செவ்வல்லி -கடிதங்கள்

a

செவ்வல்லியின் நாள்

அன்புள்ள ஜெயமோகன்,

 

செவ்வல்லியின் நாள் கட்டுரை என்னை அன்றைய நாளின் சமூகவலைதளக் கூச்சல்களுக்கு நடுவே வேறொரு இடத்திற்குக் கூட்டிச் சென்றது. உங்கள் எழுத்தின் வழியாக விரியும் இயற்கையை வாசிக்கும்போது உள்ளம் அவற்றை நேரில் காணும் அளவிற்கு உவகை கொள்ளும். ஒரு ஏழெட்டு நாட்களாகச் சமூகவலைதளங்களைப் பெரிதாக பயன்படுத்தவில்லை. எனவே செவ்வல்லிகள் உள்ளக்காட்சியில் அன்று மலர்ந்தவாறே நிற்கின்றன. இன்று தளத்தில் வந்த செவ்வல்லியின் நாள் கடிதங்களை வாசித்தபோது ஜெயராமன் எழுதிய கடிதத்தில் தன் எண்ணமாக ‘மழையில் அணையாத தீபங்களைக் காலையில் ஜெ சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதை வாசித்தபோது முத்தொள்ளாயிரப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. ஏழாம் வகுப்பிலோ எட்டாம் வகுப்பிலோ மனப்பாடச் செய்யுளாக இருந்த பாடலது.

 

 

‘அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம் தீப்பட்டதென வெரீஇப் புள்ளினந்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ!

நச்சிலைவேற் கொக்கோதை நாடு’

ve

 

செவ்வல்லிகள் அவிழ்ந்திட நீரில் தீப்பற்றிவிட்டதாகக் கருதிப் பறவைகள் கீச்சிட்டுக்கொண்டு கூடுகளில் இருக்கின்ற குஞ்சுகளைத் தம் சிறகுகளால் அணைத்து ஆரவாரம் செய்கிற சித்தரிப்பைக் கூறி சேரநாட்டில் பறவைகளின் சச்சரவுகளைத் தாண்டி வேறு கூச்சல்கள் ஏதுமில்லையெனச் சேரவளம் சுட்டுகின்ற செய்யுளிது. ஜெயராமனின் உருவகம் இந்த ஐந்தாம் நூற்றாண்டுப் படிமத்திற்கு அழைத்துச்செல்லும்போது இயற்கைக்கும் இலக்கியத்திற்கும் இருக்கின்ற மரபார்ந்த சரடொன்றை உணரமுடிகின்றது. அன்றைய ரசனையைச் செவ்வியல் ஆக்கமாக்கிய மானுடம் இன்று இயற்கையின் வழியாக அதே ரசனையை மீட்டெடுக்கின்றது.

 

 

 

எவ்வளவு தாராளமயச் சிந்தனைகள் கொண்டிருந்தாலும் இயற்கையை ரசித்திட மரபுசார் விழிகள் தேவைப்படுகின்றன. அவ்விழிகளால் மட்டுமே செவ்வியல் தன்மையின் இன்றைய ரசனையை வெளிப்படுத்த இயலும்.

 

 

 

வெண்பா

 

 

அன்புள்ள ஜெ

 

நான் என் வாழ்க்கையின் மிகச்சோர்வான ஒரு தருணத்தில் அப்படியே கிளம்பி திருவனந்தபுரம் சென்றேன். நாகர்கோயில் தக்கலை சாலையில் தாமரைக்குளங்களைப் பார்த்துக்கொண்டே சென்றேன். அழுதுகொண்டே இருந்தேன். அங்கே சென்றதுமே மனம் நிலைகொண்டுவிட்டது. வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துவிட்டது

 

அந்த நாளை இந்தக்கட்டுரையை வாசித்ததும் மீண்டும் நினைத்துக்கொண்டேன்

 

செல்வராஜ்

முந்தைய கட்டுரைபுள்ளினங்காள்!
அடுத்த கட்டுரைஅம்பேத்கரும் இலக்கியமும்