திராவிட இயக்கம், ஈவேரா

evr

வணக்கம் ஜெ,

ஜெ.பி.பி.மோரே (J.B.P.More) என்ற ஆய்வாளர் எழுதிய ”திராவிட நீதிக்கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்” நூலை சமீபத்தில் வாசித்தேன். தமிழகத்தில் ஆரிய-திராவிட இனவாதக் கருத்து, பிராமண எதிர்ப்பு போன்றவைகளை பேசியுள்ள அவர், ‘மொழி’ அடிப்படையில் விவரித்திருக்கிறார். அதில் திராவிட இனவாதக் கருத்தும், பிராமண எதிர்ப்பும் தமிழர்கள் மத்தியில் மட்டுமே செல்வாக்கு பெற்றிருந்தன என்கிறார். தென்னிந்திய மொழிகள் பேசும் அனைவரும் திராவிடர் என்றபோதிலும் தமிழரல்லாதவர்கள் மத்தியில் இக்கருத்துகள் செல்வாக்கு பெறவில்லை. 1917 -களிலேயே தெலுங்கு மொழி விழிப்புணர்ச்சி, தனி ஆந்திர மாநில கோரிக்கை போன்றவை சாதி பேதங்கள் கடந்த ஒன்றாக இருந்தது. தமிழர்கள் மத்தியிலும் ஒரு சிலரால் தனித்தமிழ் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் அது தமிழர்களிடையே வரவேற்பை பெறவில்லை.

இங்குள்ள பிராமணரல்லாத தமிழர்கள் தங்களையும், அதேபோல் பிறமொழி பேசும் பிராமணரல்லாதோரையும் (தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட) ‘திராவிடர்’ என்றே கருதினர். மாறாக தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தங்களை திராவிடர்களாக அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை என்கிறார் ஆசிரியர். நீதிக்கட்சியில் செல்வாக்கோடு இருந்தவர்கள் பெரும்பாலும் தெலுங்கு ஜமீன்தார்களே. பிற்காலத்தில் அதிலிருந்து வந்த ஈ.வெ.ரா-வும் தமிழர்களிடையே திராவிட உணர்வைத் தீவிரப்படுத்தினர்.

வி.கீதா, எஸ்.வி.ராஜதுரை, எம்.எஸ்.எஸ்.பாண்டியன் போன்ற திராவிடமைய ஆய்வாளர்கள் ஈ.வெ.ரா-வை மொழி அடிப்படையிலோ, அவருக்கும் முதலாளிகளுக்கும் உள்ள உறவுகளையோ தங்களுடைய ஆய்வில் சொல்லாமல், மறைத்தும், புறக்கணித்தும் இருக்கிறார்கள் என்கிறார்.

எப்படியிருப்பினும் இந்த போலி திராவிட இனவாதக் கருத்தியலில் சிக்கி பெருமளவு பாதித்தவர்கள் தமிழர்களே.

நன்றி.

விவேக்.

cn

அன்புள்ள விவேக்,

திராவிட இயக்கம் ஒரு பரப்பியக்கம். [பாப்புலிஸ்ட் இயக்கம்] பரப்பியக்கங்கள் பொதுவாகச் சூழலில் ஏற்கனவே உள்ள பண்பாட்டுக்கூறுகளை தங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளும். எதிரிகளைக் கட்டமைத்து வெறுப்பை உருவாக்கும். அந்த வெறுப்பு எதிர்வெறுப்பை உருவாக்க அதை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்ளும்

திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் நிலப்பிரபுத்துவ காலத்தின் கலாச்சார மேலாண்மையை கொண்டிருந்த பிராமணர்களுக்கு எதிரான பிராமணரல்லா உயர்சாதியினரின் இயக்கம். உரிய காலத்தில் , சுதந்திரத்திற்குப்பிந்தைய பங்கீட்டு அடிதடியில், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை கையிலெடுத்துக்கொண்டதன் வழியாக அதிகாரத்திற்கு வந்து பிற்படுத்தப்பட்டோர் கட்சியாக நீடிக்கிறது அதை ஆதரிப்போர் அனைவருக்கும் மேலே பேசப்படும் பண்பாட்டுப்பிரச்சினைகளுக்கு அடியில் அதன் சாதிய உள்ளடக்கம் நன்கு தெரியும். அந்த ஆதரவே அதனால்தான்

பரப்பியக்கத்தின் அரசியல் ஜனநாயகத்திற்குள் நிகழும் ஒன்றே. அதன் வழியாக அதைச்சார்ந்தோர் ஜனநாயகத்தின் பிரச்சார வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்தை அடைகிறார்கள். அவர்கள் அதிகாரத்திற்கு வந்தமையால் சில சமூக நன்மைகளும் முன்னேற்றங்களும் கூட ஏற்படும். பரப்பியம் பற்றிப்பேசும் செவ்வியல்மார்க்சியர்கள்கூட அதை முற்றிலும் எதிர்மறையாகச் சித்தரிக்கவில்லை

அதன் எல்லைகள் என்னவென்றால் அது எல்லா கலாச்சாரச் செயல்பாடுகளையும் எளிமைப்படுத்தி வெற்றுக்கோஷங்களாகச் சீரழிக்கும் என்பதும் உள்ளீடற்ற பிரச்சாரகளை ஆளுமைகளாக முன்னிறுத்தி அதிகாரத்திற்குக் கொண்டுசெல்லும் என்பதும்தான்

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

தமிழகத்தில் இந்து மதத்தையும் பாஜக வையும் எதிர்ப்பதற்கு  மட்டுமே பெரியாரைப் பாவிக்கிறோம் என்று பலர் கூறுகின்றனர். இதற்குள் ஒளிந்திருக்கும் முல்லாக்களுடையதும் மிஸனரிகளுடையதும் வெற்றுப் பிரச்சாரங்களைப் புரிந்து கொள்ள முடியாத தற்குறிகளாகத் தானே இன்னும் தமிழர்கள் இருக்கிறார்கள். உங்களுடைய சாட்சிமொழி போன்ற கட்டுரை நூல்களையும், பி.ஏ. கிருஷ்ணனுடைய பெரியார் பற்றிய கட்டுரைகளையும், இன்னபிறரின் பெரியார் மீதான விமர்சனங்களையும் இவர்கள் எப்போதுதான் படித்து சமநிலைக்கு வருவார்கள். அவற்றை அவதூறுகள் என்று சொல்லி தப்பிக் கொள்கிறார்களே.

இதே நேரம் இலங்கையிலும் பெரியாரைக் கொண்டு வரவேண்டும் என்று விஷமப் பிரச்சாரங்களைச் சிலர் தற்போது முன்னெடுக்கின்றனர். குறிப்பாக இணையம் உலக மனிதர்களை இணைத்து விட்ட பிற்பாடு இந்த மூடத்தனங்கள் பெருகிவிட்டது. இந்தச் சுழலில் மாட்டாமல் எம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது எப்படி? நமது தேசத்தில் பாரதியாருக்கும் விவேகானந்தருக்கும் திருவள்ளுவருக்கும் சிலைகள் உண்டு. ஆனால் பெரியாருக்கும் வைக்க வேண்டும் என்று சிலர் முனைகின்றனர். இதன் மூலம் பெரியாரை இங்கும் கொணரவேண்டும் என்ற இவர்களுடைய மூடநம்பிக்கைகளை எப்படி வரையறுத்துக் கொள்வது. நிராகரிப்பது. தங்களது விரிவான பதில்களை எதிர்பார்க்கின்றேன் ஜெமோ.

சுயாந்தன்.
வவுனியா.

***

அன்புள்ள சுயாந்தன்

ஈவேரா அவர்களுக்கு இலங்கையில் சிலை வைப்பதோ அவரைப்பற்றிப் பேசுவதோ தவறில்லை. அவர் ஓர் அரசியல் தரப்பு. ஒரு இந்துசீர்திருத்தவாதி. அவருடைய அரசியலின் உள்ளடக்கமான பிராமணக்காழ்ப்பு அங்கே பெரிய விளைவுகளை உருவாக்கவும்போவதில்லை. ஏனென்றால் அங்கே பிராமணர்கள் இல்லை

ஆனால் அந்தச் சமூகத்தில் ஒரு சாதிய விரிசலை அது உருவாக்கக்கூடும். ஈவேரா அங்கே செல்கிறார் என்றால் அதன் மெய்யானபொருள் இரண்டுதான். ஒன்று இந்துமதத்தின் மேல் அடிவிழச் செய்ய விரும்பும் மாற்றுமத- மதமாற்றச் சக்திகள் அதைக் கருவியாக கையாளவிருக்கின்றன. இரண்டு அதை ஒரு முகமூடியாகக் கொண்டு சாதிய அரசியல் ஒன்று முன்னெடுக்கப்படவிருக்கிறது. சிலசாதிகள் அந்தப் பொது அடையாளத்தின்கீழ் தங்களை தொகுக்கவிரும்புகின்றன

இதில் முதலில் சொன்னது அழிவுத்தன்மைகொண்டது. அது அடையாளம்காட்டப்படவேண்டும். இரண்டாவதாகச் சொன்னது இயல்பான ஒரு அரசியல்தேவையாக இருக்கலாம். அது தன் வழியைக் கண்டடவதே ஜனநாயகத்துக்கு நல்லது

ஜெ

தேவநேயப் பாவாணர் விக்கி

முந்தைய கட்டுரைரயிலில்- கடிதங்கள் 3
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-70