துச்சகனின் பாடிவீட்டுக்கு முன் துண்டிகன் காத்து நின்றிருந்தான். உள்ளிருந்து வெளிவந்த ஏவலன் அவன் உள்ளே செல்லலாம் என்று கைகாட்டினான். துண்டிகன் தன் மரவுரி ஆடையை சீர்செய்து, குழலை அள்ளி தலைக்குப்பின் முடிச்சிட்டு, மூச்சை இழுத்து நேராக்கி குடிலுக்குள் நுழைந்தான். உள்ளே மரவுரியில் கால் மடித்து அமர்ந்திருந்த துச்சகன் ஓலைகளை பார்வையிட்டுக்கொண்டிருந்தான். அருகே சென்று தலைவணங்கி துண்டிகன் நின்றான். அவனை நிமிர்ந்து பார்த்து ஒருகணம் கழித்தே அவன் யார் என்றும் அவனை எதன்பொருட்டு அங்கு அழைத்தோமென்றும் துச்சகன் நினைவுகூர்ந்தான். “உன் பெயர் துண்டிகன் அல்லவா? ஸ்பூட குலத்து புரவிச்சூதன்?” என்று துச்சகன் கேட்டான். “ஆம் இளவரசே, தாங்கள் அழைத்தமையால் வந்தேன்” என்றான் துண்டிகன்.
துச்சகன் பெருமூச்சுவிட்டு கைகளை மார்பில் கட்டிக்கொண்டு பின்னால் இருந்த தூணில் சாய்ந்தமர்ந்தான். “உன்னை இன்று வரச்சொன்னது சற்று உளக்குழப்பமூட்டும் ஒரு நிகழ்வுக்காக” என்றான். வெறுமனே சொற்களை தெரிவுசெய்வதற்கான வரி அது. பின்னர் அவன் மேல் நோக்கு நிலைக்க “பீஷ்ம பிதாமகரின் மாணவர்கள் அனைவருமே களம்பட்டுவிட்டனர்” என்றான். “ஆம், அறிவேன்” என்றான் துண்டிகன். விழிகள் சுருங்க “அறிவாயா? எப்படி?” என்றான் துச்சகன். “இளவரசே, பீஷ்ம பிதாமகரை பற்றித்தான் நம்முடைய படை முழுவதும் பேசிக்கொண்டிருக்கிறது. அவருடைய நேரடி மாணவர்களில் எஞ்சியிருந்த எழுவர் நேற்று கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரையும் படைவீரர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
துச்சகன் “அவருக்குத் தேரோட்டியவர்கள் அவருடைய மாணவர்கள். இறுதியாக தேரோட்டிய வீரசேனர் நேற்று நெஞ்சிலும் கழுத்திலும் அம்புகள் பட்டு மருத்துவநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரால் இன்று தேரோட்ட இயலாது. பீஷ்ம பிதாமகருக்கு இன்னமும் இச்செய்திகள் முழுமையாக தெரியாது” என்றான். துண்டிகனின் விழிகளிலிருந்த ஐயத்தை பார்த்துவிட்டு “ஆம், அவர் மெய்யாகவே அறிந்திருக்கவில்லை. படைகளில் மட்டுமல்ல தன்னைச் சூழ்ந்தும் என்ன நிகழ்கிறது என்றே அவருக்கு தெரியாது. பிறிதொரு உலகில் இருக்கிறார். போர்க்களத்திற்கு வில்லுடன் வரும்போது மட்டுமே நமது படைகளை ஒவ்வொரு முறையும் துணுக்குறலுடன் என பார்க்கிறார். இப்போரில் அவர் உளமில்லை. இவ்வுலகிலேயே அவருடைய அகம் பெரும்பாலும் இல்லை” என்றான் துச்சகன். துண்டிகன் தலையசைத்தான்.
“அவரிடம் இச்செய்தியை சொல்லவேண்டும். அதற்கு முன் மருத்துவமனையிலிருக்கும் வீரசேனரை சென்று பார்த்து அவருடைய உடல்நிலை எங்ஙனமுள்ளது என்று அறிந்துவரவேண்டும். அவ்வுடல்நிலையைக் குறித்து பீஷ்மரிடம் விளக்கச்செல்வதுபோல் நீ சென்று அவரை சந்திக்கவேண்டும். வீரசேனர் தேரோட்ட இயலா நிலையிலுள்ளார் என்பதை சொன்ன பின்னர் நீ தேர்வலன் என்று கூறு. உனது குடிப்பெயரையும் தந்தை பெயரையும் கூறினால் அவர் புரிந்துகொள்வார்” என்றான். துண்டிகன் “என் தந்தை பெயர் தெரியாத வீரர்களில்லை” என்றான். “ஆம், உன் பெயரும் பெரும்பாலும் தெரிந்துள்ளது. நேற்று இந்தப் போரை முன்னெடுக்கும் முதன்மை வீரருக்குத் தேர்வலராக தகுதியுடையோன் எவனென்று கேட்டபோது வீரரும் சூதரும் ஐயமின்றி உன் பெயரை சொன்னார்கள். இளையவனாக இருக்கிறாயே என்று நான் சற்று குழம்பினேன். ஆனால் புரவியை அறிந்தவன் என்றனர்” என்றான் துச்சகன்.
“ஆம், நான் புரவிக்கு அணுக்கமானவன்” என்றான் துண்டிகன். “புரவியை அறிதலென்பது ஒரு வாழ்நாளில் நிகழ்வதல்ல. எட்டு தலைமுறை தவம் இருந்தாலொழிய எவரும் புரவியுடன் உளம் பேச இயலாது என்றார்கள். உங்கள் குடி பதினெட்டு தலைமுறைகளாக போர்ப்புரவிகளுடன் வாழ்கிறது என்றனர்” என்றான் துச்சகன். “அறிந்த தலைமுறைகள் பதினெட்டு. நீர்க்கடன் அளிக்கும் பொருட்டு அவ்வாறு பதினெட்டு மூதாதையரை நிரைவகுத்து சொல்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கொடிவழியினர் புரவிகளுடன் வாழ்கிறார்கள். வடமேற்கே மலையவன நாட்டிலும் அதற்கும் அப்பால் சோனகர்களின் நாடுகளிலும் எங்கள் மூதாதையர் பரவியிருந்ததாக சொல்கிறார்கள். புரவிகள் போருக்கும் பணிக்கும் பயிற்றப்படும் காலத்திலேயே அப்பணிக்கு வந்தவர்கள் என்று என் தந்தை சொல்லி கேட்டிருக்கிறேன்” என்றான் துண்டிகன்.
“மாணவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதென்பது பிதாமகருக்கு இழப்பு. அதை அவர் எவ்வகையிலும் உணர்ந்திருக்கவில்லை எனினும் எதிரிகள் அதை உணர்ந்திருப்பார்கள். அவருடைய மாணவர்கள் அவருடைய உள்ளத்திலிருந்தே ஆணைகளை பெற்றுக்கொள்பவர்கள். அவருக்குப் பின்னால் அணிநிரந்து அவரை படையினரின் அம்புகள் அணுகாது தடுத்த காவல் வளையம் என்று இலங்கினர். அது அழிந்துள்ளது. களத்தில் இன்று பிதாமகர் தனித்து நிற்கப்போகிறார். ஆகவே நமது படைகளிலிருந்து தேர்ந்த புரவி வில்லவர் எழுபத்திரண்டு பேரை தேர்வு செய்துகொண்டிருக்கிறோம். அவர்கள் இன்றுமுதல் பிதாமகர் பீஷ்மரின் பின்காவல் படையென உடன் செல்ல வேண்டும். பிதாமகர் பீஷ்மர் நம் படையின் முகப்பில் நிற்பது வரை நாம் தோல்வியற்றவர்கள்” என்று துச்சகன் சொன்னான்.
“தேர் பற்றி எண்ணுவதை நீங்கள் விட்டுவிடலாம். இப்புவியில் எனக்கிணையான தேர்வலன் என்று நான் ஒருவனையே சொல்வேன், பீமசேனரின் தேர்வலனாகிய விசோகன். ஆனால் அவனும் களத்தில் தேர் தெளிக்கையில் என்னைவிட பல படிகள் பிந்தியவனே. அதை அவனும் அறிவான்” என்றான் துண்டிகன். “நன்று, செல்க!” என்று துச்சகன் சொன்னான். துண்டிகன் தலைவணங்கி பின்னகர்ந்து பாடிவீட்டிலிருந்து வெளிவந்தான். தன் புரவி நோக்கி சென்று அதன் சேணத்தை சீரமைத்து கால்வளையத்தில் இடக்கால் வைத்து சுழன்று ஏறி அமர்ந்தான். அவனருகே வந்த ஏவலன் “தங்களுக்கு துணை வரும்படி ஆணை” என்றான். துண்டிகன் “நான் மருத்துவநிலைக்கு செல்கிறேன்” என்றான். “ஆம், உரிய ஒப்புதலின்றி எவரும் மருத்துவநிலை நோக்கி செல்ல இயலாது. தங்களை மருத்துவநிலை வரை கொண்டுசென்று விடும்படி எனக்கு ஆணையிடப்பட்டுள்ளது” என்றான்.
துண்டிகன் சில கணங்களுக்குப் பின் “இளவரசரிடமிருந்து என் பணிக்கென ஆணைஓலை ஏதும் அளிக்கப்படவில்லையா?” என்றான். “இல்லை. அவ்வாறு ஆணையிடுவது பிதாமகர் பீஷ்மருக்கு ஆணையிடுவதுபோல என்று இளவரசர் கருதுகிறார். தாங்கள் அவராலேயே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். செய்தியை நீங்கள் அவரிடம் சொல்லும்போது அவரே எண்ணிக்கொண்டு உங்களை தன் பணிக்கு அமர்த்துவார் என்று இளவரசர் எதிர்பார்க்கிறார்” என்றான் ஏவலன். துண்டிகன் தலையசைத்துவிட்டு புரவியை செலுத்தினான். ஏவலன் இன்னொரு புரவியிலேறி அவனுடன் வந்தான். இருவரும் இருண்டு ஓசையடங்கி கருக்கிருள் அழுந்தி போர்த்தியிருந்த படைப் பிரிவுகளினூடாக சென்றனர்.
படைகள் துயின்றுகொண்டிருந்த மூச்சொலிகளே முழக்கமென எழுந்து சூழ்ந்தொலிப்பதாக உளமயக்கெழுந்தது. அனைத்துப் பந்தங்களும் அசைவற்று நிற்பதை அவன் விழிகள் விந்தையென உணர்ந்தன. ஓர் அசைவுகூட எங்குமில்லை. கொடிகள், வழிசுட்டு பட்டங்கள் அனைத்தும் அசைவிழந்திருந்தன. யானைக்கொட்டிலை அவர்கள் கடந்து சென்றபோது பெரும்பாலான யானைகள் ஒற்றைக்கால் தூக்கி வைத்து நிலத்திலறையப்பட்ட கந்துகளில் சற்றே உடல் சாய்த்து துயின்றுகொண்டிருப்பதை காண முடிந்தது. அவற்றின் மூச்சொலிகளின் கலவையோசை அங்கே காற்று ஒன்று சுழன்று இலை ஒலித்தபடி வீசுவதுபோல எண்ணச் செய்தது.
அவன் விழிகளைக் கண்ட ஏவலன் “யானைகளில் பெரும்பாலானவை இறந்துவிட்டன” என்றான். துண்டிகன் ஒன்றும் சொல்லவில்லை. “இறந்த யானைகள் இருக்கும் யானைகளின் மீது தெய்வங்களாக எழும் என்கிறார்கள். யானைகள் களம்படும்தோறும் எஞ்சிய யானைகள் வெறிகொள்கின்றன. அகிபீனா உண்ணாமல் பெரும்பாலான யானைகள் துயில்வதில்லை. இன்று அகிபீனா குறைந்துவிட்டமையால் காட்டிலிருந்து மயக்களிக்கும் ஊமத்தை, எருக்கு, அரளி போன்ற செடிகளையும் காய்களையும் வேடர்களைக்கொண்டு பறித்து வரச்செய்து அரைத்து உணவுடன் கலந்து யானைக்கு அளிக்கிறார்கள். அவை நஞ்சு. ஆனால் இத்தருணத்தில் நஞ்சே அமுதென்றாகி அவற்றை உறங்கச்செய்கிறது.”
அச்செய்திகள் தனக்கு ஏன் என்று அவன் எண்ணினான். ஆனால் போர்க்களத்தில் எச்செய்தியையும் உள்ளம் வரவேற்கிறது. வெளியிலிருந்து ஏதேனும் ஒன்று ஒருகணம் ஒழியாது உள்ளே விழுந்துகொண்டிருக்க வேண்டும். வெளியிலிருந்து ஏதும் வராதபோது உள்ளிருப்பவற்றை உருட்டி விளையாடத் தொடங்குகிறது உள்ளம். அது பெருந்துன்பம். நினைவுகளாக எழுந்து வருபவர்கள் அனைவருமே களம்பட்டவர்கள். தங்கள் இடம் இனி நினைவுகளே என்று நன்கறிந்தவர்களாக, நினைவின் அனைத்துக் கொடிகளையும் அவர்கள் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஒருகணம்கூட எவரும் அவர்களை தவிர்க்கமுடியாதபடி தங்களை ஆக்கிக்கொள்கிறார்கள்.
துண்டிகனின் ஏழு உடன்பிறந்தார்கள் அக்களத்தில் கொல்லப்பட்டனர். அவன் குடியிலிருந்து நூற்றுப்பதினாறு பரிவலர் போருக்கென வந்தனர். அவர்களில் எண்மரே எஞ்சியிருந்தனர். பரிவலரை போரில் கொல்லலாகாதென்ற நெறி முதல்நாளிலேயே இல்லாதாயிற்று. பீஷ்மரும் பீமனும் மாறி மாறி அந்நெறியை கடந்து சென்றனர். போரில் விசைகொண்டு இயங்கும் வில்லவனின் தேர்வலன் கொல்லப்படுகையில் மீண்டும் பிறிதொரு தேர்வலன் அங்கே வந்து அமர்ந்து கடிவாளங்களைப்பற்றி தன் உள்ளத்தால் புரவிகளுடன் தொடர்பு உருவாக்கிக்கொள்வது வரை அத்தேர் அசைவிழந்து போரின் அலைகளில் தத்தளிக்கும். அவ்வில்லவனை வீழ்த்துவதற்கு மிக எளிய வழி அது.
முதல்நாள் போருக்குப் பின் பரிவலர் அனைவருக்கும் எடைமிக்க ஆமைக்கவசங்கள் அளிக்கப்பட்டன. ஆமை ஓடுபோல உடல் மேல் அந்த முழுக் கவசம் கவிழ்ந்திருக்க புரவிகளின்மேல் நன்கு குனிந்து தேரை ஓட்டும்படி தேர்வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தேர்வலனின் உடலசைவுகளை புரவிகளே முடிவெடுத்தன. அவை திரும்புகையில், மேடுகளில் ஏறி இறங்குகையில், ஒருக்களித்து சரியப்போகையில் வேறு வழியின்றி தேர்வலர் கடிவாளம் பற்றி திருப்பவும், தலை தூக்கி அவற்றின் ஒத்திசைவுகளை விழி கொள்ளவும் தேவை இருந்தது. அத்தருணங்களில் அவர்களின் நெஞ்சுக்கும் கழுத்துக்கும் கொலையம்புகள் வந்தன.
மருத்துவநிலையை அடைந்ததும் ஏவலன் அங்கிருந்த காவலர்தலைவனிடம் துச்சகனின் ஆணையை உரைத்தான். ஏவலனை நன்கறிந்திருந்த காவலர்தலைவன் ஒருமுறை துண்டிகனை பார்த்துவிட்டு கையசைத்தான். ஏவலன் திரும்பிச்சென்றான். துண்டிகன் “இங்கு பீஷ்ம பிதாமகரின் மாணவர் வீரசேனர் எங்கிருக்கிறார்?” என்று கேட்டான். காவலர்தலைவன் “அவர் ஷத்ரியர் அல்லவா?” என்று கேட்டான். “ஆமாம்” என்று துண்டிகன் சொன்னான். “ஷத்ரியர்களில் அரசகுடி அல்லாதவர்களுக்கான படுக்கைநிலை இங்கிருந்து பதினெட்டாவதாக உள்ளது” என கைகாட்டினான். “கொட்டகையா?” என்று துண்டிகன் கேட்டான். “இப்போது அரசகுடியினருக்கு மட்டுமே கொட்டகை அளிக்கப்படுகிறது. பிற அனைவருக்குமே திறந்தவெளிதான்” என்று காவலர்தலைவன் சொன்னான்.
துண்டிகன் திரும்பி அந்த மருத்துவநிலையை பார்த்தான். அவற்றை பகுக்கும் தூண்களின் மேல் துணிப்பட்டங்கள் தொங்கவிடப்பட்டு அருகே நெய்விளக்குகள் எரிந்தன. அசையாத் தழல்கள் என அந்தத் துணிப்பட்டங்கள் தெரிந்தன. கசப்பான புன்னகையுடன் “இங்கு இடமில்லை. ஒவ்வொரு நாளும் புண்பட்டோர் வந்துகொண்டிருப்பதனால் மருத்துவநிலைகள் அகன்று பெருகி காடுகளை ஊடுருவி செறிமையம் வரை சென்றுவிட்டன. நல்லவேளையாக புண்பட்டோர் இந்த சில நாட்களாக கூட்டம்கூட்டமாக இறந்துகொண்டிருக்கிறார்கள். நேற்று முன்நாள் பெய்த சிறு மழையால் பெரும்பாலானோரின் புண்கள் அழுகிவிட்டன. ஆகவே இனி மருத்துவநிலை இடம் விரிந்து செல்ல வாய்ப்பில்லை” என்றான்.
அவனை சீற்றத்துடன் ஒருகணம் பார்த்துவிட்டு துண்டிகன் புரவியில் ஏறிக்கொண்டு மருத்துவநிலைக்குள் சென்றான். பெரும்பாலான நோயாளர் அகிபீனாவின் மயக்கில் துயின்றுகொண்டிருந்தாலும் உடல்வலியாலும் உயிர்பிரியும் தவிப்பாலும் அகிபீனாவை மீறி பலர் முனகிக்கொண்டும் கூச்சலிட்டு அழுதுகொண்டும் சொற்களைக் கூவி புலம்பிக்கொண்டும் இருந்தனர். அந்த மருத்துவநிலையே பித்தெடுத்த மாபெரும் உள்ளம் போலிருந்தது. அதனூடாக செல்கையில் பல்லாயிரம் பேய்தெய்வங்கள் தன்னை கூவி அழைப்பதுபோல, அவற்றின் இருண்ட குறிய கைகள் தன்னை பற்ற வருவதுபோல அவன் உணர்ந்தான். கைகளில் சிறு நெய்விளக்குடன் ஆதுரநிலை ஊழியர்கள் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்த ஒளிப்புள்ளிகள் மின்மினிகள்போல் அங்கு நிறைந்திருந்தன.
மிக இடைவெளிவிட்டு நெய்ப்பந்தங்கள் ஏற்றப்பட்டிருந்தன. ஆகவே ஆதுரநிலையில் பெரும்பகுதி இருளுக்குள்தான் இருந்தது. ஒளிவிழுந்த பகுதிகள் பெரிய ஓவியத் திரைச்சீலைபோல தெரிந்தன. அவன் ஒவ்வொரு படுக்கைநிலை வழியாகவும் மெல்ல கடந்துசென்றான். பதினெட்டு. எண்ணிக்கை தவறிவிடலாகாது. எதிரில் எவரேனும் வந்தால் கேட்கலாம் என்று எண்ணினான். ஆனால் அந்தச் சிறிய பாதையில் எவருமே தென்படவில்லை. மரத்தாலான தரை புதிய குருதியால் நனைந்து வழுக்கியது. இரவு முழுக்க அங்கு கொண்டு வரப்பட்ட புண்பட்டவர்களின் உடற்குருதி அது. உறைந்து கருமை கொண்டு, அழுகிய ஊன் கதுப்பாக மாறியது. நூற்றுக்கணக்கான காலடிகளால் மிதிபட்டு சேறாகி பலகைகளின் இடுக்குகளில் திரண்டு உலரத்தொடங்கியிருந்தது. அந்த இருளில் மெல்லிய ரீங்காரத்துடன் சிற்றுயிர்கள் அக்குருதியில் பரவி புரவிக்காலடிக்கு எழுந்து அமைந்தன.
அவன் ஒரு மருத்துவநிலையிலிருந்து ஏழு பெண்கள் வெளியேறுவதை பார்த்தான். முதலில் அவர்கள் திரையசைவுகள்போல, அருகிருந்த எதனுடையதோ நிழலாட்டங்கள்போல தோன்றினர். ஒருகணத்துக்குப் பின்னரே அவர்கள் மானுட உருவங்கள் என்றும், மறுகணம் அவர்கள் பெண்கள் என்றும் தெளிந்தது. அவன் புரவியை இழுத்து நிறுத்தியபடி அவர்களை கூர்ந்து நோக்கி நின்றான். அவர்கள் கைகளில் விளக்குகள் எதையும் வைத்திருக்கவில்லை. ஒருவரை ஒருவர் நோக்கவோ பேசவோ செய்யவில்லை. சீரான காலடிகளுடன் காற்றில் ஒழுகிச்செல்லும் புகைத்திரள்போல வந்தனர். அவன் அவர்களை கூர்ந்து நோக்கினான். அது கனவு என்னும் எண்ணம் ஏன் எழுகிறது என எண்ணிக்கொண்டான். படைகளுக்குள் பெண்டிர் வரவியலாது. ஆனால் மருத்துவநிலையில் மருத்துவர்களாக வரக்கூடும்.
அவர்களின் உருவை நோக்குந்தோறும் விழி மங்கலடைவது போலிருந்தது. விழி திருப்பி அச்சூழலை சுழன்று நோக்கியபின் திரும்பி அவர்களை பார்த்த முதல்கணம் மிகத் தெளிவாக அவர்களின் முகங்களும் விழிகளும் தெரிந்தன. அனைவர் விழிகளுமே கல்லில் செதுக்கப்பட்டவைபோல அசைவிழந்திருந்தன. அவர்களின் ஆடைகள் எழுந்து பறந்து காற்றில் திளைத்தன. ஆனால் அங்கிருக்கும் பந்தங்களோ தொலைவிலிருந்த மரக்கிளைகளில் இலைகளோ அசையவில்லை. அவனுடைய கூந்தலிழைகூட காற்றில் அசையவில்லை.
அவர்கள் அவனை அணுகியபோது குளிர்காற்று வந்து உடலை தொடுவதுபோல் உணர்ந்தான். அவன் தோல் மெய்ப்பு கொண்டது. அவர்கள் அவன் நின்றிருப்பதை அறியவே இல்லை. ஒரு கணம்கூட அவர்களின் விழி அவனை நோக்கவோ உடலில் சிறு மெய்ப்பாடுகூட அவன் பொருட்டு எழவோ இல்லை. அவர்கள் அவனைக் கடந்து அப்பால் சென்றனர். அவன் அவர்கள் இருளில் மறைவது வரை பார்த்து நின்றான். அவர்களிடம் ஏன் வழி கேட்க தோன்றவில்லை என்று அதன் பின்னரே எண்ணினான். திரும்பி சற்றுநேரம் அவர்கள் சென்றமைந்த இருளை நோக்கிக்கொண்டிருந்தான். அவர்களை மெய்யாகவே பார்த்தோமா என்னும் ஐயத்தை அடைந்தான்.
பின்னர் புரவியை திருப்பிச் சென்று மருத்துவநிலைகளைக் கடந்து பதினெட்டாவது மருத்துவநிலையை அடைந்தான். அதன் முகப்பில் பதினெட்டு என்னும் எண் பொறிக்கப்பட்டிருந்த படாஅம் விளக்கொளி பரவி நீர்ப்படலம்போல தெரிந்தது. அதனருகே நின்றிருந்த காவலன் அரைத்துயிலில் தலை தொய்ய தூங்கிக்கொண்டிருந்தான். அவனருகே சென்று துண்டிகன் “காவலரே!” என அழைத்தான். அவன் விழித்துக்கொள்ளவில்லை. “காவலரே” என அவன் மீண்டும் அழைத்தான். ஓசை எழ காவலன் வாயை உறிஞ்சினான். “யார்?” என்று முனகலாக கேட்டான். துண்டிகன் “நான் பீஷ்ம பிதாமகரின் மாணவராகிய வீரசேனரை பார்க்கும் பொருட்டு வந்தேன்” என்றான். காவலன் விழித்தெழுந்து “யார்? யார்?” என்றான்.
“பீஷ்ம பிதாமகரின் மாணவராகிய வீரசேனரை பார்க்கும்பொருட்டு வந்தவன். என் பெயர் துண்டிகன். இது அரசாணை” என்றான். காவலன் “தாங்கள் இங்கு வருவதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்” என்றான். “நான் வரும்போது விழிமூடி துயின்றுகொண்டிருந்தீர்கள்” என்றான் துண்டிகன். “ஆம், துயின்று கொண்டுதான் இருந்தேன். ஆனால்…” என்றபின் அவன் குழம்பி வாயை துடைத்தபடி “இங்கிருந்து அறுபத்துஎட்டாவது படுக்கை. அவர் மிக மிக நோயுற்றிருக்கிறார். இரண்டு நாழிகைக்கு முன்னர்தான் மருத்துவ உதவியாளர் வந்து அவருக்கு மேலும் அகிபீனா அளித்துவிட்டுச் சென்றார். நாளைப் பொழுது கடந்தால்தான் அவர் மீள்வாரா இல்லையா என்று சொல்ல முடியும் என்றார்கள்” என்றான்.
“வீரரே, நான் இங்கே வரும்போது ஏழு பெண்களை பார்த்தேன்” என்று துண்டிகன் சொன்னான். “அவர்கள் நிழலுரு என அசைவிலாது சென்றனர். அவர்கள் எவர்?” காவலன் “எங்கே?” என்றான். துண்டிகன் “இரண்டாவது படுக்கைநிலை அருகே” என்றான். “உளமயக்கு. இங்கே பெண்டிருக்கு நுழைவொப்புதல் இல்லை. களத்திலேயே பெண்டிர் நுழையவியலாது” என்றான் காவலன். “ஆனால் மெய்யாகவே நான் பார்த்தேன். மிகத் தெளிவாக அவர்கள் எழுவரையும் பார்த்தேன்” என்றான் துண்டிகன். காவலன் திரும்பிப்பார்த்து “இது இறப்பின் வெளி. இங்கு உளமயக்குகள் நிகழும்” என்றான். அவன் விழிகள் கலங்கியிருந்தன. நாட்கணக்காக துயில்நீத்தவனின் கண்கள் சேற்றுக்குட்டைபோல் ஆகிவிடுகின்றன. விழிகளுக்கு அடித்தட்டில் படிந்திருப்பவை அனைத்தும் மேலெழுந்து மிதக்கின்றன.
காவலன் தலையசைத்து “பித்துபிடிக்க வைக்கும் உளநிகழ்வுகள் இங்கு நிகழ்கின்றன. ஒவ்வொரு நாளும் விந்தையான கனவுகள்! விழித்திருக்கையில், விழிதிறந்திருக்கையில், வெயில் பொழியும் பகலில்கூட கனவுகள் வருமென்று இங்கு வந்த பின்னர்தான் அறிந்தேன்” என்றான். “இங்கிருந்து என்னை படைப்பிரிவுக்கு மாற்றும்படி கோரினேன். நேரில் சென்று அழுதேன். நெஞ்சில் வேலேந்தி செத்து விழுவது இங்கு அமர்ந்திருப்பதைவிட பலமடங்கு மேலானது. இங்கிருந்தால் இன்னும் சில நாட்களில் நானும் பேயென்று மாறி இங்கு உலாவத் தொடங்கிவிடுவேன்” என்றான். துண்டிகன் அவனுடைய புலம்பல்களை கேட்காமல் மருத்துவநிலைக்குள் செல்ல திரும்பினான்.
“சூதரே, நீங்கள் அந்த எழுவரை பார்த்த இடத்தின் அருகே அரசமைந்தர்களுக்கான கொட்டகை உள்ளது. அங்கே பலர் பெண்டிரை பார்த்திருக்கிறார்கள்” என்றான் காவலன். அவன் நின்று திரும்பி நோக்கினான். “அங்கே விழிகளின் அம்புபட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முலைப்பாலில் மருந்து கலந்து ஊற்றுகிறார்கள். ஒவ்வொருநாளும் அருகிலுள்ள சிற்றூர்களிலிருந்து குடுவைகளில் முலைப்பால் கொண்டுவரப்படுகிறது. அங்கே அந்த முலைப்பாலின் மணம் நிறைந்துள்ளது” என்றான் காவலன். “முலைப்பாலின் மணம் வழியாக அவர்கள் வந்துவிடுகிறார்கள்.” துண்டிகன் “யார்?” என்றான். “அவர்கள்தான்… நீங்கள் பார்த்தவர்கள்” என்றான் காவலன்.
அவனுடைய கண்கள் இரு சிவந்த குமிழிப்படலங்கள்போல் அசைந்தன. “முலைப்பாலை நா மறந்தாலும் கண்கள் மறப்பதில்லை. ஏனென்றால் மனித உடலில் கண்களில் மட்டுமே பால் உள்ளது… வெண்பால்!” அவன் பித்தனேதான் என துண்டிகன் முடிவெடுத்தான். திரும்பி புரவியை காலால் அணைத்து முன்செலுத்தியபோது அவனுடைய விழிகளில் குருதிகலந்த பால் இருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. என்ன பித்து இது என அச்சொற்களை விலக்கினான். “ஆனால் இங்கே இவர்கள் வரும்போது அப்படி இல்லை. இங்கிருப்பவர்களுக்கு அது முன்னரே தெரிந்திருப்பதில்லை. மெய்யாகவே இங்கே வந்துகொண்டிருப்பவர்கள் அவர்களல்ல. ஆம், அவர்கள் வேறு. அவர்கள் இதை அறிந்திருப்பதில்லை” என காவலன் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதை கேட்டபடி அவன் உள்ளே சென்றான்.