ராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்

 

_MG_7204
ராஜ் கௌதமன்

 

 

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

 

விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்

ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் என்ற இச்சிறுநூல் சங்கப்பாடல்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட இரு ஆய்வுக்கட்டுரைகளை கொண்டுள்ளது. இவ்விரு கட்டுரைகளுக்கும் அடிப்படையாக அமையும் கருதுகோள் ஒன்றே. சங்கப்பாடல்கள்  அரசவைகளில் பாடி நடிக்கப்பட்டவை என்பது பரவலாக ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு கருத்து. நவீன இலக்கியத்தைப் போல “வாசகன்” என்ற பாத்திரத்தை நோக்கி சங்க இலக்கியம் பேசவில்லை. அது மன்னர்களது அவைகளில் மீண்டும் மீண்டும் பாடப்பட்டு நடிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் எழுத்து மரபில் நமக்கு கிடைக்கும் மிகப்பழமையான பாடல் புறநானூறில் உள்ளது. ராஜ் கௌதமன் இந்த எழுத்து மரபினை புலவர் மரபு என்கிறார். புலவர் மரபு இயற்றிய சங்கப்பாடல்களின் கச்சாப்பொருளாக அதற்கு முந்தைய பாணர் மரபு என்ற ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறார். அந்த பாணர் மரபுக்கும் புலவர் மரபுக்குமான இடைவெளிகளை புரிந்து கொள்வதன் வழியாக தமிழ் மரபினை புரிந்து கொள்ளச் செய்வது இக்கட்டுரைகளின் நோக்கமாக இருக்கிறது.

ஒரு சமகால உதாரணத்துடன் ராஜ் கௌதமனின் இந்த ஆய்வினை விளக்க முயலலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் மேற்கில் “நாட்டார்”(folks) குறித்த ஆய்வுகள் தொடங்குகின்றன. நாட்டார் என்பதற்கு பல்வேறுபட்ட வரையறைகள் சொல்லப்படுகின்றன. சுருக்கமாக சமூகம் என்று நாம் பொதுவாக புரிந்து வைத்திருக்கும் வெளிக்கு வெளியே இருப்பவர்கள் என்று நாட்டார்களை நாம் வரையறை செய்து கொள்ளலாம். நாட்டுப்புற வழக்குச் சொற்கள், பழக்கவழக்கங்கள், உறவுமுறைகள், கதைகள் போன்றவற்றை சேகரித்தல் என்று தொடங்கிய இந்த ஆய்வுத்துறை பின்னர் நாட்டுப்புறவியல் மானுடவியல் என்று பிரிந்து இன்று பண்பாட்டு மானுடவியல் போன்ற துறைகளாக வளர்ச்சி பெற்று இருக்கிறது. “கிராமப்புற கலைச்சொற்களை  சேகரித்தல்” என்ற இந்த அறிவுத்துறை இலக்கியத்துக்கு வழங்கிய கொடையும் பெரிது. தமிழில் கி.ரா,பூமணி,நாஞ்சில் நாடன், கண்மணி குணசேகரன் என்று நாட்டார் வழக்குகளை வெற்றிகரமாக இலக்கியத்திற்குள் பயன்படுத்திய படைப்பாளிகளின் நீண்ட வரிசை உண்டு. இவர்கள் தங்களது நிலங்களில் புழங்கிய சொற்களைக் கொண்டு படைப்புகளில் உரையாடல்களை அமைக்கின்றனர். உணர்வுகளை சரியாகக் கடத்துவதற்கும் படைப்பு நிகழும் சூழலை உயிர்ப்புடன் சித்தரிப்பதற்கும் நாட்டுப்புற மொழி அவர்களுக்கு கைகொடுக்கிறது. நாட்டுப்புறவியல் மானுடவியல் இனவரைவியல் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கும் நவீன தமிழ் இலக்கியத்துக்குமான தொடர்பு சிக்கலான ஊடுபாவுகள் கொண்டது. நாட்டுப்புறவியல் மானுடவியல் என்று நாட்டார் ஆய்வுகளை மேற்கொள்ளும் துறைகளுக்கு இடையேயான உள்முரண்களே நிறைய உண்டு. தனது “நாட்டுப்புறவியல் – பெண்கள் கலைஞர்கள் & தெய்வங்கள்” என்ற நூலில் பேராசிரியர் டி.தருமராஜ் இவ்விரு துறைகளுக்குமான முரண்களை குறிப்பிடுகிறார்.  அத்தகையதொரு ஊடுபாவு வாய்மொழியிலான பாணர் மரபுக்கும் எழுத்து வடிவிலான புலவர் மரபுக்கும் இருந்திருப்பதை விளங்கிக் கொள்ளும் முயற்சியாக இக்கட்டுரைகள் தெரிகின்றன.

ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்

முன்பே சொன்னது போல சங்க இலக்கியப்பாடல்கள் அவைகளில் நடிக்கப்படுகின்றன. அதற்கான கருப்பொருள்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டதாக இருந்திருக்க முடியும். அத்தகைய கருப்பொருள்களில் ஒன்றான ஆகோள் பூசல் குறித்தும் ஆகோள் பூசல் பாடுபொருளாக மட்டும் நீடித்த வேந்தர் (மன்னராட்சி) காலத்துக்கும் (புலவர் மரபு) ஆகோள் பூசல் வாழ்வின் அன்றாட நிகழ்வாக இருந்த பெருங்கற்காலத்துக்குமான (பாணர் மரபு) தொடர்பு இக்கட்டுரை நிறுவ முயல்கிறது. சடங்காக பின்பற்றப்படும் எந்தவொரு செயலும் அதற்கு முந்தைய காலத்தில் அச்சடங்கின் விரிவான வடிவத்தில் “செயல்படு நிலையில்” இருந்திருக்கும் என்ற கருதுகோளின் அடிப்படையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

உலோக காலம் தொடங்கிய பிறகே சங்கப்பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆகவே சங்கப்பாடல்களில் பாவனைகளாக எடுத்தாளப்படும் செயல்கள் சங்க “நிகழ்காலத்தில்” நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. உலோக கால தொடக்கத்திற்கு முற்காலமான கற்கால நாகரிகத்தில் சங்க இலக்கிய பாவனைகள் நிதர்சனங்களாக இருந்திருக்கலாம் என்பதை இந்த ஆய்வு முன்வைக்கிறது. புறத்திணைகளில் பயின்று வரும் ஆநிரை கவர்தல் கவர்ந்த ஆநிரையை மீட்டல் அதற்கென எழும் பூசல் எதுவுமே வேந்தர் மரபில் நிகழ்ந்திருக்க சாத்தியமில்லை. அப்படியே நிகழ்ந்திருந்தாலும் அதுவொரு விளையாட்டாக சடங்காகவே இருந்திருக்கும்.

புறத்திணைகள் பன்னிரெண்டு அகத்திணைகள் ஐந்து என பள்ளியில் படித்திருப்போம். புறத்திணைகள் ஆகோள் பூசலை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டவை. ஆனால் இந்த திணைப் பாகுபாடு ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உரைநூலான புறப்பொருள் வெண்பாமாலையிலேயே செய்யப்படுகிறது. தொல்காப்பியம் ஏழு புறத்திணைகளையும் அதற்கு இணையான ஏழு அகத்திணைகளையும் குறிப்பிடுகிறது. வெட்சித்திணை ஆநிரை கவர்தல் என்றும் கரந்தை திணை ஆநிரை மீட்டல் என்றும் வகுக்கப்படுவது புறப்பொருள் வெண்பாமாலையில்தான். அதுபோலவே தொல்காப்பியம் அகத்திணைகளாக வகுத்த கைக்கிளை பெருந்திணை ஆகியவை புறத்திணையாக்கப்படுவதும் நொச்சி பொதுவியல் ஆகியவை இணைக்கப்படுவதும் புறப்பொருள் வெண்பாமாலையில்தான்.  தொல்காப்பியம் ஆநிரை கவர்தல் மீட்டல் என இரண்டும் வெட்சித்திணையையே குறிப்பிடுகிறது. புறநானூறில் இடம்பெற்றுள்ள ஆநிரை கவர்தல்/மீட்டல் தருணங்களை கட்டுரை முன்வைக்கிறது. புறநானூறில் “வீரம்” என்ற கருதுகோளாக ஆநிரை கவர்தலும் மீட்டலும் பாடப்படுவதையும் ஆநிரை மீட்கும் பூசலில் இறந்தவர்களுக்கு நடுகல் நடப்படுவதையும் இறந்த வீரர்களின் மனைவியர் கைம்மை நோம்பு மேற்கொள்வதையும் பெருங்கற்கால வாழ்வின் எச்சங்களாக குறிப்பிடுகிறார்.

ஆகோள் பூசல் என்பதை பெருங்கற்கால மனிதன் நாடோடிச் சமூகத்தில் இருந்து கால்நடைச் சமூகமாக மாறிவந்த காலகட்டத்தின் குறியீடாக ராஜ் கௌதமன்  பார்க்கிறார். பெரும்பாணாற்று படையில் விவரிக்கப்படும் பாலைநில எயினர் வாழ்வில் இருந்து அவர்கள் கால்நடை வளர்ப்பினை நோக்கிவராத நாடோடிச் சமூகமாக வாழ்ந்திருப்பதை நிறுவுகிறார். உணவை சேமித்தல் என்ற செயலே நாடோடிச்சமூகங்களை வேளாண்மைச் சமூகங்களாக கால்நடை வளர்ப்புச் சமூகங்களாக மாற்றியிருக்கிறது. இந்தக் கட்டுரையில் எயினர்கள் உணவு சேமித்தல் என்ற செயலில் ஈடுபடுவதில்லை என்பது உதாரணங்களுடன் விளக்கப்படுகிறது. சங்ககாலத்தில் நிலவிய வெவ்வேறு வகையான வாழ்க்கை முறைக்கு புறநானூறில் ஆநிரை கவரும்/மீட்கும் ஆயர் கோவலரும் பெரும்பாணாற்றுப்படை சித்தரிக்கும் எயினரும் சான்றாகின்றனர்.

புறப்பாடல்களில் மட்டுமின்றி அகப்பாடல்களிலும் ஆநிரை கவர்தல் பயின்று வந்திருப்பதை ராஜ் கௌதமன் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார். புறப்பாடல்கள் போலன்றி அகப்பாடல்கள் அளிக்கும் ஆநிரை கவர்தல் குறித்த சித்திரம் “வீரம்” என்ற கருத்தியலை அடியொற்றியதாக இருப்பதில்லை.  உணவுக்காக ஆநிரைகளை வேட்டையாடி உண்ணும் மழவர்  குடியினர் குறித்த சித்திரத்தை அளிப்பதை ராஜ் கௌதமன் குறிப்பிடுகிறார். இடையர்,ஆயர்,கோவலர்,குண்டர் என பெருங்கற்கால நாகரிகத்தில் ஆநிரை வளர்த்த சமூகங்கள் இந்த ஆய்வில் பட்டியலிடப்படுகிறது. மேலும் பொதுவுடைமைச் சமூக உணர்வோடு வாழ்ந்த மக்கள் மெல்ல மெல்ல தனியுடைமை மனநிலை நோக்கி நகர்வதையும் ஒரு பாடலின் வழி விளக்குகிறார். “இரவில் ஆநிரைகளை கவர்ந்து வரச்சென்ற வீரன் மத்தில் தயிர்கடையும் ஒலி அவன் ஊரில் கேட்கும் முன்னே திரும்பி விடுகிறான். அவன் கவர்ந்து வந்த ஆநிரைகள் அந்த விடியலுக்கு முன்பே பிரித்து அளிக்கப்பட்டு விடுகின்றன” என்று பொருள் வரும் பாடலை கற்காலச் சமூகம் நிலவுடைமை (தனியுடைமை)நோக்கி நகர்வதற்கு முந்தைய ஒரு காலகட்டத்தை சுட்டுவதற்கு உதாரணமாக காண்பிக்கிறார். அவனால் கவரப்பட்ட ஆநிரைகள் அவனது தனியுடைமையாகாமல் ஊர் பட்டியில் சேர்க்கப்படுவது என்பது வேந்தர் மரபில் வாழ்ந்த புலவர்களுக்கு தனியே குறித்துக் கொள்ளக்கூடிய செய்தியாகவே இருந்திருக்கும் என்பது ராஜ் கௌதமனின் அனுமானமாக இருக்கிறது.

மேலும் உண்டாட்டு,பாதீடு போன்ற கவர்ந்த பொருட்களை பிரித்து அளிக்கும் வழிமுறைகள் சங்க காலத்துக்கு முந்தைய காலத்தில் “வரிசையறிந்து” நடைபெறவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆநிரை கவர்ந்த/மீட்ட வீரர்கள் முதலில் உண்ட பிறகு நாம் உண்ணலாம் என்ற கருத்தினை கொண்டுள்ள பாடல்களும்  நிலவுடைமை/வேந்தர் மரபு உருவாகி வருவதன் அடையாளமாக சுட்டப்படுகிறது.

பாணர்  – புலவர் மரபுகளில் களவு

அகத்திணைகளில் பிரபலமான கருத்துகளில் ஒன்றான களவு வாழ்க்கை குறித்த பதிவுகளில் பாணர் மரபுக்கும் புலவர் மரபுக்குமான வேறுபாட்டை இக்கட்டுரை ஆய்வு செய்ய முற்படுகிறது.

ஆண் பெண் மணவுறவுக்கு முந்தைய காலகட்டத்தில் அவர்கள் பருவமெய்திய காலங்களில் நடைபெறும் பாலுறவு தொடர்பான மீறல்களும் அக்காலத்தைய அவர்களது உணர்வுநிலைகளும் புலவர் மரபில் எவ்வாறு புனைந்துரைக்கப்படுகின்றன என்பதை ஒரு பழங்குடி இனத்தில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஒப்பிட்டு விளக்குகிறார்.

suresh

பாலியல் ஒழுக்கங்கள் வரையறுக்கப்பட்ட சமூகங்கள் வரலாற்றில் மேல்நிலை நோக்கிச் சென்றபடியே உள்ளன. ஆகவே சமூகவியலாளர்கள் பாலியல் ஒழுக்கம் என்ற காரணியையும் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்குமான அளவீடுகளில் ஒன்றாக வைப்பார்கள். ராஜ் கௌதமன் அந்த அளவீட்டினை சங்ககாலத்தில் பாலுறவுகள் மீதான பார்வை எப்படி இருந்தது என்பதை புரிந்து கொள்ள சங்கப்பாடல்களின் மீது போடுகிறார். பாணர் மரபு இயல்பாக அனுமதித்த மணத்திற்கு முந்தைய பாலுறவுகள் புலவர் மரபில் களவியல் என்ற தனித்துறையாக தொகுக்கப்படும் அளவுக்கு பிரித்துப் பார்க்கப்பட்டிருப்பதை கவனப்படுத்துகிறார்.

ஆணும் பெண்ணும் சிறுவயது முதல் இணைந்து பழகுதல் விளையாடுதல் காதல்வயப்படுதல் உறவு கொள்ளல் போன்றவை இயல்பாக நிலவிய ஒரு காலத்தில் இருந்து மணம் புரிவதற்கு முந்தைய பாலுறவுகள் பயந்தும் அஞ்சியும் நிகழ்த்தப்பட வேண்டிய ஒன்றாக சங்ககாலம் மாறியிருப்பதை இக்கட்டுரை பல்வேறு உவமைகளுடன் விளக்குகிறது. பெண்ணை நோய்மை கொள்ளச் செய்வதும் ஆணின் மாண்பினை இழக்கச் செய்வதுமாக களவொழுக்கம் இருக்கிறது. மேலும் தலைவனுடன் கூடச்செல்லும் தலைவியும் அவளது தோழியும் தலைவியின் அன்னையை எவ்வாறெல்லாம் ஏமாற்றுகின்றனர் என்று ஆசிரியர் விளக்கும் இடங்கள் சுவாரஸ்யமானவை. சமூகம் புதிய காலகட்டத்துக்குள் நுழைவதற்கான தடயமாக களவியலை காண்கிறது இக்கட்டுரை.

இவ்விரு கட்டுரைகளுமே சங்க இலக்கியத்தின் மீதான ஒரு விலகல் மனநிலை கொண்ட ஆய்வு என்ற அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றன. சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டுள்ள பாவனைகளை நேரடியாக பொருள் கொண்டு அபத்தமான முடிவுகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தமிழின் ஆய்வுப்புலம் தன்னை சமநிலைப்படுத்திக் கொள்ள இதுபோன்ற அடிப்படை ஆய்வுகள் நிச்சயம் உதவும். ஆனால் இந்த நூலின் குறைபாடும் இந்த விலகல் தன்மைதான். பல இடங்களில் சங்ககால வாழ்வினை யதார்த்த தளத்தில் ஊகிப்பதற்கான வாய்ப்பிருந்தும் ஆசிரியர் அதனை தவிர்க்கிறார். ராஜ் கௌதமனின் மொழி எப்போதும் ஆய்வாளருக்கே உரிய இறுக்கமும் பச்சாதாபமின்மையும் கொண்டது.இந்த கட்டுரைகள் இவ்வளவு குறைந்த பக்கங்களில் எழுதப்பட்டிருப்பதற்கு நிச்சயமாக அவரது நீட்டிச் சொல்லும் வழக்கமின்மையே காரணம். எனினும் எயினர் வாழ்வினை விவரிக்கும் இடங்களில், கால்கள் இலையில் புதையுமளவு அடர்ந்த காடுகளில் ஆநிரை கவரச் செய்யும் வேடர்களை விவரிக்கும் இடங்களில் கூட ஆசிரியர் நூலுக்கு வெளியே நிற்பது சங்க இலக்கியத்தை ஆய்வுப்பொருளாக அன்றி வேறெவ்விதத்திலும் அணுகிவிடக்கூடாது என்ற அவரது தீர்மானத்தை காட்டுவதாகவே எண்ண வேண்டியிருக்கிறது.

சங்க இலக்கியம் குறித்து ஆய்வு மேற்கொள்கிறவர்களுக்கான ஒரு முன்னோடி முயற்சியாகவும் பொது வாசகனுக்கு சங்ககாலம் குறித்து மனதில் இருக்கும் விலகல் அல்லது பெருமிதம் போன்றவற்றை நீக்கி அக்காலத்தை சமூகவியல் நோக்கில் பார்ப்பதற்கான வாய்ப்பாகவும் இந்த ஆய்வுநூல் முக்கியத்துவம் வாய்ந்தது.

 

ராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப்

 

=============================================================================================================

ராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்

 

ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்

சிலுவைப்பாடு – காளிப்பிரசாத்

 

சுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1

ராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2

 

சிலுவைராஜ் சரித்திரம் பற்றி

ராஜ் கௌதமனின் உலகம்

ராஜ் கௌதமனும் தலித்தியமும்

பாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் – வளவ. துரையன்

ராஜ் கௌதமன் -கடிதங்கள்

 

முந்தைய கட்டுரைநிழல்யுத்தம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78