ஜெ
சமீபத்தில் உங்கள்மேல் வந்த காழ்ப்புகளையும் வசைகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன். முதலில் உங்களைக் கதைத்திருடர் என்றார்கள். அதன்பின் படம் படுதோல்வி என்றுசொல்லி, அதற்கு நீங்களே காரணம் என்றார்கள். அதன்பின் அது பிளாக்பஸ்டர் எனத் தெரிந்ததும் படத்திலுள்ள கருத்துக்களுக்கு நீங்களே காரணம் என வசைபாடுகிறார்கள். எந்தக்கூச்சமும் கிடையாது.அப்பட்டமான பொறாமையை மறைக்கவேண்டும் என்றுகூட தோன்றவில்லை.
சில வாரங்களுக்குமுன்னர் இங்கே மிடூ குற்றச்சாட்டுகள் வந்தன. தமிழின் அடையாளம் என்று சொல்லப்படுபவர் மீதே கடுமையான குற்றச்சாட்டுகள். பல கோணங்களில் பலரால் அவை முன்வைக்கப்பட்டு அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்தவர்களாலேயே அவை ஆமோதிக்கவும்பட்டன. இன்னொரு சமூகம் என்றால் என்ன நடந்திருக்கும்? கடுமையான சமூக எதிர்ப்பு அந்த நபர்கள்மேல் உருவாகும். அவர்கள் கூசிக்குறுகுவார்கள். அதுதான் மீடூ இயக்கம் உலகமெங்கும் செய்தது. மக்களின் மனசாட்சியை நோக்கிப்பேசியது. எல்லா ஊர்களிலும் மிடூ குற்றவாளிகள் கடுமையாக சமூகத்தால் கண்டிக்கப்பட்டார்கள்.
ஆனால் இங்கே என்ன நடந்தது? இன்றைக்கு உங்களை ஏதோ சமூகவிரோதிபோல காட்டி வசைபாடுபவர்கள் ஒருவர் கூட ஒருவார்த்தைகூட கண்டிக்கவில்லை. அறம் தர்மம் என்றெல்லாம் பேசுபவர்கள் அன்றைக்கு எங்கே இருந்தார்கள் என்றே தெரியவில்லை. ஏனென்றால் இவர்கள்மீதே அந்தவகையான குற்றச்சாட்டுகள் எந்த நாளில் வேண்டுமென்றாலும் வரும் என இவர்களுக்கே தெரியும். பெரியபேச்சு பேசுபவர்கள்கூட வாய்க்குள் நாக்கை மடக்கிவைத்து அமர்ந்திருந்தார்கள். சாதி, கட்சிச் சார்பு தவிர எவருக்கும் எந்த அறமும் ஒழுக்கநெறியும் இல்லை என்பது தெளிவாகியது. ஆனால் இப்போது ஒவ்வொருவராக புற்றிலிருந்து கிளம்பிவந்து ஊளையிடுகிறார்கள். ஒருவருக்கும் ஒரு நியாயமும் சொல்வதற்கில்லை. ஆனால் வெறும் ஊளை. வெட்கமாக இருக்கிறது வெறுப்பிலே திளைக்கும் இந்தப்பதர்களை நினைத்தால்.
எஸ்
ஜெ
இணையத்தில் ‘அசிங்கப்பட்டான் ஜெயமோகன்’ என்றெல்லாம் ஒருசிலர் எம்பிக்குதித்துக்கொண்டிருந்தார்கள். என்னவென்றால் ஏதோ சில போலி இணைய இதழ்களில் சர்க்கார் கதை திருட்டுதான் என்று முருகதாஸ் ஒப்புக்கொண்டதாகச் செய்தி வந்ததாம். அப்படியெல்லாம் இல்லை என்று பாக்கியராஜே சொன்னபின்னர் அப்படியே ஆஃப் ஆகிவிட்டார்கள். இதில் முற்போக்குக் கும்பல் உண்டு. திமுக கூட்டம் உண்டு. திமுக பெண்களும் பெண்கவிஞர்களும் உண்டு. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப்பொறுப்பில் இருப்பவர்கள்கூட உண்டு.
ஒருத்தர்கூட அவர்களின் ‘கவிஞர்’ மிடூவில் அடுக்கடுக்காக குற்றம்சாட்டப்பட்டபோது வாய் திறக்கவில்லை. அவரை அதுவரை தோளில் சுமந்து அலைந்த கூட்டம். ஒருவர்கூட ஒரு வார்த்தை பேசவில்லை. அது அவர்களின் தந்திரபூர்வமான மௌனமா என்று எண்ணிப்பார்த்தேன். உண்மையில் அப்படி இல்லை. அவர்களுக்கு பாலியல்குற்றச்சாட்டெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. அதெல்லாம் அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். அவர்கள்மேலேயே அதெல்லாம் என்றைக்குவேண்டுமென்றாலும் வரும். அதையெல்லாம் இந்தக்கூச்சலால் மறைத்துவிடலாம் என்று திட்டம். வேறு ஒன்றுமே இல்லை. எவ்வளவு கேவலமான பிறவிகள்
எம்