ரயிலில்- கடிதங்கள்

train4

 

ரயிலில்… [சிறுகதை]

 

அன்புள்ள ஜெமோ

 

“ரயிலில் சாமிநாதன் இட்லியை சாப்பிட ஆரம்பித்தார்”

 

சில மனக் காட்சிகள் வாழ்நாள் முழுதும் கூடவே பயணிக்கின்றன.அவை முதலில் அறிமுகமான போது  விவரிக்க முடியாத தரிசனத்தையும், அன்றாடம் மீட்டு எடுத்து நிகழ் கால சம்பவங்களோடு ஒப்பிடும் போது, மனதில் அவ்வப்போது  அசை போடும்போது பல புதிய விடைகளையும் ஆறுதலையும் அளிக்கின்றன. அக்காட்சிகள் எனக்கு  ஒப்பற்ற வழிகாட்டிகள்.

 

ஊமைச் செந்நாய் “காறி துப்பி விட்டு உயிர் விடும்” காட்சி அவற்றில்  ஒரு ஆச்சிறந்த உதாரணம்.

 

சாமிநாதன் இட்லி சாப்பிட ஆரம்பிக்கும் காட்சி இனி வாழ்நாள் முழுதும் என்னுடன் பயணிக்கும், வழிகாட்டும்.

 

அன்புடன் ,நன்றியுடன்

 

சபரி

சிங்கப்பூர்

 

train3

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

 

ரயிலில் சிறுகதையை முதலில் படித்தபோது இது நீங்கள் எழுதிய கதை என்று நான் எண்ணவேயில்லை.ரயிலில் நடக்கும் சம்பவங்கள், அனுபவங்களை பற்றிதான் நிறைய எழுதி இருக்கிறீர்கள். புனைவுக்குள் ஒரு ரயில் வந்ததே இல்லை. ஆதலால் அடிமனம் அதை எதிர்பார்க்கவே இல்லை.ஆனால் கடைசி பத்தியை படிக்கும்போதுதான் “என்ன இது, வேற மாறி இருக்கே” என ஆசிரியரை தேடினேன்.

 

மேலோட்டமாக பார்த்தால் “எளியோரை வலியோர் வாட்டினால் வலியோரை தெய்வம் வாட்டும்” என்ற ரெண்டாம் வாய்ப்பாடு போல இருக்கும் ஆனால் இது எளியோர் வலியோரின் கதை இல்லை . இது இடையோர் பற்றிய கதை. இப்போதைய நடுத்தர வர்க்கம் பற்றியது என நினைக்கிறேன்.

 

எதையாவது அசட்டுத்தனமாக எந்த நெறிமுறையும் இல்லாமல் பற்றிக்கொண்டு பிறகு மரணஅடிவாங்கி மொத்த வாழ்க்கைக்கும் எண்ணி பார்க்கும்படி பத்து நாட்களை மிக தீவிரமாக வாழ்ந்து பிறகு அதை அப்படியே மறக்கும் ஒரு இடைநிலை மனம். முத்துசாமி தனக்கு எதிரே இருப்பவனோடு தான் விளையாடி இப்போது பட்டாளத்துகாரரோடு தனது வாரிசின் மூலம் விளையாட தொடங்குகிறார்.அவர் மாறவே இல்லை.

 

எனக்கு அப்ப அப்ப பைத்தியம் அடைந்து குணமாகும் ஒரு பெண்ணை தெரியும்.அவன் கணவனுக்கு அது நரகம்.ஆனால் அவள் சாகும்வரை அவளை துறக்கவே இல்லை. ராணுவவீரன் என்ன பாடு படப்போகிறானோ என மனம் பதைபதைக்கிறது.

 

ஒருவேளை அவனும் இடைமனநிலை கொண்டவனாக இருந்தால் விதி என சொல்லிக்கொண்டு அவளை வைத்து விளையாட ஆரம்பிப்பான். வலியவனாக இருந்தால் முத்துசாமிக்கு வாழ்வின் இரண்டாம் நரகம் ஆரம்பம்.ஒருவேளை இப்போ அவருக்கு அதுதான் தேவை படுகிறதோ?

 

 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்

train2

அன்புள்ள ஜெ வணக்கம்.

 

ரயிலில் சிறுகதை படித்து முடித்ததும் மாபெரும் அறப்போராட்டத்தின் முடிவிலா விளையாட்டின்  வலையில் சிக்கிய மீன்போல் மனம் துடித்தது.அறம் என்னும் வாள் இருபுறமும் வெட்டிச்செல்லும் தொடர் ஓட்டத்தில் யார் விழுந்தாலும் யார் எழுந்தாலும் அதன் நியாய முள் முட்டும் ஆடி ஆடி தனது சமநிலையில் நிற்’கும் அதிசயம் கண்டு அசைவிழந்தேன்.அறத்தின் அளகிலா விளையாட்டை ஒரு ஒழுங்கோடு சமநிலையில் வைக்கும் கதையை இப்போதுதான் பார்த்ததுபோல் படித்ததுபோல் ஆனந்தம்.

 

இந்த வாழ்க்கை ஒரு ஐந்து நிமிட ஏறுவதும் இறங்குவதும்போன்ற ரயில்தான். ஒழுங்காக ஏறினால் இறங்கினால் மூன்று நிமிடத்தில் நடந்து இரண்டு நிமிடம் நல்லூதியமாக கிடைத்துவிடும், ஆனால் மனிதன் சுழிப்புகளை ’ஏற்படுத்தி தானே தனக்கு தடைமூடியாகவும் ஆகிவிடுகின்றான்.    அந்த சுழிப்பில் அவனே சிக்கி சிடுக்காகி தவித்து சக மனிதர்கள் மீது எரிச்சலும் அவநம்பிக்கையும் கொண்டு உடல்நடுக்கமும் மனநடுக்கமும் கொண்டுவிடுகின்றான். .  வாழ்க்கை என்னும் ரயில் மனித செயல்களின் எந்த அங்கத்திலும் பங்குகொள்வது இல்லை. ஆனால் மனிதன் தன் செயல்களின் வடிவங்களை ரயிலில் ஏற்றி நடப்பது எல்லாம் ரயிலால் ஏற்படுவதுபோல எண்ணிக்கொள்கின்றான். ரயில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அப்படியேதான் ஓடிக்கொண்டு இருக்கிறது. மனிதர்களே அதை போராட்ட களமாக்குகிறார்கள், மனிதர்களே அதை  ஒரே சாதி  ஒரு இனம் என்னும் சமச்சீரான கிராமசாவடியாகவும் ஆக்குகிறார்கள்.

 

ஒரு செயலின் ஒழுங்கின்மையால் சகமனிதர்கள் மேல் எரிச்சலையும் அவநம்பிக்கையும் உண்டாக்கும் மனம்தான், அந்த செயலின் கொந்தளிப்பு என்னும் குழிழ்களை உடைத்து சமநிலையை அடையும்போது நட்பும் சிரிப்புமாக மாறுகின்றது.  “பிரச்சனைகள் சாதாரணமானவை, தீர்வுகளும் சாதாரணமானவை, அவற்றின் எளிமையைப்பார்க்க ஒருவன் மனதைவிட்டு வெளியே வரவேண்டும்” என்று ஓஷோ சொல்கிறார். ஆனால் சாமிநாதன் மற்றும் முத்துசாமியின் பிரச்சனைகள் சாதாரணமானவைகளா? அதற்கான தீர்வுகளும் சாதாரணமானவைகளா?   சாதாரனமானவைகள்தான். அவர்கள் மனங்களை விட்டு வெளியில் வரவில்லை. வெளிவராத அவர்களின் மனங்கைளைத்தான் இங்கு கதையின் வழியாக அறம் இருபுறமும் வெட்டி எறிந்து வெளிவரவைக்கிறது. இருபுறமும் அறம் வெட்டும்வேகம் அதிவேகம், வெட்டும் ஆழம் மிகுஆழம். அந்த வேகமான ஆழமான வெட்டுதலில் ஜொளிக்கின்றீர்கள் ஜெ. அதற்குதான் இந்தகதைகள்  ஜெவை தேர்ந்து எடுக்கின்றன.

 

அறம் முத்துசாமியின் குடும்பத்தை வெட்டும் என்பதை சாமிநாதன் எண்ணுவது சாதாரணம்தான், ஆனால், முத்துசாமியின் குடும்பத்தை அறம் வெட்டிவீழ்த்தி முடிக்கும்போது சாமிநாதன் முகம் தெளிவடைந்தாலும், சாப்பிட்டே ஆகவேண்டிய காலத்தில் சாப்பிடமுடியாமல் மனதை ஆட்டிவிடுவதுதான் அறத்தின் வெற்றி. ஆனால் முத்துசாமியால் எளிதாக சாப்பிடமுடிகின்றது. சாப்பிடுங்கள் என்று சொல்லமுடிகின்றது. அறம் யார் பக்கம் எப்போது நிற்கும் என்று யாராலும் சொல்லிவிடமுடியாதோ? இல்லை. அறம் அங்குதான் இருக்கிறது. யார் அறத்தின் அருகில் சென்று நிற்கிறார்கள் யார் தூரத்தில் சென்று நிற்கிறார்கள் என்றுதான் பார்க்கப்படுகிறது.

 

அறம் அதிசயமான சக்கரம் அருகில் இருப்பவனுக்கு தர்மசக்கரமான விசிறி அவனின் இரத்தவேர்வையை உலரவைத்து துயிலவைக்கிறது, தூரத்தில் நிற்பனுக்கு கழுத்தறுக்கும் காலசக்கரமாகி இரத்தம் குடிக்கிறது.

 

இந்த கதையில் சாமிநாதனை அறிமுகம் செய்யும்போது மனிதர்களிடம் எரிச்சலையும் அவநம்பிக்கையும் கொள்ளும் நடுங்கும் மனிதனாக காட்டி உள்ளீர்கள். முத்துசாமியை தீயில் வாட்டிய முகம்கொண்டவராக காட்டி உள்ளீர்கள். கருமையும் நரையும் கலந்ததோற்றத்தில்  அவரை நீறாக்கிவிட்டீர்கள். அறம் இருவரையும் இருவேறு விதத்தில் வாட்டி வதக்கி வைத்துவிட்டது. அறத்தைப்பொருத்தவரை இருவரும் வேறுவேறு அல்ல ஒருவரே தான். அறத்தின் சுழற்சியில் இருவரும் சிக்கி இருவேறு நிலையை அடைகிறார்கள். சாமிநாதன் தெரியாமல் செய்ததுபோல், என்னால் முடிந்ததை செய்தேன் என்பதுபோல அறமற்றதை செய்கிறார் ஆனால் அவர்மனம் அதை அறியும். முத்துசாமி தனது தந்தையால் தெரிந்தே செய்கிறார் அது தொழிலாகப்பார்க்கப்படுகிறது.  இருவர் பெயரிலும் சாமி சமமாக இருக்கிறது. மீதிதான் வேறுவேறாக இருக்கிறது. உலகில் உள்ள எல்லாமனிதர்களிலும் பாதி சாமிதான் மீதி என்ன என்பதுதான் கேள்வி.

என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.

பெண்கள் தெரிந்து கடைப்பிடிக்கிறார்களோ அல்லது தெரியாமல் செய்கிறார்களோ, அல்லது அவர்கள் சுபாவமே அப்படி செய்யப்பட்டு உள்ளதா? சாமிநாதனின் மனைவியும், முத்துச்சாமியின் அம்மாவும் அச்சத்தினாலோ அறத்தினாலோ ஒதுங்கிக்கொள்ள சொல்லும் இடத்தில் ஒதுங்கி இருந்தால் ஓஷோ சொன்னதுபோல இந்த வாழ்க்கையின் பிரச்சனைகள் எத்தனை சாதாரணமானவையாக இருந்து இருக்கும். ஆனால் ஆசையும் அகங்காரமும் அல்லவா மனிதனை அறத்திற்கு எதிராக நிற்க வைக்கிறது.

 

அந்த வீட்டை விற்றபணத்தில்தான் சாமிநாதன் தன் இரண்டு பெண்களை நன்றாக வாழவைத்தார். அந்த வீட்டை விற்றதால்தான் முத்துசாமி தன் இரண்டு பெண்களின் வாழ்க்கையை தொலைத்தார். அந்த வீடுதான் அதற்குகாரணம் என்று சராசரி உலகில்  மனிதன் நினைக்கிறான். ஆனால் அந்த வீட்டிற்கும் அந்தபெண்களுக்கும் இடையில் அவர்கள் குடும்பத்தாரின் ஆசைகள் அகங்காரங்கள் காரணமாக உள்ளன.  முத்துசாமியின் அம்மா கணவரின் சொல்லுக்கு அடங்கி உள்ளே செல்லாமல் அறம் சிறுகதையின் நாயகி ஆச்சிபோல் வெளியில் வந்து நடு ரோட்டில் வந்து உட்கார்ந்து இருந்தால், அவரின் பேரபிள்ளைகள் நாடுவீதியில் விழுந்திருக்க மாட்டார்கள் அல்லவா? அறம் தவறும் இடங்களில் பெண்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். அது ஏன் உலக்கு புரிவதே இல்லை?  பெண்கள் அறத்திற்கு அருகில் தன்னை வைத்துக்கொள்ளவேண்டியதுதான் எத்தனை அவசியம். பெண்சக்திக்கு அறம்வளர்த்த நாயகி என்று பெயர்வைத்தவர்கள் வாழ்க!

 

சாமிநாதனும், முத்துசாமியும் பயணிக்கும் வாழ்க்கை ரயிலில்தான் பிறர் உலகத்தில் இருப்பதையே தெரியாத மார்வாடிக்குடும்பமும் இருக்கிறது. அவர்களுக்கு அடுத்தவர் பேசும் மொழி என்பது வெறும் சத்தம். அவர்கள் வயிறு நிரம்பியவர்கள், நிரப்புவர்கள் என்பது எத்தனை பெரிய நிதர்சனம்.  பிறர் என்பதே உலகத்தில் இல்லை என்று நினைத்து பாட்டுக்கேட்டு துயிலும் இளைஞனும் இருக்கிறான். வாழ்க்கை ரயிலில்தான் இத்தனையும் நடக்கிறது. வாழ்க்கை இரயிலுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அது அத்தனையும் சுமந்துக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது.

 

எத்தனை பெரிய அறம் வந்து அடித்து கரை ஒதிக்கினாலும் மானிட மீன்கள் தன் இறையை எப்படி விழுங்குவது என்ற போட்டியில் போட்டிப்போட்டுக்கொண்டேதான் இருக்கிறது. முத்துசாமி தனது பெண்ணிற்கு திருமணம் முடிக்கும் விதத்தைப்பார்க்கும்போது தோன்றுகின்றது. கரையேறிய மீன்கள் வாழமுடியாது என்பது ஒரு புறம் இருக்கட்டும், அவைகளுக்கு  அலைகளின் ஊஞ்சல் கிடைக்காது. மீன்கள் அலைகளின் ஆடலில் இருக்கவே முயல்கின்றன. இது வாழ்வின் சுவை.

 

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சரிடம் இறைவன் ஏன் மனிதர்களை மயக்குகின்றான்? என்று கேட்பதற்கு. “இறையானந்தத்தின் ஒரு துளியை மனிதன் சுவைத்துவிட்டாலும் இந்த வாழ்க்கை அவனுக்கு வெறுத்துவிடும், இந்த வாழ்க்கை விளையாட்டு தொடர்ந்து நடந்துக்கொண்டே இருப்பதற்காகத்தான் மயக்குகிறார்” என்று சொல்வார்.

 

எத்தனை முறை ஏமாந்தாலும், எத்தனை முறை ஏமாற்றினாலும் இந்த ஏமாற்றுதல்கூட வாழ்க்கையாக இருப்பதுதான் நகைச்சுவை. அந்த நகைச்சுவையில்தான் எத்தனை கண்ணீர்.

 

ரயிலில் சிறுகதை அறம் காலனாகவும், காலகண்டனாகவும் இருவேறு தோற்றம் காட்டும் கதை. அறத்தை ’சுமந்துபோகும் வாழ்க்கை என்னும் ரயில் பயணித்த கணம் இது.    நன்றியும் வணக்கமும் ஜெ.

 

 

அன்புடன்

 

 

மாணிக்கவேல் ராமராஜன்.

 

 

 

 

 

முந்தைய கட்டுரைவானவில் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகட்டண உரை பற்றி…