தேங்காயெண்ணையும் வெள்ளையரும்

coco

மதிப்பிற்குரிய ஜயமோகன் அவர்களுக்கு,

எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் ஒன்றை உங்களிடம் வினவுகிறேன். இது கேரள நாடு சம்பந்தப்பட்டது.

– ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கேரளாவில் தேங்காய் எண்ணை, அதாவது உருக்கெண்ணை தயாரிப்பு செக்கு ஆட்டுவது மூலமாக நடைபெற்றதா,?

– அந்தத் தொழிலில் ஆங்கிலேயர் அல்லது அவர்களது சந்ததியினர் சம்பந்தப்பட்டிருந்தனரா,?

– இதற்கு சரித்திர பூர்வமான சான்றுகள் ஏதேனும் உள்ளனவா எனக்கூற முடியுமா?

உங்களது பதில் அறிந்தபின் எனக்கு ஏற்பட்ட வினோத அனுபவத்தை அறியத்தருகிறேன்.

நன்றியுடன்,

மைத்ரேயி.

அன்புள்ள மைத்ரேயி

இதை ஒரு கேரள வரலாற்றறிஞருடனும் உசாவியபின் எழுதுகிறேன்.

தேங்காயெண்ணை கேரளத்தில் கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதலே புழக்கத்தில் இருக்கிறது. தேங்காய் பறிக்க தண்டான் என்னும் சாதியும் தேங்காய் எண்ணை எடுக்க கைப்பள்ளிகள் அல்லது செக்காலர் என்னும் சாதியும் உருவாகி வந்துள்ளது.

செக்கில் எண்ணை எடுப்பதுடன் தேங்காய்ப்பாலைக் காய்ச்சி உருக்கெண்ணை எடுக்கும் வழக்கமும் இருந்தது. உருக்கெண்ணை எடுப்பது பெரும்பாலும் ஆயுர்வேதம் சார்ந்த தேவைகளுக்காக.

ஆங்கிலேயர் [பிரிட்டிஷார்] தேங்காய் எண்ணையைப் பொதுவாக விரும்பவில்லை. அவர்களுக்கு இந்திய எண்ணைகளே பொதுவாக உகக்கவில்லை. அதிக வாசனை இல்லாதவை என்று கடுகெண்ணையையே அவர்கள் நாடினர். தேங்காயெண்ணையை நாற்றம் என்றே சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் போர்ச்சுக்கல்காரர்களுக்கு தேங்காய் தென்னமேரிக்காவிலேயே பழக்கமாகிவிட்டிருந்தது. அதை கப்பலில் நீண்டநாள் கொண்டுசெல்லத்த உணவாக கருதினர். தேங்காயெண்ணையை தாராளமாகவே பயன்படுத்தினர். தேங்காய் சேர்த்த ஸ்ட்யூ போன்ற உணவுகள் பலவும் போர்ச்சுகீசியர்களால் இந்தியா கொண்டுவரப்பட்டவை.

கப்பலில் தேங்காய்களை காய்ச்சி உருக்கி எண்ணை எடுப்பதும் அவர்களுடைய வழக்கமாக இருந்தது. காய்ச்சி எடுக்கும் எண்ணையை உடல்மேல் ஈரப்பதத்தை தக்கவைக்கும் பூச்சாக பயன்படுத்தினார்கள்.

போர்ச்சுக்கீசியர்கள் குட்டைரகத் தென்னைகளை இங்கே அறிமுகம் செய்தார்கள். அவை கேரளத்தில் கப்பல்தெங்கு [கப்பத்தெங்கு] என் அழைக்கப்பட்டன. அவர்கள் கொச்சி கொல்லத்தில் தென்னந்தோப்புகளை வைத்திருந்தனர். அவர்களிடம் ஏராளமான உள்ளூர் மக்களும் கலப்பின மக்களும் பணியாற்றினர்.

ஜெ

முந்தைய கட்டுரைஇந்நாட்களில்…கடிதங்கள்
அடுத்த கட்டுரைகனவுகளின் வெளி