நூல்கள்:கடிதங்கள்

அன்புள்ள ஜெ , தங்களுடைய மாடன் மோட்சம் கதையை இப்போது தான் படித்தேன் . என் நண்பர் அதை நீங்கள் இருபது வருடங்களுக்கு முன்பே அதை எழுதி விட்டதாக சொன்னார் .மிகத் தெளிவான கதை. என்னால் ஒன்றை மட்டும் அந்த கதையில் புரிந்து கொள்ள முடியவில்லை . மற்றவர்கள் அந்த கதையை எழுதி இருந்தால் மாடன் கடைசியில் பயந்து கோவிலை விட்டே ஓடி விட்டது என்று எழுதி இருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். ஆனால் நீங்கள் மாடன் மந்திரத்தால் கட்டுண்டு விட்டதாக எழுதி இருந்தீர்கள். என்னுடைய நண்பர் நீங்கள் இந்துவத்தை இப்படிதான் வெளிப்படுத்துவீர்கள் என்றார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. உங்களுடைய நம்பிக்கைகள் சார்ந்து எந்த வித உள்நோக்கமும் இல்லாமல் இயல்பாக எழுதிய வார்த்தைகள் என்றே எனக்கு படுகிறது. இது பற்றி தங்களுடைய கருத்து என்ன ?
கோலப்பன் .


ஒரு கதையை வாசகர்கள் விரும்பும் கோணத்தில் விளக்கிக்கொள்வது சாதாரணமாக நடப்பதுதான். அதில் எழுத்தாளர் கருத்துச்சொல்ல ஏதும் இல்லை. ஆனால் மாடன் மோட்சம் நேரடியான ஒரு சமூக உண்மையைச் சொல்கிறது. எழுபதுகள் முதல் நம் நாட்ட்டில் வேகம் பிடித்து இன்று அனேகமாக முஇவடையும் கடத்தில் உள்ள பெருஇலையாக்கம் என்ற செயல்பாடை அது குறிபிடுகிறது. சிறுதெய்வங்கள் பெருமதங்களுக்குள் ஒணுசென்று ‘அமர’ச்செயபடுவதன் சித்திரமே அக்கதையில் உள்ளது. முனைவர் அ.கா.பெருமாள் போன்றவர்கள் மிக விரிவாகவே இதை ஆய்வுசெய்து எழுதியிருக்கிறார்கள். நம்முடைய மாடசாமிகள் எல்லாமே ‘அருள்மிகு’ க்களாக ஆகி சைவ உணவு சாப்ப்பிட்டுக்கொண்டுதானே இருக்கின்றன– என் குலதெய்வம் உட்பட?
ஜெ

****

அன்புள்ள ஜெயமோகன்,
 
உங்கள் வயலார் ராமவர்மாவைப் பற்றிய பதிவு என்னை மிகவும் பாதித்துள்ளது. அது பற்றி நானும் என் தரப்பில் பதிவிட்டுள்ளேன், பார்க்கவும் http://dondu.blogspot.com/2009/01/blog-post_04.html
 
அன்புடன்,
டோண்டு ராகவன்
**
அன்புள்ள ஜெயமோகனுக்கு ..,
                                                         நேற்று ரப்பர் நாவலை படித்து முடித்தேன். இதன் பாத்திர , சூழல் , மன ; அதன் ஊடாக கதையை நகர்த்தி செல்லும் extradinary style  கண்டு நிச்சயமாக ஆச்சர்யம். எப்போது இதை எழுதி இருகிறீர்கள் என்று புத்தகத்தை பார்த்தேன். அது 1990 என்று போட்டிருந்தது. இன்னும் இருபது வருடம் கழித்து படித்திருந்தாலும் அது புதிதான நடையாகவே எனக்கு தோன்றி இருக்கும்.   படிக்கிறவரை உள் இழுக்கவைக்கிற , பிரமிக்க வைக்கிற சூட்சுமம் என்கிறந்து சார் கண்டுபுடிசீங்க.காலம் உங்களை கொஞ்சும்.  ஆரோக்கிய மான வாழ்வு உங்களுக்கு சாத்தியபட ப்ராத்திகிறேன்  அதாவது (குறைந்தது)  2062  april 22 மேல். அது வரை எழுதி கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆசையுடன்  .    


dineshnallasivam
அன்புள்ள தினேஷ் நல்ல சிவம்

ரப்பர் குறித்த உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. அந்நாவலை நான் பிரசுரமாவதற்கும் மூன்றுவருடம் முன்பே எழுதிவிட்டேன். இன்றைய என் எழுத்தின் பாணி அதில் உள்ளது என்றும் ஒரு நாவலின் விரிவை அடைய எத்தனித்த ஒரு நல்ல ஆக்கம் என்றும் அதை இன்று எண்ணுகிறேன் . குளம்கோரி, திரேஸ் இருவரும் எனக்குப் பிடித்தமான கதாபாத்திரங்கள்
ஜெ.
***
அன்புள்ள ஜெ
நேற்றுதான் உங்கள் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூலை படித்து முடித்தேன். நான் பத்துவருடங்களாக நவீனத்தமிழிலக்கியம் படித்து வருகிறேன். ஆனால் எனக்கே அது முக்கியமான ஓர் அறிமுகமாக இருந்தது. இலக்கியத்தின் சாராம்சமான அனுபவத்தை அடைவதற்கு அது எனக்கு உதவியது. அதில் உள்ள விரிவான நூல்பட்டியல்களை வைத்துக்கொண்டு இந்தவருடம் சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கலாம் என்று எண்ணுகிறேன். கலைச்சொல் அறிமுகம் மிகச்சிறப்பானது. மொத்தமாகச் சொன்னால் தமிழ் இலக்கியத்தைப்பற்றிய இபடிப்பட்ட ஒரு முழுமையான அறிமுக நூலே இதுவரை வந்தது இல்லை. இந்த நூலைப்பற்றி ஏன் இதுவரை எரிய அளவிலான அறிமுகம் நிகழவில்லை என்று ஆச்சரியப்பட்டேன். நன்றி
சண்முகம்
சென்னை 
முந்தைய கட்டுரைசாங்கிய யோகம் (60 – 72) : அலையறியா கடல்
அடுத்த கட்டுரைஇந்திய சிந்தனை மரபில் குறள் 5