான உணவை தையாரித்து சிறு அலுமினிய டப்பாவில் அடைத்து எடுத்துக் கொண்டு வந்தனர். அவர்களுக்கு வேறு எந்த கோரிக்கைகளும் இருக்கவில்லை. எந்த வீர அறிக்கைகளும் அவர்களால் விடுக்கப்படவில்லை. இருப்பினும் அவர்களை கலைக்க யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்களின் இந்த மௌனமான எதிர்வினையற்ற போராட்டத்தை எவராலும் மறக்கமுடியவில்லை.

 

சில சமயங்களில் ஒரு கள்ள மவுனம் தான் எந்த விஷயத்தையும் மறக்கடிக்க ஆயுதமாக பயன்படுத்தப்படும். அதேதான் இங்கும் நடந்தது. அந்நிகழ்வைப் பற்றிய தேவையில்லாத பேச்சோ செய்தியோ எங்கும் வராமல் பார்த்துக் கொண்ட அரசாங்கம், அந்தப் போரில் வென்றது. அதாவது அந்த விஷயம் மீண்டும் உருவெடுக்க விடாமல் பார்த்துக் கொண்டது. ஒரு சமூகத்தில் படித்தவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டால் அதை ஒரு விஷயமாக அந்தச் சமூகமும் கருதாது.

 

அது ஒரு சிறு கறை, அவ்வளவே. காலப்போக்கில் சிறு கறைகள் நீக்கப்படும், உறவுகளில் ஏற்படும் விரிசல்கள் சமன் செய்யப்படும். திதிக்கும் ரித்விக்கிற்கும் இருந்த இடைவெளி அப்படித்தான் காணாமல் போனது. இரவு விருந்துகள், சுற்றுலா, மாலை நேர உரையாடல்கள், மதிய நேர பிரியாணி என அனைத்தும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பின. இருவரும் கண்களால் பேசி அடிக்கடி புன்முறுவல் பூத்தனர். ஆயா பிள்ளையை பக்கத்து அறையில் படுக்கவைத்ததும் இருவருக்குமான சிணுங்கல்கள் தொடங்கின. ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு மூச்சுக்காற்று மேல் படும்படி உறங்கினர். எல்லா கறைகளும் துடைக்கப்பட்டுவிட்டன. திதி மட்டும் அடிக்கடி இரவில் தன்னை அறியாமல் எழுந்து வெளியில் பார்ப்பாள். நாய்க்குட்டியோ காக்கை குஞ்சோ அவளை அழைத்திருக்கலாம். வெளியில் இருந்த புல்வெளியையும் நுழைவாயிலையும் பார்த்தபின் ரித்விக்கை பார்ப்பாள். அவன் பக்கம் சாய்ந்து அவன் நெற்றி, கன்னம், மோவாய், உதட்டை பார்ப்பாள். எங்கும் இரத்தக்கறை இல்லை. எல்லாம் துடைக்கப்பட்டிருந்தன.

பின் ஒரு நாளில் மழை தொடங்கியது. எதிர்பாராமல் தொடங்கிய மழை அல்ல. மே மாத மேகங்கள் வானில் ஒன்றுகூடின. புயல் மையம் கொள்ள தொடங்கியது. ஒருவழியாக மழை பொழியத்தொடங்கியது. காலை, மாலை, இரவு, மீண்டும் என தொடர்ந்தது. வங்கக் கடலில் ஒரு சிறு காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

 

ஆறு மாதங்களுக்கு பிறகு தன் பெற்றோரையும் மாமனார் மாமியாரையும் சந்திக்க கொல்கத்தா வந்திருந்தாள். விடாது மழை. எங்கு காணினும் கலங்கிய நீர் சென்று கொண்டிருந்தது. வாகன நெரிசலும், மூடப்படாத பாதாள சாக்கடைகளும் அவளை சோர்வுறச்செய்தன. எத்தனை முறைதான் சினிமா தியேட்டரிலும் மால்களிலும் மழைக்கு ஒதுங்குவது. அவள் மகனுக்கு சளி பிடித்திருந்தது. இதற்கும்மேலாக கொல்கத்தா காற்றின் மாசு. ஒருவழியாக திதி தன் பயணத்திற்குச் சீட்டு வாங்கினாள். மழையில் நனைந்தபடி அந்த இரயில் நீர் சூழ்ந்த வயல்களை கடந்து சென்றது.

 

ஓலமிட்ட சூறைக்காற்று அவள் பயணித்த குளிர்சாதனப்பெட்டிக்குள் நுழைய முடியவில்லை. அவள் தன் மகனை ஒரு கம்பளியில் போர்த்தி அடிக்கடி அவன் காய்ச்சலைச் சோதித்தவாறு பயணித்தாள். ரித்விக் பம்பாயில் இருந்து கொண்டே அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். இரயில் நின்றதும் சுத்தமான அழுக்ககற்ற வீட்டிற்கு போக முடியும் என்று நினைத்தாள். அதில் இருந்த ஒரே சிக்கல், இரயிலின் வருகைநேரம். காலை மூன்று முப்பதுக்கு வருகை என இருந்தது. குளிர்சாதனப்பெட்டியின் பொறுப்பாளரிடம் தன்னை சரியான நேரத்தில் எழுப்ப கேட்டுக் கொண்டிருந்தாள். பல முறை வந்திறங்கிய அதே ப்ளாட்பாரத்தில் வந்திறங்கினாள். ஆனால் அப்போது ஏதோ தெரியாத உலகத்தில் நுழைவது போல இருந்தது. தடிமனான சால்வையை கொண்டு தன் மகனை போர்த்தியிருந்தாள். அவளது பெட்டிகள் நடைமேடையில் இறக்கிவிடப்பட்டன. மழையால் சூழப்பட்டிருந்த அந்த இரவில் வெளிச்சத்திற்கான எந்த தடையங்களும் இல்லை. போர்டர்கள் யாரும் தென்படவில்லை. அருகில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. பெட்டிகளையும் மகனையும் தூக்கிக் கொண்டு நடைமேடையில் தகரக் கூரை தொடங்கும் இடம் வரை சிரமத்துடன் வந்தாள். குளிரில் நடுங்கினாள். கையில் குடை இருந்தாலும், பிள்ளையையும் பைகளையும் தூக்கி அவளுக்கு பழக்கமில்லை. ஜூலியஸ் இங்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் அவன் அங்கிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எங்கே அவன்?

 

இனம் புரியாத பயத்தில் திதி நடுங்கினாள். அதே ஜூலியஸ்! அவள் எல்லாவற்றையும் மறந்துவிட்டிருந்தாள். தன் தம்பியை போராட்டத்தில் இழந்த ஜூலியஸ். இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் வேலையில் சேர்ந்திருந்தான். கார் ஓட்டினான். ஆனால் இவளுக்கு அதைப் பற்றி எந்த பயமும் வந்திருக்கவில்லை. இரவின் தனிமையில் மட்டுமே சில அச்சங்கள் உயிர் பெறுவதுண்டு.

 

ஹாலோஜன் பல்புகள் மங்கலாக இருந்தன. எவ்வளவு நேரம் இப்படியே காத்துக் கொண்டிருப்பது? அரைகுறை தூக்கத்தில் இருந்த ஒரு போர்டரை கண்டுபிடித்து தன் பொருட்களுடனும் மகனையும் குடையையும் தாங்கி நடைபாலத்தை கடந்தாள். இரயில் நிலையத்தின் வாசலுக்கு வந்தும் அவனை காணவில்லை. எங்கே ஜூலியஸ்?! வராமல் விட்டானா?

 

இந்த மழையிரவில் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அத்தனை வண்டிகளில் எப்படி அவனை கண்டுபிடிப்பது? போர்டர் வர மறுத்தான். ‘வெளியில வந்தா வண்டி இருக்கும்னுதான சொன்னீங்க? நான் வரமாட்டேன்’

 

அவன் பேச்சை கண்டுகொள்ளாமல் ஒவ்வொரு வரிசையாக பார்த்தாள். அவளும் மகனும் ஆற்றில் முக்கியெடுத்தது போல் நினைந்திருந்தனர். அவள் தொண்டை வற்றியிருந்தது. விக்கி அழ வேண்டும்போல இருந்தது. அப்போதுதான் ஜூலியஸை பார்த்தாள். வாகனத்திற்கு வெளியே மழையில் நினைந்துகொண்டு நின்றிருந்தான்.

 

கத்தி கூப்பாடு போட எண்ணினாள். நீ வேண்டுமென்றே தான் வரவில்லை, இல்லையா? என்னையும் பிள்ளையையும் இந்த மழையில் முழுவதுமாக நினையவிட்டு அழையவைத்தாய் என்று அவனை மனதில் கடிந்து தூற்றினாள்.

 

ஜூலியஸின் முகம் பாறையை போல இறுகியிருந்தது. அவனால் வெடிகுண்டையோ ஆசிட்டையோ எறிய முடியாது. பைகளை தூக்கிக் கொண்டு வந்த போர்டர் முறையிட்டு பணத்தை பெற்றபின் சென்றார்.  அவள் ஏறிக்கொண்டாள். வண்டியின் விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. ஜூலியஸ், ஈரம் படிந்த தெருக்களின் வழியே அவர்களை அழைத்து சென்றான். கவலையோ பயமோ அற்ற ஒரு நிழல் போல இருந்தான்.

 

திதி தன் மகனின் தலையை வண்டியில் இருந்த ஒரு துண்டை கொண்டு துவட்டினாள். நாளை அவன் ஜுரம் இன்னும் கூடலாம். மருந்துகள் குணப்படுத்தும். ஜூலியஸின் தம்பி திரும்பவரப்போவதில்லை. இந்த உலகத்தில் வாழும் பல கோடி ஜூலியஸ்களுக்கு ஒரு பொருளை தொலைத்தபின் அது திரும்ப கிடைக்காது என்பது தெரியும். அந்த சாலையை மறித்து போராடிய மூடர்களுக்கு கூட இது தெரியும்.

 

திதியும் அவள் மகனும் ஒன்றும் அத்தனை சிரமத்திற்கு உட்படவில்லை. மழையில் நினைந்தபடி அச்சம் சூழ்ந்த ஒரு அரை மையில் நடை. பதினைந்து நிமிட திகில். ஜூலியஸால வேறு என்ன செய்துவிட முடியும்?

 

வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு பின்னால் அமர்ந்திருந்தாள், பாறை போன்ற உறைந்த அவனின் முதுகை அன்பாக தன் கையால் தொட்டு ஆறுதல் சொல்லவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவளால் அது இயலவில்லை அவள் விரல்களில் மழைநீரும் இரத்தமும் கலந்திருந்தன.

 

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

 

விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்

முந்தைய கட்டுரைநட்புக்கூடல் -கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைகோவை புத்தகக் கண்காட்சி விருதுகள்