டார்த்தீனியம் – பதட்டமும் விடுபடலும்

jeya

ஜெயமோகன் குறுநாவல்கள் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

காடு நாவல் வாசித்திவிட்டு கடிதம் எழுதிருந்தேன், உங்கள் தளத்தில் வெளியிட்டுருந்தீர்கள், நன்றி. தொடர்ந்து “தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்” மற்றும் “பேய் கதைகளும் தேவதை கதைகளும்” படித்தேன். மனிதர்களின் குற்ற உணர்ச்சியில், தாழ்வுணர்ச்சியில்…. உருவாகி பெருகி கிடக்கும் யட்சிகள் மனதை ஆக்கிரமித்தன. பல எட்சிகள் மனதில் பின்னி பிணைந்து கிடக்கின்றன. இப்போது உங்கள் குறுநாவல்கள் படித்து கொண்டிருக்கிறேன்.

என்னை மிகவும் பதட்டமடைய செய்தது “டார்த்தீனியம்”. டார்த்தீனியம் வளர வளர அதன் கொடூர முகம் பல்வேறு உருவகங்களை மனதில் கொண்டு வந்தது. என்னுள் ஒரே நேரத்தில் பல்வேறு வடிவில் மரம் வளர்ந்து கொண்டே போனது. அந்த மன ஓட்டத்தை என்னால் எழுத முடியவில்லை. கடைசியில் விதைகள் கொத்து கொத்தாக தொங்கின என்னும் காட்சியில் பதட்டம் உச்ச நிலையை அடைந்திருந்தது. ஒரு கதை இத்தனை பதட்டத்தை தரும் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

மனிதர்கள் எத்தனை விதமான டார்த்தீனிய தைகளை பூமியில் நட்டு வளர்த்திருக்கிறார்கள். அரசியல், தத்துவம், கோட்பாடு, அறிவியல், மதம்… என கணக்கில்லா தைகள் வளர்ந்து காடாகி உலகை அளித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு தை தான் பணம், இவ்வார்த்தை இயல்பாக பணப்பயிர் என அன்போடு குமரி மாவட்ட மக்களால் அழைக்கப்படும் ரப்பர் மரத்தின் நினைவில் கொண்டு செல்கிறது. ரப்பர் ஒரு டார்த்தீனியம். அழிக்கும் காடு.

ராஜு காணும் அந்த கரும் காடு எனக்கு என் சிறுவயதில் நான் கிட்டத்தட்ட தினமும் காணும் ஒரு காட்சியை நினைவூட்டியது. என் சொந்த ஊர் பாகோடு(அங்கிருந்து வெளிவந்து நெடுநாட்கள் ஆகிறது), நான் சிறுவயதில் மீன் வாங்க அந்திக்கடை செல்லும் வழி பெரும்பாலும் ரப்பர் காடுகள். நடக்கும் போது அரணைகள் பில்லு பிலுவென ஓடும் காட்சி நினைவில் அப்படியே இருக்கிறது. அந்த பாதை தரும் வெறுமை இப்போதும் என்னால் உணர முடிகிறது. ஓஹ்… என்று ஒரு வெற்று(வேற்று) சத்தம், அது காற்றின் ஒலி என்று எனக்கு தோன்றியதே இல்லை. பேய்க்குரல் அல்லது காற்றின் அழுகை. வெறும் சூன்யம். வெகுநேரம் நடந்து போய் சூரை அல்லது சாளை யை பார்க்கும் போதே சற்று மனம் இளைப்பாறும். திரும்பி நடக்கையில் மீண்டும் வெறுமை, எங்கள் வீட்டின் அருகில் வரும் போது சில வாழை மரங்கள் மற்றும் நல்லமிளகு கொடிகள் தென்படும்(பச்சை). மீண்டும் விடுதலை.

ஒருமுறை தைலம் காய்க்க வேண்டி பச்சிலை பறிக்க சென்றோம், நான் ரப்பர் காட்டினுள் நுழைய யாரோ “ரப்பர் காட்டில் ஏது பச்சிலை” என்றதாக ஒரு நினைவு. இப்படி பல்வேறு எண்ணங்கள் என்னை பதற்றத்துடனே இருக்க செய்கிறது. இதிலிருந்து விடுபட நான் வாசித்த பழைய கதைகளை நினைவில் கொண்டு வர முயற்சித்தேன். ஒரு வாரம் முன்பு வாசித்திருந்த மண்டைக்காடு பகவதி முன் வந்து நின்றாள். எங்கள் அம்மா ஊர் நடுவூர்க்கரை. மண்டைக்காடு பக்கம் பருத்திவிளையில் இருந்து சற்று உள் செல்ல வேண்டும். அங்கு ஊர்த்தெய்வம் பத்திரகாளி, பனையே பத்திரகாளி. என் அம்மா பதநீர் குடிக்கும்போது  ‘இது பத்திரகாளிக்க பாலாக்கும்’ என்று சொல்லாமல் குடித்ததில்லை. அம்மா பதநீர் குடிக்கும் பொது தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் முகம் இயல்பாக அவர் முகத்தில் வரும்.

அம்மா சொன்ன மண்டைகாட்டம்மை கதை(என் நினைவில் இருப்பது) இது.  ஒரு நாள் பத்திரகாளி நள்ளிரவில் காட்டு வழி நடைபயணம் சென்று கொண்டிருக்கிறாள், அப்போது ஒரு மாட்டு வண்டியில் சிலர் தலை உடைக்கப்பட்ட ஒரு பெண்ணை ஏற்றி காட்டில் புதைக்க கொண்டு போகிறார்கள். அவ்வாறு ஒரு இடத்தில புதைத்து கொண்டிருக்கும் போது காளியின் கொலுசு சத்தம் கேட்டு பதறி அவளை அங்கேயே விட்டு செல்கிறார்கள். மாட்டு வண்டி ஓசை கேட்டு காளி அங்கு ஓடி வருகிறாள். அந்த பெண்ணை காண்கிறாள், தலையில் அடிப்பட்டிருப்பதை கவனிக்கிறாள். மண்டைய காட்டம்மா என்று கதறுகிறாள். அவள் உயிர் இன்னும் பிரியவில்லை. அந்த உடலில் அவள் உயிர் சில நேரம் தாங்காது என்று அறிந்து, அவள் உயிரை புற்றில் சேர்க்கிறாள். அப்புற்றில் அம்மை வளர்கிறாள். ஒருமுறை காட்டில் விடையாட வந்த சிறுவர்கள் தவறி ஒரு கல்லை புற்றின் மேல் எறிகிறார்கள். புற்றில் இருந்து ரத்தம் சொட்ட தொடங்குகிறது. ஊரார் செய்தி அறிந்து அவளை சாந்தப்படுத்தி வழிபட தொடங்குகிறார்கள். பத்திரகாளியும், மண்டைக்காடு பகவதியும் சகோதரிகளாக ஊரை காப்பாற்றி வருகிறார்கள்.

எங்கள் அம்மா ஊரில் மண்டைகாட்டம்மை பத்திரகாளியின் தங்கச்சி என்று சொல்லுவார்கள். ஊருக்கு வெளியே அந்த கதை இருப்பதாக தெரியவில்லை. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொது சென்றது. அப்போது உயிருள்ள வளரும் அம்மன் அவள். இப்போது அவள் வளர்வதில்லை, வளர வளர கோவிலை பெரிதாக கட்ட முடியாது என்ற பக்தர்களின் வேண்டுகோள் ஏற்று வளர்வதை நிறுத்திக்கொண்டாள் பகவதி. [புற்று முழுக்க சிறு சிறு துவாரங்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கும், குங்குமம துகள்கள் அந்த துளைகளை அடைத்து கொள்ளும். மேலும் புற்று ஒரு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளதால் காற்று குறைவு, சிதல்கள் இப்போதும் இருக்குமா என்பது சந்தேகமே]. ஆனால் பத்திரகாளியும் மண்டைக்காடு அம்மையும் ஒன்றாக இருப்பதை நாம் பல இடங்களில் காணலாம்.

நான்கு வழிச் சாலையில் பயணிக்கும் போது நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி ஊர்களிடையே பல இடங்களில் பனையும் புற்றும் அருகருகே நின்றிருப்பதை சிறு இடைவெளியில் கண்டுகொண்டே செல்லலாம். எங்கேனும் வாகனத்தை நிறுத்தி உள்ளே சென்று பார்த்தல் இரு அன்னைகளையும் மீண்டும் மீண்டும் தரிசிக்கலாம். நான் அரசு பேருந்தில் செல்வதால் அங்கு இறங்கியதில்லை. ஆனால் இரு அன்னைகளும் சிரித்த முகத்துடன் அங்கு நின்றிருப்பதை இப்போதும் என்னால் காண முடிகிறது. மகிழ்ச்சி. ஒரு சிறு விடுதலை.

நன்றி,
அருள், கொச்சி. 

பின்குறிப்பு : ராஜு ஊருக்கு அந்நியனாக திரும்ப வந்து டார்த்தீனியம் அவன் வீட்டை நொறுக்கி தின்று கொண்டிருப்பதை காணும் போது நீங்கள் அஜிதன் எடுத்த documentary இல் ரப்பர் காட்டின் முன் நின்று அங்கு ரப்பர் காட்டின் அடியில் மறைந்து போன உங்கள் வீட்டின் நினைவுகளை சொல்லும் காட்சி என் மனக்கண்ணில் எழுவதை தடுக்க முடியவில்லை.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-74
அடுத்த கட்டுரைரயிலில் கடிதங்கள் 5