பொங்கல்காலையில்

புத்தாண்டுமுதல் இரு சபதங்கள் எடுத்திருந்தேன். இரவு பத்துமணிக்கு தூங்கிவிடுவது. அதிகாலை மூன்றரைக்கு எழுவது. டீ காபி எதற்குமே சீனி சேர்க்காமலிருப்பது. சர்க்கரை வியாதி எல்லாம் இல்லை. சும்மா, மன உறுதியை சோதித்துப்பார்க்கலாமே என்று. நாக்கு அப்படி அதன் போக்கில் இருக்கக் கூடாதல்லவா? ருசியற்ற உணவு ஒரு ஆன்ம பரிசோதனை என்று காந்தி ஒரு இடத்தில் வேடிக்கையாகச் சொல்கிறார்.

பொங்கலன்று காலை ஒரு புலரிநடை சென்று வந்தேன். இங்கே பொங்கலுக்கான தடையங்களே இல்லை. மாலையில் கொஞ்சம் கரும்பு விற்கப்படுகிறது என்பதைத்தவிர. குமரிமாவட்டத்தில் கரும்பு இலலி. தமிழகப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்கப்படுகிறது. இங்கே கரும்பு பொங்கலுக்கு மட்டுமே கிடைக்கும் அரும்பொருள்.

வழக்கம்போல அமைதியாக குளிராக மென்சிவப்பாக மலைகள் நடுவே தேங்கிக்கிடந்தது காலை. பண்டிகை பெற்றோர்களை நினைவுபடுத்துகிறது. நாளை என் பிள்ளைகளுக்கு நான் நினைவு வரவேண்டும்.

குமரிமாவட்டத்தில் முக்கியமான விழாக்கள் கிறிஸ்துமஸும் ஓணமும் தீபாவளியும்தான். கிறிஸ்தவர்களுக்கும் மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் தனித்தனியாக இருந்த விழாக்கள். இப்போது தீபாவளி இந்துக்களுக்கான பொதுப்பண்டிகையாக முன்னால் வந்துவிட்டது. கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ்,ஈஸ்டர் தவிர எதையும் கொண்டாடுவதில்லை.

முன்பு மலையாளிகள் தீபாவளி கொண்டாடும் வழக்கம் இல்லை. இப்போது கொஞ்சம் பட்டாசு வெடித்து,மாமிச உணவு சமைத்து உண்டு கொண்டாடுகிறார்கள். புத்தாடை எடுக்கும் வழக்கமெல்லாம் இல்லை. தமிழர்களுக்கு தீபாவளி தமிழக வழக்கப்படி எண்ணைக்குளியல், எண்ணைப்பலகாரம், எண்ணை விளக்கு வரிசை எல்லாம் உண்டு.எண்ணைவணிகர்கள் உருவாக்கிய பண்டிகையோ என்னவோ.

மலையாளிகளுக்கு பொங்கல் உண்டு, பங்குனிமாதம் பத்தாம் நாள். அதற்கு பத்தாமுதயம் என்று பெயர். உண்மையில் இதுதான் தொன்மையான தமிழ்பொங்கல்நாள் என்று சொல்லும் ஆய்வாளர்கள் உண்டு. ஏதோ பஞ்சாங்கக் கணக்கால் நாள் நீண்டுபோய் சித்திரை முதல்நாளாக ஆகியதாம். கேரளத்தில்தான் தொல்தமிழ் வழக்கங்கள் மாறுதல் இல்லாமல் நீடிக்கின்றன. நெடுங்கால வழக்கம் ஆகையால் காரணங்கள் எவருக்கும் தெரிவதில்லை. அதேபோல தீபத்திருநாள் திருக்கார்த்திகைதான் மலையாளிகளுக்கு.

தீபாவளி நாயக்கர் காலத்தில் முன்னிறுத்தப்பட்ட பண்டிகை. கேரளம் அவர்களின் நேரடி ஆட்சியின்கீழ் இருக்கவில்லை. இன்றைய பொங்கல் சென்ற ஐம்பதாண்டுக்காலமாக முக்கியப்படுத்தப்பட்ட பண்டிகை. அந்த பாதிப்பு குமரி மாவட்டத்தில் குறைவு.

அருண்மொழியின் தஞ்சையில் பொங்கல் விழா கிராமங்களில் கொண்டாட்டமாக நிகழும். ஆனால் இந்த இருபதாண்டுகளில் அந்த உற்சாகம் பெருமளவு வடிந்திருக்கிறது. கிராமியக் கொண்டாட்டங்கள் அனைத்துமே இன்று இல்லாமலாகிவிட்டிருக்கின்றன. கிராமங்கள் நகர்களின் சூம்பிய வால்கள் போல தனித்துவமிழந்திருக்கின்றன. தீபாவளி இன்று ஒரு வணிகத்திருவிழா. பொங்கல் அரசியல் திருவிழா.

எஸ் எம் எஸ் தான் கொண்டாட்டங்களுக்கு களம் .நான் யாருக்கும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, பிறந்தநாள், வாழ்த்துக்கள் சொல்வதில்லை. இந்தவருடம் சொன்னால் சமயங்களில் அடுத்த வருடம் மறந்து விடுவேன். அது புறக்கணிப்பாக அவர்களால் எடுத்துக்கொள்ளப்படக்கூடும். எனக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

முந்தைய கட்டுரைதமிழிசை-இரு பார்வைகள்
அடுத்த கட்டுரைதகர முரசு-கடிதங்கள்