ஜெயசூர்யா -மம்மூட்டி- மோகன்லால்

மலையாள மிமிக்ரி நிகழ்ச்சிகள், நகைச்சுவை துணுக்குநிகழ்ச்சிகளை நான் பெரும்பாலான இரவுகளில் சற்றுநேரம் பார்ப்பதுண்டு. பெரும்பாலும் மிகத்தரமான நகைச்சுவை அவற்றிலிருக்கும். கேரள அரசியல், சினிமா, சமூகச்சூழல் கொஞ்சம் தெரிந்தால் வெடித்துச் சிரிக்கலாம். முன்னர் கோட்டயம் நஸீர். இப்போது பிஷாரடி நட்சத்திரங்கள்.

கேரள நடிகர்களில் பலர் மிமிக்ரி கலைஞர்களாக இருந்தவர்கள். ஜெயராம், கலாபவன் மணி, திலீப், ஜயசூர்யா, சுராஜ் வெஞ்ஞாறமூடு போன்றவர்கள் அதில் நட்சத்திரங்களாக இருந்து திரைக்குச் சென்றவர்கள். இப்போதும் அவர்கள் மேடைகளில் மிமிக்ரி நிகழ்ச்சிகளைச் செய்கிறார்கள். அங்கே மேடைநிகழ்ச்சிகள் நடிகர்களின் முக்கியமான வருவாய்களில் ஒன்று

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜெயசூர்யா மம்மூட்டி மோகன்லால் திலீப் சுரேஷ்கோபி ஆகியோரை நக்கலடிக்கிறார். அவர்கள் சினிமாப் படப்பிடிப்பில் நடந்துகொள்ளும் முறையை. மம்மூட்டியின் வெற்றுத்தோரணை, மோகன்லாலின் பெண் பித்து, சுரேஷ் கோபியின் அசட்டுத்தனம், திலீபின் வியாபார புத்தி என நுட்பமான நகைச்சுவை. இதை இன்றைக்கு கேரளத்துக்கு வெளியே செய்யவே முடியாது. முதலில் ரசிகர்கள் அடிக்க வருவார்கள். நடிகர்களும் விரும்ப மாட்டார்கள்

மம்மூட்டி சொத்துவாங்குவது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். மோகன்லால் நடிக்கக்கூப்பிடும்போது எவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார், திலீப் எவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் முக்கியமான குறிப்புணர்த்தல்கள். மோகன்லாலின் கண்கள் பெண்களுக்காக அலைமோதிக்கொண்டே இருக்கின்றன. பெண்ணைப்பார்க்கையில் கண்கள் விரிய மலர்கிறார். மம்மூட்டிக்கு நிரந்தரமான முகச்சுளிப்பு.  ‘ஏதா ஈ ஏப்ராஸி?” என வாயை தூக்கிக்கொண்டு கேட்கிறார். திலீப்பின் மனம் சினிமாவிலேயே இல்லை

ஜெயசூர்யா நல்ல நடிகன்

*

கொச்சின் கலாபவன் கேரள மிமிக்ரி கலையில் மிகப்பெரிய அலையை உருவாக்கிய ஓர் அமைப்பு. அதிலிருந்துதான் முக்கியமான கலைஞர்கள் பலர் வந்திருக்கிறார்கள். லால் [ஒழிமுறி] கூட அதிலிருந்து வந்தவர்கள். அதிலிருந்து வந்த  முக்கியமான கலைஞர்கள் சேர்ந்து நிகழ்த்தும் இந்த நிகழ்ச்சியும் சுவாரசியமானது

பாகுபலி பற்றிய கேள்விக்கு உம்மன்சாண்டி சொல்லும் பதிலில் உள்ள அரசியல்நஞ்சு கேரளத்துக்கே உரிய ஒர் ஊடகத்துணிச்சல்

முந்தைய கட்டுரைதல்ஸ்தோய் பற்றி…
அடுத்த கட்டுரைவேலைபூதம்