அன்புள்ள ஜெயமோகன் வணக்கம்.
கீழகண்ட பதிவு உங்களை குறித்த சரியான மதிப்பீடு என்று கருதுகிறேன். எனவே தான் நானும் அதை மீள் பதிவு செய்துள்ளேன்.
இது குறித்த உங்கள் கருத்தை பொது வெளியில் வைப்பது தான் சரி அதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையெனில் எனக்கு தனி மடலில் தெரிவிக்கவும்.
அன்புடன்
சூப்பர்லிங்ஸ்
அன்புள்ள சூப்பர்லிங்க்ஸ்,
நான் சிலசமயம் ஆச்சரியப்படுவதுண்டு, சோவியத் ருஷ்யாவிலும் சீனாவிலும் எழுத்தாளர்கள் ஏன் சைபீரியாவுக்குப்போய் செத்தாலும் பரவாயில்லை என்ற நினைப்பில் கமிசார்களை எதிர்த்தார்கள் என்று. உங்கள் தரப்புக் கட்டுரைகளை வாசிக்கும்போது தெரிகிறது. உண்மையாகவே சொல்கிறேனே, இந்த எதிர்ப்பு எனக்கு பிரச்சினையே இல்லை. இந்த எதிர்ப்புக்குரலில் உள்ள அசட்டுத்தனமும் அது மட்டுமே அளிக்கும் அபாரமான தன்னம்பிக்கையும்தான் மிகமிக சங்கடப்படுத்துகிறது.
கருத்தியல் விவாதத்தின் முரணியக்கத்தை ஏற்பவன் என்ற முறையில் உண்மையிலேயே நான் நம்பும் ஒரு விஷயம் உண்டு. இடதுசாரித்தரப்பு என்பது ஒரு அறிவுச்சூழலின் முக்கியமான தரப்பு. நான் சொல்வது முதலாளித்துவத்தின் மோசமான குரல் என்றே இருக்கட்டும். அதை எதிர்ப்பதற்கு வரலாற்றுத்தர்க்கமோ கருத்தியல் நேர்த்தியோ இல்லாத இந்த மொண்ணை டீக்கடை வாதம்தான் வழியா?
தோழர், மனம் விட்டு சொல்கிறேனே. இவ்வளவுதான் உங்களால் முடியும் என்றால் நானே உங்கள் தரப்பையும் சித்தாந்த அடிப்படை கொண்ட முழுமையான வாதங்களுடன் கூர்மையான மொழியில் வேறு பெயரில் எழுதி அளிக்கிறேன். அப்படியாவது ஒரு தரமான விவாதம் உருவாகட்டும்.
மற்ற அனைத்தையும் விடுங்கள். உங்கள் வினவு இணையதளத்தில் உங்கள் எதிர்தரப்பாக நீங்கள் கருதுபவர்களை என்னென்ன சொற்களில் வசைபாடியிருக்கிறீர்கள் என்று பாருங்கள். தமிழ்ச்சிந்தனையின் முக்கியமான முன்னோடிகளாக கருதப்படும் சுந்தர ராமசாமி முதலிய அனைவரையும் எப்படியெல்லாம் வசைபாடியிருக்கிறீர்கள். எப்படியெல்லாம் தரமிறங்கிப்போய் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறீர்கள். ஏன் இந்தக்கட்டுரையிலேயே என்னைப்பற்றி என்னென்ன சொல்லியிருக்கிறீர்கள்…
ஆனால் நான் எந்த கௌரவக்குறைவான சொல்லும் இல்லாமல், மிக மென்மையாக ஒரு பதில்கிண்டலை எழுதினால், அல்லது என்னுடைய தரப்பை தர்க்கபூர்வமாக எழுதினால் அது உங்களுக்கு ‘கேடுகெட்ட குமாஸ்தா எழுத்தாளனின்’ பதிவு. ’தரங்கெட்ட வார்த்தைகளால் ஆன வசை’ தரம் என்றால் என்ன தோழர்? வினவு தளத்தில் உள்ள தரமா? அந்த தரத்தை நான் கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் பிரச்சினையா?
என்ன ஒரு அபத்தமான நியாய உணர்வு! எழுதுவதை விடுங்கள், அந்தரங்கமாக யோசிக்கும்போதுகூட இதையெல்லாம் உணர மாட்டீர்களா? தோழர், உங்கள் மன வளர்ச்சியின் வயது என்ன?
உங்கள் குறிப்புக்கு இணைப்பளிக்கிறேன். அது ஒரே காரணத்துக்காகத்தான். உங்கள் குறிப்பை வாசித்ததும் தமிழ்வாசகர்கள் என்னை அப்படியே ’அடையாளம் கண்டு’ அடாடா என்று மனம் பதைத்து ஓடி உங்கள்பக்கம் வருவார்கள் என்ற உங்கள் தன்னம்பிக்கையை கௌரவிக்கும் முகமாக. அந்த கட்டுரையை வாசித்து அதிலுள்ள ஒருவரியையேனும் ஒரு மதிக்கத்தக்க கருத்தியல்தரப்பாகவோ தரமான எழுத்தாகவோ எண்ணும் எவரும் என்னுடைய நூல்களை தொட்டே பார்க்கவேண்டாம் என்று நானே மன்றாடிக்கேட்டுக்கொள்வேன். அதற்காகவே இந்த இணைப்பு
ஆனால் நீங்கள் இணையத்தில் எழுதிக்குவிக்கும் இந்தமாதிரி வசைகளுக்கு இணைப்புத்தளமாக இதை ஆக்கவோ அல்லது உங்கள் ‘தரமான’ வசைகளுக்கு பதில்சொல்லவோ என் பக்கங்களை தொடர்ந்து வீணடிக்கமுடியாது
நன்றி
ஜெ
==================================
அன்புள்ள ஜெ!
இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் என்று நினைக்கிறேன்.
நீங்கள் கண்டவற்றையும், கவலைப்பட்டவற்றையும் இந்தியா டுடேவில் வாசித்தேன்.
ஸ்பெக்ட்ரம் பற்றி நீங்கள் எழுதியவற்றில் எனக்கு பிரச்சினை ஒன்றுமில்லை. யாரும் பேசாததை நீங்கள் ஒன்றும் புதியதாக எழுதிவிடவில்லை. பொதுப்புத்தியோடு இயைந்த விஷயங்கள் அவை.
ஆனால், மாவோயிஸ்டுகள் குறித்து எழுதியிருந்தது (நீங்கள் இப்படித்தான் எழுதுவீர்கள் என்று தெரிந்திருந்தும்) அதிர்ச்சியளித்தது :-(
இவ்வளவு சிறியதாக மாவோயிஸ்டுகள் – பழங்குடியினருக்கு இடையேயான உறவினை சுருக்கிவிட முடியுமா என்று குழப்பமும், ஆச்சரியமும் எழுந்தது.
பழங்குடியினர் பற்றி குறிப்பிடும்போது “ கைவிடப்பட்ட நிலையை பயன்படுத்திக்கொண்டு” என்கிற வார்த்தையை நீங்களே பயன்படுத்தி இருக்கிறீர்கள். Survival of the fittest என்கிற வகையில் அவர்கள் ஒன்றுசேர்வதிலோ, அரசியல் பயிலுவதிலோ, கிளர்ச்சி செய்வதிலோ என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்? உலகம் முழுக்கவே ஒடுக்கப்பட்டவர்களால்தான் ‘புரட்சி’ வெடித்தது என்பது இயல்பான கடந்தகால நிகழ்வுகளாக அமைந்திருக்கிறது. இந்திய அரசால், அதிகாரத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றிணைவதும், ஒரு கட்டத்தில் ஆயுதம் ஏந்துவதும் கூட இயல்பானதுதானே? அவர்களது கொந்தளிப்பு நியாயமானது என்று கொஞ்சம்கூட நீங்கள் உணரவில்லையா? கைவிடப்பட்டவர்கள், கை கொடுப்பவர்களோடு ஒன்றிணைகிறார்கள். பழங்குடியினரை மாவோயிஸ்ட்டுகளாக மாற்ற சீனாவோ, ரஷ்யாவோ தேவையே இல்லை. இந்தியா மட்டுமே போதும்.
அறுபதாண்டு இந்திய ஜனநாயகத்தில் பழங்குடியினர் வாழ்வாதாரத்துக்காக இந்திய அரசு என்னதான் செய்திருக்கிறது, அவர்களது வாழ்விடத்தில் இருந்து அவர்களை துரத்தி வேட்டையாடுவதைத் தவிர்த்து? அன்னியக் கும்பல் அவர்களுக்கு பணம் கொடுப்பதாக எழுதியிருக்கிறீர்கள். ஏதேனும் ஆதாரத்தின் அடிப்படையில் எழுதுகிறீர்களா அல்லது உங்களது யூகமா? உள்துறை அமைச்சர் கூட இப்படி பேசுவதில்லை. என்னவோ போங்க.
மாவோயிஸ்டுகளின் பல நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவர்கள் நம்பும் கொள்கைக்கு அவர்கள் நேர்மையாக இருக்கிறார்கள். அவர்களிடம் பீரங்கியோ, விமானமோ இல்லை. அவர்களுடைய ஆயுதங்கள் பெரும்பாலும் காவல்நிலையங்களை தாக்கி கைப்பற்றுவதின் மூலமாக பெறப்படுபவை. பீகாரில் வட்டச்செயலாளர், கொட்டச்செயலாளர் ரேஞ்சில் இருப்பவன் கூட துப்பாக்கி வைத்திருக்கிறான். போராளிகள் துப்பாக்கி வைத்திருப்பது அதிசயமா? உங்களுக்கு அவர்களது போராட்ட வழிமுறைகளில் மாறுபாடு இருக்கலாம். அதற்காக அன்னிய தேசத்து கைகூலிகள் என்று கொச்சைப்படுத்துவது சரியாகப் படவில்லை.
அன்புடன்
யுவகிருஷ்ணா
அன்புள்ள யுவகிருஷ்ணா
நீங்கள் வாசிக்கிறீர்கள் என்றறிந்து மகிழ்ச்சி. என் இணையதளம் பெருவாரியாகச் சென்றடைகிறது! மேலும் பொதுப்புத்தியை பயன்படுத்துகிறீர்கள் என்றறிந்து பெருமகிழ்ச்சி. மிக முக்கியம் அது.
அதே பொதுப்புத்தியை பயன்படுத்தி இன்னொரு முறை என் கட்டுரையை வாசித்தீர்கள் என்றால் அதில் நீங்கள் கேட்டுள்ள அனைத்துக்கும் விரிவான பதில் ஏற்கனவே இருப்பதை கண்டுகொள்ள முடியும்
அதற்கு தொடக்கமாக இரு தகவல்களை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். மாவோயிஸ்டுகள் மிக அதிகமாக வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் கண்ணிவெடிகள் மற்றும் எறிகுண்டுகளை. அவற்றை கிராம காவல்நிலையங்களில் காவலர்கள் பயன்படுத்தும் வழக்கம் இந்தியாவில் இல்லை. நிலையங்களீல் சேமித்து வைப்பதும் இல்லை.
மேலும் இந்திய அரசு மட்டும் அல்ல மேற்குவங்க அரசும் கூட மாவோயிச பிரச்சினை பற்றி வெளியிட்டுள்ள பெரும்பாலான பத்திரிக்கை அறிக்கைகளில் மாவோயிசப் போர் பழங்குடிகளால் அல்ல ‘அந்நியர்களால்’ முன்னெடுக்கப்படுகிறது என்றே சொல்லப் பட்டிருக்கிறது. ஏராளமான அறிக்கைகளில் சீனாவின் பெயர் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அந்த குறிப்புகளுக்கு அருந்ததி ராயே பதில் சொல்லியிருக்கிறார்.
பொதுப்புத்தி மட்டும் அல்ல வாசிப்பும் நல்ல பழக்கம்தான். அவை உங்களுக்கு மேலும் கைகொடுக்க வாழ்த்துக்கள்
ஜெ