தமிழகப் பொருளியல் -கடிதம்

குஜராத் – தமிழ்நாடு – வளர்ச்சியும் முன்னேற்றமும் – ஓர் ஒப்பீடு.

கலையரசனின் கட்டுரை- பாலா

 

அன்பின் ஜெ..

பின்னூட்டங்களுக்கு நன்றி.

தமிழகப்பொருளியல்- கடிதங்கள்

ஜகதீஷ் பகவதி, எம்.ஐ.டியில் டாக்டரேட். உலகமயமாக்கம், சுதந்திரச் சந்தைக் கோட்பாடுகளில் உலகில் மிகவும் போற்றப்படும் பொருளியல் அறிஞர். அவர் மனைவி பத்மா தேசாயும் ஒரு புகழ்பெற்ற பொருளியல் அறிஞர். இருவரும் இணைந்து, 1970 ஆம் ஆண்டு, இந்தியத் தொழிற்துறைக்கான திட்டமிடல் என்னும் முக்கியமான புத்தகத்தை எழுதினார்கள்.

அமர்த்தியா சென், கேம்ப்ரிட்ஜில் டாக்டரேட். மக்கள் நலப் பொருளியல், பொருளாதார, சமூக நீதிப் பொருளியல் துறைகளில் உலகின் முக்கியமான அறிஞர். வளரும் நாடுகளுக்கான மக்கள் நலக் குறியீடுகள் என உலக நாடுகள் இன்று உபயோகிக்கும் குறீயீடுகள் இவர் உருவாக்கியவை. 1998 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்.

ஜீன் ட்ரீஸ், பெல்ஜியர். இந்தியராக மாறியவர். நடைமுறை பொருளியல் அறிஞர். ஒரு சிறு விவசாயியின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை அறிந்து கொள்ள, சில ஆண்டுகள், இரண்டு ஏக்கர் நிலம், கால்நடைகளுடன் வாழ்ந்தவர். ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை, இன்னொரு காந்தியரான அருணா ராயுடன் உருவாக்கியவர்.

அர்விந்த் பனகாரியா பிரினிசிடன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம். India – The emerging Giant” என்னும் முக்கியமான புத்தகத்தை எழுதியவர். திட்டக் கமிஷனின் இன்றைய வடிவமான, நிதி ஆயோக்கின் தலைவராக இருந்தவர்.

கலையரசன், ஜவஹ்ர்லால் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மால்கம் ஆதிசேஷய்யா துவங்கிய சென்னை வளர்ச்சியியல் கழகத்தில் உதவிப் பேராசரியராக இருப்பவர்.

நான் கொஞ்சம் சுருக்கி, தமிழாக்கம் செய்த இந்தக் கட்டுரை – முதல் நால்வருக்கிடையேயான பொருளியல் விவாதங்களுக்குள், ஒரு புதுக் கோணத்தை வைத்து ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறார் கலையரசன். இதன் தரவுகள், இந்தியப் புள்ளியியல் கழகம் கடந்த 70 ஆண்டுகளாக, தவறாமல் சேகரித்து வெளியிடுபவை. இந்த வாதம் கிட்டத்தட்ட 33 ரெஃபரன்ஸ்களை உபயோகித்து இருக்கிறது.

“Dravidian Years – Welfare and Politics in Tamilnadu” புத்தகத்தை எழுதிய எஸ்.நாரயண், ஐஏஎஸ் அதிகாரியாகத் தன் வாழ்க்கையை 1965 ல் தமிழகத்தில் துவங்கியவர். 32 ஆண்டுகள் தமிழக நிர்வாகத் துறையில் பணியாற்றியவர் – காங்கிரஸின் இறுதிக் காலம் துவங்கி, திராவிட இயக்கத்தின் 4 முதல்வர்களிடமும் பணியாற்றியவர். திராவிட இயக்கத்தினால், ஒதுக்கப்பட்ட ஒரு தரப்பைச் சார்ந்தவர். கிட்ட்த்தட்ட தலைமைச் செயலர் ரேங்கில், தமிழகத்தில் இருந்து, தில்லி சென்றவர்

அமர்த்தியா சென், ஜீன் ட்ரீஸ், கலையரசன், நாரயண் – இந்த நால்வரும், திராவிட இயக்கத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள்.

கட்டுரை, சமூகம் முன்னேற, பொருளாதார வளர்ச்சி மட்டுமே போதாது. கூடவே மக்கள் நலத்திட்டங்களும் வகுத்துச் செயல்படுத்தப்பட வேண்டும் என்னும் கருதுகோளை முன்வைக்கிறது. அதற்கான வெற்றிகரமான எடுத்துக்காட்டாக, பல ஆண்டுகளின் தரவுகளுடன், தமிழகத்தை முன்வைக்கிறது.

(மிக முக்கியமாக, இந்தக் கட்டுரை, தமிழகப் பொருளியல் வளர்ச்சி, ஊழல், சூழல் மாசு போன்றவற்றைப் பேசவில்லை. எல்லாவற்றையும் ஒரு கட்டுரையில் பேசுவது சாத்தியமல்ல – அவற்றைத் தரவுகளுடன், இன்னொரு கட்டுரையில் பேசலாம். பேச வேண்டும். எனவே இந்தக் கட்டுரையில், அந்த வாதங்கள் நுழைவது, கட்டுரையின் நோக்கம் நீர்த்துப் போகச் செய்யும். எனவே பொருளியல் வளர்ச்சி வாதங்களுக்கு நான் பதில் சொல்லவில்லை.)

எதிர்வினைகள், இந்தத் தரவுகள் தவறு என்றோ, அல்லது தரவுகள் மூலம் எய்தப் படும் முடிவுகள் தவறு என்றோ ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டிருக்கலாம்.

1982 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சத்துணவுத் திட்டம், 1993 முதல் இந்தியாவின் மிக முக்கிய மக்கள் நலத் திட்டம். தமிழகத்தில் துவங்கப்பட்ட டாக்டர்.முத்துலக்‌ஷ்மி ரெட்டி கர்ப்பிணிப்பெண்கள் திட்டம் இன்று இந்திய அரசின் மக்கள் நலத் திட்டம். பெண்களுக்கான இலவச நாப்கின்கள், சைக்கிள், பஸ் பாஸ், புத்தகம் சீருடை, லேப்டாப் அனைத்துமே இன்று பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள். இன்று இந்தியாவில் தமிழகமும், கேரளமும் மக்கள் தொகைப் பெருக்க அளவான fertility rate ல், 1.6 அளவை எட்டி விட்டன. இனிமேல் இந்த மாநிலங்களின் மக்கள் தொகை, குறையத் துவங்கும். துப்பாக்கி முனையில் ஒரு குழந்தைத் திட்டத்தை நிறைவேற்றிய சீனாவின் fertility rate ம் 1.6 தான். இதன் முக்கிய காரணம், பள்ளியிறுதிப் படிப்பை முடிக்கும் தமிழ்ப் பெண்களில், 44% கல்லூரிக்குச் செல்கிறார்கள். இந்திய அளவு அதில் பாதி. உலக சராசரி 34%. (https://www.youtube.com/watch?v=YjzhA52Fw8s&t=4s )

 

பசுமைப்புரட்சியின் விளைவாக, அதிகமாக உற்பத்தியாகும் தானியங்களை, கொள்முதல் செய்து, உற்பத்திக் காலத்தில் விலை வீழ்ச்சி ஏற்படாமல் காக்க, இந்திய உணவுக்கழகம் துவங்கப்பட்டது. அதே மாதிரி, இந்திய மாநிலங்களில், தமிழகத்தில்தான் முதலில் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துவங்கப்பட்டது. மாநிலத்திட்டங்களை வகுக்க, மாநிலங்களில் முதல் முறையாக திராவிட ஆட்சியில் தான் திட்டக் கமிஷன் துவங்கப்பட்டது. மக்களுக்கான உணவுப்பொருட்கள் முறையாக வழங்கப்பட, கிராமத்துக்கொரு ரேஷன் கடை எனத் திறந்து, அதை வெற்றிகரமாக நடத்துவது பெரும் சாதனை என, அரசு அதிகாரியான நாரயண் மட்டும் சொல்லவில்லை. அமர்த்தியா சென்னும், ட்ரீஸூம் சொல்கிறார்கள் – மற்ற மாநிலங்களின் தரவுகளோடு ஒப்பிட்டு. தமிழகத்தின் Universal Public Distribution System, மற்ற மாநிலங்களின் Targetted Public Distribution system விட நடைமுறையில் வெற்றிகரமாக நடக்கும் ஒரு மாதிரி என அமர்த்தியா சென்னின் ஆய்வுகள் சொல்கின்றன.

தமிழக மருந்து கொள்முதல் கழகம், உலகின் முன்மாதிரியான ஒரு நிறுவனம் என உலகச் சுகாதார நிறுவனம் சொல்கிறது. தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு என்றால் என்ன என அறிந்து கொள்ள, அடுத்த முறை திருநெல்வேலி செல்லும் போது, கடலூர் சீனு, நமது நண்பர் மருத்துவர்.ராமானுஜம் அவர்களிடம் ஒரு அரை மணி நேரம் செலவு செய்ய சிபாரிசு செய்கிறேன்.

தமிழக உறுப்பு மாற்றுச் சிகிச்சைத் திட்டமும், செயல்பாடுகளும், சட்டமும் மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டது. இன்று இந்தியாவின் உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளில், தமிழகம் முண்ணனியில் உள்ள மாநிலம் என்பதும், இந்தச் சட்டம், 2008 ல் உருவாக்கப்பட்ட்து என்பது தெரிந்திருப்பது அவசியம்.

தகவல் தொடர்புத் துறை மேலெழுந்து வரும் போது, அதற்கென ஒரு கொள்கையை, முதன் முதலில் உருவாக்கியது தமிழகம்தான். தகவல் அறியும் சட்டத்தையும் முதன் முதலில் நடைமுறைப்படுத்தியது தமிழகம்தான். மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கு நம்பிகளுக்கும் வாரியங்கள் அமைத்து, அரசு வேலைவாய்ப்பையும் முதன் முதலில் அளித்தது தமிழகம்தான். இதைத் தான், வளர்ச்சிப் பொருளியல் நிபுணர்கள் inclusive growth and development என்கிறார்கள்.

இந்தக் கட்டுரை, தேசிய ஊடகங்களில் இன்று அதிகம் காணப்படும் கட்டுரை என்னும் எதிர்வினை வாக்கியம் தவறு. இது ஊடகக் கட்டுரை அல்ல. ஒரு பொருளாதார ஆய்வுப் பத்திரிகையில் வந்த ஆய்வுக் கட்டுரை. இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். (தேசிய ஊடகங்களில் அப்ப்டி வந்துள்ள கட்டுரைகளின் லின்க் தர வேண்டுகிறேன்)

அரசு என்றால் என்ன என்ற ஆனா ஆவன்னா கூட தெரியாத ஒரு கழகம்,ஆட்சியை பிடிக்கும் வரலாற்று பிழை நேர்கிறது?. – என்னும் வாக்கியத்தை எழுதத் தரவுகள் வேண்டும். அல்லது, அந்தத் துறையில் பெரும் அனுபவம் வேண்டும்.

ஒரு முக்கியமான ஆய்வுக்கட்டுரையை, வடிவேலு டயலாக்கை வைத்தே வீழ்த்தி விட முடியும் என்னும் தன்னம்பிக்கையை வியக்கிறேன். அதே பாஷையில், “இப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க சூனா பானா” என வாழ்த்தி விடைபெறுகிறேன்.

அன்புடன்

பாலா.

முந்தைய கட்டுரைபாடநூல்கள் -ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைடால்ஸ்டாய் நிச்சயம் இரு சுவையானவர்