ரயிலில்… [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
முத்துசாமி குடும்பத்திற்கு முதல் அறமீறலின் போது இரண்டு வாய்ப்புகள் இருந்தன. பிரச்சினையின் துவக்கத்திலிருந்தே இரண்டு வாய்ப்புகள் இருந்தன. அறமீறலை எந்தவொரு மனமும் அறிந்தே இருக்கும். அவர் மனைவியின் எச்சரிக்கை, முத்துசாமியின் மனசாட்சியே ஆகும். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் சரியான முடிவெடுக்கும் கடைசி வாய்ப்பும் இருந்தது. தெரிந்தே தவறிய அறத்தின் விளைவுகளை எல்லாம் அனுபவித்த பின், பெண்ணின் திருமண விஷயத்தில் முடிவெடுக்கும் போது முத்துசாமிக்கு ஒரே வாய்ப்பு தான் இருந்தது. இந்த இடத்தில் சரியான, நியாயமான முடிவெடுக்க வேண்டுமென்றால் அவர் இடைப்பட்ட காலத்தில் ஞானமடைந்திருக்க வேண்டும். இல்லையாதலால் அடுத்தடுத்த அற மீறலுக்குத் தன்னைக் காவு கொடுத்தேயாக வேண்டும்.
சம்பத்தப்பட்ட பகையாளியாகவே இருந்தாலும், அவர்களிருவரும் பயணிகள். இறங்கிப் பிரிந்து சென்றேயாக வேண்டியவர்கள். அவர்கள் பேசாமலும் பயணித்திருக்கலாம். யாரோ முகமறியாத இருவர் பேசிக்கொள்வது போலவும், ஒருவர் கதையைக் கேட்டு மற்றவர் உணவுண்ண முடியாத நிலை அடைவது போலவும், கதையின் பாத்திரமானவர் அதை மிக இயல்பாகக் கடந்து செல்வதையும், அதைக்கண்டு சாமிநாதன் தன்னை அக்கதையிலிருந்து விடுவித்துக் கொண்டு உணவுண்ணத் தொடங்குவதும் சிறந்த காட்சி.
இரத்தமும் சதையுமான எந்த நிகழ்வும் வாழ்க்கையெனும் ரயில் பயணத்தில், இயல்பாக உதிர்ந்தே தீர வேண்டியவை நினைவுகளாக.
அன்புடன்,
கணபதி.
அன்புள்ள ஜெ,
‘ரயிலில்..’ நேரடியான சிறுகதை. ஆனால் ஆழ்ந்த உள்மடிப்புகள் கொண்டதாக தோன்றியது. ‘ரயிலில்..’ எனும் தலைப்பிலிருந்தே கதை தொடங்குகிறது. ரயில் நிறுத்தம் தோறும் இயல்பாக தென்படும் அரிபிரிகள், மக்களின் தேவையற்ற ஒழுங்கின்மை, அவசரம், பதட்டம் இவை குறித்த விவரணைகளும், அவைகுறித்து அஞ்சும், நடுக்கம்கொள்ளும் சாமிநாதன் குறித்தும் சொல்லி கதையைத் தொடங்குவது, இது வெறும் ரயில் குறித்ததன்று என்று புரியவைக்கிறது. எல்லோருக்குமான இடம்உள்ள, நிலையத்தில் போதுமான நேரம் நிற்கும் ரயிலுக்குள் முண்டியடித்துக்கொண்டு ஏற என்ன அவசியம்? மனிதர்களை அவ்வாறு தூண்டுவது எது? தன் இடம் குறித்த பயம்? அதனால் எழும் பதட்டத்தினால் அவன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தையே மறந்து போகிறான். இவ்வுலத்தில் எவரின் இடமும் தனக்கானது அல்ல, போலவே தன் இடத்திலும் எவரும் நிரந்தரமாக பொருந்திக்கொள்ள முடியாது என்பதை மறந்து முண்டியடிக்கிறான். அந்த பயம் குறைந்து அவன் சற்று ஆசுவாசம் கொள்ளும் வரை அவனால் தன் அருகில் இருப்பவரைக் காணவோ, அவருடன் அன்புடன் நான்கு வார்த்தைகள் பேசவோ முடிவதில்லை. தனக்கான இடம் உறுதியாகும் வரை தன் அருகில் உள்ளவனை எதிரியாகவே பார்த்து பழக்கப்பட்டது மனிதமனம். ஏழெட்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஆசுவாசம் வந்த பொழுதொன்றில் தன் அருகில் அமர்ந்திருக்கும் மனிதரை கண்ணாடி போட்டுக்கொண்டு தெளிவாக பார்க்கிறார் சுவாமிநாதன். ஒரு பெண்ணை காடேற்றிய பின், மறு பெண்ணைக் கரையேற்ற ஒரு வழி தென்பட்டபின் அதே ஆசுவாசத்திற்கு வந்திருக்கிறார் முத்துசாமி. இப்போது இவர்களால் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள முடிகிறது. அமைதியாக பேசிக்கொள்ளவும் முடிகிறது. சுவாமிநாதன், முத்துசாமி இருவருமே ஒரே தராசின் இரு தட்டுகளில் அமர்ந்திருக்கின்றனர். அவரவர் பக்கம் அவரவர் நியாயம். தன் தாத்தா சொத்து தனக்கானது என்கிறார் சுவாமிநாதன், அதை அவர் எவ்வழியில் ஈட்டியிருந்தாலும் அது தனக்கானது. அதை விட்டுகொடுப்பது அவரால் எக்காலும் இயலாதாதது. எதிர்தட்டில் முத்துசாமியின் அப்பா தனக்கான நியாயத்தை வைத்திருக்கிறார். முப்பது நாப்பதாண்டுகளாய் அனுபவித்து வரும் ஒரு சொத்தை அவ்வளவு எளிதாக விட்டுத்தர அவர் விரும்புவதில்லை. அவர் வியாபாரி. சாமர்த்தியம் மட்டுமே வியாபாரத்தின் தர்மம் என்று நினைக்கிறார். வலியவன் ஜெயிப்பான் எனும் நம்பிக்கை அவருக்கு. வியாபாரப் பெரும்காட்டில் வலிமை உள்ள மிருகம் வாழ தகுதியானது என்பது அவர் தரப்பு. இரு தராசுத் தட்டுகளுக்கும் நடுவே இவை இரண்டையும் சமன் செய்யும் கரம் ஒன்று உள்ளது, அது அறத்தின் கரம். அது பாரபடசமற்றது, கருணை சிறிதும் அற்றது.
சுவாமி நாதன் தன்னாலான அத்துனையையும் செய்கிறார். தன் வருமானம் அனைத்தயும் தொலைத்து நீதிமன்றத்தின் தீர்ப்புடன் வந்து மன்றாடுகிறார் . அந்தத் தருணத்தில் அறத்தின் எல்லைக்கோட்டைத்தாண்டி செல்கிறது முத்துசாமி குடும்பம். சுயநலம், தம் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அச்சம், ஆசை. மிக எளிதாக அவர்கள் தம் குறைந்தபட்ச அறத்தையும் கைவிடுகிறார்கள். ஒரு தட்டில் அறம் மீறப்படும்போது அதுவே மறுபுறம் அறம் அழிவதற்கான தூண்டுகாரணியாகிறது. அதுவரை அறத்தின் மெல்லிய கோட்டுக்கு உள்ளேயே தன் நீதியைப்பெறத் தவித்த சுவாமிநாதன் அறிந்தே தன் எல்லையை மீறி வெளியே காலடி வைக்கிறார். ஆம், அவர் அறிந்தே இருக்கிறார், அதன் விளைவுகள் என்னென்று. கையறு நிலை, கண்ணை மறைக்கும் கோபம் அவரை முத்துசாமி குடும்பத்தைப் பார்க்கவொண்ணாமல் செய்கிறது. அறுபது லட்சத்தைப் பெற்றுக் கொண்டு அவர் கொடிய வெள்ளத்தை முத்துசாமியின் குடும்பத்தை நோக்கி அறிந்தே திறந்துவிடுகிறார். அதன் விளைவுகள் என்ன என்று அவர் அறியமாட்டார். ஆனால் நிச்சயம் மோசமான விளைவுகள் உண்டு என்பதை அவர் அறிந்தே இருந்தார்.
இன்று ரயிலில் தன் செயலின் விளைவை விஸ்தீரினமாக கேட்டப்பின் அவர் உடல் நடுங்குகிறது. நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை என்று அவரால் முணகமட்டுமே முடிகிறது. அறத்தின் அனல் அவரை சுடுகிறது. கோபத்தால் அறம் மீறியவர் அவர். கோபம் எளிதில் வடியக் கூடியது. கோபம் இல்லாத இந்நாளில் இத்தருணத்தில் அவரின் தவறு அவரை வாட்டுகிறது. தனக்கு அன்று வேறு மார்க்கமிருக்கவில்லை என்று கூறி தன்னைத் தானே சமாதானாம் செய்து கொள்ள முயல்கிறார். ஆனால் முடியவில்லை. ஆனால் அவரின் எதிரே உள்ள முத்துசாமி திடீர் உணர்ச்சிகளால் அறம் மீறியவர் அன்று. அறம் மீறல் அவரது இயல்பாகவே உள்ளது. சுயநலம், அதன்பொருட்டு அவர் எந்த அறத்தையும் எத்தருணத்திலும் மீறத்தயாராகவே உள்ளார். இதை சாமிநாதன் கண்கூடாகவே காணும் தருணம் அவருக்கு முக்கிய திறப்பு என்றேச் சொல்லலாம். அறத்தின் கையில்தான் நாம் உள்ளோம் என்பதை அவர் உள்ளூர உணர்ந்திருக்க வேண்டும். சுவாமிநாதன் இட்லியை எடுத்து உண்ணத்தொடங்க்கும் தருணம் கதையில் முக்கியாமான தருணமாகத் தோன்றுகிறது. அது அறத்தின் கையில் மனிதனின் ஒன்றுமில்லாத்தன்மையைக் காட்டும் தருணம். தன் வழியாக அறமே தராசை ஆட்டுவிக்கிறது என்பது புரிந்து வெறுமனே தன் கடமையை சுவாமிநாதன் செய்யத்தொடங்கும் தருணம்.
இது உங்கள் வழக்கமான கதைப் போல இன்றி கொஞ்சம் மாறுபட்டுத் தோன்றியது. ஆயினும் வழமைப்போல ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை அளித்தது. மிக்க நன்றி.
பிரகாஷ் கோவிந்தன்