நெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்
ஈரோடு போன்ற நகரங்களில் இலக்கியக் கூட்டங்களுக்கு ஆட்களின் வருகை குறைந்து கொண்டே போகிறது, திருமணம் குடும்ப விழாக்கள் பிறந்தநாள் விழாக்கள் போன்ற பொது விழாக்களுக்கு கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. இன்றைய தேதியில் ஒரு நபர் தனக்கு வந்த எந்த அழைப்பையும் தவற விட தயாராக இல்லை. சராசரியாக ஒரு குடும்பஸ்தர் ஒரு ஆண்டில் குறைந்தது 50 விழாக்களில் பங்கு பெற்று விருந்துண்டு செல்கிறார். எவ்வளவு பெரிய இக்கட்டு வந்தாலும் அனைத்தையும் மீறி இந்த விழாக்களில் கலந்து கொள்கிறார்கள்.
ஆனால் இலக்கிய விழாக்கள் போன்ற அறிவார்ந்த விழாக்களை தவிர்க்க ஏதேனும் காரணம் கிடைக்குமா என்று பார்த்து மழை, அன்று விடுமுறை இல்லை, குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர வேண்டும் போன்ற அற்ப சாக்குப்போக்குகளை சொல்லி தவிர்த்துவிடுவார்கள்.
இலக்கிய விழாக்களை மிக தாமதமாகவே துவங்குவார்கள், முகம் சுளிக்கும் அளவுக்கு ஒருவர் மாற்றி ஒருவர் புகழ்ந்து கொண்டிருப்பார்கள், ஒருவர் முன்மொழிய இன்னொருவர் வழிமொழிய தலைவர் என்பவர் ஒவ்வொருவர் பேசி முடிந்தவுடனும் மீண்டும் ஒரு சிறு உரையாற்றுவார், பேச்சாளர்கள் தயாரிப்பின்றி பேசுவார்கள் போன்ற காரணங்களினால் இது நிகழ்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் அது மிக மிக அறுவை என்பதாலேயே மக்களும் ஏன் வாசகர்களும் கூட இலக்கிய விழாக்களை தவிர்க்கும் எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் கட்டண உரை அனுபவம் இதுபோன்ற கட்டண கூட்டங்களை நடத்த விரும்பும் அமைப்புகளுக்கு உதவியாக இருக்கும் என எண்ணியே இதை நான் எழுதுகிறேன்.
ஒரு கூட்டமோ விழாவோ வெற்றிகரமாக நடைபெற மூன்று தரப்புகளின் பங்களிப்புகள் தேவை. முதலாவது அந்தக் கூட்டத்தை நடத்தும் அமைப்பு. அது சீரியதாக இருக்க வேண்டும். ஒரு சில செயல்வீரர்கள் ஆவது அதில் இருக்க வேண்டும். அனைத்து அம்சங்களையும் கண்காணித்து திட்டமிட்டு இந்த கூட்டம் கச்சிதமாக நடைபெற வேண்டும் என அர்ப்பணிப்புடன் இயங்கும் ஆட்களை கொண்டதாக இருக்க வேண்டும். வருகை மிகக் குறைவாக இருந்தபோதிலும் சரியான நேரத்தில் விழாவை துவக்க வேண்டும். இடையூறு செய்யும் பார்வையாளர்களை வெளியேற்ற தயாராக இருக்க வேண்டும். விழா துவங்கும் முன்னரே உரிய நிபந்தனைகளை அறிவித்துவிட வேண்டும்.
இரண்டாவது அந்த கூட்டத்தில் பேசும் பேச்சாளர்கள் அல்லது பேச்சாளர், அவர் கூடுமானவரை முன் தயாரிப்புடன் வர வேண்டும் பிற கூட்டங்களில் பேசியதையே திரும்ப திரும்ப எல்லா கூட்டங்களிலும் பேசக்கூடாது. மேடை உரையை தீவிரமாக எடுத்துக் கொண்டு உண்மையில் உழைத்துவிட்டு வரவேண்டும்.
அடுத்தது உரை கேட்க வரும் மக்கள். அவர்கள் சரியான நேரத்திற்கு வர வேண்டும் செல்பேசிகளை சப்தமற்று வைத்திருக்க வேண்டும், அதை எடுத்துப் பார்த்துக் கொண்டே இருத்தல் கூடாது அது பேச்சாளரை அவமதிக்கும் செயல் என உணர்ந்திருக்க வேண்டும். அடிக்கடி வெளியே சென்று விட்டு திரும்ப வந்து உட்கார்ந்து சலசலப்பை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.
இது மூன்றும் சிறப்பாக அமைந்தால் கூட அந்த உரை அல்லது அந்தக் கூட்டம் வெற்றி பெறும் வாய்ப்பு அதிர்ஷ்டத்தின் கையில்தான்.
இந்த கட்டண உரையை பொருத்தமட்டில் இதை நடத்தும் அமைப்பு சற்று நிபுணத்துவம் வாய்ந்தது. கிட்டத்தட்ட அனைத்து சிறு அம்சங்களையும் சரி பார்த்து இதை நடத்துகிறது , இருந்தபோதுகூட சில குறைகள் காணப்பட்டது. இரண்டாவது பேச்சாளர் என்பவர் ஜெயமோகன், ஆகவே இது ஒரு பெரும் பலம். நிச்சயமாக அவர் எந்தவகையிலும் தயாரிப்பு இன்றி வந்து வழக்கமான உரையை திரும்ப நிகழ்த்த மாட்டார். அடுத்தது பார்வையாளர்கள் 150 ரூபாய் கட்டணம் செலுத்தும்போது இந்த உரைக்கு நாங்கள் வந்து முழுமையாக கவனமாக அதைக் கேட்கப் போகிறோம் என்கிற வாக்குறுதியை அளிக்கிறார்கள். சொன்ன நேரத்தில் வந்திருந்தார்கள், நாங்கள்மின்னஞ்சலில் சொல்லியிருந்த குறிப்புகளை படித்துவிட்டு வந்திருந்தனர். நிகழ்ச்சி துவங்கும் முன்னரே கூடத்தை நிறைத்து விட்டார்கள். இங்கு ரூபாய் 150 கட்டணம் என்பது பார்வையாளர்களின் வருகையை குறைக்கவில்லை மாறாக அவர்களின் எண்ணிக்கையை பெரிய அளவில் கூடிவிட்டது.
இந்த கட்டண உரைக்கு அழைப்பிதழ்கள் எதுவும் அச்சடிக்கவில்லை. நெல்லையில் நான்கு பகுதிகளில் பத்துக்கு பத்து என்கிற அளவில் உரை நோக்கத்தை விளக்கும் வாசகங்களைக் கொண்ட பிளக்ஸ் வைக்கப்பட்டது. jeyamohan.in ல் நான்கு நாட்கள் விளம்பரம் செய்யப்பட்டது. மின் போஸ்டர் வடிவமைத்து அதை முகநூலிலும் வாட்ஸ்அப்பிலும் நண்பர்கள் பகிருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தளம் வழியாக முக்கால்வாசி பேர் பதிவு செய்திருந்தனர். இந்த போஸ்டர் வலைதளங்களில் நல்ல வரவேற்பு பெற்றது அதன் மூலமாக நிறைய பேர் வந்திருந்தனர். இந்த பிளக்ஸ் விளம்பரம் மூலமாக வெகுசிலரே வந்திருந்தார்கள் என எண்ணுகிறோம், அதற்கு பணியும் செலவும் கூடுதல் ஆனால் பலன் மிக மிக குறைவு. கூட்டம் நடைபெறுகிறது என அறிவித்த திருப்தி மட்டும் எஞ்சியுள்ளது. ஒரு செல்வந்தர் அல்லது நிறுவனமும் நுழைவுகளைப் பதிவு செய்து அதை நண்பர்களுக்கு அல்லது ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கி அனுப்பி வைப்பதை நாங்கள் தவிர்த்து விட்டோம். ஆகவே இதில் ஆர்வம் உடைய பார்வையாளர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள் கவனத்துடன் அமர்ந்திருந்தார்கள்.
இப்போதைக்கு இது பெரிய லாபகரமான கூட்டம் என சொல்ல முடியாது, ஜெயமோகனின் சம்பளம் உட்பட இக்கூட்டத்தின் விற்றுமுதல் என்பது வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருந்தது. அடுத்த கூட்டத்தில் இது லாபகரமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
சரியான ஒரு அமைப்பு சரியான ஒரு பேச்சாளரை முன்னிறுத்தும் போது ஆதரவும் சரியாகவே இருக்கும். நெல்லை கட்டண உரையில் இதுவே நிகழ்ந்தது. இது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சிறு வெற்றி என கொள்கிறோம்.
கிருஷ்ணன்
ஈரோடு.