ரயிலில், கடிதங்கள் -6

train2

ரயிலில்… [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

ரயிலில் கதையில் ஒரே ஒரு நுட்மபான விஷயத்தைக் கவனித்தேன். என் சொந்தக்கற்பனையாகவும் இருக்கலாம். பெண்ணும் நிலமும் சொத்துதான். நிலத்தை கைப்பற்ற பெண்ணை பிடுங்கிக்கொண்டு போகிறான் தூத்துக்குடிக்காரன். நிலத்தைவிட பெண் மதிப்பு மிக்கது என்பதனால் முத்துசாமி பதறுகிறார். பெண் அழிந்துவிடுகிறள். நிலமும் போய்விடுகிறது. ஆனால் மீண்டும் பெண்ணைக் கட்டிக்கொடுக்க சமானமாக நிலத்தைத்தான் கொடுக்கிறார்

 

எஸ். சத்யா

 

அன்புள்ள ஜெ

 

நேரடியான கதை. ஆனால் உள்ளே காகிதச்சுருள் போல மிகப்பெரிய கதை மடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக்கதையில் உச்சகட்ட பாதிப்பு ஏற்படுவது முத்துசாமியின் பெண்களுக்குத்தான். அவருடைய கதறலும் குமுறலும் சொல்லப்பட்டாலும்கூட அந்தப்பெண்களின் கதைதான் இது. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் அவர்களின் வாழ்க்கை முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. அவர்களை சூறையாடிவிட்டார்கள். அது சாமிநாதன் முத்துசாமி இரண்டுபேருமே சேர்ந்துசெய்ததுதான். அதற்குத்தான் இந்தக்கதைக்குள் எந்த நியாயமும் சொல்லப்படவில்லை. எந்த அறமும் அவர்களுக்கு உதவிக்கு வரவில்லை.

 

எல்லா கதைகளிலும் கடைசியில் பெண்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் இந்தக்கதையிலுள்ள நுட்பம் ஆச்சரியமானது. ஒரு சாராரின் பெண்கள் அந்த அநீதியால் பாதுகாப்பான வாழ்க்கையை அடைகிறார்கள். இன்னொரு சாரார் அந்த அநீதியால் முற்றாக அழிகிறார்கள்.

 

ஜெ.அன்பு

 

 

 

அன்புள்ள ஜெ,

 
இரயிலில் சிறுகதை மானுடக் கீழ்மையின் களம் .இரயில் நிலையத்தில் இருந்து வண்டியில் ஏறி இருக்கையில் அமரும் ஐந்து நிமிட கொந்தளிப்பே கதையின் போக்கு எப்படி என்பதை பறைசாற்றுகிறது.பிறவி எதிரிகள் இருவரும் எதிர் எதிராக சந்திக்கும்போது ஏற்படும் கொந்தளிப்பு இருவரின் வாதங்களுக்கு பின் படிப்படியாக குறைந்து அடங்குகிறது.சாமிநாதன், முத்துசாமி இருவரில் யார் நீதியின் பக்கத்தில் இருப்பவர் என்று பார்த்தால் கருப்புக்கும் வெண்மைக்கும் இடையே எத்தனை நிறங்கள் என்பதுபோல் இருவரும் நீதியும் அநீதியும் ‌கலந்தவர்களாகவே உள்ளனர்.
 

சாமிநாதனைப் பொறுத்தவரை சிறு பிழை ஒன்றை செய்ததைத்தவிர வேறென்றும் செய்யவில்லை.அவருக்கு வேறு வழியும் இருக்கவில்லை.ஒரு பிரச்சனையை தீர்க்க சாணக்கியன் சொல்லும் சாம,பேத,தான,தண்டத்தில் சாமிநாதன் தந்தை சாமத்தை சார்ந்த பேச்சு வார்த்தை நடத்தி அது முடியாமல் பேத முறையின் வழக்கு சாமிநாதன் தந்தை மற்றும் சாமிநாதனால் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றும் முடியாமல் அது வரை ஆன செலவுக்கு வட்டியுடன் தருகிறேன் என்ற தானமும் தோற்றுப்போக கடைசி வழியான தண்டத்தை மேற்கொள்ள வேண்டியதாகிறது.முத்துச்சாமியின் குடும்பம் அதனால் பாதிக்கப்படும் என்று தான் முதலில் குழப்பமடையும் சாமிநாதன் அதுவரை அவர் கொண்ட நஞ்சின் பொருட்டு குழப்பத்தை விட்டு சொத்தை விற்று  விட அதனால் முத்துசாமியின் குடும்பம் பாதிக்கப்படுகிறது.அந்த நஞ்சுதான் முத்துச்சாமி நிகழ்ந்ததை சொல்லும்போது சாமிநாதன் கொள்ளும் குற்றவுணர்வின் வெளிப்பாடு.பின்னர் அதைக் கடக்கவும்  முத்துச்சாமியே வழியமைக்க அதிலிருந்து வெளிவருகிறார்.

 

 

முத்துச்சாமியின் குடும்பத்தை பொருத்தவரை அவரின் தந்தை அன்றைய சாமிநாதனின் தந்தையின் பொருளாதார,சமூக பலவீனத்தை காரணமாகக்கொண்டு அந்த கட்டிடத்தை பறித்து விடலாம் என்று முயல்கிறார்.அதற்காக சாமிநாதன் குடும்பம் கலப்படம் செய்ததாகவும், சட்டம் தன் பக்கம் இருப்பதாகவும்,அது பாவம் என்பதால் நல்லது செய்து சரிசெய்து கொள்ளலாம் என்று காரணம் கற்பித்துக் கொள்வதனால் எந்த விதமான சமரசத்திற்கும் இடம் தருவதில்லை.வழக்கு முடிந்து தீர்ப்பு வந்த பின்னரும் சாமிநாதனின் பொருளாதார,சமூக பலத்தால் தன்னை பாதிக்க முடியாது என்பதால்தான் அதை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்.அதற்கான பலனை கடைசியில் அந்த குடும்பமே அனுபவிக்க நேரிடுகிறது.

 
என் தாத்தா கூறி இன்று வரையிலும் நான் மறக்காத கூற்று”நீ செய்யும் தவறுகளுக்கான தண்டனை இன்று கிடைக்கவில்லை அதனால் பாவ புண்ணியம் என்பது கற்பனை என்று நினைக்காதே.தவறுகளுக்கான  தண்டனை வரும்போது உன்னிடம் எல்லாம் இருந்தாலும் ஒரு சிறு துரும்பைக்கூட உன்னால் அசைக்க முடியாது.எதனால் அது நடக்கிறது என்று தெரிந்தாலும் வெளியில் சொல்லமுடியாமல் உனக்குள்ளேயே வைத்து புழுங்குவாய்.அதுதான் அந்ததவறுகளுக்கான தண்டனை”.
முத்துச்சாமி குடும்பத்திற்கு நடந்த கொடூரத்திற்கு அவர்கள் முன் செய்த தவறான செயல்கள் தான்  காரணம்.எந்த நிலையிலும் சொத்தை தரமாட்டார்கள் எனும்போது அதை வாங்க யாரும் முன்வரமாட்டார்கள்  என்று அவர்கள் நினைக்க,  அந்த சொத்தின் மீது கவனம் கொண்ட குற்றப் பிண்னணி கொண்டவனுக்கு இவர்களே வாய்ப்பு அளித்து விடுகிறார்கள்.அவன் சாமிநாதனிடம் அடிமாட்டு விலைக்கு சொத்தை வாங்கி விடுகிறான் .முத்துச்சாமி குடும்பத்திடம் பேசி வாங்க முடியாது எனும்போது குற்றப்பின்னணி கொண்டவன் தன் பலத்தை காட்டுவதற்காக முத்துச்சாமியின் வீடு புகுந்து அவர் பெண்களை கடத்தி செல்ல, முத்துச்சாமி தன் பெண்களை மீட்பதற்காக செய்யும்‌முயற்சிகளுக்கு அவர் குடும்பத்தின் முன் செயல்களே தடையாக அமைகிறது.ஒரு வழியாக பெண்களை மீட்டு வந்த பின்பு மனநலம் பாதிக்கப்பட்ட  மூத்த பெண்ணை தான் கொல்லாமல்  காசு வாங்கி சவமாக்கும் அமைப்பிடம் கொடுத்து அவளைக் கொன்றபின் இளையவளுக்கு மணம் செய்து வைக்க முயல்கிறார்.இங்கும் அதற்கான காரணங்களை தன் தரப்பு ஒன்றை வைத்தே  கூறும்போது அதுவும் தவறானதாகிவிடுமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

 
முத்துச்சாமி குடும்பத்தின்  தவறான கருத்து சொத்து சம்பந்தமான விவகாரத்தை வியாபாரமாக கருதுவது.அது வியாபாரம் அல்ல நம்பிக்கைத் துரோகம்.அதே தான் இளைய பெண்ணின் திருமணத்தின் போதும் நடப்பது அந்த பெண்ணுக்கு நடந்த கொடூரத்தை சொல்லக்கூடாது என்பது சரியானதென்றாலும்  மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பை கூறாதது தவறுதான்.

 
தன் தவறான  செயலுக்கு காரணம் கற்பித்துக் கொள்ளும் மனிதன் அடையும் வீழ்ச்சியின் சித்திரம் இச்சிறுகதை. நன்றி

 
இப்படிக்கு
அந்தியூர் மணி

 

ரயிலில்- கடிதங்கள்1

ரயிலில் கடிதங்கள் -2

ரயிலில்- கடிதங்கள் 3

ரயிலில் -கடிதங்கள்-4

 

முந்தைய கட்டுரைஐரோப்பா,திராவிட இயக்கம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகல்லூரியில்…