பாரதியும் கனவுகளும்

bharathi

 வணக்கம் ஜெ

பாரதி விஜயம் எனும் நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். பாரதியாருடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகளை தொகுத்து ஒரே நூலாக வழங்கிருக்கிறார் பதிப்பாசிரியர் கடற்கரய். பாரதியை பற்றி அறிவதற்கு இது சிறந்து நூல், ஒரு பொக்கிஷம். இதற்கு முன் யதுகிரி எழுதிய பாரதி நினைவுகள் மட்டுமே படித்திருந்த எனக்கு இந்நூல் அவரைப்பற்றி மேலும் பல தகவல்களை தந்தது.

பாரதி பெரும்பாலும் மற்றவர்களை பாண்டியா என்றே அழைப்பாராம். தமிழர்கள் அனைவரும் பாண்டியன் வழி வந்த மன்னர்கள் என்பாராம். சென்னையில் ஒருசமயம் திலகர் கூட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில் ஹிந்து ஆசிரியர் கஸ்தூரிரங்கன் பேசிக்கொண்டிருக்கிறார். பெரும் கூட்டம். அப்போது கழுத்திலும் இரு காதுகளிலும் மல்லிகை மலர் அணிந்து பாரதி அங்கு வருகிறார். அமர்ந்திருந்த கூட்டத்தை சுற்றியோ பின்புறமாகவோ அவர் செல்லவில்லை. மேடைக்கு முன்னால் இருந்த கூட்டத்தை கிழித்து கொண்டு தள்ளிவிட்டு வந்து அமர்கிறார். பக்கத்தில் இருக்கும் சாமிநாதசர்மா ஏன் இப்படி வருகிறீர் சுற்றிவர கூடாதா என்று கேட்கிறார். உடனே பாரதி “நாம் சுற்று வழி செல்லமாட்டோம். நேர்வழிதான் செல்வோம்” என்று உரக்க சொல்லி கொண்டே சிரிக்கிறார். இவ்வாறு பல சுவையான சம்பவங்களின் பெரும்தொகுப்பு இந்நூல்.

இன்று படித்த பகுதியில் ஸ்ரீ சுத்தானந்த பாரதி பாரதியார் பற்றிய தன் நினைவுகளை கூறுகிறார். பாரதியார் விவேகானந்தரைப்போல் பிரசங்கம் செய்ய முடிவெடுக்கிறார். அதற்கு இப்படி விளம்பரம் அமைக்க சொல்கிறார்- ‘தமிழ்நாட்டு கவி பாரதி திருநெல்வேலியில் பெரிய சபை கூட்டி உண்மையான வேத தர்மம் இஸ்லாம் கிறிஸ்துவம் பௌத்தம் முதலிய சகல மதங்களை பற்றி ரஸமாக பேசுவார். கட்டணம் பத்து ரூபாய் முதல் ஒரு ருபாய் வரையில். பெருவாரியாக மகா ஜனங்கள் வந்து கேட்க வேண்டும். அரிய சந்தர்ப்பம்.’

இப்படி பதினாயிரம் நோட்டீஸ் அச்சிட்டு பாண்டு வாத்யத்துடன் ஊரெல்லாம் பட்டுவாடா செய்ய சொல்கிறார். இந்த ஊரில் ஒரு லக்ஷ ருபாய் சேரும் பிறகு மதுரை திருச்சி சேலம் கோவை காஞ்சி சென்னை என்று புறப்பட்டு போவோம் என திட்டம் வகுக்கிறார். ஏராளமான பணம் சேர்த்து விடுவோம் அப்புறம் நாம் ராஜா என கனவுகாண்கிறார்.

பாரதியின் கனவுக்கு எல்லைதான் உண்டோ.

நெல்லையில் நடந்த உங்களின் கட்டண உரையை நினைத்துக்கொண்டேன்.

ஸ்ரீராம்

barathi

அன்புள்ள ஸ்ரீராம்,

பாரதியின் கற்பனைகளை முன்னரே வாசித்திருக்கிறேன். அந்த எழுத்துக்களை மட்டும் வாசிக்கையில் அவர் வெறும் கற்பனாவாதி என்று தோன்றும். அது உண்மை. ஆனால் அப்போது அவர் இருந்த நிலைமையையும் அறிந்தால் அவர் வெறுமனே அவற்றை சொல்லிச் சொல்லி தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்கிறார் என்று புரியும்.

பாரதியின் கற்பனாவாதத்தின் பரம எதிரி புதுமைப்பித்தன். பாரதியை கேலிசெய்தவன். ஆனால் அவனுடைய கடைசிக்கால கடிதங்களை வாசிக்கையில் அவற்றிலும் பாரதியைப்போலவே கனவுகளின் ஓசையைத்தான் கேட்கிறோம். நடக்கவே நடக்காது என்று தெரிந்தே ஏராளமான கனவுகளை கண்டிருக்கிறான், கொட்டி வைத்திருக்கிறான்.

அது தமிழ் எழுத்தாளனின் இயல்பான குணம். இங்கே அத்தனை சிற்றிதழ்களிலும் முதல் தலையங்கத்தை பாருங்கள். எவ்வளவு நம்பிக்கை, என்னென்ன திட்டங்கள், எவ்வளவு சூளுரைகள்!பாரதியின் கனவுகளுக்கு சற்றும்குறையாதவை அவை. பாரதியைப்போலவே முன்விலைத்திட்ட கனவுகள் ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி என அனைவருக்கும் இருந்தன. காலச்சுவடு தொடங்கும்போது அச்சு அசலாக இதே திட்டம்தான் சுந்தர ராமசாமியிடம் இருந்தது. இதே திட்டத்தை ஏறத்தாழ இதே சொற்களில் பிரமிள் எங்கள் அனைவரிடமும் சொல்லியிருக்கிறார். கோணங்கி இத்தகைய திட்டத்தைச் சொல்லி அலைந்ததை நினைவுகூர்கிறேன்.

நானும் கனவுகாண்பவன்தான். ஆனால் பாரதி போல முழுமூச்சான கற்பனாவாதி அல்ல. யதார்த்தம் எனக்கு முக்கியம். ஏனென்றால் கனவுகள் இல்லாத காலகட்டம் இது. பாரதி கற்பனாவாதக் காலகட்டத்தில் கொஞ்சம் யதார்த்தத்தை பிடித்துக்கொள்ளப் போராடித் தோற்றவன். நான் யதார்த்த காலகட்டத்தில் கொஞ்சம் இலட்சியக் கனவை பிடித்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருப்பவன்.

ஆகவே இன்னும் கொஞ்சம் மண்ணில் நின்றிருக்கிறேன். அவ்வகையில் காந்தியே எனக்கு முன்னுதாரணம். காந்தி பாரதியைவிட பெரிய கனவுஜீவி. ஆனால் நிகராகவே யதார்த்தவாதி. எதையுமே கனவுமட்டும் கண்டுகொண்டிருப்பதில்லை. உடனே திட்டமிட்டு ஆரம்பித்துவிடுகிறார். சிறுகச்சிறுக செய்துகொண்டே இருக்கிறார். விளைவுகளை திரும்பிப் பார்ப்பதில்லை. பிறரை நம்பி எதையும் செய்வதில்லை. ஆகவே பிறரை குறைகூறுவதுமில்லை.

இன்று நான் செய்திருப்பவை, எழுத்தாளனாகவும் இலக்கியஅமைப்புகள் சார்ந்தும் பெரிது என அவ்வப்போது பலர் சொல்வதுண்டு. நான் புகழ்பெற்றபின், நண்பர்கள் அமைந்தபின் இவற்றை செய்ய ஆரம்பித்தேன் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நான் எழுதவந்த 1988-லேயே எழுத்துக்கு நிகராக இந்த அமைப்புவேலைகளையும் செய்யத் தொடங்கினேன். சுந்தர ராமசாமியின் காலச்சுவடு இதழுடன் தொடர்புகொண்டு வேலைசெய்திருக்கிறேன். அதற்கான முன்விலைத்திட்டத்திற்கு பணம் சேகரித்திருக்கிறேன். அப்போதே இலக்கியக்கூட்டங்களை ஒருங்கிணைத்திருக்கிறேன்.

எனக்குத் தெரிந்து இலக்கியத்துக்காக, இலக்கியவாதிகளுக்காக நிதி திரட்டாமல் நான் இருந்த ஆண்டே இல்லை. இலக்கியநிகழவுகளை ஒருங்கிணைக்காமல் ஆறுமாதங்கள்கூட தொடர்ச்சியாக இருந்ததில்லை. இலக்கியச் சிற்றிதழ் நடத்தியிருக்கிறேன். இவை எல்லாமே என் கனவுகளால்தான். ஆனால் ஏமாற்றம் ஏதுமில்லை. மெல்லமெல்ல கனவுகளை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறேன் என்று தெரியும். ஆகவே நிறைவே உள்ளது.

ஜெ

பாரதிவிஜயம் வாங்க 

முந்தைய கட்டுரைஎழுத்தாளனாகவே வாழ்வது என்பது…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-11