அம்பேத்கரும் இலக்கியமும்

ambe

அன்புள்ள ஜெ

இந்திய இலக்கியத்தில் அம்பேத்கரின் தாக்கம் என்ற தலைப்பில் ஒரு கந்தரகோலமான பல்கலைக்கழக கருத்தரங்கு பற்றி படிக்க நேர்ந்தது.

நீங்கள் நவீன இந்திய இலக்கியத்தில் காந்தியத்தின் தாக்கம் பற்றி பேசியிருக்கிறீர்கள். அதுபோல அம்பேத்கருக்கும் ஒரு இடமுள்ளது என்று கருதுகிறீர்களா?

நன்றி
மதுசூதனன் சம்பத்

pk

பி கே பாலகிருஷ்ணன்

அன்புள்ள மதுசூதன் சம்பத்

இது ஒரு சிக்கலான கேள்வி. ஏனென்றால் அம்பேத்கர் ஒரு குறியீடாக மட்டுமே இன்று இருக்கிறார். தலித்விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக. தலித்துக்கள் அவரை தங்கள் பதாகையாகக் கொள்கிறார்கள். தலித் அல்லாதவர்களிலும் சாதிக்கு எதிரான எண்ணம்கொண்டவர்களுக்கு அவர் ஏற்கத்தக்க அடையாளம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அவர்மேல் ஒரு மதிப்பை வெளிப்படுத்துவது  ஒரு வகை அரசியல்சரிநிலை மட்டுமே.

அடையாளமாக அம்பேத்கரைக் கொண்டவர்கள், சாதியொழிப்பு பற்றிய சில எளிய வரிகளினூடாக மட்டுமே அம்பேத்கரை அறிந்தவர்கள் அவரை தங்கள் முன்னோடிச் சிந்தனையாளர்களாகச் சொல்வதுண்டு. இந்தியாவில் தலித் இலக்கியத்தை உருவாக்கிய அனைவருமே அவரையே தங்கள் அடையாளமாகச் சொல்கிறார்கள். அம்பேத்கரின் இலக்கியச் செல்வாக்கு என்னும்போது எப்போதும் அது மட்டுமே சுட்டப்படுகிறது.

அத்துடன் இந்தியாவின் சாதிய எதிர்ப்பு, ஆசார மறுப்புச் சிந்தனையாளர்களின் ஒரு வரிசையில் அவரையும் சேர்த்துக்கொள்வதும் இங்கே எழுதப்படும் அனைத்து சாதியெதிர்ப்பு, ஆசாரமறுப்பு நிலைபாடு கொண்ட எழுத்துக்களுடனும் அவரையும் இயந்திரத்தனமாகச் சேர்த்துக்கொள்வதும் ஆய்வுச்சூழலில் நிகழ்கிறது.

அவர்களால் அவ்வளவுதான் செய்ய இயலும். படைப்பில் மிதந்துகிடக்கும் அரசியலை மட்டுமே காண்பவர்கள் அவர்கள். அதற்கப்பால் படைப்பின் உருவாக்கத்திலுள்ள அழகியல், பண்பாட்டு, உளவியல் கூறுகளைப்பற்றி அவர்கள் அறிந்திருப்பதில்லை. அவர்களிடம் அப்படிச்சில உண்டு என்று சொல்லிப் புரியவைக்கவும் இயலாது.

அம்பேத்கர் அவருடைய பெரிய எழுத்துப்பரப்பில் இலக்கிய ஆக்கங்களைப் பற்றி குறைவாகவே பேசியிருக்கிறார். தொன்மையான இலக்கியங்களை வாசிக்கையில்கூட அவற்றிலிருந்து சமூகவியல் கருதுகோள்களை உருவாக்கிக் கொள்ளவே முயல்கிறார். அவர் எழுதியவை பெரும்பாலும் நேரடியான களப்பணியின் ஒரு பகுதியாகவே என்னும்போது அதுவே இயல்பானது

அம்பேத்கரின் எழுத்துக்களில் இலக்கியத்துடன் ஊடாடும், இலக்கியப் போக்குகளை உருவாக்கும் தன்மைகொண்ட தளங்கள் என்னென்ன? நான் அவற்றை மூன்றாகப் பிரிப்பேன்

அ. அவர் இந்திய மரபிலக்கியங்களை புறவயமான சமூகவியல் கண்ணோட்டத்துடன் நோக்கி இந்தியச் சமூக உருவாக்கம் நிகழ்ந்ததைப்பற்றிய ஒரு முன்வரைவை உருவாக்குகிறார். அது இலக்கியவாதிகளுக்கு ஆழமான சில தரிசனங்களை அளிக்கவல்லது

drna
டி ஆர் நாகராஜ்

ஆ. அம்பேத்கர் நவீனத்துவத்தின் முகம். நவீனத்துவத்தின் முகப்படையாளங்களான மையப்படுத்தல், அறிவியல் மயமாதல், தனிமனிதநோக்கு ஆகியவற்றை தன் எழுத்துக்களில் தீவிரமாக முன்வைத்தவர். அவருடைய இந்தியா தொழில்மயமான, மையஆட்சிகொண்ட, அறிவியல்நோக்கு கொண்ட விடுதலைபெற்ற தனிமனிதர்களால் ஆன ஒன்று. இது எழுத்தாளர்களில் செல்வாக்கு செலுத்தும் ஒரு வாழ்க்கைக்கோணம்

இ. தன் வாழ்நாளின் இறுதியில் அவர் சென்று சேர்ந்த பௌத்தம் ஒரு முக்கியமான தரிசனம். அவர் தொடக்கமுதலே உறுதியான அறவியல்நம்பிக்கை கொண்டிருந்தவர். அந்த அறநம்பிக்கையை பேரறமாக மகாதம்மமாக அவர் மாற்றிக்கொண்டார். புத்தரும் அவருடைய தம்மமும் என்னும் பெருநூல் கடவுள், நரகம், தண்டனைகள் இல்லாத ஓர் அறவியலுக்கான வழிகளை முன்வைப்பது. பிரபஞ்சப்பேரொழுங்குடன் ஒத்திசைவதன் அறத்தை அவர் முன்வைக்கிறார் என சுருக்கமாகச் சொல்லலாம். அவருடைய நவீனபௌத்தம் அதையே சாரமாகக் கொண்டது

நான் வாசித்தவரை மேலே சொல்லப்பட்ட மூன்றுநிலைகளிலும் அம்பேத்கரின் செல்வாக்கால் உருவாகி வந்த படைப்பாளிகள் எவரும் இல்லை. அவ்வகையில் இந்திய இலக்கியத்தில் அம்பேத்கரின் செல்வாக்கு என்பது மிகமிகக்குறைவே. அவர் சாதியஎதிர்ப்பாளர் என்னும் ஒற்றைவரி வரையறை அவருடைய தரிசனங்களை முற்றாகவே மறைத்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். எந்தப்படைப்பூக்கமும் இல்லாத வெற்றுக் கோட்பாட்டாளர்களும், அரசியல்கூச்சலிடுபவர்களும் மட்டுமே அவர் பெயரை மிகையாகக் கூவுகிறார்கள். ஒரு படைப்பாளி அவர்களின் கூச்சல்களை மீறிச்சென்று அந்தரங்கமாக அம்பேத்கரைக் கண்டடைவது மிகமிகக் கடினம்.

படைப்பாளி இந்த அரசியல்கூச்சலாளர்கள் சொல்லும் பொதுவழிகளைக் கடந்து தனக்குரியவகையில் அம்பேத்கரைக் கண்டடைந்தால் அவனை எள்ளி நகையாடி வசைபாடி ஓட ஓடத் துரத்திவிடுவார்கள் இவர்கள். இன்று அம்பேத்கர் மேடையில் முன்வைக்கப்படும் ஒரு முகம். அந்தமுகம் இலக்கிய ஆக்கத்தை தூண்டுவதில்லை. அந்தரங்கமாக தன் ஆழத்தில் ஒருவன் அவரைக் கண்டடைவதே இலக்கியமாக ஆகும். காந்தி மீண்டும் மீண்டும் அவ்வாறு கண்டடையப்படுகிறார்.

தேவனூரு மகாதேவா
தேவனூரு மகாதேவா

ஆகவே அம்பேத்கரின் ஆக்கங்களை ஊன்றிப்படித்த தமிழ்ப்படைப்பாளிகள், அவரைப்பற்றி குறிப்பிடத்தக்க எதையேனும் எழுதியவர்கள் அனேகமாக எவருமில்லை. அவருடைய கருத்துக்களில் இலக்கியப்படைப்பை உருவாக்குமளவுக்கு முழுமைகொண்டவை, தரிசனம் என்று சொல்லத்தக்கவை இங்கே பேசப்படவே இல்லை.நான் அதற்கு ஒரு முயற்சி நிகழ்த்தினேன். என்றாவது மேலும் விரிவாகச் சாத்தியமாகலாம்

மேலே சொன்ன மூன்றில் முதல் வரலாற்றுச் சமூகவியல் நோக்கு அம்பேத்கரில் தொடக்கநிலையிலேயே இருந்தது. அதன்பின் எம்.என்.ராய், டி.டி.கோசாம்பி முதல் தொடங்கிய ஓர் இடதுசாரி வரலாற்று- சமூகவியல் ஆய்வாளர்கள் அவருடைய அந்நோக்கை பலவகையில் விரிவாக்கி முன்னெடுத்தனர். அதற்குப்பல குறைபாடுகள் உண்டு. அது எளிமைப்படுத்தியும் பொதுமைப்படுத்தியும் நடைமுறை முடிவுகளை வந்தடையும் நோக்கம் கொண்டது. அத்தகைய எளிமைப்படுத்தல்கள் இலக்கியத்துக்கு எதிரானவை. ஆனால் அது உருவாக்கும் பொதுத்தரிசனம் இந்தியவரலாற்றை, தொன்மப்பெருக்கை, சமூகக்கட்டமைப்பை புரிந்துகொள்ள உதவும் ஒரு ஆய்வுக்கருவி.

நான் என் நாவல்களில் இந்த ஆய்வுமுறையை முடிந்தவரை கவனத்துடன் பயன்படுத்தியிருக்கிறேன்.வெண்முரசு வரை அதை வாசகர்கள் காணமுடியும். இந்திய தொல்நூல்களின் சமூகவியல் உள்ளடக்கத்தை கண்டடையும்பொருட்டு அம்பேத்கரின் நூல்களை தொடர்ச்சியாக வாசித்தும் வருகிறேன். இந்திய –இந்து மரபை நான் முழுமையாக அறிய உதவும் முக்கியமான ஆசிரியர்களில் ஒருவராகவே அம்பேத்கரைக் காண்கிறேன். அது நித்யசைதன்ய யதியின் குருகுலத்திற்கும் ஏற்புள்ளதே.

அம்பேத்கரின் அறவியலில்- அதன் உச்சமான நவபௌத்ததரிசனத்தில் எனக்கு ஈடுபாடுண்டு. நாராயணகுருவின் அத்வைத இயக்கம் அதனுடன் நெருக்கமான உரையாடல் உடையதாகவே என்றுமிருந்தது. அம்பேத்கரை ஒரு நவீனகால போதிசத்வர் என்று சொல்ல எனக்குத் தயக்கமில்லை. அதைச்சார்ந்து எழுதியுமிருக்கிறேன்

அம்பேத்கரிலுள்ள நவீனத்துவக்கூறுகள் மேல் எனக்கு அவநம்பிக்கை உண்டு. மையப்படுத்தல், நிரூபணவாத அறிவியல், தனிமனிதவாதம் போன்றவை இந்தியசூழலில் ஆற்றும் பெரும்பணியை அறிவேன் என்றாலும், அதை மறுக்கவில்லை என்றாலும், என் இலக்கியப்படைப்புகள் வழியாக நான் தேடும் அகஅறிதலில் அவை தடையாக ஆகக்கூடியவை. அவற்றிலுள்ள எளிமைப்படுத்தல், இற்றைப்படுத்தல் மேல் எனக்கு மறுப்பு உண்டு

kovilan
கோவிலன்

மிகையுணர்ச்சி வெளிப்பாடுகள், போலிப்புகழுரைகள் ஆகியவற்றுக்கு அப்பால் இவ்வகையில் தெளிவான ஒரு புரிதலை எவரேனும் அம்பேத்கர்மேல் முன்வைத்திருக்கிறார்களா? இந்திய இலக்கியத்தில் அம்பேத்கரின் நேரடிச்செல்வாக்குள்ள சிந்தனையாளர் என்றால் மலையாளத்தில் பி.கே.பாலகிருஷ்ணனைச் சொல்லலாம். அவர் நாராயணகுருவின் வழிவந்தவரும்கூட. கன்னடத்தில் டி.ஆ.நாகராஜ்.   புனைவிலக்கியவாதி என்றால் மலையாளத்தில் கோவிலன். [தட்டகம் நாவல்]  கன்னடத்தில் தேவனூரு மகாதேவ. [குசுமபாலே நாவல்] இவர்கள் வெறுமே தலித் வாழ்க்கையை எழுதியவர்களோ, தலித் எதிர்ப்பைப் பதிவுசெய்தவர்களோ அல்ல. அடித்தளத்திலிருந்து வேறு ஒரு புனைவுமொழியை உருவாக்கியவர்கள், வேறொரு வரலாற்றுச்சித்திரத்தை முன்வைத்தவர்கள்

ஜெ

முந்தைய கட்டுரைசெவ்வல்லி -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-71